உலகமயமாக்கலும் இலங்கையின் கல்விப் போக்கும்

ஷாஜஹான் ஷிஃபான்

சிரேஷ்ட விரிவுரையாளர் 

தேசிய கல்வி நிறுவகம்


இன்றைய நவீன உலகின் சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பில் தாராளமயமாக்கல் (Liberalization) தனியார்மயமாக்கல் (Privatization), உலகமயமாக்கல் (Globalization) போன்ற பிரதான மூன்று கருத்தியல்கள் பெரிதும் செல்வாக்குச் செலுத்துவதனை தெளிவாக உணரலாம்.


உலகமயமாக்கல் என்பதற்கு பல்வேறு வரைவிலக்கணங்கள் காணப்படுகின்றபோதும் பொதுவாக உலகநாடுகளிடையே பொருளாதார அடிப்படையில் ஒன்றையொன்று சார்ந்த வளர்ச்சிப் பாதையே உலகமயமாக்கல் எனவும் (Kaval Jit Sigh) உலகம் ஒற்றை இடமாக (Single Place) மாறிவரும் நடைமுறையே உலகமயமாக்கல் (Roland Robatson) எனவும் முன்வைத்துள்ள வரைவிலக்கணங்களை நோக்க முடியும்.
எவ்வாறாயினும் உலகமயமாக்கல் என்பது உலக நாடுகளையும் அவற்றில் வாழும் மக்களையும் ஒருங்கிணைக்கும் ஒரு செயன் முறையாகும். இது பொருளாதார, தொழில்நுட்ப, கலாசார, கல்வி மற்றும் அரசியல் பிணைப்புகளுக்கூடாக உலக மக்களை மிக அருகில் கொண்டு வருவதுடன் அவர்கள் ஒருவரில் ஒருவர் தங்கியிருக்கும் நிலையையும் அதிகரிக்கச் செய்கின்றது எனலாம். அத்துடன் போட்டித் தன்மையை குறைத்தல், வேலை வாய்ப்பு, முதலீடு, மூலதனம் என்பனவற்றின் உட்பாய்ச்சல், சர்வதேச வர்த்தகம், தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் பரவல், கலாசார பரிவர்த்தனை, கல்விப் பரிவர்த்தனை, சர்வதேச சட்டங்கள், சுற்றாடல் பற்றிய கவனம், சமூக விழிப்புணர்வு என்பவற்றை உள்ளடக்கியதாகும். கி.பி. 18 ஆம் 19 ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் குறிப்பாக இங்கிலாந்தில் ஏற்பட்ட தொழிற் புரட்சியைத் தொடர்ந்து ஏற்பட்ட காலனியாதிக்கத்தை உலகமயமாக்கலால் தொடங்கி வைக்கப்பட்டது. தொழிற் புரட்சி, பண்டங்களின் அதிகரித்த உற்பத்தி, மூலதனத்தின் அமோகமான வளர்ச்சி, உலகளாவிய சந்தை, தேச எல்லைகளை உடைத்துக் கொண்டு வளர்ந்த தொழிலாளர் ஒற்றுமை, உழைக்கும் வர்க்கத்தின் போராட்டம் பெற்றுத் தந்த உலகப் பார்வை என்பனவே உலகமயமாதல் என்கிற வார்த்தைக்கு முழு அர்த்தத்தையும் தகுதியையும் கொடுத்தன.


பொருளாதார கண்ணோட்டத்தில் நோக்கும் பொழுது உலகமயமாக்கல் என்பது அனைத்து நாடுகளினதும் வளர்ந்து வரும் பொருளாதார ஒருங்கிணைப்பாகவும் தேசிய சந்தைகள் ஓர் உலகளாவிய சந்தையில் ஒருங்கிணையும் ஒரு செயன்முறையாகவும் வியாபித்துள்ளது. உலகின் ஒரு பகுதி மக்கள் மாத்திரம் பெருமளவான வளங்களை நுகர்கின்ற தன்மையினை விடுத்து அனைத்து மக்களும் பொருளாதார தொழிநுட்ப மேம்பாட்டின் பயனை அனுபவிக்க முடியுமாகின்றது. தேசிய சந்தைகளின் பொருட்கள் மற்றும் சேவைகள் என்பவற்றிலான அதிகரித்த உற்பத்தியானது எல்லை தாண்டிய வர்த்தகத்திலும், சர்வதேச மூலதனம் மற்றும் பணம் என்பவற்றின் அசைவுகளுக்கூடாகவும் தொழில்நுட்ப பரிமாற்றத்துக் கூடாகவும் இன்று உலகமயமாதல் எளிதாகிவிட்டது.


மேலும் மக்கள் ஒரு நாட்டிலிருந்து ஏனைய நாடுகளுக்குச் சென்று வருவதறக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுதல், நாடுகளுக்கிடையிலான வணிகக் கட்டுப்பாடுகள் இழிவாக்கப்படல், உள்ளூர் சந்தைகள் வெளிநாட்டு முதலடுகளுக்காகத் திறந்து விடப்படல், நாடுகளுக்கிடையிலான தொலைத் தொடர்புகள், விரிவாக்கப்படல் மக்கள், கலாசாரம் ஒன்றிணைக்கப்படல் என்பனவற்றையும் உலகமயமாக்கல் ஏற்படுத்தத் தவறவில்லை.


அரசியல் அடிப்படையில் நோக்கும்போது உலகமயமாக்கல் என்பது ஜனநாயகம், மனித உரிமைகள், அடிப்படை சுதந்திரங்கள், பால் சமத்துவம், ஒளிவு மறைவற்ற ஆட்சி மற்றும் அரசு சாரா அமைப்புகளின் பெருக்கம் என்ற வகையில் விரிந்து செல்கின்றது.


உலக மக்களுக்கிடையிலான ஒன்றிணைந்த வாழ்கை முறைமையினை ஏற்படுத்தியதில் உலகமயமாதல் கூடிய பங்களிப்பை வழங்கியுள்ளது.இதனடிப்படையிற் சர்வதேச மொழியாக ஆங்கிலத்தை ஏற்றுக் கொள்ளல், திடீர் உணவகங்கள், மேற்கத்தைய சினிமா, இசை, நாகரீக உடைகள், நவீன வாழ்க்கை முறைகள் என்பன சமூகவியலில் உலகமயமாதலின் செல்வாக்குகளை எடுத்துக் காட்டுகின்றன.


உற்பத்தி, தகவல் தொடர்பாடல், கலாசாரம் மற்றும் கல்வி என்பவற்றில் இன்று உலகமயமாதலின் செல்வாக்கினைத் தெளிவாக அவதானிக்கக் கூடிய ஒன்றாகி விட்டது. தொழில்நுட்பத்தின் வளர்ச்சி கல்வியோடு இணைக்கப்பட்டதானது கல்வியின் எல்லையற்ற வளர்ச்சிக்கு அடித்தளமாயிற்று. ஆங்கில மொழிக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டமையால் இணையத்தின் மூலமாக தகவல்களை விரைவாகப் பெற முடிதலும் சர்வதேசப் பாடசாலைகள், தனியார் பல்கலைக்கழகங்கள், பன்மொழி அறிவு பரவலாக்கம், கலாசாரப் பரிமாற்றம், கற்றல் – கற்பித்தல் முறைகளில் நவீனமாற்றம், ஆசிரிய வாண்மை விருத்தியிற் நவீன நுட்பங்கள் உட்புகுந்தமை போன்றனவும் உலகமயமாதலானது கல்வி பெறுவதற்கான வாய்ப்புகளையும் சந்தர்ப்பங்களையும் பெருக்கியதுடன் கல்வி பெறுவதற்கான தடைகளையும் தகர்த்தெறிந்துள்ளது என்றால் மிகையாகாது.


மேலைத்தேயப் பண்பாடு வாழ்க்கைக் கோலங்கள், நுகர்ச்சி முறைமை, அறிவுக் கையளிப்பு முதலியவற்றை வேகமாகப் பரவச் செய்யும் நடவடிக்கையையே உலகமயமாக்கல் முன்னெடுத்து வருகின்றது. ஆகவே உலகமயமாக்கல் என்பது மக்கள் ஒன்றுகூடி வாழுதலை மட்டும் கொண்டதல்ல. மாறாக கலாசாரம், வழிகாட்டல்கள், விழுமியங்கள் என்பவற்றின் பரிவர்த்தனைக்கான ஒரு திறந்தவெளி எனவும் நோக்கப்படத்தக்கது.


உலகமயமாதல் செயற்பாடுகள் என்பது இன்று உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் எல்லா வகையிலும் அழுத்தம்  கொடுக்கும் பிரதான கருவியாக மாற்றம் பெற்றுள்ளது. இது பொருளாதார, சமூக, கலாசார, தொழிநுட்ப மற்றும் கல்வித் துறைகளில் நேரடியான செல்வாக்கினை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.


இலங்கையில் 1977 ஆம் ஆண்டிற்கு பின்னரான திறந்த பொருளாதார கொள்கைகளும் தனியார்மயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கல் பூட்கைகளும் உலகமயமாக்கல் செயற்பாடுகளுக்கு அடித்தளமி;ட்டன. அவ்வாறான உலகமயமாக்கல் செயற்பாடுகள் எமது நாட்டின் கல்வி முறைமையிலும் நேரானதும் ஏதிர்மறையானதுமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளமையினைத் தெளிவாக்க் காணலாம்.


உலகமயமாக்கல் இன்று பூகோளக் கிராமங்களை உருவாக்கியுள்ளது. (Global Village) கற்றவர்கள், தொழில்சார் நிபுணத்துவர்கள் தற்போது உள்நாட்டு தொழில் வாய்ப்புகளில் மட்டும் தங்கியிருக்க வேண்டிய நிலைமை மாற்றமுற்று வேறு நாடுகளில் கூடிய வேதனத்துடனான தொழிற் துறைகளைத் தெரிவு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. உள்நாட்டு இலவசக் கல்வி மூலமான பயன்களைப் பெற்று இவர்கள் வேறு நாடுகளில் இவ்வாறு தொழில்களைப் பெற்றுச் செல்வது கல்வி மீது அரசு மேற்கொண்ட செலவினங்கள் உள்நாட்டு உற்பத்திக்கு பயன்படாது போவதுடன் கல்வி மீதான மூலதன செலவினங்கள் மேலும் அதிகரிக்கவும் செய்கின்றன.


உலகமயமாக்கலின் விளைவாக சர்வதேச பாடசாலைகளின் தோற்றமானது இலங்கையின் கல்விச் செயற்பாட்டில் சில அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளன.  பல்வேறு வெளிநாட்டு தொழில்சார் நிபுணர்கள் எமது நாட்டில் தொழில் புரிவதால் அவர்களது பிள்ளைகளை இலக்காகக் கொண்டே இச் சர்வதேச பாடசாலைகள் தோற்றம் பெறலாயின. இவ்வாறாயினும் தற்போது இப்பாடசாலைகள் பணம் படைத்த உள்நாட்டவர்களது பிள்ளைகள் கல்வி கற்கும் பாடசாலைகளாக மாற்றமடைந்துள்ளதுடன் மேலைத்தேய கல்வி முறைகளையும் கலைத்திட்டங்களையும் கலாசார பாங்குகளையும் இறக்குமதி செய்யும் நிறுவனங்களாகவும் தொழிற்படுகின்றன.

இந்நிலைமையானது இலவசக் கல்வி முறைமைக்கும் உள்நாட்டு கலாசார விழுமியங்களுக்கும் அச்சுறுத்தலாக அமைவதுடன் கல்வி மீதான சமவாய்ப்பினையும் இழிவடயச் செய்துள்ளது.


உலகில் அபிவிருத்தி அடைந்த செல்வந்த நாடுகள் குறைவிருத்தி நாடுகளுக்கு பொருளாதார உதவிகள் என்ற வகையில் நவகாலனித்துவ வாதத்தினை உலகமயமாக்கல் என்ற போர்வையின் ஊடாக உட்புகுத்த பிரயத்தனங்களை மேற்கொள்வதனை அவதானிக்க முடிகின்றது. சிலவேளைகளில் பொருளாதார உதவிகள் எமக்கு நன்மை பயப்பதாக அமைந்தாலும் நாட்டின் இறைமை, சுயாதீனத் தன்மைகளுக்கு நவகாலனித்துவம் சவால் விடுப்பதாகவே அமைகின்றது. நிதி வழங்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் அல்லது சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் உள்நாட்டு கல்வி முறைமைகளில் தலையீடு செய்ய முயற்சிப்பது உலகமயமாதலின் பாதகமான விளைவினை எடுத்துக் காட்டுகின்றது. உதாரணமாக உலக வர்த்தக அமைப்பு (WTO) சர்வதேச நாணய நிதியம் (IMF) உலக வங்கி (WB) என்பவற்றின் செல்வாக்கு இந்நாடுகளில் அதிகரித்துள்ளது.
உலகமயமாதலானது அறிவினைப் பெறும் மூலாதாரங்களைப் பெருமளவிற்கு விரிவடையச் செய்துள்ளமை இதன் முக்கியமான பங்களிப்பாகும். இதன் மூலமாக இன்று உலகில் அறிவுப் பிரவாகம் (Knowledge Explosion) பரவலடைந்துள்ளது. இணையம் மூலம் அறிவு தேடல் இன்று இலகுவான காரியமாகிவிட்டது. மாணவர்கள் அறிவினைப் பெற்றுக் கொள்ளும் பிராதன ஊடகமாக இன்று இணையம் தொழிற்படுகின்றது. அத்துடன் இணையத்தினூடான கல்வி வாய்ப்புகள் அதிகரித்துள்ளமையும் தொழிற் கல்விக்கான ஆதாரங்கள் வெகுவாகக் காணப்படலும், மாணவர்களுக்கு மரபு ரீதியான பாடசாலைக் கல்வி மீதான நம்பிக்கையினைச் சிதைவடையச் செய்துள்ளது. எனவே வகுப்பறையிற் கற்றல்-கற்பித்தல் செயற்பாடு ஆசிரியர்களுக்கு சவாலாக அமைந்துள்ளதுடன் தமது வகிபாகத்தினையும் நவீன தகவல் தொடர்பாடல் நுட்பத்திற்கு ஏற்ப இயைபாக்கிக் கொள்ள வேண்டிய அவசியம் நடைமுறையிற் தோன்றியுள்ளது.


இலங்கையிற் பல்கலைக்கழக நுழைவு ஆண்டுதோறும் சுமார் 3% மான மாணவர்களுக்கே கிடைக்கின்றது. உயர் கல்வி வாய்ப்புகளைப் பெற முடியாமையினால் இளைஞர் மத்தியிற் தோன்றும் விரக்தி இலங்கை எதிர் நோக்கும் பாரிய சமூக சவாலாகும். எனினும் இணையம் மூலமான சர்வதேச பல்கலைக்கழக தொலை கற்கை நெறிகள், வருவழிக் கற்கைகள் (Online Courses) மற்றும் தொழில்சார் பாடநெறிகள் என்பனவும் உள்நாட்டில் செயற்படும் இணைந்த பல்கலைக்கழகங்களும், (Affiliated Universities) தனியார் பல்கலைக்கழகங்களின் வரவும் உயர் கல்வியினைப் பெறுவதற்கான வாய்ப்புகளை வழங்கியுள்ளமையினால் இளைஞர் விரக்தி நிலைமை ஓரளவிற்கேனும் குறைக்கப்பட்டுள்ளது எனலாம்.


இவையனைத்தும் உலகமயமாதல் மூலம் இலங்கை அடைந்து கொண்ட அநுகூலங்களே. உலகமயமாதல் சர்வதேச போக்குவரத்தினை விருத்தி செய்ததுடன் நாடுகளுக்கிடையான பயணச் சட்டங்களையும் தளர்த்தியுள்ளது. எனவே வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி வாய்ப்புகளை இலங்கை மாணவர்களும் பெறுவதற்கு முடியுமாவதுடன் வெளிநாட்டு மாணவர்கள் இங்கு வரவும் முடியுமாகின்றது. இதனால் கல்வி, கலை, கலாசார விழுமியங்களை சர்வதேச ரீதியாக பரிமாற்றிக்கொள்ள முடிவதுடன் நாடுகளிற்கிடையான புரிந்துணர்வினையும் வளர்க்க முடிகின்றது.


உயர் கல்வியில் மட்டுமன்றி முழுமையான கல்வி முறைமையிலும் உலகமயமாதலின் விளைவுகளைக் காணமுடிகின்றது. விசேடமாக வகுப்பறையில் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளில் கணிசமான அளவு தொழில்நுட்பங்களது பாவனையினைக் காண முடிகின்றது. எனினும் ஏனைய வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது நாடு என்ற வகையில்நாம் இன்னும் வெகு தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.


நவீன தொழில்நுட்ப அறிவினை நாம் பெற்றுக் கொள்ளும் வேகம் திருப்திகரமானதாக இல்லை. உலகமயமாதலினால் அபிவிருத்தி அடைந்த நாடுகள் மிக விரைவாக வளர்ச்சி எய்துவதுடன் குறைவிருத்தி நாடுகள் இதன் பயன்களை மெதுவாகவே அடைந்து கொள்ள முடியுமாகின்றன.
நடைமுறையில் எமது கல்வி முறையானது நவீனத்துவத்திற்கு முகம் கொடுப்பதற்கான அடிப்படை ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளமை வரவேற்கத்தக்கதாகும். விசேடமாக கலைத்திட்ட அபிவிருத்தியில் இவை தொடர்பான வலுவான கவனம் செலுத்தப்படுவதனை அவதானிக்க முடிகின்றது.மேலும் தகவல் தொழில்நுட்பப் பாடத்தினை கலைத்திட்டத்துள் உள்வாங்கியுள்ளமையும் சர்வதேச மொழியான ஆங்கிலக் கல்விக்கான கற்றல் வாய்ப்புகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளமையும் இங்கு பாராட்டத்தக்கவைகளாகும். முழுமையாக நோக்கும் போது எமது மாணவர்களின் தகவற் தொழில் நுட்ப அறிவு உயர் மட்டத்திலேயே உள்ளது எனலாம். அநேகமான பாடசாலைகளில் இணையத்தினைக் கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகளுக்கு பயன்படுத்துவதனையும், கற்றல் முகாமைச் செயற்பாட்டில் (Learning Management System) இணைந்திருப்பதனையும் காணலாம்.


உலகமயமாதல் செயற்பாடுகளின் உயிர் நாடியாக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பமே தொழிற்படுகின்றது. ஆகவே இலங்கையின் கல்வி முறைமைகளில் உலகமயமாதலால் தோன்றியுள்ள விளைவுகளை நேரான மனப்பாங்குடன் ஏற்றுக் கொள்வதுடன் தெற்காசிய நாடுகளிற்கிடையிற் எமது நாடு கல்விச் செயற்பாடுகளில் முன்னிலை வகிப்பதனை மேலும் வளர்ச்சியடையச் செய்வற்கு உலகமயமாதலின் நேரான விளைவுகளைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் வெகுவாக உள்ளது.
இலங்கையின் சமூக வளர்ச்சியும், அறிவுப் பரவலாக்கமும், தொடர்பாடல் ஊடகங்களின் வேகமான வளர்ச்சியின் காரணமாகவும் 21 ஆம் நூற்றாண்டில் கல்வி இலக்குகள் வேறுபட்டுள்ளன. இதனால் தொடர்ந்து மாற்றமடைந்துவரும் கல்விச் சூழலுக்கு ஏற்ற கல்வி முறையொன்றினை வழங்க வேண்டிய தேவைப்பாடு இலங்கை கல்விப் போக்கில் தற்போது தீவிரமாக உணரப்படுகின்றது. டெலோ அறிக்கையிற் குறிப்பிடப்பட்டுள்ள கல்வியின் நான்கு தூண்களின் (Four Pillars of Education) அடிப்படையிற் கற்றல் முறைகளும் தேர்ச்சிகளும் அடையப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவ் இலக்குகளின் அடிப்படையில் இலங்கையின் பண்புத்தர விருத்திக்கு உலகமயமாதல் செயற்பாடுகள் மூலமாகப் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்புகள் அதிகமாகும். இதற்கென தொடர்ச்சியாக விரிவடையும் கல்விச் சூழலில் உயர் பலன்களைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் ஆசிரியர்கள் வலுவூட்டப்பட வேண்டும்.


இதற்கென உலகளாவிய ரீதியிற் காணப்படும் நிலைமைகள் ஆராயப்பட்டு ஏற்புடைய வகையிற் ஆசிரியர்கள் வலுவூட்டப்பட வேண்டும். அறிவினைத் தேடிப் பெறவும் அவற்றைப் புதுப்பித்துக் கொள்வதற்குமான நவீன மூலாதாரங்கள் தொடர்பாக விழிப்பூட்டப்பட வேண்டும். அத்துடன் உலக சமூகக் கட்டமைப்பு தொடர்ச்சியாக மாற்றமடைந்து வருவதனால் ஏனைய அபிவிருத்திச் செயன்முறைகளுக்கு ஏற்ற வகையிலும் ஆசிரியர்கள் தமது திறன்களை விருத்தி செய்து கொள்ள வேண்டியள்ளது. இங்கு பல்வேறு மொழிகள் தொடர்பாகவும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான அறிவிiனையும் வழங்குவதன் மூலம் ஆசிரியர்கள் அறிவினைத் தேடிச் செல்பவராக மாற்றமடைவதுடன் மாற்ற முகவராகவும் (Change Agent) தொழிற்பட வேண்டியுள்ளது.


நடைமுறைக் கல்வி முறையின் கீழ் செயற்படுத்தப்படும் கலைத்திட்டதில் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான விடய உள்ளடக்கங்கள் போதுமானதாக இல்லையென்பதனை  வெளிப்படையாகவே ஏற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. கல்வியின் தரப்பண்பினை விருத்தி செய்ய தகவல் தொழில்நுட்பத்தினை உயர்வாகப் பயன்படுத்த முடியும். விசேடமாக கணனியினை ஆதாரமாகக் கொண்ட இணையப் பயன்பாட்டை விருத்தி செய்த கற்றல்-கற்பித்தல் முறைகள் கிரமமாக உள்வாங்கப்பட வேண்டியுள்ளது. இதனடிப்படையிற் கலைத்திட்டத்தினை நவீன மயப்படுத்த வேண்டும். எனினும் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது பல தடைகள் காணப்படுகின்றபோதும் அவற்றை வெற்றி கொண்டு மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டியது காலத்தின் தேவையாகும்.


இலங்கையின் கல்வி முறை KASP  முறையினை அடிப்படையாகக் கொண்டுள்ள போதும் பெரும்பாலும் அறிவினை மட்டும் முதன்மைப்படுத்திய செயற்பாடுகளுக்கே முக்கியத்துவம் வழங்கப்படுகின்றன. உலக சவால்களை எதிர் நோக்க அறிவு மட்டுமன்றி திறன்களும் நடைமுறைப் பிரயோகத்தினையும் வளர்சியடையச் செய்ய வேண்டும். இதனால் முழுமையான செயற்திறன் உடைய எதிர்கால மாணவச் சமூதாயத்தினை உருவாக்க முடியுமாகும். இதற்கான ஏற்பாடுகளை உலகமயமாதலினுடாகவே வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும் என்பது தெளி​வான உண்மையாகும்.


மரபு ரீதியான வகுப்பறைக் கற்பித்தலில் இருந்து விடுபட்டு நவீன E-Leaning, M-Learning முறைகளைக் கையாள வேண்டியுள்ளது. இதன் மூலமாக மாணவர்களின் கற்றல் ஊக்கத்தினை அதிகரிக்கச் செய்வதுடன் மகிழ்ச்சிகரமான கற்றல் சூழலினை உருவாக்க முடிகின்றது. வருவழி நூல் நிலையங்கள் (Online Library), இணைய வகுப்பறைகள் (Virtual Class Rooms) என்பன இன்று எமது கல்வி முறைக்குள்ளும் கொண்டுவரப்பட வேண்டும். இவற்றின் மூலமாக கல்வி மீதான செலவினங்களை சிக்கனப்படுத்திக் கொள்ள முடிவதுடன் சர்வதேச நாடுகளின் கல்வி முறைகளுடன் போட்டி இடக் கூடிய நிலைமையினையும் ஏற்படுத்த முடிகின்றது.


உலகமயமாதல் செயற்பாடுகள் மூலமாக கற்றல் சமூகமொன்றைத் (Learning Society) தோற்றுவிக்க இயலுமாகின்றது. இலங்கையின் கல்வி முறையானது அதன் சமூகக் கட்டமைப்பு மாற்றத்தினை விட மெதுவாகவே பயணிக்கின்றது. எனினும் நாடு அபிவிருத்தி அடைய அதன் கல்வியானது சமூகக் கட்டமைப்பு மாற்றத்தினை விட வேகமாக பயணிக்க வேண்டும். ஆகவே மரபு ரீதியான கல்வி முறைகளில் இருந்தும் நகர்ந்து நவீன கல்விச் செயற்பாட்டினுள் இணைய வேண்டும். இவ்வாறு செயற்பட்ட சிங்கப்பூர், மலேசியா, யப்பான் போன்ற நாடுகள் இன்று அதிசயிக்கத்தக்க வளர்ச்சிகளைக் கண்டு வருகின்றன.


எனவே நவீன கல்விச் செயற்பாட்டினுள் இணைவதற்கான பாதையாக உலகமயமாக்கல் செயற்பாடுகள் முன்னிற்கின்றன. இலங்கையும் இப்பாதையில் வெற்றிகரமாகப் பயணிக்க எல்லாத் தரப்பினரும் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டியுள்ளது.


உசாத்துணை நூல்கள்

1.  மக்கள் வங்கி, (ஏப்ரல்/மே 2000) பொருளியல் நோக்கு, கலாநிதி. ஜே.பி. கலேகம் உலகமயமாக்கல், மக்கள் வங்கி தலைமையகம், கொழும்பு 12

2. மக்கள் வங்கி, (ஆவணி/புரட்டாதி 2010) பொருளியல் நோக்கு, கலாநிதி. உபாலி எம்செடர், அறிவுப் பொருளாதாரமும் பொதுக்கல்வியும், மக்கள் வங்கித் தலைமையகம், கொழும்பு 02

3. இலங்கை முற்போக்குக் கலை இலக்கியப் பேரவை ஜெயராசா .சபா (2006) கோளமயமாக்கலும் இலங்கையின் கல்வியும், கொழும்பு.

4. சேமமடு பதிப்பகம், ஜெயராசா .சபா (2011) கல்வியில் எழுவினாக்கள், கொழும்பு

5. ICDE International Conference, S.Chinnamai, Effects of Globalization on Education and Culture, University of Madras , 2005 November 19-23

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!