அதிபர், ஆசிரியர் சம்பள பிரச்சினைக்கு முறையான தீர்வு வழங்குமாறு கோரி எதிர்வரும் ஆசிரியர் தினத்தில் நாடளாவிய ரீதியில் பாரிய போராட்டங்களை மேற்கொள்வோம். அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு முடிந்தால் தடுத்து நிறுத்தட்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோஸப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
போராட்டம் மேற்கொள்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப் போவதாக மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்திருக்கும் கருத்துக்கு பதிலளிக்கையிலேயே ஜோஸப் ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்தார்.
அதிபர் ஆசிரியர் சம்பள பிரச்சினையை தீர்க்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி மேற்கொள்ளப்படும் தொழில்சங்க நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு 84 நாட்களாகின்றன. இதுவரை அரசாங்கம் சாதாகமான பதிலை முன்வைக்கவில்லை.
அதனால் எதிர்வரும் 6ஆம் திகதி சர்வதேச ஆசிரியர் தினத்தில் பாரிய போராட்டங்களை மேற்கொள்ள திட்டமிட்டிருக்கின்றோம்.
நாட்டில் இருக்கும் காரியாலயங்களை 312 கோட்டக் கல்வி காரியாலயங்களை அடிப்படையாகக் கொண்டு போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.
இந்த பாரிய தொழிற்சங்கப் போராட்டத்தை முடிந்தால் அமைச்சர் சரத் வீரசேகர தடுத்துப்பார்க்கட்டும் என சவால் விடுத்தார்.