வீடுதான் முதல் பாடசாலை; பெற்றோரே முதல் ஆசிரியர்

Teachmore

செல்லப்பா சுபாஷினி
கல்வி மற்றும்
பிள்ளைநலத்துறை,
கிழக்குப் பல்கலைக்கழகம்
நாம் எமது வாழ்க்கையில் பல்வேறு நடத்தைக் கோலங்களை பின்பற்றுகின்றோம். இத்தகைய நடத்தை மாற்றங்களுக்குக் காரணமாக அமைவதே சமூகமயமாக்கல் ஆகும். சமூகமயமாக்கல் என்பது தனியாள் ஒருவர் தான் சார்ந்துள்ள சமூகத்தின் நடத்தைகள், பெறுமானங்கள் மற்றும் சிந்தனைகளை கற்கும் செயல்முறையாகும். சமூகமயமாக்கல் செயல்முறையின் மூலம் ஒருவர் தனிப்பட்ட அடையாளத்தைப் பெற்றுக் கொள்வதுடன் தம்மைச் சூழவுள்ள கலாசாரத்தின் நம்பிக்கைகளையும் அச்சமூகத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் கற்றுக் கொள்கின்றார்.
சமூகமயமாக்கல் செயல்முறையானது குடும்பத்திலிருந்து ஆரம்பமாகி பாடசாலை மற்றும் ஏனைய நிறுவனங்களாலும் தொடர்ந்து வழிநடத்தப்படுகின்றது. சமூகமயமாக்கல் காரணமாக ஒருவர் தமது உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதுடன் மனப்பாங்குகளை விருத்தி செய்து பல்வேறு அம்சங்கள் பற்றிய அறிவை பெற்றுக்கொள்ள முடிகின்றது.
சமூகமயமாக்கல் செயல்முறையில் பல்வேறு முகவர்கள் பங்கு வகிக்கின்றனர். அதாவது குழந்தையை சமூகத்திற்குரிய வளர்ந்த ஒருவராக்குவதற்கு அப்பிள்ளைக்கு பாதுகாப்பு வழங்கக் கூடிய, அன்பு செலுத்தக் கூடிய, தண்டனை வழங்கக் கூடிய எல்லா சமூகக் குழுக்களும் சமூகமயமாக்கல் முகவர் ஆவர். அத்தகைய சமூக முகவர்களாக குடும்பம், பாடசாலை, சகபாடிக் குழு, சமய நிறுவனங்கள், பொதுசன ஊடகங்கள், வேலைத்தளம் ஆகியவை விளங்குகின்றன. மனித வாழ்வில் இத்தகைய சமூகமயமாக்கல் முகவர்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும்.
தனியாள் சமூகமயமாக்கலில் குடும்பத்தின் வகிபங்கு மிகவும் முக்கியமானதாகும். சமூகமயமாக்கல் செயல்முறையின் ஆரம்ப சமூக நிறுவனமாக குடும்பம் காணப்படுகின்றது. குறிப்பாக ஆரம்ப பிள்ளைப் பருவத்தில் குடும்பத்தின் செல்வாக்கு அளப்பரியது. ஒரு பிள்ளைக்கு வீடுதான் முதல் பாடசாலையாகவும் பெற்றோரே முதல் ஆசிரியராகவும் காணப்படுகின்றனர்.
குடும்பத்தினால் சிறந்த சமூகமயமாக்கலை வழங்குவதன் மூலம் ஒரு குழந்தையின் ஆளுமை விருத்தி, அறிவு வளர்ச்சி, நல்ல மனப்பான்மையை தோற்றுவித்தல், ஒழுக்க விழுமியங்களை வளர்த்தல் போன்ற விடயங்களை மேம்படுத்த முடியும். மனித வாழ்வு சிறப்புற்று சீர்மையடைய குடும்பத்தின் பங்களிப்பானது அவசியம். வாழ்வியல் சிறப்படைய சமூக விழுமியங்கள் பேணப்பட வேண்டும்.
குடும்பப் பருமன், பிள்ளைகளை வளர்க்கும் பாங்கு, குடும்ப உறுப்பினரிடையே நிலவும் உறவுகள், குடும்ப அமைப்பில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள், அண்மைக் கால சமூக மாற்றங்கள் குடும்பத்தில் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.குடும்பத்தில் இடம்பெறும் குழந்தை வளர்ப்புப் பாங்குகள் சமூகமயமாக்கலில் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன.
அந்த வகையில் குழந்தை வளர்ப்புப் பாங்குகளை மூன்று வகையாக பார்க்கலாம்.
ஆதிக்கக் கொள்ளையுடைய பெற்றோர்,அதிகாரத்தன்மை கொண்ட பெற்றோர்,
இசைவுடைய பெற்றோர் என்பதே மூன்று வகைகள்.
ஆதிக்கக் கொள்ளையுடைய பெற்றோர் கீழ்படிவினையே முக்கியமாக கருதுவர். தாம் சொல்வது போலவே பிள்ளைகள் நடந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பர். பிள்ளைகள் ஏன்,எதற்கு என்று கேள்வி கேட்க இடமளிக்க மாட்டார்கள். பெற்றோருடைய தேவைகளே குடும்பத்தில் முதன்மை பெறும்.
அதிகாரத் தன்மை கொண்ட பெற்றோர் உள்ள குடும்பங்களில் வீட்டின் ஒழுங்குவிதிகளுக்கு ஏற்ப பிள்ளைகள் நடந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பர். எனினும் பிள்ளைகள் தமது கருத்துகளையும் அபிப்பிராயங்களையும் வெளிப்படுத்துவதற்கு இடமளிப்பர். இவ்வாறான குடும்பங்களில் பெற்றோரும் பிள்ளைகளும் தமது உரிமைகளையும் பொறுப்புகளையும் பகிர்ந்து கொள்வதனால் இச்சூழலில் பிள்ளைகளின் சமூகமயமாக்கம் சிறந்த முறையில் இடம்பெற வாய்ப்புண்டு.
இசைவுடைய பெற்றோர் பிள்ளைகளுக்கு அதிகளவான சுதந்திரத்தைக் கொடுப்பர். இக்குடும்பத்தில் பிள்ளைகள் கருத்துப் பரிமாற்றங்களை தவிர்த்துக் கொள்வதுடன் வீட்டில் தமது விருப்பங்களே முதன்மை பெற வேண்டும் என எதிர்பார்ப்பர். இத்தகைய போக்கு பிள்ளைகளின் நடத்தைகளில் பொருத்தமற்ற விளைவுகளை தோற்றுவிக்கும்.
ஒரு குடும்பத்தின் கட்டமைப்பானது சீரான முறையில் ஒழுங்கமைக்கப்படாதவிடத்து குடும்பத்தினால் சிறந்த சமூகமயமாக்கலை வழங்குவது கடினமான விடயமாக மாறிவிடும். இத்தகையதோர் குடும்பத்தில் வாழும் பிள்ளையின் முன்னேற்றம் கேள்விக்குறியானதாக அமையலாம். எனவே ஒரு மனிதனின் வாழ்வை சீராக நெறிப்படுத்துவதற்கு ஆரம்ப சமூகமயமாக்கல் முகவரான குடும்பத்தின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும்.
பாடசாலை செல்லும் வயது வரை ஒரு பிள்ளை தனது முழு நாளையும் குடும்பத்திலேயே கழிக்கின்றது. அதனால் இக்காலப்பகுதியில் அப்பிள்ளை குடும்ப அங்கத்தவரின் உறவின் அடிப்படையிலேயே சமூக இணக்கம் பெறுகின்றது. வேறு எந்த சமூக நிறுவனங்களை விடவும் குடும்பத்தில் நிலவும் உறவு, அந்நியோன்யமானதும் நெருங்கியதுமாகும்.உளப்பகுப்பாய்வாளரான சிக்மன் பிராய்ட் ஒரு மனிதன் தனது குடும்பத்திலிருந்து கற்றுக் கொண்டவற்றையே சமூகத்தில் பிரதிபலிக்கின்றான் எனக் கூறுகின்றார்.
சிறுபிள்ளையொன்று முதன் முதலில் தன்னுடைய மொழியை கற்றுக் கொள்வது குடும்பத்திலாகும். முதலில் சிறிய சொற்கள் மூலம் சொல்வளத்தை ஆரம்பிக்கும் பிள்ளை படிப்படியாக அதனை விருத்தி செய்து கொள்ளும். இவ்வாறு கற்றுக் கொள்ளும் பிள்ளை சமூகத்துக்குச் சென்று தான் கற்ற வசனங்களை பயன்படுத்த முற்படும். மேலும் குடும்பத்தில் தவறான செயல் என தண்டனை வழங்கும் செயற்பாடுகளில் பிள்ளைகள் ஈடுபடமாட்டார்கள். அத்தகைய செயல்களில் ஈடுபடுவது தவறு என்பதை பிள்ளை கற்றுக் கொள்கிறது. இவ்வாறாக சமூகமயமாக்கல் குடும்பத்திலேயே ஆரம்பித்து விடுகின்றது.
தற்காலத்தில் குடும்பங்களில் நிலவும் வன்முறைகள், துஷ்பிரயோகங்கள் போன்றன சமூகமயமாக்கலில் பாரிய தாக்கத்தை உண்டாக்குகின்றன. எனவே சிறந்த சமூகத்தை உருவாக்குவதில் சமூகமயமாக்கல் முகவரான குடும்பம் கூடிய அக்கறை காட்ட வேண்டும். (Thinakaran(
SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!