கடந்த வாரம் வெளியிடப்பட்ட தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் அமைந்த சிறந்த பாடசாலைகளின் பட்டியலை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இதன்படி மிகச் சிறந்த பெறுபேறுகளின் அடைவை நிகவரட்டி சிரிமத் ஹென்ரி ஒல்கொட் முன்மாதிரி ஆரம்ப பாடசாலை பெற்றுள்ளது.
இரண்டாம் இடத்தை எஹட்டுவ எரியாவ கனிஷ்ட வித்தியாலயம் பெற்றுக் கொண்டுள்ளது. மூன்றாம் இடத்தை குலியாப்பிட்டி விசாகா மகளிர் கல்லூரியும் கல்கமுவ சிரிமாவோ பண்டாரநாயக்க வித்தியாலயமும் பெற்றுக் கொண்டுள்ளன.
முதல் நாற்பது இடங்களைப் பெற்ற பாடசாலைகளின் பட்டியலில் ஐந்து தமிழ்ப் பாடசாலைகள் இடம்பெற்றுள்ள அதே வேளை எந்தவொரு முஸ்லிம் பாடசாலைகளும் இடம்பெறவில்லை என்பதும் கவனத்துக்குரியதாகும்.
யாழ் சென்.ஜோன் பெஸ்கே வித்தியாலம் ஏழாம் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ள அதே நேரம் யாழ் இந்து கனிஷ்ட வித்தியாலயம், வவுனியா, ரம்பகுளம் அரசினர் வித்தியாலயம், புதுக்குளம் ஆரம்ப பாடசாலை என்பன 15 ஆம் இடத்தைப் பெற்றுள்ளன. அவ்வாறே கடவெட்டி மாணிக்கவாசகர் வித்தியாலயம் 29 ஆம் இடத்தைப் பெற்றுள்ளது.
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பாடசாலைகளின் அடைவுகளை அளவிடுவதற்கான பொருத்தமான பரீட்சையாகக் கருதமுடியாத போதிலும் ஆரம்ப நிலையில் நடைபெறும் தேசிய போட்டியில் முழுமூச்சோடு அனைத்துப் பாடசாலைகளும் சமநிலைத் தயார் படுத்தல்களுடன் போட்டியிடும் வகையில் இப்பரீட்சை மாறிவிட்டது. எனவே, குறித்த பரீட்சையின் பெறுபேறுகள் ஓரளவிற்கு பாடசாலைகளின் முயற்சிக்கு கிடைத்த அடைவ மட்டத்தை இனங்கண்டு கொள்வதற்கு ஓரளவு கருத்திற்கொள்ள வேண்டியதாகும்.
முஸ்லிம் பாடசாலைகளின் கல்வி அடைவு தொடர்பான ஆய்வுகளுக்கு இப்புள்ளிவிபரங்கள் உள்ளடக்கப்படல் வேண்டும். ஒரே கலைத்திட்டம், ஒரே வகையான தயார்படுத்தல்கள் என்ற அடிப்படையில் இடம் பெறும் பரீட்சையில் முதல் 40 இடங்களில் ஒரு முஸ்லிம் பாடசாலையேனும் இல்லை என்பது கவனத்துக்குரியதாகும்.