பல்கலைக்கழகங்களில் 16.6 சதவீத மாணவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர்

இலங்கை அரச பல்கலைக்கழகங்களில் பகிடிவதை மற்றும் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகள் (SGBV) அதிகரித்துள்ளதாக புதிய ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. அரச பல்கலைக்கழகங்களில் 16.6 சதவீத மாணவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர் எனவும் புதிய ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் (UGC) பாலின சமத்துவம் மற்றும் சமத்துவத்திற்கான நிலையம், யுனிசெப் உடன் இணைந்து, பழைய, புதிய பல்கலைக்கழகங்கள் மற்றும் மோதல்கள் நிலவிய பகுதிகளில் காணப்பட்ட பல்கலைக்கழங்களில் ஆய்வுகள் நடத்தப்பட்டன.

“அண்மைக்காலமாக இலங்கையில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் பகிடிவதை ,பால் நிலையை அடிப்படையாகக்கொண்ட வன்முறை அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது” என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

ஆய்வின்படி, கணக்கெடுக்கப்பட்ட மாணவர்களில் 51 சதவீதத்துக்கும் அதிகமானோர் வாய்மொழி துன்புறுத்தலுக்கும், 34.3 சதவீதமானோர் உளவியல் வன்முறைக்கும், 23.8 சதவீதமானோர் உடல் ரீதியான துஷ்பிரயோகத்திற்கும், 16.6 சதவீதமானோர் பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளாகியுள்ளனர். கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு மாணவர்கள் முகம் கொடுக்கிறார்கள் எனவும், கிட்டத்தட்ட அனைத்து சம்பவங்களும் ஒரு பல்கலைக்கழகத்தில் மட்டுமே பதிவாகியுள்ளன.

பல்கலைக்கழக ஊழியர்களில் 44 சதவீதமானோர் வாய்மொழி பாலியல் வன்முறைக்கு ஆளானதாகவும், 22.3 சதவீதமானோர் பாலியல் லஞ்சம் கேட்டதாகவும், 19.9 சதவீதமானோர் உடல் ரீதியான பாலியல் வன்முறையை அனுபவித்ததாகவும் அறிக்கை வெளிப்படுத்துகிறது. அரச பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களில், 21 சதவீதமானோர் வாய்மொழி பாலியல் வன்முறைக்கு ஆளாகியுள்ளதாகவும், 1.5% பேர் பாலுறவுக்கு கட்டாயப்படுத்தப்பட்ட தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிடிவதை பெரும்பாலும் முதல் வருடத்தில் மட்டும் நடப்பதாகக் கருதப்பட்டாலும், மாணவர்கள் தங்கள் முதலாம் ஆண்டு முடிவில் துன்புறுத்தல் முடிவுக்கு வராது என்றும் ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கிடையில், இலங்கையில் உள்ள அனைத்து உயர் கல்வி நிறுவனங்களையும் மேற்பார்வையிடும் UGC, புதிய மாணவர்களை சிரேஷ்ட மாணவர்கள் துன்புறுத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில் சமீபத்தில் கூடுதல் விதிமுறைகளை விதித்து கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுகிறது.

அதன்படி, பல்கலைக்கழக அதிகாரிகள் இதுபோன்ற சம்பவங்கள் குறித்து இப்போது பொலிஸில் புகார் செய்ய வேண்டும், மேலும் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு சிறைத்தண்டனை, உயர்கல்வி நிறுவனத்திலிருந்து வெளியேற்றுதல் மற்றும் பாதிக்கப்பட்டவருக்கு ஏற்பட்ட நஷ்ட ஈட்டு தொகை செலுத்துதல் ஆகியவை விதிக்கப்படும். புதிதாக சேரும் மாணவர்களை துன்புறுத்துவதில் ஈடுபட மாட்டோம் என அனைத்து மாணவர்களும் எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!