கிழக்கு மாகாணத்தில் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட வேண்டிய 73 பாடசாலைகளின் பெயர்ப் பட்டியல் இன்று அனுப்பி வைப்பு-
கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர்.
கிழக்கு மாகாணத்தில் 73 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட மாகாண கல்வி பணிப்பாளரால் ஆளுனருக்கு சிபாரிசு செய்யப்பட்டு கல்வி அமைச்சிற்கு இன்று (10) உத்தியோகபூர்வமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் எம்.ரி. ஏ.நிசாம் தெரிவித்தார்.
ஏற்கனவே 54 பாடசாலைகள் தரமுயர்த்தசி பாரிசு செய்யப்பட்ட போதிலும் மேலும் 19 பாடசாலைகள் உள்வாங்கப்பட்டு 73 பாடசாலைகளாக பூரணப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே 36 தேசிய பாடசாலைகள் கிழக்கில் இயங்கி வருகிறது. தற்போது 74+36=110 தேசிய பாடசாலைகள் இயங்க உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இத்தேசிய பாடசாலை திட்டம் 2017/2018ம் ஆண்டில் நல்லாட்சி அரசாங்க காலட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு கட்டம் கட்டமாக பாடசாலைகள் தரமுயர்த்தப்பட்டு வந்தது.
தேசிய பாடசாலைகளை தரமுயர்த்துவது தொடர்பான அமைச்சரவை கொள்கை வழிகாட்டல் ஒன்றும் வகுக்கப்பட்டு ஜனாதிபதியால் அங்கீகரிக்கப்பட்டு கௌரவ மாகாண ஆளுனர் களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இதன்பின்னர் ஏற்பட்ட அரசியல் குழப்பம் ஆட்சிமாற்றம் என்பன காரணமாக இத்திட்டம் இடைநிறுத்தப்பட்டிருந்தது. இதன் பின்னர் புதிய அரசு, புதிய ஆளுநர்கள் நியமனம், புதிய அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகள் காரணமாக இத்திட்டம் மீண்டும்கொண்டுவரப்பட்டது. அதன் காரணமாக பெருந்தொகையான மாகாண பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்படுவதாக மாகாண கல்வி பணிப்பாளர் MTA நிசாம் தெரிவித்தார்.
புதிதாக தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்பட்ட பாடசாலைகளுக்கு தலா 02 மில்லியன் வீதம் நிதி ஒதுக்கீட்டை கல்வி அமைச்சு வழங்கியுள்ளது.
இப்பாடசாலைகளுக்கு 2023 ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டிலேயே இனி நிதி வழங்கப்படும். அதற்கிடையில் நிதி ஒதுக்கீடு எதுவும் இல்லை எனவும் அவர் தெளிவுபடுத்தினார். அதேவேளை 2023 வரை புதிய கட்டுமானங்களுக்கு நிதி ஒதுக்கீடும் வழங்கப்படமாட்டாது.
இதே வேளை கிழக்கு மாகாணத்தில் 73 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்படுவதால் கிழக்கிலுள்ள மாகாண பாடசாலைகளுக்கு நிதி ஒதுக்கீடுகளில் கூடுதல் நிதி வழங்கப்படக்கூடிய வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் தனியான ஆசிரியர் நியமனங்களும் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்பும் கிட்டியுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
(முக்தார் மொஹமட்)