குழந்தைகளை நன்கு புரிந்து கொள்ளுங்கள்!

Teachmore
நாம் ஒவ்வொருவரும் தனித்துவம் பெற்றவர்கள். அந்த தனித்துவத்தைக் குழந்தைகளிடமும் எதிர்பார்க்கிறோம். இருந்தும் சில நேரங்களில் குழந்தைகள் செய்வது அந்த வயதிற்கு உரியதா, இல்லையேல் கவனிக்கப்பட வேண்டியவையா என்ற கேள்வி எழலாம். குழந்தைகள் உளவியலில் எவ்வாறு இது தீர்மானிக்கப்படுகிறது?
எவை ‘வழமை’ என்ற புரிதல்தான் குழந்தை உளவியலில் ஆரம்ப காலப் படிப்பு. ‘வழமை’ என்பதை முழுதாகப் புரிந்து கொள்வதுடன் எவற்றுக்குக் கவனம் தர வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்திக் கொள்ளக் குழந்தை உளவியல் உதவும். எது சரியில்லை என்று கண்டுபிடிப்பதற்கு, அவற்றைக் கணிப்பதற்கென்று குறிப்புகள், காலக் கோட்பாடுகள் உள்ளன. இது ஆங்கிலத்தில் symptoms, diagnosisஎனச் சொல்லப்படும்.
ஏதோ ஒன்றைச் சரியில்லை என்றதும் அதைப் பார்த்ததும் அதைக் கோளாறு என முடிவு செய்வதும், அதனை இதுதான்-, அதுதான் எனப் பெயர் சூட்டுவதும் தவறு. இதற்கு விளக்கம் என்னவென்றால், ஒன்று, முழு புரிதல் இருந்தால்தான் வேறுபாடுகளை அடையாளம் காண முடியும். மற்றொன்று, முழு புரிதல் இருந்தாலே வேறுபாடுகளை அடையாளம் கண்டுகொள்ள முடியும். சிலவற்றைக் கொஞ்ச நேரம், சில தடவை பார்த்து முடிவிற்கு வருவது அறியாமை என்றே சொல்லலாம்.
குழந்தை உளவியலில், பிறந்த குழந்தையிலிருந்து குழந்தைப் பருவம், மலரும் பருவமான விடலைப் பருவம் வரை அடங்கும். வளர்ப்பு, குழந்தைகளின் பொதுவான இயல்புகள், வளர்ந்து வரும் சூழலின் பாதிப்பு, உறவுகளின் தாக்கம், இப்படிப் பலவற்றை ஆராய்ச்சி மூலம் கண்டறிந்து, எல்லாவற்றையும் ஒருங்கிணைந்த பல்வேறு கோணங்களிலிருந்து கணிக்க ‘தியரிகள்’ (theories) வழிகாட்டிகளாகின்றன.
இந்தத் துறையில் ‘வரும் முன் காப்போம்’ என்பதற்கு மிக முக்கியமான இடம் தரப்படுகிறது. பெரும்பாலும் பல மனநல திண்டாட்டங்கள், வெவ்வேறு இக்கட்டான சூழ்நிலைகளைச் சமாளிக்கத் தெரியாமல் தடுமாறுவதில் வருவதுதான். சமாளிக்கும் திறமைகளை, எழாமலேயே காக்கும் திறமைகளை வளர்க்கச் சிறு வயதிலேயே அளிக்கும் பயிற்சிகள் தாம் ‘வரும் முன் காப்போம்’.
குழந்தைப் பருவத்திலிருந்து விடலை வயது வரையில் படிக்கச் செல்வது வழக்கம். அங்கு, குழந்தைகள் நடந்து கொள்ளும் விதங்களிலிருந்து அவர்களின் மனநலத்தை அறிய முடியும். அதே போலவே எவை நலனற்றவை என்பதையும் அடையாளம் கண்டு கொள்ள முடியும். வகுப்பில் மாணவரின் நிலை புரிந்து கொண்டு வரும் முன் காப்போம் முறைகளுக்கு வழி அமைத்து, பாடங்களை அணுகுவதிலும், கற்றுத் தரும் விதங்களிலும் நல்லனற்றவற்றை அடையாளம் கண்டு கொண்டு அகற்ற முடியும்.
பொதுவாகப் பார்க்கக் கூடியவை படிப்பில் தடுமாற்றம், பதற்றம், துயரம், அவநம்பிக்கை, சரியில்லாத நடத்தை எனப் பலவகையில் மனநலம் பாதிக்கப்படுவதைக் காட்டலாம். எப்பொழுதெல்லாம் இவை தோன்றுகின்றன, மாற்றங்களின் விவரங்கள் என்ன என்று அறிய வேண்டும்.
ஆசிரியர், பெற்றோர் இருவருக்கும் இவற்றை அடையாளம் காண்பதில் சமபங்கு உண்டு. அவர்களுக்கு இப்படிக் கண்டறியும் பயிற்சி கொடுக்கப் பல உத்திகளை உபயோகிக்கலாம். கண்டறிந்ததும் மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை மனநல நிபுணர்களுடன் சேர்ந்து செயல்படுத்த வேண்டும். இந்த அணுகுமுறையால் மனநலக் கோளாறுகள் ஏற்படும் முன்னரே அவற்றைச் சரி செய்ய முயல்வதில், குழந்தைக்கும் அவர்களின் குடும்பத்திற்கும் நன்மைகள் ஏற்படும். மனநலம் குன்றி விடாமல் பாதுகாக்க முடியும்.
எல்லா மனநலத் துறைகளிலும் கவனித்தலே (observation) மிக முக்கியமான உத்தியாகும். இந்த கருவியால் குழந்தைகளின் செயல்பாடுகளை, அவர்களைப் பற்றி, அவர்களின் பெற்றோர், ஆசிரியர், நண்பர்கள், வெளி உலகில் மற்றவருடன் பழகும் விதங்களை அறிந்து கொள்ள, புரிந்து கொள்ள முடியும். அவர்களின் மனதிடம், வளர்ச்சி பற்றிய தகவல்கள் சேகரித்துக் கொள்ள முடிகிறது.
குழந்தைகள் வளர்ச்சிக்குப் பங்களிப்புகளாக அவர்களின் பிறப்பிலேயே இருக்கும் உயிர்மம் (genes), இயல்பான தன்மை, வளர்ப்பு முறைகள் மூன்றையும் குறிப்பிடலாம். குடும்ப உறுப்பினர்கள், அவர்களுடன் பழகும் அன்றாட மனிதர்கள், சுற்றுச்சூழல், சூழ்நிலை, சந்திக்கும் அனுபவங்கள் என பலவற்றுடன் சேர்ந்தவை. இவை ஒவ்வொன்றும் குழுந்தை, விடலை பருவத்தினரின் சிந்தனை- உணர்வு- நடத்தை- உடல்நலம் -மற்றவருடன் பழகுவது- வளர்ச்சியில் தாக்கத்தைக் காட்டும்.
உடல் வளர்ச்சியில் குழந்தைகளின் பெரிய மற்றும் சிறிய தசை (muscles) உள்ளடங்கும். பெரிய தசைகள் நன்றாக வளர்வதைக் குழந்தைப் பருவத்திலிருந்து பார்க்கலாம். இதனால் குழந்தை நிற்பது, பிறகு நடப்பது, ஓடுவது, மாடி ஏறுவது எனச் செய்ய முடிகிறது. சிறிய தசைகள் உன்னிப்பாகப் பிடித்துச் செய்ய உதவும். பொருட்களை எடுத்துச் செய்ய, உதாரணத்திற்கு ஆள்காட்டி விரல்-, கட்டைவிரல்களால் பிடித்துக் கொள்வது (எடுக்க, எழுத, தைக்க) என்பதைப் போன்றவை. ஒருவேளை வயதிற்கேற்ற அளவிற்கு இந்தத் திறமைகளின் வளர்ச்சி இல்லை என்றால் கண்டிப்பாக அந்த குழந்தையின் சூழலைப் புரிந்து மேற்கொண்டு என்ன, எப்படிச் செய்ய என்பதை நிர்ணயிக்கும் வகையில் வழி தேடவேண்டும். குழந்தை முறையாக வளர்வதை வகையாகத் தெரிவிப்பதுதான் வளரும் நிலை.
அறிவு வளர்ச்சி, ஆராய்ச்சி இந்த காலகட்டத்தில் பல மடங்கு முன்னேற்றம் பெற்றுள்ளன. இதிலிருந்து பல தகவல்கள் தெரியவந்துள்ளன. வயிற்றில் வளரும் கருவிற்கு வெளி உலகின் சூழலின் பாதிப்பைப் பற்றிய ஆராய்ச்சிகள், கருவிலிருக்கும் போதே கவனிப்புத் தேவை என்பதைக் காட்டி வருகிறது. கருவில் இருக்கும் போது, தாய்மார்கள் கேட்கும் பாடலைப் பிறந்த குழந்தைக்கு அடையாளம் தெரிகிறது என்பதை ஒரு உதாரணமாகச் சொல்லலாம். அறிவு வளர்ச்சியில் மொழி, கற்றல், ஞாபகத் திறன், முடிவு செய்தல், விடை காணுதல், கூர்ந்து கவனித்தல், ஆராய்ந்து பார்ப்பது, புரிந்து கொள்வதும் அடங்கும். இவை சில சமயங்களில் தனியாகவும், பல தடவை கலவையாகவும் உபயோகப்படுத்தப்படும். அதனால்தான் குழந்தை உளவியலில் இதில் எவை இருக்கின்றன, எது குறைகிறது என்பதைக் கண்டு கொண்டு அதை மேம்படுத்த வழிகளை செய்யத் தேவை.
பொதுவாகக் கூறும் நடத்தை (behaviour) என்பது நாம் நடந்து கொள்ளும் விதங்களைக் காட்டுவது ஆகும். குழந்தைகளின் நடத்தை வைத்து அவர்களை ‘மௌனமானவர்’, ‘சாந்தமானவர்’, ‘படுசுட்டி’ என நாம் குறிப்பிடுவது வழக்கம். குழந்தைப் பருவத்திலிருந்து விடலை பருவம் முடியும் வரை அவர்கள் கற்றுக் கொள்ளும் நிலையிலிருந்தாலும் இவ்வாறு கூறி அவர்கள் தகுந்த நிலையில் இருக்கிறார்களா என்று தராசில் வைத்து ஒப்பிட்டுப் பார்ப்பதும் வழக்கம்.
உண்மையில், பெற்றோரின் வளர்ப்பு முறை, கண்டிக்கும் வகை, அவர்களுடன் இருப்போரிடமிருந்து கற்றுக் கொள்வதெல்லாம் நடத்தையில் அடங்கும். அதனால்தான் குழந்தை உளவியலில் இவற்றைப் பற்றி பல்வேறு கோணங்களில் கேள்வி கேட்பது தேவையாகிறது.குழந்தைகள், விடலைப் பருவத்தினருக்கு வாழ்க்கை மாற்றங்கள் ஏற்படும் போது அவை நெடுநாட்களுக்கு நீடித்து அவர்கள் வித்தியாசமாக நடந்து கொண்டால் அதற்கு மனநல நிபுணரை அணுகுவது உசிதமாகும். இப்படி மாற்றம் என்பது வீடு மாறுதல், தங்கை- தம்பி பிறப்பு, பெற்றோர் விவாகரத்து எனப் பல்வேறாகும். குழந்தைகளிடம் அதிக கோபம், வெறுப்பு, அதிக அடம்பிடிப்பது என்பவற்றையும் குழந்தை உளவியலில் புரிந்து கொள்ள இடமுண்டு. இவை ஏன் நேர்கின்றன எதனால் என்று காரணிகளை ஆராய்ந்து கண்டுபிடித்து வழி அமைக்கலாம்.
மிக முக்கியமான அம்சம் காக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வது. மற்றவர் பேசும் போது சொல்வதை முடிக்கும் வரை காத்திருந்து பொறுமையுடன் கேட்டுக் கொள்வது, விட்டுக் கொடுத்தல், இவை இருந்தால் அவர்கள் “எமோஷனல் இன்ட்டலிஜென்ஸ்” (Emotional Intelligence) உள்ளவராகக் கருதப்படுவார்கள்.
விளையாட்டு, மிகவும் முக்கியமான இடம். இங்கு வாழ்க்கையைப் பற்றிப் புரிந்து வாழ கற்றுக் கொள்ள முடியும். தனக்கென்று உறவுகளை (நண்பர்கள்) தேர்ந்தெடுக்க முடியும். வளரும் குழந்தைகள் இங்கிருந்து நுணுக்கமான ஒத்துழைப்பு, புரிதல், சமத்துவம் எல்லாம் கற்கும், இவற்றைச் சரியாகச் செயல்படுத்தப் பிள்ளைகளுக்குத் தான் பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற உள்ளுணர்வு இருந்தால்தான் முடியும்.
வரும் முன் காப்போம் மூலமாகப் பலவிதமான, பலவகையான காயப்படுத்தும் காரணிகள், அதனால் நேரும் வலிமையற்ற நிலைகளை, குறைகளை இடையூறுகளை அடையாளம் கண்டு கொண்டு அதைச் சரிசெய்ய வழிகளை அமைக்கலாம்.
மாலதி சுவாமிநாதன்
தினகரன்
SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!