தரம் 5 பரீட்சை- குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை
நேற்றைய தினம் (22) நடைபெற்ற தரம் 5 புலமை பரிசில் பரீட்சையின் போது இடம்பெற்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்து, விசாரணை நடத்தப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் L.M.D.தர்மசேன தெரிவித்துள்ளார்.
விசாரணைகளின் ஊடாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
கல்கமுவ, வெலிமட, நாகொட உள்ளிட்ட சில பரீட்சை மத்திய நிலையங்களில் புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நேரம் கடந்து பரீட்சை வினாதாள்கள் வழங்கப்பட்ட போதிலும், அவ்வாறு தாமதித்த நேரத்திற்கு சரியான நேரத்தை விடை எழுதுவதற்கு மாணவர்களுக்கு வழங்காமை, பரீட்சை நடைபெற்ற பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு சுவர் கடிகாரம் காட்சிப்படுத்தப்பட்ட போதிலும், ஏனைய பாடசாலைகளிலிருந்து பரீட்சை நடைபெற்ற பாடசாலைக்கு வருகைத் தந்து, பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு அவ்வாறான வசதி ஏற்படுத்திக்கொடுக்கப்படாமை, விடை எழுதுவதற்கு தாள்கள் வழங்கப்படாமை, பக்கச்சார்பாக செயற்பட்டமை என பல்வேறு குற்றச்சாட்டுக்களை மாணவர்கள் முன்வைத்துள்ளனர்.
இந்த நிலையில், மாணவர்களினால் முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கவனம் செலுத்தி, நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவிக்கின்றார்.
ஆரம்ப கட்ட விசாரணைகள் நாளை ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.