பாடசாலைக் கல்வி முறையில் கலைத்திட்டத்தின் வகிபங்கு..!

Teachmore

கலைத்திட்டம் என்பது தனித் தனி மாணவர்கள் கற்றுக் கொள்கின்ற ஒழுங்கமைப்பு மாதிரியே ஆகும். கலைத்திட்டத்தில் எறிவீச்சு குறிப்பிடப்படுகின்றது. எறிவீச்சு என்பது மாணவர்களின் உள்வாங்கலில் ஏற்படுகின்ற வேறுபாடுகளைக் குறிக்கும். அதாவது அனைத்து மாணவர்களும் கலைத்திட்டத்தின் பயன் நுகர்வோராய் இருத்தல் வேண்டும். தனியாள்  வேறுபாடுகளைக் கருத்தில் கொண்டு கல்வி ஒழுங்கமைப்பினை மேற்கொள்ளலே கலைத்திட்டமாகும். கலைத்திட்டம் என்பது சமூகமயமாக்கல் திறன்களை ஒழுங்கமைத்துக் கொடுக்கின்ற ஒழுங்கமைப்பாகும். கலைத்திட்டம் என்பது எதிர்கால சந்ததியினருக்கு வாழ வழிகாட்டுகின்ற கல்வியின் ஒழுங்கமைப்பேயாகும். பாடசாலை எதிர்காலச் சந்ததியினரைத் தயார்படுத்தும் நிறுவனமாகும்.

கல்வி  இலக்குகளை வினையாற்றலுடன் நடைமுறைப்படுத்தும் இயக்க வடிவமாக அமைவதே கலைத்திட்டமாகும். கோட்பாட்டுப் பரிமாணங்களையும் நடைமுறைப் பரிமாணங்களையும் உள்ளடக்கிய இயங்கு வடிவமாகக் கலைத்திட்டம் விளங்குகின்றது.

இலங்கையின் பாடசாலைகள் தரமான கல்வியை வழங்கும் நோக்குடன் அன்றுதொட்டு இன்று வரையிலும் பல்வேறு காலகட்டங்களில் மாணவரின் நலன் கருதி அரசு கல்வியமைச்சின் ஊடாக பலவாறான செயற்றிட்டங்களை அமுல்படுத்தி வருகின்றது. இச்செயல் திட்டங்கள் யாவும் மாணவர்கள்; எந்தவிதமான தங்குதடையின்றி சீரான கல்வியை இடையறாது தொடரவும் அதற்கான ஊக்கவிப்பாக அவர்களுக்கான நூல்களும்> சீருடை மற்றும் உணவு போன்றனவும் வழங்கப்பட்டு வருகின்றமை முக்கியமான விடயமாகும்.

இலங்கையின் கல்வி முறைகளை எடுத்து நோக்கும் போது ஆரம்ப கல்வி, இடை நிலை கல்வி, பல்கலைக்கழக கல்வி உள்ளடங்கிய உயர்கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில் நுட்ப கல்வி, வளர்ந்தோர் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர் கல்வி என பலவற்றை இனங்காணலாம். அவற்றுள் ஆரம்ப கல்வி, இடை நிலை கல்வி, உயர் கல்வி என்பன முறை சார்ந்த கல்வியின் பிரதான நிலைகளாகும். இன்று இலங்கையில் கிட்டத்தட்ட 10000 அரசாங்க பாடசாலைகளில் 52 இலட்சம் மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இலங்கையில் வாழும் மாணவர்கள், தமது வாழ்விடத்திலிருந்து 5 கிலோ மீட்டருக்குள் பாடசாலைகள் அமைந்துள்ளன. மேலும் இவர்களுக்கு கற்பிக்க 235000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஏறத்தாழ 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதாசாரம் மேலை நாடுகளில் காணப்படுகின்றது. வளர்முக நாடுகளின் கல்வி முறைகளோடு ஒப்பிடும் போது, இலங்கையின் கல்வி முறைமை பாராட்டத்தக்க முறையில் வளர்ச்சி பெற்றுள்ளது. மக்களின் பாடசாலை கல்வி மட்டம் அதாவது சராசரி இலங்கையரின் கல்வித் தகுதி 9 ஆம்தரம் (இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாட்டு மக்களின் சராசரி கல்வித்தகுதி 5 ஆம் தரம்)

குறிப்பாக மாணவர்களுக்கு எவ்வாறு கற்பித்தலை மேற்கொள்ள வேண்டும் என்கிற பல்வேறு நுணுக்கங்கள், ஆலோசனைகள், வழிகாட்டல்கள், உளவியற் கருத்துக்கள் போன்றவற்றையும் ஆசிரியருக்கு பயிற்றுவித்து அதன் ஊடாக சிறந்த கல்வியையும், சீர்மிகு ஒழுக்க விழுமியங்களுடன் கூடியதான நாட்டிற்குகந்த பண்பாளனாகவும் மாற்றி நாளைய உலகின் தலைசிறந்த தலைவர்களையும், நாட்டுப்பற்றாளர்களையும், இன்னும் பல நோக்குகளையும் அடைந்து கொள்வதற்காக பாடசாலைக் கல்வி நடைமுறை தரம் ஒன்றிலிருந்து ஆரம்பித்து உயர்தரம் வரையிலும் வியாபித்து செல்கின்றது.

கோடான கோடி ரூபாய்களை செலவு செய்து மாணவர்களின் புரிந்துணர்வினைக் கைக்கொண்டு வெற்றி நடைபோடும் பாடசாலைக் கலைத்திட்டத்தின் உயிர் நாடியாக மாணவர்கள் திகழ்கிறார்கள். மாணவர்கள் இல்லை என்றால் எதற்குப் பாடசாலைகள்? என்கிற வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் தரம் ஒன்றில் சேருகின்ற பிள்ளைகளை சரியான முறையில் கற்பிக்கின்ற ஆசிரியர் அறிந்து கொண்டால் கற்றலுக்கான வழித்துணை அனைத்துமே சரியாக அமைந்துவிடும்.

இன்று பாடசாலைகளில் தரம் ஒன்றில் பிள்ளையை சேர்ப்பதற்கு போட்டியோ போட்டி, ஆறு மாதங்களுக்கு முன்னர் விண்ணப்பித்தும் சிலவேளை தாம் எதிர்பார்த்த பாடசாலையில் தனது பிள்ளைக்கு இடம் கிடைக்கவில்லை என்கிற ஆதங்கம் ஒருபுறம் பெற்றோருக்கு சில பாடசாலைகளில் பிள்ளைகளே சேரவில்லை என்கிற பிரச்சினைகள் சில பாடசாலைகளின் அதிபர்களுக்கு ஏற்படுகின்றது. வகுப்பில் 40 க்கும் மேற்பட்ட மாணவர்கள் என்ன செய்வது என்றே தெரியவில்லை என்கிற பிரச்சினை பெரிய பாடசாலைகளில் உள்ளது. இவ்வாறு தரம் 1 இல் மாணவர்களை சேர்க்கின்ற நிலையில், அல்லல்படுகின்ற நிலையில் கல்வியமைச்சும் புதிய புதிய சுற்று நிருபங்கள் தரம் 1 இல் பிள்ளைகளை சேர்ப்பதில் இழுபறி நிலையே எமது நாட்டில் காணப்படுகின்றது. அடிப்படையில் கலைத்திட்ட முறையில் ஓழுங்கான முறையில் வேலைத்திட்டங்கள் உருவாக்கபடாமையே காரணமாகும்.

இலங்கையில் காணப்படுகின்ற பரீட்சை முறைகளும் கலைத்திட்டமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையனவாகக் காணப்படுகின்றன. இருப்பினும் மாணவர்களின் அறிவு நிலையானது பரீட்சைகளை மட்டுமே மையமாக கொண்டுள்ள கலைத்திட்டமாக காணப்படுகின்றமை பாரிய குறைபாடாகும். இவற்றின் நோக்கங்கள், பாடவிடயங்கள், மதிப்பீட்டு முறைகள் ஆகியவை இயல்பிலேயே ஒன்றுடன் ஒன்று இணைந்து காணப்படுகின்றது. பரீட்சை முறை ஏதோ ஒரு வகையில் பிரச்சினைக்கு உரியதானால் கலைத்திட்டத்தின் உள்ளடக்கத்திலும் உபயோகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும். கலைத்திட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் போது பரீட்சை முறையில் மாற்றத்தை ஏற்படுத்தும். பொதுப் பரீட்சைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் போது பாடசாலை மட்டத்தில் மதிப்பீடுகளை முறையாக ஒழுங்குபடுத்த வேண்டும். இதற்கு ஒழுங்கான முகாமைத்துவம் தேவைப்படுகின்றது. அத்துடன் ஆசிரியர்கள் மனப்பாங்குகளையும், திறனையும், அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். பரீட்சைகளில் எழுத்துமுறைப் பரீட்சை நம்பிக்கை உரியதாகவும் இலகுவானதாகவும் காணப்படுகின்றது.

அரசாங்க தொழில்கள், பல்கலைக்கழக அனுமதி, .பொ..உ/த வகுப்புகளுக்கு அனுமதி என்பவற்றுக்குச் சில கல்வித் தகுதிகள் தேவை. முக்கியமாக இலங்கையில் தொழில் வாய்ப்புகள் அனைத்தும் கல்வித் தகுதிகளுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. எனவே விதிக்கப்பட்ட கல்வித் தகுதிகளுடன் தொடர்புடைய பரீட்சைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இதனால் மாணவர்களின் கல்விக் காலம் தம்மை பரீட்சைகளுக்கு ஆயத்தப்படுத்துவதிலேயே கழிகிறது. அதுமாத்திரமின்றி பாடசாலைகளின் சாதனைகள் பரீட்சை பெறுபேறுகளை கொண்டே மதிப்பீடு செய்யப்படுகிறது. எனவே இவ்வாறானதொரு நிலைமையானது மாணவர்களையும் ஆசிரியர்களையும் மாத்திரமின்றி முழுக் கல்வி முறையையும் வேறுவகையில் திசை திருப்பி விடுகின்றன.

வகுப்பறைக் கற்பித்தல் பாடவிடயங்களை மட்டும் வழங்குவதுடன் நின்று விடல், எழுத்து மூலம் வெளிப்படுத்தக் கூடிய விடயங்களும், நினைவில் வைத்திருக்கக் கூடிய அம்சங்களும், கவனத்தில் கொள்ளப்படல்> சோதனைக்கு ஏற்ற விதத்தில் பொறிமுறைப் பயிற்சியளித்தல், பரீட்சையில் குறைந்த மட்டத்தில் பெறுபேறுகளை பெறுபவர்கள் மீது கவனத்தை செலுத்தாது இருத்தல், தேசிய கல்விக் குறிக்கோள்களை நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய வசதி இல்லாதிருத்தல், போதனாமுறை என்பவற்றிற்கு வழங்கும் முக்கியத்துவம் குறைவடைதல் ஆகிய காரணங்களால் பரீட்சை முறையை தவறான ஒன்றாக கருதாது ஏற்ற முறையில் நிலை நிறுத்திக் கொள்ள பொருத்தமான வழிவகைகளைக் காண வேண்டும். உலகில் எழுத்தறிவு வீதம் மிக உயர்வாகக் காணப்படும் நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். இந்தப் பெருமைக்குக் காரணமாக பாலர் வகுப்பிலிருந்து பல்கலைக்கழகம் வரையிலான

இலவசக் கல்வி அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னர்; அரச வரிவிலக்குப் பெறும் ஆங்கிலமூலப் பாடசாலைகளில் மாத்திரமே கணிதமும் விஞ்ஞானமும் கற்பிக்கப்பட்டன. இந்தப் பாடசாலைகளில் நாட்டிலிருந்த மாணவரின் மொத்த தொகையில் சுமார் பத்து சதவீதமானோர் மாத்திரமே கல்வி பயின்றனர். ஆங்கிலக் கல்வியானது சிறந்த வேலை வாய்ப்புக்களையும் மற்றும்; உயர்கல்வியையும் பெறுவதற்கும் வழியமைத்துக் கொடுத்ததால் ஆங்கில மொழிக் கல்வி கற்போர் தொகை அதிகரித்தது. ஓரிரு நகர்ப்புறங்களைத் தவிர்ந்த ஏனைய இடங்கள் அனைத்திலும் கணித, விஞ்ஞான பாடங்களைக் கற்பிற்பதற்கு தகுதியான ஆசிரியர்களின் தட்டுப்பாடு என்பது நடைமுறையில் காணப்படுகின்ற பிரச்சினையாகும்.

கல்வியின் நோக்கம் வேலைவாய்ப்பினை வழங்குவதல்ல என்றாலும் படித்துப் பட்டம் அல்லது சான்றிதழ் பெற்ற பின்னர் நல்ல தொழில் ஒன்று கிடைக்காவிடில் ஒருவர் பெற்ற கல்வி குறைபாடுடையதாகவே கருதப்படும். வேலைவாய்ப்பற்ற இளைஞர் கூட்டம் எப்போதுமே ஏதேனும் வன்முறைக் கிளர்ச்சிகளில் ஈடுபட நேரிடும். சமூகம் அவற்றை எதிர்நோக்க நேரிடும். சில்லி, எகிப்து, கிரிஸ், இத்தாலி, தென்னாபிரிக்கா, ஸ்பெய்ன், ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் இவ்வாறன நிலைப்பாடுகள் காணப்படுவதனை எம்மால் அவதானிக்க முடிகின்றது. எனவே அடிப்படையில் கலைத்திட்டத்தில் உள்ள சிக்கல்களே காரணமாகும்.

கலை திட்ட சீர்திருத்தம் நிச்சயமாக இடம்பெற வேண்டியவை. எனினும் அதற்கென ஒரு கால வட்டம் உள்ளது. இங்கு அவ்வட்டம் முறையாக பின்பற்றப்படாமல் அநேகமான சந்தர்ப்பங்களில் ஒரு சீர்திருத்தம் இடம்பெற்று, அதனை நடைமுறைப்படுத்தி அதன் வெற்றி தோல்விகளை பலாபலன்களை அறிய முன்பே மற்றொன்று புகுத்தப்படுகின்றமையால் ஆசிரியரும்,மாணவரும் எண்ணிலடங்கா பிரச்சினைகளுக்கு உள்ளாகின்றனர்.

1948ல் இலங்கை சுதந்திரமடைந்த பின் மக்களின் சமூக> பொருளாதார> பண்பாட்டு தேவைகளைக் கருத்திற் கொண்டு புதிய கொள்கைகளை உருவாக்க முற்பட்டது. கல்வித்துறை மேம்பாட்டை குறிக்கோளாகக் கொண்டு புதிய கல்விக் கொள்கைகள் பற்றி சிந்திக்கப்பட்டது. பொதுவாக இலங்கை மட்டுமன்றி சுதந்திரமடைந்த நாடுகள், சிறந்த கல்வி வளர்ச்சியினூடாகவே சமூக, பொருளாதார, பண்பாட்டு முன்னேற்றத்தை அடையலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆயினும் நீண்டகால குடியாட்சி காரணமாக உருவாக்கப்பட்டிருந்த கல்வி ஏற்பாடுகளை முற்றாக அகற்றுவதும்> அவற்றுக்குப் பதிலாக புதிய கல்விக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதும் இலகுவான விடயமாக இருக்கவில்லை. ஆகவே இன்றளவிலும் குடியேற்ற ஆட்சிக்குரிய பல அம்சங்களை இலங்கையில் மட்டுமல்லாது முடியாட்சியிலிருந்து சுதந்திரமடைந்த பல நாடுகளிலும் கண்டுகொள்ளலாம். எனவே இலங்கையில் கல்வி முறையிலே மாற்றங்களை ஏற்படுத்துவதில் பாரிய இடர்பாடுகள் காணப்படுகின்றன.

கட்டாயக் கல்வி முன்வைக்கப்பட்டு அனைத்து மாணவர்களுக்கும் இலவசக் கல்வி வழங்கப்படும் நிலையிலும் கூட மாணவர் இடைவிலகல்> பாடசாலை செல்லாதோர், குறைந்த பாடசாலை வரவு என்பன இலங்கையின் கல்வியின் தரத்தை மீள் பரிசீலனை செய்ய வேண்டிய நிலைக்கு உட்படுத்தியுள்ளது.

2013ல் வெளியாகிய 2012ம் ஆண்டினை மையப்படுத்திய ஆய்வின் படி இலங்கையில் 126000 மாணவர்கள் இடை விலகியுள்ளனர். வட மாகாணம் 38321, கிழக்கு மாகாணம் – 24614 எனக் கூடிய மாணவர்கள் இடை விலகியுள்ளனர். மலையகத்தில் இது 10-25 வவீதமாக அமைந்துள்ளது. இலங்கையில் பள்ளிக்கூடம் செல்லாதோர் 4.2 வீதம் ஆகும். பெருந்தோட்டப் பிரதேசத்தில் இது 13.1 வீதம் ஆகும். (மத்திய வங்கி ஆண்டறிக்கை – 2012) இவ்வாறான நிலை மாணவர்களது எதிர்காலத்தை மட்டுமல்லாது முழு நாட்டின் எதிர்காலத்தையும் பாதிக்கும் நிலைக்கு உட்படுத்தியுள்ளது. எனவே அடிப்படையில் கலைத்திட்ட முறையில் காணப்படுகின்ற குறைபாடுகளே காரணமாக அமைகின்றன.

குறிப்பாக ஜெர்மனி, டென்மார்க், அவுஸ்திரியா முதலிய நாடுகளின் கல்வி முறைகளின் ஒரு பிரதான அம்சம் வகுப்பறைக் கல்வியோடு தொழில் நிறுவனப் பயிற்சியும் ஒன்றாக வழங்கப்படுவதாகும். ஆயினும் இந்நாடுகளில் இளைஞர்களின் வேலையின்மை சதவீதம் 10 ஆகும். அங்கு வளர்ந்தோரின் வேலையின்மை சதவீதத்துக்கு இது சமமானதாகும். ஆயினும் வகுப்பறைக் கல்வியை மட்டும் வழங்கும் நாடுகளில் இளைஞர்களின் வேலையின்மை சதவீதம் வளர்ந்தோரை விட மூன்றுநான்கு மடங்கு அதிகமானதாகும். இவ்வகையில் தொழில் நிறுவனப் பயிற்சி ஏற்பாடுகள் வேலையின்மைப் பிரச்சினையைக் குறைக்க உதவும் என்பதில் ஐயமில்லை.

இடைநிலைப் பிரிவினருக்கான முறைசார் கலைத்திட்;டமானது பாடத்தினை ஆழமாகக் கற்பதனைவிட பரந்த முறையில் பாடங்களைக் கற்பதற்கான வாய்ப்பினை வழங்குகின்றது. தனிப்பட்ட வாழ்வின் இயக்கம் சமூகவாழ்க்கையின் பூரணத்தன்மையைப் பெற்றுக் கொள்வதோடு கற்றல் சூழ்நிலையையூம் வாழ்க்கையையூம் இணைப்பதோடு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் எதிர் கொள்வதற்குமான மனப்பாங்கு> திறன் விருத்திகளுக்கும் வாய்ப்பளிக்கின்றது. இந்நிலையில் கலைத்திட்டமானதுபிள்ளையிடம் விஞ்ஞான ரீதியான ஆராயும் திறனை வளர்த்தல்> புதிய விடயங்களை அறியத் தூண்டுதல், அறிவைப் புதுப்பித்துக் கொண்டு இருப்பதாக அமைய வேண்டும் போன்ற விடயங்களை அடிப்படையாக கொண்டிருத்தல் வேண்டும். ஓரு பாடசாலையின் கல்வி முறை சிறப்பாக செயற்பட வேண்டுமானால் கலைத்திட்டம் என்பது முக்கியமான ஒன்றாகும். அதே வகையில் ஒரு நாட்டின் கல்விமுறைக்கு வழிகாட்டும் விடயமாக கலைத்திட்டம் காணப்படுகின்றது.

வி.பிரசாந்தன் B.Ed. (Hons), M.Ed.

நு/சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலயம்

லிந்துல.

 

உசாத்துணைகள்

1.   ஜெயராசா.சபா, (2008), ‘இலங்கையின் கல்வி வரலாறு‘, சேமமடு பதிப்பகம்கொழும்பு.

2.   ஜெயராசா.சபா,  (2007), ‘கலைத்திட்டம்‘, அகவிழி வெளியீடு கொழும்பு.

3. சந்திரசேகரம்.சோ, (2009), ‘இலங்கையின் உயர்கல்வி: பல்கலைக்கழக கல்வியின் வளர்ச்சியும் பிரச்சினைகளும், பூபாலசிங்கம் புத்தகசாலை. கொழும்பு

4. சந்திரசேகரன்.சோ, (2008), ‘சமகாலக் கல்வி முறைகளின் சில பரிமாணங்கள்‘, சேமமடு பதிப்பகம் கொழும்பு

5.       https://www.researchgate.net/publication/334158546_EDUCATIONAL_AND_CURRICULUM_CHANGES_IN_SRI_LANKA_IN_LIGHT_OF_LITERATURE

6.       https://moe.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=79&Itemid=195&lang=en

 

 

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!