எதிர்கால நடவடிக்கை தொடர்பாக ஆராய்வதற்காக ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் இன்று கூடுகின்றன
இ
ணக்கப்பாட்டின் அடிப்படையில் அரச தரப்பு செயற்படாத பின்னணியில் எதிர்கால நடவடிக்கை தொடர்பாக ஆராய்வதற்காக ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் இன்று கொழும்பில் கூடுகின்றன.
சம்பள முரண்பாட்டை நீக்குவதற்காக பிரதமர் தலைமையில் முன்வைக்கப்பட்ட வாக்குறுதி அடிப்படையில் வரைவிட்ட சேவையாக ஆசிரியர் அதிபர் சேவையை மாற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை என ஆசிரியர் அதிபர் தொழிற்சங்கங்களின் கூட்டணியின் உறுப்பினர் இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கத்தின் செயலாளர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக பிரதமர் மற்றும் அரசாங்கம் வாக்களித்ததன் படி, ஜனவரி மாதம் அதிகரித்த சம்பளத்தை பெற்றுக் கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
வாக்குறுதியின் படி, ஜனவரி 20 ஆம் திகதி சம்பள அதிகரிப்பு கிடைக்காத போது, மேற்கொள்ள வேண்டிய தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு 30க்கும் மேற்பட்ட ஆசிரியர் மற்றும் அதிபர்கள் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இன்று கொழும்பில் சந்திக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.