வீட்டில் கற்றல் சூழலின் அவசியம்

வீட்டில் கற்றல் சூழலின் அவசியம்
MA.Mohamed Sanoos – NDT, HNDE
Teachmore

ஆசிரியர் – தி/கிண்/குறிஞ்சாக்கேணி அறபா மகா வித்தியாலயம்
கொரோனா எனும் கொடிய வைரஸ் உலக நாடுகளில் கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கின்றது. இது ஒவ்வொரு நாட்டினதும் பொருளாதாரம், அரசியல், கல்வி என அனைத்துத் துறைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக எதிர்கால சந்ததியினரை புடம்போடும் கல்விச் செயற்பாட்டில் அதன் தாக்கம் அளப்பெரியது. உலகெங்கிலுமுள்ள மாணவர்களின் கல்வி இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எமது நாட்டிலும் முதலாம் தவணைக் கல்வி நடவடிக்கைகளைக்கூட பூர்த்தி செய்ய முடியாமலும் இரண்டாம் தவணையை உரிய காலத்தில் ஆரம்பிக்க இயலாமலும் ஆக்கி எம் மாணவர்களின் கல்வியில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தியிருக்கின்றது இந்த கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ்.

எனவேதான் மாணவர்கள் பாடசாலைக் கல்விச் செயற்பாட்டிலிருந்து விலகி வீட்டிலேயே முடங்கிக்கிடக்கும் இத்தருணம் வீட்டில் கற்றல் சூழலின் அவசியத்தை முன்னெப்போதுமில்லாதளவு  பெற்றோர் உட்பட அனைத்துத் தரப்பினரையும் யோசிக்கத்தூண்டியுள்ளது. அந்த வகையில் ஓர் ஆரோக்கிய கற்றல் சூழலை வீட்டில் எவ்வாறு அமைத்துக்கொள்வது தொடர்பாக இக்கட்டுரை ஆராய்கிறது.

கற்றல் மனித வாழ்க்கையின் தொடர் செயற்பாடாகும். கருவறையிலுள்ள சிசுக்கள் கூட வெளிப்புறச் சூழலிலிருந்து கற்றுக்கொள்வதாக ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. எனவே கருவறையிலிருந்து தொடரும் மனிதனின் கற்றல் செயற்பாடு கல்லறை வரை நீடிக்கிறது. “தொட்டில் முதல் மண்ணறை வரை அறிவைத் தேடு” எனும் அறபுப் பழமொழி இதனைத்தான் உணர்த்தி நிற்கின்றது.

மனிதனின் ஜனனம் முதல் மரணம் வரையான “வாழ் நாள் நீடித்த கல்வி” (Life Long Education) நிச்சயமாக வரையறுக்கப்பட்ட ஒரு சூழலில் மாத்திரம் பெறக்கூடிய ஒன்றல்ல. மனித வாழ்வின் ஒவ்வொரு பருவமும் வெவ்வேறு விதமான கற்றல் சூழலில் கல்வியை வேண்டி நிற்கின்றது. பள்ளிப் பருவத்திற்கு முன்னர் பிள்ளையின் கற்றல் மையம் தனது வீடாகும். இங்கு தாய், தந்தை, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர் என குறிப்பிட்டவர்களை நன்றாக அவதானித்து போலச் செய்வதன் (Imitating) மூலம் பிள்ளை கற்றுக்கொள்கிறது. எனவே, தாயை முதல் ஆசிரியராகக் கொண்ட குழந்தைப் பருவம் (0-1 வயது), முன் பிள்ளைப் பருவம் (2-7 வயது) ஆகிய பருவப் பிள்ளைகளுக்கு வீட்டுச் சூழல் முன்மாதிரி மிக்கதாக இருப்பது அவசியமாகும்.

முன் பிள்ளைப் பருவத்தின் இறுதி வருடங்களில் பாடசாலை செல்ல ஆரம்பிக்கும் பிள்ளை கட்டிளமைப் பருவ காலம் (13-19 வயது) வரை பாடசாலையை தனது பிரதான கற்றல் தலமாக கொள்கின்றது. இப்பருவங்களுக்கிடைப்பட்ட காலத்தில் சம வயதுக் குழுக்கள், (Peer Groups) தொலைத் தொடர்பு சாதனங்கள், விளையாட்டுக் கழகங்கள், சமய, கலாசார நிலையங்கள், சமூக சேவை அமைப்புக்கள் என பிள்ளைகள் எண்ணற்ற சமூகமயமாக்கல் முகவர்களுடன் (Agents of Socialization) கலந்து இடைத்தாக்கம் (Interaction)  புரிந்து தமது கற்றலை முறைசாரா (Informal) விதமாகவும் விரிவுபடுத்திக்கொள்கின்றனர்.

மாணவர்களின் முறைசார் கல்வியின் (Formal Education) நாளமாக விளங்கும் பாடசாலைக் கல்வியின் போது வகுப்பறைக் கற்றல் சூழல் மாணவர் விரும்பக்கூடியதாகவும் (Child Friendly) கற்றல் வளங்கள் கொண்டதாகவும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்கள் ஒரு நாளைக்கு சுமார் ஆறு மணித்தியாலங்கள் கற்றலுக்காக செலவிடும் பாடசாலைக் கற்றல் சூழல் எந்தளவு மாணவர் சார்பானதாகவும் அவர்களின் கற்றலை இலகுபடுத்தக்கூடியதாகவும் தொந்தரவுகளும் இடையூறுகளும் அற்றதாகவும் அமைய வேண்டுமோ அதைவிட பன்மடங்கு வசதியானதாக வீட்டில் மாணவர்களின் கற்றல் சூழல் இருக்க வேண்டும். அதற்கான நியாயங்களாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
பிள்ளைகள் ஒரு நாளில் வீட்டிலேயே அதிமான நேரத்தை செலவிடுகின்றனர். எனவே, கற்றலுக்காக அதிக நேரத்தை அங்கு ஒதுக்க வேண்டும்.

  • பாடசாலையில் வழங்கப்படும் வீட்டு வேலைகளை (Home Work) செய்ய வேண்டிய தேவை உள்ளது.

  • அன்றைய பாடங்களை மீட்டல் செய்ய வேண்டிய அவசியம் காணப்படுகின்றது.

  • நாளைய பாடங்களிற்கு தயாராகிச் செல்வதற்கான தேவை உள்ளது.
  • பரீட்சைகளுக்கு ஆயத்தமாக கற்றலில் ஈடுபட வேண்டியுள்ளது.


மேற்குறிப்பிட்ட நியாயங்களை கூர்ந்து அவதானிக்கும் போது வீட்டில் எந்தளவிற்கு ஆரோக்கியமான கற்றல் சூழல் அவசியம் என்பது தெளிவாகின்றது. குறிப்பாக அன்று கற்ற விடயங்களை மீட்டல் செய்தல் அதேபோல பரீட்சைக்குத் தயாராகுதல் போன்ற செயற்பாடுகளின் போது வீட்டில் சீரான கற்றல் சூழலின் அவசியத்தை எவராலும் மறுதலிக்க முடியாது.

வீட்டில் காணப்பட வேண்டிய கற்றல் சூழல்

இது இரு சூழல்களின் கூட்டுச் சேர்க்கையாக அமைதல் வேண்டும்.
(i)                  பௌதீக சூழல் (Physical Environment)
(ii)            உளவியல் சூழல் (Psychological Environment)
பௌதீக சூழல் (Physical Environment)

கற்றலுக்குத் தேவையான பௌதீக வசதிகளைக் கொண்ட கற்றல் வளங்களையுடைய இட அமைப்பே இதன் மூலம் கருதப்படுகிறது. இதில் பின்வரும் விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
இடம்:– கற்றலை மேற்கொள்வதற்காக வீட்டின் அறை அல்லது மண்டபத்தின் ஒரு பகுதி என வசதிக்கேற்றாற் போல் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். உட்காருவதற்கான கதிரை, எழுதுவதற்கு வசதியான மேசை, புத்தகங்களை அடுக்கிவைப்பதற்கான இராக்கை என்பனவும் காணப்பட வேண்டும்.

இவ்விடமானது போதியளவு வெளிச்சமுடைதாகவும் (Enough Light) காற்றோட்டம் உடையதாகவும் (Ventilation) அமைந்திருத்தல் வேண்டும். துர்நாற்றங்கள் வீசாத, பாரிய சப்தங்கள் அல்லது இரைச்சல்கள் இல்லாத இடமாக இருப்பது அவசியமாகும்.
வளம்:– இங்கு வளம் என்பது கற்றலை இலகுவாக மெற்கொள்வதற்குத் தேவையான கற்றல் உபகரணங்களாகும். அதாவது பாட நூல்கள், குறிப்புக் கொப்பிகள், தவணைப் பரீட்சை வினாத்தாள்கள், கடந்த கால வினாப் பத்திரங்கள், மாதிரி வினாத்தாள்கள், பாடத்தோடு தொடர்புபட்ட ஏனைய நூல்கள் மற்றும் பரும்படி வேலைக்கான தாள்கள் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

படங்கள், வரைபுகள், அட்டவணைகள் போன்றனவும் காட்சிப்படுத்தப்பட்டிருத்தல் பௌதீக கற்றல் சூழலை மேலும் உயிர்ப்புள்ளதாக்கும்.

மாணவர்களின் வயது, கல்வித் தேவை கருதி பெற்றோரின் கண்காணிப்பின் கீழ் கணினி, இணைய வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தல் கற்றல் சூழலின் வினைத்திறனை அதிகரிக்கும்.
ii.                   உளவியல் சூழல் (Psychological Environment)
அநேகமான வீடுகளில் மாணவர்களின் கற்றலுக்கான பௌதீக சூழல் முறையாக அமையப்பெற்றிருப்பினும் உளவியல் சூழல் சவால் மிக்க ஒன்றாகவே உள்ளது.

வீட்டில் அமைய வேண்டிய உளவியல் சூழல் என்பது “கற்றலில் ஈடுபடும் மாணவனுக்கு உளரீதியாக தடையாக அமையும் எல்லா விதமான செயற்பாடுகளினின்றும் நீங்கிய வீட்டுச் சூழலாகும்.” வீட்டில் கற்றலுக்கான உளவியல் சூழல் அமையாமைக்கு பல்வேறு காரணிகள் செல்வாக்குச் செலுத்த முடியும்.
கற்றலுக்கான உளவியல் சூழலை பாதிக்கும் காரணிகள்
அன்பு, உறவூத் தேவை பிள்ளைக்கு நிறைவேற்றப்படாமலிருத்தல்
ஆப்ரஹாம் மாஸ்லோவின் தேவைக் கொள்கையில் (Maslow’s hierarchy of needs) உடலியல் தேவைக்கும் (Physiological Needs)  காப்புத் தேவைக்கும் (Safety & Security Needs) அடுத்த நிலையிலுள்ள அன்பு உறவூத் தேவை (Need of Love & Belongingness) பிள்ளைக்கு நிறைவேறாத போது அப்பிள்ளை கற்றலில் ஈடுபடுவது சிரமமாகும்.

அன்புக்கும் அரவணைப்புக்கும் ஏங்கும் ஒரு பிள்ளை பெற்றோரிடமிருந்து அவற்றை பெறாத போது மூன்றாம் நபரிடமிருந்தாவது கிடைத்தால் போதும் எனும் நிலைக்கு வந்து விடும். இவ்வாறான சூழ்நிலைகளே பிள்ளைகள் காதல் வயப்படுதல், தவறான உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளல் போன்றவற்றிற்கு அவர்களை இட்டுச் செல்ல முடியுமான சில சந்தர்ப்பங்களாகும்.
பெற்றோர் பிரிந்து வாழுதல்
விவாகரத்துப் பெற்றோ பெறாமலோ பெற்றோர்கள் பிரிந்து வாழ்வது பிள்ளைகளின் மன நிலையில் பாரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமேதும் இருக்க முடியாது. உதாரணமாக தந்தையைப் பிரிந்து தாயுடன் வசிக்கின்ற பிள்ளைகள் வறுமை, தந்தையைப் பிரிந்த சோகம், தாயின் கவலை, பாதுகாப்பின்மை போன்ற இன்னோரன்ன உளரீதியான பிரச்சினைகளுக்கு நாளாந்தம் ஆளாகுவர்.

எனவே இந்நிலையில் கல்வியைத் தொடர்கின்ற பிள்ளைகளுக்கு வீட்டில் கற்றலுக்கு உகந்த உளவியல் சூழல் காணப்படுவது சிரமச் சாத்தியமாகும்.
தாய் தந்தைக்கிடையில் சுமுகமான உறவின்மை
வீட்டில் தினந்தோறும் தாய்க்கும் தந்தைக்குமிடையில் இடம்பெறும் வாக்கு வாதங்கள், சண்டைகள் (Domestic Violence) பிள்ளைகளின் மனதளவில் பாரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன. சில வேளைகளில் தாய்க்கு தந்தை அடிக்கும் வழக்கமுள்ளவராக இருந்தால் இதனை பிள்ளைகளால் சகித்துக்கொள்ளவே முடியாமல் இருக்கும்.
இவ்வாறான செயற்பாடுகள் தந்தையை பிள்ளைகள் வெறுக்கச் செய்யும் செயற்பாடாக மட்டுமன்றி வீட்டில் கற்பதற்கு அவர்களுக்கு உளரீதியாக தடையாகவும் அமைந்து விடுகின்றது.
வீட்டில் கற்றலுக்கான முன்மாதிரி இன்மை
பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு அனைத்து விடயங்களிலும் முன்மாதிரிமிக்கவர்களாக திகழ வேண்டும். வெறுமனே அறிவுரைகள் மட்டும் கூறுகின்றவர்களாக இருக்கக் கூடாது. நிதர்சனம் என்னவெனில் அநேகமான வீடுகளில் அறிவுரைப் பெற்றோர்களே இருக்கிறார்கள். அவர்களிடத்தில் பிள்ளைகள் பின்பற்றத்தக்க எந்த முன்மாதிரியும் கிடையாது.
படி” என்று பிள்ளையிடம் கூறும் தாய் மறு கனமே தொலைக் காட்சி தொடர் நாடகங்களில் மூழ்கிப் போகின்றார். கல்வியின் முக்கியத்துவம் பற்றி பிள்ளைக்கு விரிவுரை நடத்திய தந்தை அடுத்த நொடியில் சமூக வலைத் தளங்களில் தொலைந்து போகின்றார். இளையவர் கேம் விளையாடியே பொழுதைப் போக்கின்றார்.

எனவே வீட்டில் படிக்கும் பிள்ளையின் சிந்தனை முழுவதும் கேமிலும் நாடகத்திலும் புதைந்து கிடக்கும். பாடப் புத்தகத்தில் இருக்க வேண்டிய கவனம் தந்தையின் முகப் புத்தகத்திலேயே குவிந்து கிடக்கும். இது வீட்டில் கற்பதற்கான உளவியல் சூழலைக் கேள்விக் குறியாக்கிவிடும்.
ஊக்குவிப்பின்மையும் ஒப்பிட்டுப் பேசுதலும்
பொதுவாக மனிதன் தனது செயலுக்காக பிறரால் மெச்சப்படுவதை விரும்புகிறான். இதற்கு வளர்ந்தோர் கூட விதிவிலக்கல்ல. குறிப்பாக மாணவர்கள் தமது ஒவ்வொரு செயற்பாட்டிற்கும் பாராட்டுக்களையும் பரிசில்களையும் எதிர்பார்ப்பதில் இரட்டிப்பானவர்கள். பாடசாலையில் அதிபர், ஆசிரியர்கள், சக மாணவர்கள் மூலம் பிறர் கணிப்பை (நுளவநநஅ ழக சநளிநஉவ கசழஅ ழவாநசள) பெறுகின்ற, ஏன் பெறாத மாணவர்கள் கூட தம்மை தமது பெற்றோர் புகழ்ந்து பாராட்டுவதையே எதிர்பார்க்கின்றனர்.

எனினும் சில பெற்றௌர் எந்தவொரு பாராட்டு வார்த்தைகளையும் அவர்களின் சாதனைகளின் போது கூட தெரிவிப்பதில்லை. மாற்றமாக “படித்து என்னதான் கிழிக்கப் போகிறாய்?”, “எப்போதும் படிப்பு படிப்பு என்று இருக்காமல் உறுப்படியாய் உழைக்கும் வழியைப் பார்” எனக் கூறிக் கடிந்து கொள்ளும் பெற்றோர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அவ்வாறே தமது பிள்ளைகளின் தனித்துவங்களையும் ஆற்றல்களையும் இனங்காணத் தவறும் பெற்றோர்களில் சிலர் எப்போதும் அவர்களை வேறு பிள்ளைகளுடன் ஒப்பிட்டுப் பேசுவதையே வழக்கமாக்கி வைத்திருக்கின்றனர். இதனால் மனதளவில் காயப்படும் மாணவர்கள் விரக்தி நிலைக்குச் சென்று விடுகின்றனர். விளைவாக வீட்டில் கற்றல் என்பதையும் தாண்டி பொதுவாக படிப்பென்றாலே கசப்பென்று உளரீதியாக அதைரியப்பட்டவர்களாக மாறிவிடுவர்.
கவனக் கலைப்பான்கள்
மாணவர்கள் கற்றலில் ஈடுபடும் போது தமது சிந்தனையை சிதறவிடாது ஒருமுகப்படுத்தி வைத்திருத்தல் அவசியமாகும். அப்போதுதான் கற்கும் விடயங்களை சரியாக விளங்கிக் கொள்ளல், அவற்றை ஞாபகத்தில் இருத்தல் (Storage) போன்ற செயன்முறைகள் வெற்றிகரமானதாக அமையும். 

வீட்டில்
சத்தமாக தொலைக் காட்சி பார்த்தல், வானொலி கேட்டல்.
கதைத்தல் அல்லது அரட்டையடித்தல்.
கற்றலில் ஈடுபடும் பிள்ளைக்கு விருப்பமான பொழுது போக்கு, விளையாட்டு போன்றவற்றில் பிறர் ஈடுபடுதல் போன்றவை கவனக் கலைப்பான்களில் சில.

இதன் போது மேற்குறித்த விடயங்களில் கலந்து கொள்ளவோ, ஈடுபடவோ பிள்ளையின் மனம்   விரும்பும். இது கற்றல் மீதான பிள்ளையின் கவனத்தைக் கலைத்து உள்ளார்ந்த விருப்பத்தையும் இல்லாமலாக்கிவிடும்.
பிள்ளைகளை தனிமையில் வீட்டில் விட்டுச் செல்லல்
பெற்றோரால் வீட்டில் தனிமையாக விட்டுச் செல்லப்படும் பிள்ளை தனது காப்புத் தேவை நிறைவேறாமல் அச்சத்தில் உறைகிறது. இது அப்பிள்ளையின் கற்றலுக்கான உளவியல் சூழலைப் பாதிக்கிறது. ஒருவாறாக மூத்த சகோதர சகோதரிகள் வீட்டிலிருக்க தனது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளும் பிள்ளையொன்று முழு மூச்சாக கற்றலில் ஈடுபடுவதற்கான மன நிலையில் இருக்காது. காரணம் தனது பெற்றோர் சென்ற இடம், அவர்கள் அங்கு சந்தித்து உறவாடும் நபர்கள், அங்கு அவர்களுக்கு பரிமாறப்படும் உணவு வகைகள், அவர்களுடன் நானும் சென்றிருந்தால் தன்னுடைய உணர்வு எவ்வாறாக இருக்கும் போன்ற விடயங்களிலேயே தனது ஆய்வை முன்னெடுக்கும்.

எனவே, பள்ளிக்கூடம் செல்லும் தமது பிள்ளைகளை பெற்றோர் அடிக்கடி வீட்டில் விட்டுவிட்டு உறவினர் வீடுகள், திருமண நிகழ்வுகள் என அலைந்து திரிவது அவர்களின் உளவியல் கற்றல் சூழலை பாதிக்கும்.
வளர்ந்த பிள்ளைகளுக்கு இவ்வாறான குறுகிய நேர பயணங்கள் பாரியளவு உளரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும் தூர இட சுற்றுலாக்கள் அவர்களையும் கற்றலில் ஈடுபட முடியா வண்ணம் உள ரீதியாக பாதிப்படையச் செய்யும்.
குடும்பப் பொருளாதாரம் நலிவடைந்து காணப்படுகின்றமை
வறுமைக் கோட்டில் வாழும் குடும்பத்தின் சவாலான பக்கங்கள் ஏராளம். உணவு, உடை, கல்வி என மேலோட்டமாக பார்த்தாலே அதன் பக்கங்கள் நீண்ட வண்ணமே இருக்கும். தொழிலற்ற அல்லது குறைந்த வருமானம் பெறும் தந்தையின் கஷ்டங்களையும் குடும்பத்தின் சுமைகளையும் தினந்தோரும் பார்த்து அல்லலுறும் பாடசாலை செல்லும் அக்குடும்பப் பிள்ளைகளின் உள நிலை எங்கனம் கற்றலுக்குத் தயாராக இருக்கும். வீட்டில் கற்றலுக்கான பௌதீக சூழலே சரிவர அமைந்திராத போது வறுமையின் வடுக்களில் தினம் தினம் தவழும் பிள்ளைகளின் கற்றலுக்கான உளவியல் சூழல் அங்கு அமைந்திருப்பதை எவ்வாறு உறுதிப்படுத்த முடியும்.

இவ்வாறான குடும்பங்களுக்கு சமூகத்திலுள்ள பரோபகாரிகள், நலன் விரும்பிகள், தொண்டு நிறுவனங்கள் முன்வந்து வறுமையின் துயர் துடைக்க வழிசமைக்க வேண்டும். விளைவாக கற்கும் சிறார்களுக்கு வீட்டில் பௌதீக, உளவியல் சூழலை உருவாக்கிக்கொடுப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
வீட்டில் கற்றலுக்கான உளவியல் சூழலை பேண சில ஆலோசனைகள் 
கற்றலுக்கான உளவியல் சூழலை பாதிக்கும் காரணிகளை அடையாளங்கண்டு அவற்றைக் கலைந்து ஆரோக்கியமான கற்றல் சூழலை தமது பிள்ளைகளுக்கு ஏற்படுத்திக் கொடுப்பது ஒவ்வொரு பெற்றோரினதும் தலையாய கடமையாகும்.

அதன்படி பெற்றோர் கடைப்பிடிக்க வேண்டிய அம்சங்களாக கீழ்வருபவற்றை முன்வைக்க முடியும்.

பெற்றோர் தமது பிள்ளைகளிடம் அன்பை வெளிப்படுத்தி அவர்களை தாம் உண்மையாகவே நேசிக்கிறோம் என்பதை அடிக்கடி வெளிப்படுத்த வேண்டும்.

எமது மார்க்கம் இஸ்லாம் சிறுவர்களை நேசிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றது. அவர்களுக்கு அன்பு காட்டாதவர் எம்மை சார்ந்தவர் அல்ல என நபியவர்கள் அழுத்தம் திருத்தமாகவே பகர்ந்துள்ளார்கள். அன்பின் வெளிப்பாடாக பெற்றௌர் தமது பிள்ளைகளை முத்தமிட வேண்டும்
குழந்தைகளுக்கு ஒரு நாளில் குறைந்தபட்சம் பெற்றோரிடமிருந்து எட்டு தொடுதல்கள் தேவைப்படுகின்றன. அவர்கள் ஏதேனும் சவாலான நேரத்தை சந்திக்க நேரிடும் போது குறைந்தது ஒரு நாளில் பன்னிரெண்டு இதமான தொடுதல்கள் தேவைப்படுகின்றன. இதற்காக மிகப்பெரிய முயற்சி எதுவும் செய்யத் தேவையில்லை. குழந்தைகளின் ஆடைகளை சரிசெய்தல், தோளில் வாஞ்சையோடு தட்டிக் கொடுத்தல், இலேசாக அவர்களை அணைத்துக்கொள்ளல் போன்றவையே போதும்”
ஒரு நாளில் ஒன்பது நிமிடங்கள் ஒரு குழந்தையின் மீது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளன.
1. முதல் மூன்று நிமிடங்கள்: குழந்தைகள் படுக்கையிலிருந்து எழுந்தவுடன்.

2. இரண்டாவது மூன்று நிமிடங்கள்: அவர்கள் பாடசாலையிலிருந்து வீட்டுக்கு வந்தவுடன்.

3. மூன்றாவது மூன்று நிமிடங்கள்: அவர்கள் நித்திரைக்குச் செல்வதற்கு முன். இந்த ஒன்பது நிமிடங்களையும் சிறப்பானதாக ஆக்கி பெற்றோர் தமது குழந்தைகளை நேசிக்கின்றோம் என்று அவர்களை உணரச்செய்ய வேண்டும்.”
(ஷில்பா ஜா- ஷோபா சிட்டி – குழந்தை மனோ தத்துவ ஆராய்ச்சி வல்லுனரும் குழந்தைகள் நடத்தை முகாமைத்துவ ஆராய்ச்சியாளரும்)

இவ்வாறு பிள்ளைகள் தமது பெற்றொரிடமிருந்து அன்பையும் அரவணைப்பையும் பெறுகின்ற போதுதான் வேறு திசைகளில் அவர்களின் கவனம் திரும்பாமல் வீட்டிலும் வெளியிலும் கற்றலில் ஈடுபடும் மனநிலை நீடித்திருக்கும்.

திருமணம் செய்து கணவன் மனைவியாக வாழும் தம்பதியினர் சிலரின் வாழ்க்கை ஆரம்பத்திலேயே கசந்து போய் விவாகரத்தில் முடிந்துவிடுகிறது. சிலரின் வாழ்க்கை சண்டை, சச்சரவுகளுடன் வேண்டா வெறுப்போடு நகர்ந்து கொண்டிருக்கிறது.
இவ்வாரான பிளவுபட்ட குடும்ப வாழ்க்கையின் காரணமாக அதிகம் பாதிக்கப்படுவது அவர்களின் பிள்ளைகளே.
எனவே பிள்ளைகளைப் பெற்றெடுத்த பெற்றோர் இஸ்லாம் கூறும் திருமணத்தின் உன்னத நோக்கங்களை அறிந்து தமக்கிடையே உள்ள தனிப்பட்ட மனக்கசப்புக்களை மறந்து குடும்ப வாழ்க்கையை சரிவர கொண்டு நடத்த முன் வரவேண்டும்.

தமது பிள்ளைகளின் கல்வி, எதிர் காலம் போன்றவற்றை கருத்திற்கொண்டும் பாடசாலையிலும் வீட்டிலும் ஆர்வத்தோடு கற்கும் உள நிலையை அவர்களிடத்தில் ஏற்படுத்தும் நோக்கோடும் கணவன் மனைவி இருவரும் ஒருவரையொருவர் நேசித்து வாழ்க்கை வண்டியின் இரு சக்கரங்களாக ஒரு சேர பயணிக்க மனம் கொள்ள வேண்டும்.
வீட்டிலுள்ள வளர்ந்தோர்கள் (பெற்றோர், மூத்த சகோதர சகோதரிகள், ஏனைய மூத்தோர்) வீட்டில் கற்றலுக்கான உளவியல் சூழலை ஏற்படுத்தும் பொருட்டு குறிப்பிட்ட நேரங்களில் இளையவர்களுடன் சேர்ந்து கற்றலில் ஈடுபட வேண்டும். இதன்போது அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு இளையவர்களும் கற்றலில் தம்மை ஈடுபடுத்த உளரீதியாக பயிற்சி பெறுவார்கள். உதாரணமாக தரம் 5ல் கற்கும் தமது மகனை வாசிப்பில் ஆர்வப்படுத்த விரும்பும் பெற்றோர் முதலில் வாசிப்பிற்கென நேரமொன்றை ஒதுக்கி தமது மகன் தம்மை அவதானிக்கும் படி அல்லது அருகில் வைத்துக்கொண்டு வாசிக்கும் பழக்கத்தை தமக்குள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

பொதுவாக இது சிறுவர்களிடத்தில் மாத்திரம் உள ரீதியான கற்றல் சூழலை தோற்றுவிப்பதல்லாமல் வளர்ந்த மாணவர்களிடத்திலும் தாக்கம் செலுத்தக்கூடியது.
ஊக்குவிப்புக்களும் பாராட்டுக்களும் செயலொன்றை வலுப்பெறச் செய்து நடத்தையாக மாற்றும் வல்லமை பெற்றன.

எனவே, பெற்றோர்கள் தமது பிள்ளைகள் பரீட்சையில் கூடிய புள்ளிகளைப் பெறும் போது, போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெறும் போது, தவணைப் பரீட்சையில் முதலாம் இடத்தைப் பெறுகின்ற போது அவர்களை வாழ்த்திப் பாராட்ட வேண்டும். அவர்களுக்கு சிறு சிறு அன்பளிப்புக்களை வழங்கி உட்சாகப்படுத்த வேண்டும்.
Excellent, Very good, Well done, Congratulations போன்ற சாதாரண வார்த்தைகள் கூட அவர்களுக்கு மனதளவில் மாளிகையே. பத்து ரூபாய் பேனா கூட அவர்களுக்கு நோபல் பரிசாய் காட்சி தரும்.
இவ்வாறான நேர் மீள வலியுறுத்தல் செயற்பாடுகளினால் பிள்ளைகள் தொடர்ச்சியாக கூடிய புள்ளிகளைப் பெற சடைவின்றி கற்றலில் ஈடுபடுவர். போட்டிகளில் கலந்து கொள்ள ஆர்வத்துடன் முன்வருவர்.
அதே நேரம் கற்றலில் பின்தங்கிய தமது பிள்ளைகளை ஒரு போதும் ஏனைய பிள்ளைளுடன் ஒப்பிட்டுக் குறைத்துப் பேசவோ அவர்கள் மனதளவில் விரக்தியடையும் வண்ணம் ஏச்சு அல்லது தண்டனைகள் கொடுக்கவோ முயன்றுவிடக்கூடாது.

அவர்களை அன்பாக அரவணைத்து தோளில் தடவிக் கொடுத்து தோல்வியின் துன்பம் கலைத்து வெற்றிக் கனியைச் சுவைக்க இனிதே வழிகாட்ட வேண்டும். அவர்களின் சில செயற்பாடுகள் உண்மையிலேயே பாராட்டத்தக்கவையாய் இருக்கும். அப்படியான செயற்பாடுகளை தெரிந்து மீள வலியூறுத்தல் (Positive Re-enforcement) செய்வதன் மூலம் ஏனைய நல்ல செயற்பாடுகளில் அவர்களின் ஈடுபாட்டை அதிகரிக்கலாம். வீட்டில் விரும்பிக் கற்கும் உள நிலையைத் தோற்றுவிக்கலாம்.
வீட்டில் கற்றலுக்கான உளவியல் சூழலை பிள்ளைகளுக்கு ஏற்படுத்திக்கொடுக்க விரும்பும் பெற்றோர் அவர்களின் கற்றல் மீதான கவனத்தை திசை திருப்பக்கூடிய எந்தவொன்றையும் அனுமதிக்கக்கூடாது.
தமது விருப்பங்களையும் பொழுது போக்குகளையும் தியாகம் செய்து குறிப்பிட்ட நேரங்களில் தொலைக்காட்சி பார்த்தல், வானொலி கேட்டல், கேம் விளையாடுதல் போன்ற அனைத்து விதமான கவனக் கலைப்பான்களுக்கும் வீட்டிலுள்ளவர்கள் விடுமுறை கொடுக்க வேண்டும்.
பாடசாலை செல்லும் பிள்ளைகளை வீட்டில் தனிமையில் விட்டுச் செல்வதை பெற்றார் இயன்றளவு தவிர்ந்து கொள்ள வேண்டும். குறிப்பாக பிள்ளைகளின் பரீட்சைக் காலங்களில் சுற்றுலாக்கள், பயணங்கள், தரிசிப்புக்களை தவிர்த்துக் கொள்வது மேலானது. இக்காலங்களில் பாசத்தையும்   பாதுகாப்பையும்  உணரும் வகையில் அவர்களுடன் ஒன்றாக இருந்து கற்றலின் பால் ஆர்வமூட்டி ஊக்கமளிக்க வேண்டும். தவணை மற்றும் ஏனைய விடுமறை காலங்களை பிள்ளைகளை உறவினர் வீடுகளுக்கு அழைத்துச் செல்லல், சுற்றுலாக்களை குடும்பம் சகிதம் மேற்கொள்ளல், அவர்களை திருமண விருந்துகளிலும் ஆகுமான கொண்டாட்டங்களிலும் பங்கு பெறச் செய்தல் போன்ற விடயங்களுக்கு பயன்படுத்த முடியும். இது பிள்ளைளுக்கு புத்துணர்ச்சியையும் அக மகிழ்வையும் வழங்கி ஏனைய காலங்களில் கற்றலில் ஆர்வத்துடன் ஈடுபட வழிவகுக்கும்.
SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!