பரீட்சை நிலைய அலுவலர்கள் அனைவரும் நிறுத்தம் – பரீட்சைத்திணைக்களம் நடவடிக்கை

பரீட்சை நிலைய அலுவலர்கள் அனைவரும் நிறுத்தம் – பரீட்சைத்திணைக்களம் நடவடிக்கை!

க.பொ.த. உயர்தரப்பரீட்சை வினாத்தாள் விநியோகத்தில் தாமதம் எனக்கூறப்பட்டு சர்ச்சைக்குள்ளான பட்டிருப்பு பரீட்சை நிலையத்தில் கடமையிலிருந்த மேற்பார்வையாளர் முதல் அலுவலக பணியாள் வரை அனைவரும் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

பரீட்சைகள் திணைக்களம் இந்த அதிரடி நடவடிக்கையை அன்றையதினமே மேற்கொண்டிருந்தது.

குறித்த சர்ச்சை தொடர்பாக பட்டிருப்புவலயக்கல்விப்பணிப்பாளர் எ.மகேந்திரகுமார் மேற்கொண்ட விசாரணை அதனைத் தொடர்ந்து பிராந்திய பரீட்சைகள் இணைப்பாளர் மேற்கொண்ட விசாரணைகள் அனைத்தும் பரீட்சைகள் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டது.

அதேவேளை அன்று பிற்பகலில் அங்கு கூடிய பெற்றோர்கள் மாணவர்கள் வலயக்கல்விப்பணிப்பாளர் மகேந்திரகுமாரிடம் சென்று பரீட்சைநிலைய மேற்பார்வையாளர் முதல் அனைவரையும் மாற்றவேண்டுமென போர்க்கொடிதூக்கினர். பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனும் சம்பவஇடத்திற்குச்சென்று குரல்கொடுத்தார்.கூடவே மாணவருக்கு நீதி வழங்கப்படவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தி பரீட்சைகள்திணைக்களம் கல்வியமைச்சுக்கும் அறிவித்தார்.

சம்பவம் தொடர்பாக கிழக்குமாகாணக்கல்விப்பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் பரீட்சைத்திணைக்கள பிரதிஆணையாளர் ஜீவராணி ஆகியோரிடம் எத்திவைத்தனர்.

அதனையடுத்து உடனடியாக பரீட்சைநிலைய மேற்பார்வையாளர் உதவிமேற்பார்வையாளர் மேலதிக மேற்பார்வையாளர் மண்டபநோக்குனர்கள் பணியாள் உள்ளிட்ட அனைவரையும் இடைநிறுத்த உத்தரவுபிறப்பிக்கப்பட்டது.

குறித்த பட்டிருப்பு மகாவித்தியாலய பரீட்சை நிலையத்திற்கு புதிதாக மேற்பார்வையாளர் தொடக்கம் பணியாள்வரை நியமிக்கப்பட்டு பரீட்சை சுமுகமாக நடைபெற்றுவருகிறது.

இதேவேளை பாதிக்கப்பட்ட பரீட்சார்த்திகளுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்றுவருகிறது.

குறித்த பரீட்சைநிலையத்தின் குறித்த பாடத்திற்கான விடைத்தாள் பொதியினை வேறுபடுத்தி அதனை விசேடமாக மதிப்பீட்டுக்கு உட்படுத்தி மாணவரக்கு நீதிவழங்குவது குறித்து பரீட்சைத்திணைக்களம் ஆராய்ந்து நடவடிக்கைஎடுக்கவிருப்பதாக தெரியவருகிறது.

பரீட்சை ஆரம்பமாகிய முதல்தினத்தில் காலையில் இடம்பெற்ற பாடப்பரீட்சைக்கு இரு வினாப்பத்திரங்களும் காலை 8.30க்கே வழங்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால் ஒரு வினாப்பத்திரம் தாமதமாக வழங்கப்பட்டிருந்ததாக இச்சர்ச்சை ஏற்பட்டிருந்தமை தெரிந்ததே.

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!