அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் இணக்கம் தெரிவித்தால் ஆசிரியர் சேவையை வரைவிட்ட சேவையாக அமைக்கமுடியுமென கல்வி மறுசீரமைப்பு ராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம ஜயந்ததெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாட்டை வரவு செலவு திட்டத்துக்கு பின்னர் தீர்ப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதுவரையில் ஆசிரியர்களுக்கு மேலதிக கொடுப்பாக 5,000 ரூபா மாதாந்தம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஆசிரியர்களின் கோரிக்கையான ஆசிரியர் சேவையை வரைவிட்ட சேவையாக மாற்றியமைக்க வேண்டுமென்ற கோரிக்கை தொடர்பாகவும் ஆராய்ந்து வருகின்றோம்.
ஆசிரியர் சேவையை வரைவிட்ட சேவையாக மாற்றியமைப்பதாக இருந்தால் அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் அனைத்தும் அதற்கு இணக்கம் தெரிவிக்கவேண்டும். ஒருசில அதிபர் சங்கங்கள் இதற்கு தயாரில்லை. தற்போது இதுதொடர்பாக தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி வருகின்றோம். சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கு அமைச்சரவை உபகுழு கலந்துரையாடி வருகின்றது. கலந்துரையாடல்களில் மேற்கொள்ளப்படும் தீர்மானத்துக்கமைய சுற்றுநிருபம் ஒன்றிமூலம் சம்பள பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கலாம்.