புலமைப் பரிசில் பரீட்சையிலும் கிழக்கு கல்வி வலயங்கள் இறுதி இடங்களைப் பிடித்து சாதனை

இறுதியாக வெளிவந்த தரம் 5 புலமைப் பரிசில் பெறுபேறுகளின் படி, கல்குடா , கிண்ணியா மற்றும் மட்டு மேற்கு ஆகிய கல்வி வலயங்கள் சாதனை படைத்துள்ளன.

இரு வினாப்பத்திரங்களிலும் 70 புள்ளிகளுக்கு மேலாக (ஒரு வினாப் பத்திரத்தில் 35 புள்ளிகள்) பெற்றுக் கொண்ட மாணவர்களில் இறுதி இடம் கல்குடா கல்வி வலயத்திற்கு கிடைத்துள்ளது. அதாவது ஒரு வினாப்பத்திரத்தில் 35 புள்ளிகளை ஏனும் பெற்றுக் கொள்ளாத மாணவர்களை அதிகமாகக் கொண்ட கல்வி வலயமாக கல்குடா வலயம் பதிவாகி சாதனை படைத்துள்ளது.

பரீட்சைக்குத் தோற்றிய 1834 மாணவர்களில் 971 மாணவர்கள் மாத்திரம் ஒவ்வொரு வினாத்தாளிலும் 35 புள்ளிகளைப் பெற்றுள்ளனர். இது 52.94 வீதமாகும். கிட்டத்தட்ட அரைவாசி மாணவர்கள் வினாப் பத்திரம் ஒன்றில் 35 புள்ளிகளைக் கூட பெறமுடியாதளவு கல்வியைப் பெற்றுள்ளனர்.

இதற்கு அடுத்த இடத்தை கிண்ணியா பிடித்துள்ளது. 54.73 கிண்ணியாவின் வீதமாகும். அதற்கு அடுத்த இடத்தை மட்டக்களப்பு மேற்கு வலயம் பிடித்துள்ளது. 57.13 அவர்களது வீதமாகும்.

அதே போல வெட்டுப் புள்ளிக்கு மேலாக, புள்ளிகளைப் பெற்ற மாணவர்களின் வீதத்திலும் கிழக்கு மாகாணத்தின் மட்டு மேற்கு மற்றும் கிண்ணியா கல்வி வலயங்கள் சாதனை படைத்துள்ளனர். அதாவது வெட்டுப்புள்ளிக்கு மேலாக புள்ளிகளைப் பெற்ற மிகக் குறைவான மாணவர்களைக் கொண்ட வலயங்களாக இவை பதிவாகியுள்ளன.

மட்டக்களப்பு மேற்கு வலயத்தில் பரீட்சைக்குத் தோற்றிய 1066 மாணவர்களில் 59 மாணவர்கள் மாத்திரமே சித்தியடைந்துள்ளனர். இது 5. 53 வீதமாகும். தேசிய ரீதியில் 99 ஆம் இடத்தை மட்டு மேற்கு வலயம் பெற்று சாதனை படைத்துள்ளது.

ஆகக் குறைந்த மாணவர்கள் சித்தியடைந்து 100 ஆவது இடத்தை கிண்ணியா பெற்றுள்ளது. பரீட்சைக்குத் தோற்றிய 1893 மாணவர்களில் 80 மாணவர்கள் மாத்திரமே வெட்டுப்புள்ளிக்கு மேலாகப் பெற்றுள்ளனர். இது 4.23 வீதமாகும்.

சாதாணர தரத்திலும் உயர் தரத்திலும் கிழக்கு மாகாணம் தொடர்ந்தும் இறுதி இடத்தைப் பெற்று சாதனை படைத்து வரும் அதே வேளை இம்முறையும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேற்றிலும் இறுதி இடங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளமை தொடர்பாக யாராவது முன்வந்து கிழக்கு மாகாண கல்வி அதிகாரிகளுக்கு பாராட்டுவிழா ஏற்பாடுகள் ஏதும் ஏன் ஏற்பாடு செய்ய வில்லை என்று குழப்பமாக உள்ளது.

Teachmore
Teachmore
SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!