பதிற் பாட ஒழுங்கும் அதனால் ஏற்படுத்திக் கொள்ளும் ஆசிரியர் அதிபர் முரண்பாடுகளும்
ந.சந்திரகுமார் SLPS
சிரேஷ்ட அதிபர்
2007/09,2021/6 ஆம் இலக்க கல்வி அமைச்சின் சுற்றறிக்கைக்கு அமைய, சகல வகுப்புகளிலும் தினமும் சகல பாடங்களும் நடைபெறுவதை உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.இதனாலேயே அதிபர் சேவை “பதவி நிலை” ஆக அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் தான் சகல பாடசாலைகளிலும் இலங்கை அதிபர் சேவை தரம் 1 ஐச் சேர்ந்த அதிபர்கள் மற்றும் பிரதி அதிபர் களையும், இலங்கை அதிபர் சேவை தரம் 2/ 3 ஐச் சேர்ந்த உதவி அதிபர்களையும் கல்வி அமைச்சு நியமித்து, பாடசாலை முகாமைத்துவத்தை மேற்கொள்ள அதிகாரம் வழங்கியுள்ளது.
மேலும் சகல வகுப்புகளிலும் தினமும் சகல பாடங்களும் நடைபெறுவதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும், பாடசாலை வளாகத்தினுள் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகிறது.
ஆகவே தான் ஆசிரியர்கள் லீவு பெறும் நாட்களில் குறித்த ஆசிரியரின் நேர நிரலணிக்கு ஏற்ப, பதிற் பாட ஒழுங்கை மேற்கொள்ள வேண்டும் எனவும்,பதிற் பாட ஒழுங்கை மேற்கொள்ள தவறும் போது….
மாணவர்களுக்கு ஏற்படும் கல்வி கற்கும் உரிமை பாதிப்புக்காக அதிபருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியும்.
*ஆசிரியர் இல்லாத வகுப்பறையில் மாணவர்களுக்கு ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு அதிபர் பொறுப்புக் கூற வேண்டும். சிலவேளை ஒழுக்காற்று விசாரணைகளுக்கு முகம் கொடுக்க நேரிடலாம்.
*கணக்காய்வு அதிகாரிகளின் கணக்காய்வு விசாரணைகளுக்கு முகம் கொடுக்க நேரிடலாம்.
எனவே தான் அதிபர்கள் ஆசிரியர் சமூகம் கொடுக்காத நாட்களில் பதிற் பாட ஒழுங்கை மேற்கொள்வதோடு, ஆசிரியர்கள் பதிற்கடமைக்கு செல்வதை மேற்பார்வை செய்ய வேண்டும்.
*அத்தோடு பதிற் பாட ஒழுங்கு,பதிற் பாட ஒழுங்குக்கு செல்லாத ஆசிரியர்கள் விபரங்கள் அனைத்தையும் கோவைப் படுத்தி பேண வேண்டும்.
*பதிற் பாடக் கடமைக்கு நியமிக்கப்பட்ட ஆசிரியர் செல்லாத போது……
*பதிற் கடமை நேரத்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் மற்றும் விபத்துகள் ஆகியவற்றுக்கு வகை கூற நேரிடும்.அத்தோடு ஒழுக்காற்று விசாரணைகளுக்கு முகம் கொடுக்க நேரிடலாம்.
*பதிற் கடமையை புறக்கணிக்கும் ஆசிரியர்களுக்கு எதிராக துறை சார்ந்த நடவடிக்கைகள் எடுக்க நேரிடும்.
மாணவர் அபிவிருத்திக்கு பொறுப்பான பிரதி அதிபரிடம் நேரசூசி,பதிற் பாட ஒழுங்கு,உள்ளக மேற்பார்வை,வினா வங்கி, பாடசாலை மட்ட கணிப்பீடு மற்றும் பொதுப் பரீட்சைகள் தொடர்பான கடமைகளை எழுத்து மூல வழங்க வேண்டும்.
*அமைய லீவு பெற விண்ணப்பிக்கும் ஆசிரியர்களிடம் இருந்து குறித்த வகுப்புக்கான ஒப்படை,செயலட்டை, மாதிரி பயிற்சி வினாத்தாள் போன்றவற்றை பிரதி அதிபரிடம் ஒப்படைக்க வேண்டும்.
*சுகவீன லீவு மற்றும் கடமை லீவு பெற உத்தேசித்துள்ள ஆசிரியர்கள் அனைவரும் தாங்கள் கற்பிக்கும் வகுப்புகளுக்கு செயலட்டை, மாதிரி பயிற்சி வினாத்தாள், ஒப்படைகள் போன்ற வற்றைத் தயாரித்து வினா வங்கிக்கு வழங்க வேண்டும்.
*பதிற் கடமை ஒழுங்கை மேற்கொள்ளும் நபர்,குறித்த ஆசிரியரின் லீவு நாட்களில், ஆசிரியரின் ஒப்படை/ செயலட்டை/ மாதிரி பயிற்சி வினாத்தாள் போன்றவற்றை பதிற் கடமைக்குச் செல்லும் ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.
*பதிற் கடமை ஒழுங்கை பதிவேட்டில் பதிவு செய்து,பதிற் கடமை ஆசிரியரிடம் கையெழுத்து பெற வேண்டும்.
*பதிற் கடமை ஒழுங்கை மேற்பார்வை செய்யும் பொறிமுறை ஒன்றை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
பதிற் கடமை ஒழுங்கை மேற்கொள்ளும் நபர்களுடன் ஒரு சில ஆசிரியர்கள் ஏற்படுத்திக் முரண்பாடுகள்.
* சில ஆசிரியர்கள் மேற்குறிப்பிட்ட நடைமுறைகளைப் பின்பற்றுவதில்லை. அத்தோடு பதிற் கடமைக்கு செல்ல விரும்புவதில்லை.இதனால் பதிற் கடமை ஒழுங்கை மேற்கொள்ளும் பிரதி அதிபர்/ உதவி அதிபர்/ பகுதித் தலைவர் மீது முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டு கற்றல் கற்பித்தலில் விலகி இருப்பர்.
*மேலும் அனேக ஆசிரியர்களுக்கு 2021/6 ஆம் இலக்க சுற்றறிக்கை பற்றிய போதியளவு அறிவு/விளக்கம் இல்லாத காரணத்தால் தான் முரண்பாடு ஏற்படுகிறது. அதாவது..
*வகுப்பாசிரியர்கள் வாரம் ஒன்றில் குறைந்தது 32 பாடவேளைகள் கற்றல் கற்பித்தல், மேற்பார்வை,பாட ஆயத்தம், மாணவர் பயிற்சி கொப்பி மதிப்பீடு, அதிபரால் வழங்கப்படும் கடமைகளை நிறைவேற்ற வேண்டும்.
*பாட ஆசிரியர்கள் வாரமொன்றில் குறைந்தது 35 பாடவேளைகள் கற்றல் கற்பித்தல் மற்றும் மேலேயுள்ள கடமையை நிறைவேற்ற வேண்டும்.
*பகுதித் தலைவர்/மேற்பார்வையாளர் வாரமொன்றில் குறைந்தது 16 பாட வேளைகள் கற்றல் கற்பித்தல் மற்றும் 24 பாடவேளைகள் மேற்படி கடமைகளையும் மேற்பார்வையும் மேற்கொள்ள வேண்டும்.
பதிற் கடமை ஒழுங்கை எதிர்க்கும் ஆசிரியர்கள்….
*ஒரு நாளும் எந்தவொரு லீவும் பெறாமல் தினமும் பாடசாலைக்கு வந்து, வழங்கப்பட்ட நேரசூசிக்கு அமைய வகுப்பறையில் கற்றல் கற்பித்தலில் ஈடுபட வேண்டும்.
*தங்களது லீவு நாட்களில் வேறு ஆசிரியர்கள் பதிற் கடமைக்கு சென்று கற்பித்தலில் ஈடுபடுகின்றனர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
*தங்களது பிள்ளைகள் கற்கும் பாடசாலைகளில் தினமும் சகல பாடங்களும் நடைபெறவில்லை எனில் ஏற்படும் பாதிப்புக்களை உணர வேண்டும்.
*தங்களது பிள்ளைகள் போன்றவர்கள் தான் தாங்கள் கற்பிக்கும் மாணவர்கள் என்பதை உணர வேண்டும்.
*ஆசிரியர்களின் கடமை, வழங்கப்பட்ட நேரசூசிக்கு அமைய வகுப்பறையில் கற்றல் கற்பித்தலில் ஈடுபட வேண்டும் என்பதை உணர வேண்டும்.
*அதிபர்களின் கடமைகள், வகுப்பறை மேற்பார்வை, ஆசிரியர் மேற்பார்வை, மாணவர்களின் கல்வி உரிமையை உறுதிப்படுத்தல்,கற்றலுக்கான சூழலை ஏற்படுத்திக் கொடுத்தல் போன்றவை.
*அதிபர்களின் கடமையை நிறைவேற்ற ஆசிரியர்கள் முட்டுக்கட்டை போடக் கூடாது என உணர வேண்டும்.