07. கிராம அலுவலர் பிரிவு மட்டத்தில் “சமூக ஒத்துழைப்பாளர்களாக (தொண்டர்)” இளைஞர் யுவதிகளின் சேவைகளைப் பெற்றுக்கொள்ளல்
ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் நடைமுறையிலுள்ள சமுதாயப் பொலிஸ் சேவைகள் மூலம் சமூக மட்டத்தில் இடம்பெறுகின்ற சிறு குற்றங்களைக் குறைப்பதற்கு இயலுமை கிட்டியுள்ளது. அவ்வாறான வேலைத்திட்டங்களின் வெற்றித்தன்மையின் அடிப்படையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் இலங்கை பொலிசுடன் இணைந்து 2021 மே மாதம் தொடக்கம் சமுதாயப் பொலிஸ் சேவைகள் வேலைத்திட்டத்தின் கீழ் முழுநேர இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவுக்கும் இணைப்புச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமது கடமைகளில் சமூகத்தவர்களின் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக்கொள்ளும் வகையில் குறித்த கிராம அலுவலர் பிரிவில் வசிக்கின்ற இரண்டு இளைஞர் யுவதிகளை “சமூக ஒத்துழைப்பாளர்களாக (தொண்டர்)” சேவையில் ஈடுபடுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. குறித்த கிராம அலுவலர் பிரிவில் நிரந்தரமாக வசிக்கின்ற, 18 வயதுக்கு மேற்பட்ட, பாடசாலையில் மாணவர் தலைவர்களாக செயலாற்றிய, இளைஞர் கழகங்களில் உறுப்பினர்களாகவுள்ள, தொண்டர் குழுக்களில் செயற்பாட்டாளர்களாகவுள்ள இளைஞர் யுவதிகளுக்கு இதற்காக விண்ணப்பிக்க முடியும். அவர்கள் கௌரவ சேவையை வழங்குவதுடன், எந்தவொரு கொடுப்பனவோ அல்லது உரித்துக்களோ இல்லை. இலங்கைப் பொலிஸ் திணைக்களத்தால் அவர்களுக்கு தொண்டர் சேவை பற்றிய அடையாள அட்டை வழங்கப்படுவதுடன், 06 மாதகால சேவையைப் பூர்த்தி செய்த பின்னர் ‘சமூகத் தலைமைத்துவம்” தொடர்பான சேவைக்கான சான்றிதழ் வழங்கப்படும்.
முன்மொழியப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.