இன்று புலமைப் பரிசில் பரீட்சை- கோவிட் தொற்றுக்குள்ளானவர்களுக்கு விசேட ஏற்பாடு
கோவிட் தொற்று உள்ள குழந்தைகள் பரீட்சைக்கு தோற்ற விசேட நடைமுறை
2021 ஆம் ஆண்டு நடைபெறவிருந்த தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இன்று (22) நடைபெறவுள்ளது.
அதன்படி இந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு 340,508 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்தார்.
இந்த ஆண்டு 2,943 பரீட்சை மையங்களிலும், 108 விசேட மையங்களிலும் பரீட்சை நடைபெற உள்ளது.
கொவிட்-19 பேரழிவை எதிர்கொண்டாலும், எந்தவொரு மாணவருக்கும் அநீதி இழைக்கப்படக்கூடாது என்றும், கோவிட் தொற்றுக்குள்ளான மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட சிறுவர்கள் விசேட முறையின் கீழ் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
ஒவ்வொரு வலயத்திலும் கோவிட் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக 108 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் அறிகுறிகளைக் காட்டும் குழந்தைகள் பரீட்சைக்குத் தோற்ற அந்தந்த பரீட்சை மையங்களில் ஒரு விசேட அறை அமைக்கப்பட்டுள்ளது.
சுகாதார வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு தமது பிள்ளைகளை பரீட்சைக்கு அனுப்புவதை பெற்றோர்களும் உறுதிப்படுத்த வேண்டும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.