ஆய்வொன்றை மேற்கொள்வதற்கான ஆரம்ப நடவடிக்கைகள்

கலாநிதி த. கலாமணி
ஓய்வு பெற்ற சட்டத்துறைத் தலைவர்
யாழ்ப்பாண பல்கலைக்கழகம்.

இன்று “ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தல்” என்பது உயர்கல்விப் பாடநெறிகளில் அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது. குறிப்பாக குறித்த பாடங்களில் பட்டப்படிப்பைச் சிறப்புப் பட்டமாக மேற்கொள்ளும் மாணவர்களும் பட்டப்பின் கல்வி டிப்ளோமாப் பட்டத்துக்கான கல்விநெறியை மேற்கொள்ளும் ஆசிரியர்களும் தமது பட்டத்திற்கான பகுதித் தேவையை பூர்த்தி செய்து கொள்ளும் முகமாக ஆய்வொன்றை மேற்கொண்டு ஆய்வுக் கட்டுரை ஒன்றைச் சமர்ப்பிக்குமாறு கேட்கப்படுகிறார்கள்.

இவர்களிற் பலர் ஆய்வு பற்றிய அடிப்படை அறிவின்றி, ஆய்வுக்கான தமைலப்பைத் தெரிவு செய்வதிலும் ஆய்வுக்கான பிரச்சினையைத் தெளிவாக வரையறுப்பதிலும் இடர்படுகிறார்கள். முதுகல்விமாணி, முதுத்துவமாணி பட்டநெறிகளை மேற்கொள்பவர்களும் கூட ஆய்வுக்கான முன்மொழிவை எழுதுவதில் பல சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். இவர்களையும் ஆய்வுக் கட்டுரை எழுதவேண்டியுள்ள பிறதுறைகளைச் சேர்ந்த மாணவர்களையும் கருத்திற்கொண்டு, ஆய்வுச் செயன்முறை பற்றிய பொதுவான எண்ணக்கருக்களையும் நடைமுறைகளையும் சுருக்கமாக எடுத்துரைத்து ஆய்வுக்கான ஆரம்ப நடவடிக்கைகளே சிறந்த ஆய்வுக்கான அடிப்படைகள் என்பதை விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது.

ஆய்வு என்றால் என்ன?
ஆய்வு என்பது அறிவுத்தேடலுடன் சம்பந்தப்பட்டதாகும். ஆய்வு என்பதனைக் குறிக்கும் ஆங்கிலப்பதமான Research என்பது, தேடுதல் எனப் பொருள் கொண்ட. RE|CHERCHER  என்ற பிரெஞ்சு மொழிச் சொல்லின் வழி வந்ததாகக் கூறப்படும். இதனாலேயே The Advanced Learner’s Dictionary of Current English எனும் அகராதி, “எந்த ஓர் அறிவுத்துறையிலும் புதிய தகவல்களைக் குறிப்பாகத் தேடுவதற்கான கவனமான ஒரு பரிசீலனை அல்லது ஆராய்வு” என்பதே “ஆய்வு” என்பதன் அர்த்தம் எனக் குறிப்பிடுகின்றது.

“உண்மையைத் தேடுதல் மனித இனத்தினதும் ஆர்வம் நிறைந்த மனித மனத்தினதும் சிறப்பான தன்மை ஆகும். மானிட வரலாற்றைப் பின்னோக்கிப் பார்க்கும்போது. வாழிடச் சூழலின் விநோதமே உண்மையின் தேடலுக்கு வழிவகுத்தது என உய்த்துணரலாம்.

உண்மையைத் தேடுவதற்கான முறைகளாக, அதாவது அறிவை உய்த்துணர்வதற்கான அல்லது பெற்றுக் கொள்வதற்கான வழிமுறைகளாக பல அணுகுமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இவ்வகையில்.

 • அநுபவத்தின் அடிப்படையில் உய்த்தறிதல்
 • அதிகாரம் மூலம் அறிவு வழங்கப்படல்
 • மெய்யுணர்வு முறையில் அறிவைத்தேடல்
 • பகுத்தறிவு முறையில் அல்லது காரணங்காணல் மூலம் உண்மையை உய்த்துணர்தல்
 • ஆய்வு மூலம் உய்த்துணர்தல் என்பன குறிப்பிடத்தக்கவை.

பட்டறிவு அல்லது அநுபவங்கள் மூலமான அறிவு ஆளுக்காள் வேறுபடலாம் என்பதனாலும் அதிகாரபீடம் பிழையானவற்றையும் உண்மை எனத் தெரிவிக்கலாம் என்பதனாலும் மெய்யுணர்வு என்பது புலன்களுக்கு அப்பாற்பட்டது என்பதாலும் காரணங்காணலினூடான அறிவு என்பது உற்றுநோக்கலின்றி தர்க்க ரீதியாக உய்த்தறி அநுமானமாக அமையலாம் என்பதாலும், மேலே குறிப்பிடப்பட்ட ஐந்து அணுகு முறைகளிலும் முதல் நான்கு அணுகுமுறைகளும் தவிர்க்கப்பட்டு, ஆய்வின் மூலம் உண்மையைக் கண்டறிதலே இன்று பெரிதும் விரும்பப்படுகின்றது.

அறிவுத்தேடலில் ஆய்வு அணுகுமுறையின் முக்கியத்துவம் 
அறிவுத்தேடலுக்கான சிறந்த அணுகு முறையாக ஆய்வு” பரிந்துரைக்கப்படுகின்ற வகையில், ஆய்வு என்றால் என்ன?” என நன்கு வரையறை செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும். ஆய்வு என்பதற்குப் பல்வேறு வரைவிலக்கணங்கள் தெரிவிக்கப்படுகின்றன. அவற்றுட் சில பின்வருமாறு:

ஆய்வு என்பது பிரச்சினை ஒன்றுக்கு விடை குறிப்பிடுவர்.

ஓர் ஒழுங்குமுறையான இதனால் பரிசீலனை அல்லது விசாரணை ஆகும் 
பிரச்சினை ஒன்றுக்குத்தீர்வு காண்பதற்கான ஓர் ஒழுங்கு முறையான பரிசீலனை ஆய்வு ஆகும்” (Burmis)

சில நோக்கங்களுக்காகத் தகவல்களைச் சேகரித்து, பகுப்பாய்வு செய்யும் ஒழுங்கான செயன்முறையே ஆய்வு ஆகும்” (McMillan & Schumacher)

புதிய அறிவைப் பெற்றுக் கொள்வதற்கான ஒழுங்கு முறைப் படுத்தப்பட்ட ஒரு முயற்சியே ஆய்வு ஆகும் (Redman & Mory)

இவையும் இவைபோன்ற தம்முள் சிறிது வேறுபடினும், இவ்வரைவிலக்கணங்களினூடு ஆய்வு என்பதன் பொதுவான அம்சங்கள் சிலவற்றை இனங்கண்டு கொள்ள முடியும் அவையாவன:

 • ஒழுங்குபடுத்தப்பட்ட விசாரணை உசாவல் என்பது ஆய்வின் அடிப்படையாகும்.
 • ஆய்வு முடிவுகள் சான்றாதாரங்களின அடிப்படையிலானவை

ஆய்வு என்பது முக்கியமாக ஒரு செயல்நடவடிக்கை (activity) அல்லது ஓர் ஒழுங்கு முறையான செயன்முறை (Process) ஆகும்.  ஆய்வு என்பது ஓர் ஒழுங்குமுறையான செயன்முறை என்ற வகையில் அது ஒழுங்குமுறையிலமைந்த பல படிகளை உள்ளடக்கும். ஒருவருடைய சொந்த அறிவுத் தொகுதியில் முறையியல் சார்ந்த செயற்பாடுகளினூடாக புதியன சேர்த்துக்கொள்ள ஆய்வு முயற்சிக்கின்றது.

எனவே, எமது அறிவுத்தேட்டம் (Body of Knowledge என்பது ஆய்வு முடிவுகளினூடாகவே கட்டி எழுப்பப்பட்டதாகும். இதற்கு ஆய்வுச் சமுதாயம் (Research community) காலத்துக்குக் காலம் தன்னாலான பங்களிப்பை வழங்கி வந்திருக்கின்றது. எல்லா வகையான முன்னேற்றங்களும் ஆராய்வின் அடியாகவே பிறக்கின்றன. சந்தேகம் என்பது ஆராய்வுக்கு வழிநடத்துவதோடு ஆராய்வானது பரிசீலனைக்கு வழிகாட்டும் என்பதால் அதீத நம்பிக்கையைவிட சந்தேகம் சிறந்ததெனக் குறிப்பிடுவர். இதனால் ஆராய்வை அல்லது உசாவலை (inquiryஅடிப்படையாகக் கொண்டமைந்த ஆய்வானது பல்வேறு துறையினருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமைகின்றது. இவற்றை பின்வருமாறு பட்டியலிடலாம்.

கல்வியாளர்களைப் பொறுத்தவரை, பல்வேறு கல்விப் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கும் அவற்றுக்கான தீர்வுகளைக் கண்டறிவதற்கும் ஆய்வு உதவுகின்றது.

 • சமூக உறவுகளை ஆராய்ந்து பல்வேறு சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கானாப் பயன்படுவது என்ற வகையில் சமூக விஞ்ஞானிகளுக்கு ஆய்வு முக்கியத்துவமுடையது.
 • எமது பொருளாதார அமைப்பில் ஏறத்தாழ எல்லா வகையான கொள்கையாக்கங்களுக்குமான அடிப்படையை ஆய்வு தான். வழங்குகின்றது. 
 • வர்த்தகம், கைத்தொழிற்துறை  போன்றவற்றில் செயற்படுத்து திட்டங்களுக்கான முன்மொழிவுகளை ஆய்வே வழங்குகின்றது, 
 • தத்துவவாதிகளினதும் சிந்தனையாளர்களினதும் புதிய சிந்தனைகளதும் அகக் காட்சிகளதும் சிறந்த வடிகால்களாக ஆய்வே விளங்குகின்றது.
 • இலக்கியவாதிகளைப் பொறுத்தவரை, நடையியல்களையும் படைப்புகளையும் விருத்தி செய்து கொள்வதற்கு ஆய்வு உதவுகிறது.
 • பகுப்பாய்வாளர்களும் அறிவாற்றலுடைமையாளர்களும்  ஆய்வின் மூலமே புதிய கொள்கைகளைப் பொதுபையாக்கத் செய்து கொள்கின்றனர்.
 • இன்றைய சமூகக் கட்டமைப்பில் ஆய்வுப் புலமையாளர்கள் உயர் ஸ்தானத்தைப் பெற்றுக் கொள்வதற்கான ஒரு வழியாக ஆய்வு உள்ளது.
 • தொழில் வாண்மையை (Profession) முன்னேற்றுவதற்கான ஒரு கருவியாக ஆய்வு குறிப்பிடப்படுகின்றது.
 • தர்க்க ரீதியாகச் சிந்திக்கும் பழக்கத்தை விருத்தி செய்வதற்கும் சிந்தனைகளை ஒழுங்கமைப்பதற்கும் ஆய்வு உதவுகிறது. இவ்வாறாக, பல்வேறு சந்தர்ப்பங்களில் ஆய்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ள நிலையில் ஆய்வுச் செயனி முறையின் படிநிலைகளை சுருக்கமாகவேனும் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். இவ்வேளை, ஆய்வின் அணுகுமுறை சார்பாகத் தெரிவிக்கப்படும் இரு கட்டளைக் கோள்கள் (Paradigms) முக்கியமானவை:

(i) அளவறிநிலை ஆய்வு அணுகுமுறை

 (Quantitative Research Approach)

(ii) பண்புநிலை ஆய்வு அணுகுமுறை

(Qualitative Research Approach)

அளவறி நிலை ஆய்வு அணுகுமுறை என்பது சமூகத் தோற்றப்பாடுகளை எண் அளவு ரிதியாகக் கணக்கிடுவதுடன் அவற்றைப் புள்ளிவிபர. அடிப்படையில் வேறு சமூகக் காரணிகளுடன் தொடர்புபடுத்த முனைகின்றது. ஆனால், பண்பு நிலை ஆய்வு அணுகு முறை என்பது ஓர் ஆய்வாளர், இயற்கையாக நிகழும் தோற்றப்பாடுகளை அதன் சிக்கற்பாட்டுத் தன்மையுடன் ஆய்வு செய்தல் ஆகும். ஆய்வு அணுகுமுறைக்கான கட்டளைக்கோளைப் பொறுத்து,  ஆய்வுச் செயன் முறையிலுள்ள படிநிலைகளுக்குக் கொடுக்கப்படும் அர்த்தம் சிறிது வேறுபடலாமெனினும் பொதுவாகவே எந்த ஓர் ஆய்வுச் செயன்முறைக்கும் அதன் படிநிலைகள் முக்கியத்துவம் மிக்கவை.

ஆய்வுச் செயன்முறையும் அதன் முக்கியமான படிநிலைகளும்

ஆய்வுச் செயன்முறை என்பது வழமையாக மேற்கொள்ளப்படும் அநேக ஆய்வுகளில் மேற்கொள்ளப்படும் குறிப்பான பிரதான நடவடிக்கைகளின் ஒட்டுமொத்தமான திட்டமாகும்.  இந் நடவடிக்கைகள் ஆய்வொன்றின் அடிப்படையான மூலகங்களை உள்ளடக்குவன.  ஆய்வுச் செயன்முறையின் ஒரு தொடரொழுங்கிலுள்ள படிநிலைகளாக இந்நடவடிக்கைகள் கொள்ளப்படும். அவையாவன:

 • ஆய்வுப் பிரச்சினையொன்றை இனம் காணல்.

ஆய்வுப் பிரச்சினை ஒன்றை இனம் கானப்பதுடனேயே ஆய்வுச் செயன்முறை ஆரம்பிக்கின்றது. இப்பிரச்சினைக்கான தீர்வு ஆய்வினூடாகப் பெற்றுக் கொள்ளப்படும்.

பிரச்சினையை தெளிவுபடுத்திக் கொள்ளல்

எந்தவொரு பிரச்சினையும் ஆரம்பத்தில் தெளிவற்றதாகக் காணப்படுவதோடு மேலும் தெளிவாக வரையறுக்கப்படுவதற்கான பகுப்பாய்வையும் வேண்டி நிற்கும் ஆய்வுப் பிரச்சினையைத் தெளிவுபடுத்திக் கொள்வதற்காக அதனுடன் சம்பந்தப்பட்ட இலக்கியங்களை மீளாய்வு செய்தல் அவசியமானது. இலக்கிய மீளாய்வினூடாக ஆய்வுப் பிரச்சினையை தெளிவாக வரையறை செய்து அதன் பரப்பெல்லையையும் வரையறுத்துக் கொள்ள முடியும்.  ஆய்வுப் பிரச்சினையோடு தொடர்புபட்ட மாறிகளை  இனம்காணவும் அவற்றின் திட்டவட்டமான அர்த்தங்களை  அறிந்து கொள்ளவும் இலக்கிய மீளாய்வே உதவுகிறது.

ஆய்வுப் பிரச்சினையைக் குறிப்பாகக் கூறுதல் 
முன்னைய படிமுறையிற் பெற்ற தெளிவினூடாக, ஆய்வுப் பிரச்சினையை ஆய்வாளர் தெளிவாகவும் குறிப்பாகவும் எடுத்துரைத்தல் சாத்தியமாகும். அல்லது கருதுகோளாகவோ எடுத்துரைக்கப்படலாம்.

ஆய்வு வடிவமைப்பைத் தெரிவு செய்தலும ஆய்வுத் திட்டத்தைத் தயாரித்தலும் 
ஆய்வுப் பிரச்சினைக்குப் பொருத்தமான ஆய்வு வடிவமைப்பை (வகை/முறை) தெரிவு செய்தல் இப்படிநிலையில் அடங்கும். ஆய்வு வடிவமைப்பு என்பது ஆய்வாரள் ஒருவர் பின்பற்றும் பரந்த ஆய்வுத் தந்திரோபாயமாகும். எவ்வாறான தரவு சேகரிப்புக்கான கருவிகள் பயன்படுத்தப்படும். எவ்வாறு அவை பயன்படுத்தப்படும் எவ்வாறு தரவுகள் ஒழுங்கமைக்கப்பட்டு பகுப்பாய்வுசெய்யப்படும் என இன்னோரன்ன பல விடயங்களை ஆய்வு வடிவமைப்பு எடுத்துரைக்கும்.

தரவு சேகரித்தல்
தெரிவு செய்யப்பட்ட ஆய்வு வடிவமைப்புக்கு அமைவாகவும் தயாரிக்கப்பட்ட ஆய்வுத் திட்டத்திற்கு ஏற்பவும் தரவு சேகரித்தலை விபரிப்பது இப்படி நிலையாகும். தரவு சேகரித்தல் என்பது உற்றுநோக்குதலும் மாறிகளை அளவீடு செய்தலுமாகும். தரவு சேகரித்தலுக்குப் பொருத்தமான கருவிகள் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தல் முக்கியமானதாகும். தரவுகளின் அடிப்படையிலேயே ஆய்வு முடிவூம் அமையும். என்பதால் இப்படிநிலையில் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.

தரவுப்பகுப்பாய்வு
முன்னைய படிநிலையில் சேகரிக்கப்பட்ட தரவுகளைப் பகுப்பாய்வு செய்தல் இந்தப் படிநிலையாகும். தரவுகளைக் கையாளுவதன் மூலம் பண்புநிலை ஆய்வில் குறிப்பான நிலைமைகளைக் கண்டறிதலும் அளவறி நிலை ஆய்வில் குறிப்பான சில கண்டறிதல்களைப் பொதுமைப்படுத்தலும் தரவுப் பகுப்பாய்வின் மூலமே சாத்தியமாகும்.

முடிவுகளைப் பெறல்
ஆய்வுச் செய்ன்முறையின் இறுதிப் படிநிலை இதுவாகும். தரவுப் பகுப்பாய்வின் மூலம் ஆய்வுப்பிரச்சினை அல்லது ஆய்வுக் கருதுகோள் பற்றிய முடிவுகளைப் பெற்றுக் கொள்ளல் இங்கு நடைபெறும்.
ஆய்வுச் செயன்முறையின் படிநிலைகள் யாவும் ஒன்றையொன்று சார்ந்தவையாகும எனினும், இப்படி நிலைகள் யாவும் ஆய்வுப் பிரச்சினையைச் சுற்றிச் சுழல்பவையாகும். எனவே, ஆய்வொன்றின் ஆரம்ப நடவடிக்கை ஆய்வுப் பிரச்சினையை இனங்காணலாகவே அமைகிறது.

ஆய்வுப்பிரச்சினையைத் தேர்ந்தெடுத்தல்
ஆய்வொன்றின் மையப்பொருள் ஆய்வுப் பிரச்சினையானை ஆகும். ஆய்வுக்கு அடிப்படையானது பிரச்சினையை மையமிட்ட தலைப்பாகும். அதவாது ஆய்வுப்பிரச்சினையைத் தேர்ந்தெடுத்தல் செயன்முறையின் படிநிலைகள் யாவும் ஆய்வுப் பிரச்சினையை மையமாகக் கொண்டே சுற்றுச்சுழல்வதால், ஆய்வுப் பிரச்சினை என்பது ஆய்வுச் செயன்முறை ஒன்றின் இதயம் போன்றது எனப்படும். ஆய்வுப் பிரச்சினை என்பது அதன் பெயரினாலே குறிக்கப்படுவது போல ஓர் ஆய்வாளர் ஆய்வு செய்ய விரும்பும் பிரச்சினையே ஆய்வுப் பிரச்சினை ஆகும். இன்னொரு வகையில், கூறுவதானால் ஆய்வுப் பிரச்சினை என்பது ஒரு தீர்வை ஏற்படுத்தும் பொருட்டு எடுத்துக் கூறப்படும் ஒருவினாவைக் குறிக்கும் ஓர் ஆய்வை நடத்துவதற்குத் தேவையான அடிப்படைகளில் ஒன்றாக ஆய்வுப் பிரச்சினையைக் கண்டறிந்து, அதனைப் பகுப்பாய்வு செய்தல் அமைகிறது. சரியான ஆய்வுப் பிரச்சினையைக் கண்டறிந்து அதன்தன்மை, வடிவங்கள் ஆகியவற்றை தெளிதல் ஆகியன அறிவியல் ஆய்வில் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். உணரப்பட்ட ஓர் அசௌகரியம் அல்லது சிக்கலின் மூலம் தோன்றுவதே ஒரு பிரச்சினை. சிக்கலான ஒரு சூழ்நிலைதான் ஆய்விற்கு தொடக்கத்தை ஏற்படுதத்துகிறது.

இவ்வாறான முக்கியத்துவமுடைய ஆய்வு செய்யக்கூடிய பிரச்சினையைத் தேர்ந்தெடுத்தல் ஒரு முக்கிய நடவடிக்கையாகும் இச்செயலின்போது தவறுதல் நிகழ்ந்தால் ஆய்வு முழுவதும் சிக்கல் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே ஆய்வுப் பிரச்சினையைத் தெரிந்தெடுக்கும்போது முழுக் கவனம் செலுத்தப்படுவது அவசியம். ஆய்வுப் பிரச்சினையை தேர்ந்தெடுத்தல் என்பது கண்டறிந்த பிரச்சினையை மதிப்பிடுதல் சார்ந்த ஒரு நடவடிக்கை ஆகும். இவ்வாறு மதிப்பீடு செய்வதில் கவனத்திற்கொள்ளப்படும் அம்சங்களே ஆய்வுப்பிரச்சினையை தேர்ந்தெடுப்பதற்கான அளவு கோல்கள் ஆகின்றன. இந்தக் அளவு கோல்களாக பின்வருவனவற்றைக் குறிப்பிடமுடியும்.

1. ஆய்வுத்திறன்/ தகுதி (Feasibility)
2. தெளிவு  (Clarity) 
3. முக்கியத்துவம் (Significance)
4. நீதிநெறிசார் விளக்கங்கள் – (Ethical issues)
5. ஆர்வம் (Interest) 
6. பருமன் (Magnitude)
7. சிறப்புத்திறமை மட்டம் (Level of Expertise)

1. ஆய்வுத்திறன் (ஆய்வு செய்யக்கூடிய தன்மை) அல்லது தகுதி – 

ஆய்வின் மூலம் தீர்வு காண்பதற்கு ஏற்ற பிரச்சினைதானா என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும் அந்தப் பிரச்சினையை ஆய்வு செய்வதற்குத் தேவையான தரவுகள், புள்ளி விபரங்கள் கிடைக்க வாய்ப்புண்டா எனத் தெரிந்து கொள்ளவேண்டும். மேலும் தேவையான தரவுகளை/புள்ளி விபரங்களைச் சேகரிப்பதற்குப் போதுமான ஆய்வுக் கருவிகள் இருக்கின்றனவா அல்லது அந்த ஆய்வுக் கருவிகளை உருவாக்க முடியுமா என்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும். தரவுகளைப் பகுப்பாய்வு செய்வதற்குத் தேவைப்படும் உதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியுமா என்பதையும் முன் கூட்டியே ஊகிக்க வேண்டும். இவை எல்லாம் சாத்திய மெனில்,  ஆய்வுப் பிரச்சினை தகுதியானது என்று தீர்மானிக்கலாம்.

2. ஆய்வுப் பிரச்சினையின் தெளிவு
மூலம் தோன்றுவதே ஒரு பிரச்சினை. சிக்கலான ஒரு ஆய்வுப் பிரச்சினை உள்ளடக்கும் பிரதான சொற்கள் எண்ணக்கருக்கள் பற்றிய தௌிவு முக்கியமானது.  இந்த எண்ணக்கருக்கள் அளவிடத்தக்கனவா என்றும், அவ்வாறாயின் எவ்வாறு அளவிடுவது எனவும் தெரிந்திருக்க வேண்டும். அளவிடப்பட முடியாத எண்ணக் கருக்களை ஆய்வுப்பிரச்சினை உள்ளடக்கவில்லை என்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும்.

3. ஆய்வுப் பிரச்சினையின் முக்கியத்துவம் – 
ஆய்வு கோட்பாட்டியல் கொள்கை,  வளர்ச்சிக்கு உதவ வேண்டும். அதாவது. இதுவரை   அறிப்படாத சில இடைவெளிகளை நிரப்புவதாகவோ அல்லது புதிய கொள்கை உருவாக்கத்திற்கு உதவுவதாகவோ இருக்கவேண்டும். எனவே தெரிவு செய்யப்பட்ட பிரச்சினை பொருத்தப்பாடுடையதாகவும் முக்கியத்துவமுடையதாகவும் இருக்கவேண்டும்.

4. நீதிநெறிசார் விவகாரங்கள்                                                                                                                                                                                                                         
ஆய்வுப் பிரச்சினையை குறித்து ஆய்வை மேற்கொள்ளும்போது, ஏற்படக்கூடிய நீதிநெறி சார்ந்த விவகாரங்களை அறிந்திருக்கவேண்டும். ஆய்வுக்குட்படுத்தப்படுவோர் எவ்வகையிலும் துன்புறுத்தப்படமாட்டார்கள் என்பதையும் இரகசியங்கள் பாதுகாக்கப்படும் என்பதையும் ஆய்வுப் பிரச்சினையின் தெரிவின்போது உறுதி செய்து கொள்ளவேண்டும். எனவே ஆய்வுப்பிரச்சினையின் தெரிவின்போதே அப்பிரச்சினையை ஆய்வு செய்யும்போது ஏற்படக்கூடிய நீதிநெறி சார்ந்த விவகாரங்களை எவ்வாறு சமாளிக்கலாம் என்பதையும் அறிந்திருக்கவேண்டும்.

5. ஆய்வுப்பிரச்சினை குறித்த ஆர்வம் 
ஆய்வுப் பிரச்சினையில் உண்மையான ஆர்வமும் ஈடுபாடும் உள்ளபோதே ஆய்வில் முன்னேறமுடியும். இந்த ஆர்வமும் ஈடுபாடுமே ஆய்வை முன்னெடுப்பதற்கான ஊக்கத்தை வழங்கும். ஆர்வமுடன் ஈடுபடாத ஆய்வு முற்றுப் பெறாமற்போவதுண்டு.

6. ஆய்வின் பருமன்
ஆய்வுப்பிரச்சினை குறித்து ஆய்வை முன்னெடுக்கும்போது இடம்பெறக்கூடிய தொழிற்பாடுகளின் அளவையும் ஆய்வுக்குத் தேவையான நிதியையும் ஆய்வுக் காலத்தையும் ஆய்வுப் பிரச்சினை வரையறை செய்யும் காலத்திலேயே அறிந்திருக்க வேண்டும். அதாவது குறித்த ஆய்வு கிடைக்கக்கூடிய வளங்களுடன் குறித்த காலத்தில் ஒப்பேற்றப்படக்கூடியதா என்பதை ஆய்வுப் பிரச்சினையின் பருமன் தௌிவாக்க வேண்டும். இல்லையேல் ஒப்பேற்றப்படக் கூடிய அளவுக்கு ஆய்வுப் பிரச்சினையை குறுக்கிக் கொள்ளவேண்டும்.

7. ஆய்வுப் புலத்தில் சிறப்புத் திறமை மட்டம் 
ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும் ஆய்வுப் பிரச்சினைக்குரிய விடயம் தொடர்பாக ஆய்வாளருள் சிறப்புத் திறமையைக் கொண்டிருக்கவேண்டும் எனவே ஆய்வுப் பிரச்சினையைத் தேர்ந்தெடுக்கும் போதே, அவ்விடயம் குறித்த தனது திறமை மட்டத்தையும் ஆய்வாளர் உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். மேற்பார்வையாளரின் உதவியைப் பெற முடியுமெனினும், ஆய்வின் பெரும்பகுதி வேலை ஆய்வாளரினாலே மேற்கொள்ளப்படல் வேண்டும்.

இவ்வகையில் ஆய்வுப்பிரச்சினையைத் தேர்ந்தெடுப்பதற்கான அளவுகோல்களாக அமையும் வினாக்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிட முடியும்.

 1. அப்பிரச்சினை ஆய்வுக்கு ஏற்றதா? (feasible)
 2. அப்பிரச்சினை தௌிவாக வரையறை செய்யப்பட்டுள்ளதா? (clear)
 3. அப்பிரச்சினை ஏற்கனவே உள்ள கொள்கை மீதும் அதன் நடைமுறைகள் மீதும் ஏற்படுத்தும் விளைவுகளின் அடிப்படையில் முக்கியத்துவமிக்கதா? (Significant)
 4. அப்பிரச்சினை, ஆய்வுச் செயன்முறையின் மீது ஏற்படக்கூடிய நீதி நெறிசார் விவகாரங்களைக் கருத்திற்கொள்கிறதா? (Ethical)
 5. அப்பிரச்சினை ஆய்வாளருக்கு ஆர்வமூட்டுமா?  (Interesting)
 6. அப்பிரச்சினை ஒப்பேற்றப்பட்டதா? (Manageable)
 7. அப்பிரச்சினையை ஆழ் பரிசீலணை செய்யும் திறன் ஆய்வாளரிடம் உள்ளதா? (expert)
 8. தெரிவுசெய்யப்பட்ட பிரச்சினை ஆய்வுப் பெறுமதி உள்ளதா? அதாவது அறிவுப் பரப்புக்குப் புதிய பங்களிப்பை வழங்க வல்லதா?
 9. அப்பிரச்சினை தொடர்பாக ஏற்கனவே போதிய ஆய்வுகள் நிகழவில்லையா?

இதுவரை எடுத்துரைக்காட்டவற்றைச் சுருக்கமாக நோக்குவோமாயின் ஆய்வொன்றை மேற்கொள்ளல் என்பது அர்ப்பணிப்பையும் ஈடுபாட்டையும் வேண்டி நிற்கின்ற ஒன்றாகும். இப்பணியில் ஆய்வாளர் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டுமெனின்,  ஆரம்ப நடவடிக்கைகளாக ஆய்வுச் செயன்முறை பற்றியு அதனோடு இணைந்த படிநிலைகள் பற்றியும் இவ்வகையான படிநிலைகளோடு சம்பந்தப்பட்ட எண்ணக்கருக்கள் முறைகள் பற்றியும் நன்கு அறிந்து கொள்ளவேண்டும். இவை யாவற்றுக்கும் ஆரம்பமாக ஆய்வுப் பிரச்சினையை இனங்காணல் என்பதே அமைவதால் ஆய்வுப் பிரச்சினை குறித்த தௌிவை ஏற்படுத்திக் கொள்ளல் ஆய்வாளருக்கு அவசிமாகின்றது. அவ்வகையில் சில ஆரம்ப நிலைக் குறிப்புகளை இக்கட்டுரை வழங்கியுள்ளது.

(நன்றி: ஆயதனம்)
SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!