குருணாகல் மாவட்ட தமிழ் மொழி மூலப் பாடசாலைகளின் உயர் தரப் பெறுபேறுகள் 2020 – பகுப்பாய்வு

எஸ்.ஏ.எம்.றிஸ்வி (SLEAS)
risvisubair@gmail.com
அறிமுகம்

இலங்கை பாடசாலை கல்விக் கட்டமைப்பில் க.பொ.த உயர்தரப் பிரிவு மிகவும் முக்கியமானது. மாணவர்கள் தமது எதிர்கால இலக்குகள் நோக்கி மூன்றாம் நிலைக்கல்வி கட்டமைப்பிற்குள் பிரவேசிப்பதற்கு உயர்தரப்பிரிவும் அதன் பெறுபேறும் இன்றியமையாததாக அமைகிறது. 

உலகை அச்சுறுத்திய கொவிட் 19 நெருக்கடி முழு உலகினதும் இருப்பை ஆட்டங்காணச் செய்திருக்கிறது. இதில் கல்வித்துறையும் விதிவிலக்கல்ல. கடந்த வருடம் கொவிட் 19 முதலாம் அலையின் போது நடைபெற்ற தேசிய பரீட்சைகளின் பெறுபேறுகளின் இதன் தாக்கம் உணரப்பட்டது. நாடளாவிய ரீதியில் 2020 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் பாடசாலை பரீட்சாத்திகள் 251168 தோற்றினர். இதில் 165 711 (65.98) பல்கலைக்கழகத்திற்கு தகுதி பெற்றனர். 

2019, 2020 ஆம் இரண்டு ஆண்டுகளிலும் க.பொ.த. உயர்தரப் பரீட்சை பெறுபெறுகளின் தரப்படுத்தலில் தேசிய ரீதியில் வடமேல் மாகாணம் முதன்நிலையை அடைந்திருக்கிறது. இதில் 2020 ஆம் ஆண்டு பெறுபேறுகளின் பிரகாரம் மாவட்ட ரீதியான அடைவுகளின் பட்டியலில் புத்தளம் மாவட்டம் முதல் நிலையையும் குருணாகல் மாவட்டம் இரண்டாம் நிலையினையும் அடைந்து சாதனை படைத்தது. 

2020 ஆம் ஆண்டு வடமேல் மாகணத்தில் உயர் தரம் கற்பிக்கும் 359 பாடசாலைகளிலிருந்து 27846 பாடசாலை பரீட்சாத்திகள் பரீட்சைக்குத் தோற்றினர். இதில் குருணாகல் மாவட்டத்தில் 20830 பரீட்சாத்திகளும் புத்தளம் மாவட்டத்தில் 7016 பரீட்சாத்திகளும் உள்ளடங்குவர். குருணாகல் மாவட்டத்தில் ஆறு வலயங்களிலும் அமைந்துள்ள உயர் தரப் பிரிவு காணப்படும் 37 தமிழ்மொழி மூல பாடசாலைகளிலிருந்து  தோற்றிய தமிழ்மொழி மூல பரீட்சாத்திகள் 1553 ஆகும். இது குருணாகல் மாவட்ட பரீட்சாத்திகளில் மொத்த தொகையில் 7.4 சதவீதமாகும்.

அந்த வகையில் வடமேல் மாகாணத்தின் குருணாகல் மாவட்டத்தின் 2020 ஆம் ஆண்டு க.பொ.தா. உயர் தரப் பெறுபெறுகளின் தமிழ்மொழி மூல பாடசாலைகளின் பெறுபேறுகள் பற்றிய தரவுகளை மையப்படுத்திய சில அவதானங்களை இவ்வாக்கம் முன்வைக்கிறது. உயர்தரப்பிவின் ஒவ்வொரு துறைவாரியாகவும் சுருக்கமாக முன்வைக்கப்படும் அவதானங்கள், கல்விப் புலத்தில் உள்ளவர்களின் சிந்தனை, ஆய்வு, கலந்துரையாடலுக்கான  சந்தர்ப்பங்களை ஏற்படுத்துவதாக அமையும் என்பது எமது நம்பிக்கை.

குருணாகல் மாவட்டத்தில் 2020 ஆம் பெறுபேறுகளின் பிரகாரம் பரீட்சைக்குத் தோற்றிய தமிழ் மொழி மூல பாடசாலை பரீட்சாத்திகள் 1553 ஆகும். இதில் பல்கலைக்கழக நுழைவிற்கான தகுதி பெற்றவர்கள் 1198 (77.14%) மூன்று பாடங்களிலும் ஏ சித்தி பெற்ற மாணவர்களின் தொகை 45 (2.87%) இருக்கும் நிலையில் மூன்று பாடங்களிலும் சித்தியடையாத மாணவர்கள் தொகை 93 (5.98%) ஆகும்.

 

க.பொ.த. (உ/த) – கலைப்பிரிவு

குருணாகல் மாவட்ட  37 தமிழ்மொழி மூலமான பாடசாலைகளிலிருந்து 730 மாணவர்கள் கலைத்துறையிலேயே தோற்றியருந்தனர். இதில் 638 மாணவர்கள் (87.39%) பல்கலைக்கழக நுழைவிற்கு தகுதி பெற்றனர். இது தமிழ் மொழி மூல பரீட்சாத்திகளில் 47 சதவீதமாகும். இதில் 34 மாணவர்கள்(4.65%) மூன்று பாடங்களிலும் 3 ஏ பெற்று சித்தியடைந்திருந்தனர். 

எனினும் தேசிய மட்ட, மாவட்ட நிலைத் தரப்படுத்தல்களில் முதன்மை நிலைகள் மிகவும் குறைந்த நிலையே காணப்பட்டது. கலைத்துறை பெறுபேறுகளில் மாவட்டத்தில் 8 பாடசாலைகள் 100 வீத சித்தியினைப் பெற்று சாதனை படைத்ததும் விசேட அம்சமாகும். (மேற்படி 8 பாடசாலைகளின் நிரற்படுத்தல் நிலைகள் மாற்றமடையவும் வாய்ப்புள்ளது). கலைத்துறையில் ஒரு சில பாடங்களின் தரவுகளை இவ்விடத்தில் அடையாளப்படுத்த முடியும். 2020 ஆம் ஆண்டு வடமேல் மாகாணத்தில் இஸ்லாம் 471, இஸ்லாமிய நாகரீகம் 588, இந்து சமயம் 97, இந்து நாகரீகம் 60,   தமிழ் மொழி 934 மாணவர்களும் பாடரீதியாகத் தோற்றினர். 

 

க.பொ.த. (உ/த) – உயிரியல் விஞ்ஞானப் பிரிவு 

வடமேல் மகாணத்தில் 102 பாடசாலைகளில் உயிரியல் விஞ்ஞானப்பிரிவு காணப்படுகிறது. இதில் குருணாகல் மாவட்டத்தில் 6 தமிழ்மொழி மூலப் பாடசாலைகளில் இப்பிரிவு இயங்குகிறது. 2020 ஆம் ஆண்டு 350 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியதோடு அதில் 237 (67.7%)  மாணவர்கள் பல்கலைக்கழக நுழைவிற்குத் தகுதி பெற்றனர். இரண்டு மாணவர்கள் மாத்திரமே மூன்று பாடங்களிலும் 3ஏ சித்தியைப் பெற்றனர். 35 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் சித்தியடையத் தவறினர். இது தோற்றிய மாணவர்களில் 10 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. 

வடமேல் மாகாணத்தில் உயிரியல் பிரிவில் அதிக மாணவர்கள் தோற்றிய பாடசாலை கொகுணகொல்லை தேசிய பாடசாலையாகும். தோற்றிய மாணவர்கள் தொகை 253 இதில் பல்கலைக்கழகம் பிரவேசத் தகுதி பெற்றவர்கள் 177 மாணவர்களாகும். அத்தோடு இவ்வருடம் முதன் முதலில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் மாணவர்களை பரீட்சைக்கு தோற்ற வைத்து சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொண்ட பாடசாலைகளாக இப்/ தல்கஸ்பிடிய அல்அஸ்ரக் மு.ம.வி மற்றும் நிக/வெல்பொதுவெவ அல் இல்மிய்யா மு.ம.வி ஆகிய பாடசாலைகளைக் குறிப்பிட முடியும்.

 

க.பொ.த.(உ/த) – பௌதீக விஞ்ஞானப் பிரிவு

வடமேல் மாகாணத்தில் 167 பாடசாலைகளில் பௌதிக விஞ்ஞானப் பிரிவு காணப்படுகிறது. இதில் குருணாகல் மாவட்டத்தில் 5 பாடசாலைகள் தமிழ் மொழி மூல பாடசாலைகளாகும். 2020 இல் தமிழ்மொழி மூலம் 167 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றினர். இதில் 122 (73.05%) பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றனர். இதில் 4 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் ஏ சித்தியினைப் பெற்றனர். மாவட்ட ரீதியாக பௌதீக விஞ்ஞானப் பிரிவு, உயிரியல் விஞ்ஞானப் பிரிவு ஆகிய இரண்டிலும் மூன்று பாடங்களிலும் சித்தியடையத் தவறிய மாணவர்களின் தொகை 50 ஆகும்.

 

க.பொ.த.(உ/த) – வர்த்தகப் பிரிவு

உயர்தரப் பிரிவு பெறுபேற்றுத் தரப்படுத்தலில் தேசிய ரீதியில் வர்தகப் பிரிவில் வடமேல் மாகாணம் முதலிடம் பெற்றது. மாகாணத்தில் 178 பாடசாலைகளில் உயர்தர வர்த்தகப் பிரிவு காணப்படுகிறது. 2020 பரீட்சைக்குத் தோற்றிய 4627 பரீட்சாத்திகளில் 3586 மாணவர்கள் (77.50%) பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றனர். இதில் குருணாகல் மாவட்டத்தில் 10 தமிழ்மொழி மூலப் பாடசாலைகளில் வர்த்தகப் பிரிவு காணப்படுகிறது. 112 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றி 65 (58.03%) மாணவர்கள் மாத்திரமே பல்கலைக்கழத்திற்கு தகுதி பெற்றனர். 28 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் சித்தியடையத் தவறினர். இது தமிழ்மொழி மூலம் தோற்றிய மாணவர்களில் 25 சதவீதமாகும். இது வர்த்தப் பிரிவில் பாரிய பின்னடைவாக காணப்படுகிறது.

 

க.பொ.த.(உ/த) – உயிர் முறைமை தொழிநுட்பவியல் பிரிவு- பொறியியற் தொழிநுட்பவியல் பிரிவு

 

வடமேல் மாகாணத்தில் 44 பாடசாலைகள் உயிர் முறைமைத் தொழிநுட்பவியல் பிரிவுகள் காணப்படுகிறன.   இதில் மூன்று பாடசாலைகள் தமிழ்மொழிமூல பாடசாலையாகும். 2020 இல் பரீட்சைக்குத் தோற்றிய 70 மாணவர்களில் 59 (84.28%) பல்கலைக்கழத்திற்கு தகுதி பெற்றனர். அவ்வாறே பொறியியற் தொழிநுட்பவியல் பகுதியில் வடமேல் மாகணத்தில் உள்ள 45 பாடசாலைகளில் மூன்று தமிழ் மொழி மூலப் பாடசாலைகள் காணப்படுகிறது. 124 மாணவர்கள் தோற்றி 77 மாணவர்கள் (62.09)  பல்கலைக்கழகத்திற்கு தகுதி பெற்றனர்  அத்தோடு 10 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் சித்தியடையத் தவறியுள்ளனர் 

 

சில அவதானக் குறிப்புகள்

01. மாவட்ட ரீதியான கலைப்பிரிவு மாணவர்களின் தொகை ஒவ்வொரு வருடமும் அதிகரிக்கும் நிலையில்  தேசிய மட்ட, மாவட்ட நிலைத் தரப்படுத்தல்களில் முதன்மை நிலைகளை அடைவதற்கு மாணவர்கள் ஊக்குவிக்கப்படுவதுடன், கலைப்பிரிவின் ஊடாக பல்கலைக்கழகம், கல்வியற்கல்லூரிகளுக்கு செல்வதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கப்படுவதற்கும் புதிய கற்கைகளில் நுழைவதற்கும் ஏற்றாற்போல் பாடங்கள் உயர்தரப் பிரிவில் இணைக்கப்பட வேண்டும். 

02. உயிரியல் விஞ்ஞானம், பௌதீக விஞ்ஞானம் ஆகிய பிரிவுகளில் உச்ச பெறுபேறுகள் கடந்த வருடத்தினை (2019) விடவும் குறைவடைந்துள்ளதுடன்,  50 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் சித்தியடையத் தவறியுள்ளர்.  க.பொ.த. சாதாரணத் தரத்தில் சிறந்த பெறுபேறுகளின் அடிப்படையில் இப்பிரிவுகளைத் தெரிவு செய்யும் மாணவர்கள் மூன்று பாடங்களிலும் சித்தியடைத் தவறுவது குறித்து சிந்திப்பதுடன், அவர்களுக்கான மீள் வழிகாட்டல்கள் ஊக்குவிப்புக்களை உரிய பாடசாலைகள் கவனம் செலுத்துவது அவசியமாகும்.  

03. வர்த்தக துறையில் பெறுபேறுகளில் பாரிய பின்னடைவு காணப்படுவதுடன் மாவட்ட ரீதியாக இத்துறையில் பெறுபேற்றை உயர்த்துவதற்கு பாடசாலை சமூகம் ஒன்றாக இணைந்து, சிந்தித்து செயற்பட வேண்டிய தேவை காணப்படுகிறது.

04. புதிய பாடசாலைகளின் பிரவேசம் அவசியம். ஒரு சில பாடசாலைகளில் மாத்திரமே மாணவர்களின் தொகைகள் குவிக்கப்படாமல் மாவட்ட ரீதியாக தகைமையுள்ள பாடசாலைகள் துறைகளை அதிகரிப்பதற்கும், இருக்கும் துறைகளை தரப்படுத்துவதற்குமான திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். குளியாப்பிடிய, மாகோ கல்வி வலயங்கள் கலைத்துறையில் மாத்திரமே உயர்தரப் பிரிவுகள் காணப்படுவதனால் ஏனைய துறை பற்றியும் சிந்திக்க வேண்டிய தேவை காணப்படுகிறது

05. கொவிட் 19 நெருக்கடியான சூழல் மாணவர்களின் கற்றலில் பாரிய இடையூறுகளை தொடராக ஏற்படுத்தி வரும் நிலையில், இவ்வருட பெறுபேற்றில் இன்னும் பாதிப்புக்களை ஏற்படுத்துவதற்கான வாயப்புக்கள் இருக்கிறது. எனவே இது குறித்து அனைத்து தரப்பினரும் கூடிய கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.

 

வடமேல் மாகாணக் கல்வித் திணைக்கள தரவுத் தொகுதியினை ஆதாரமாகக் கொண்டு, 2020 ஆம் ஆண்டு உயர்தரப் பிரிவு பெறுபேறுகள் தொடர்பிலான கவனயீர்ப்பிற்கான ஓர் ஆக்கமாகவே இத் தொகுப்பு அமையப்பெற்றுள்ளது. இது கல்விப் புலத்தில உள்ள அனைவருக்கும் அடுத்த கட்ட நகர்வுக்கு உறுதுணையாக அமையும் என்பதோடு இத்தரவுகளை மையப்படுத்திய ஒப்பீட்டு ரீதியான ஆய்வுகளை செய்வதற்கும் உறுதுணையாக அமையும் என்றும் நம்புகிறோம். 

 

அட்டவணைகள்

 
 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 
SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!