97 சதவீதமான அதிபர்கள் ஆசிரியர்கள் நேற்று வருகை

 மாணவர்களது வருகை 45 வீதமாக பதிவானது

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் தரம் 1–5 வரை நேற்று (25) ஆரம்பிக்கப்பட்டதையடுத்து 97% அதிபர்களும் 89% ஆசிரியர்களும் கடமைக்கு சமுகமளித்திருந்ததாகவும் மாணவர்களின் வருகை 45% ஆக இருந்ததாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார். அதிபர் மற்றும் ஆசிரியர் சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு கோரி அதிபர் ஆசிரியர்கள் தொழிற்சங்க கூட்டணி தனது 106 நாள் வேலைநிறுத்தத்தை முடித்து நேற்று (25) பாடசாலைகளுக்கு சேவைகளுக்கு சமுகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலைகளுக்கு மாணவர்களின் வரவு படிப்படியாக அதிகரிக்குமென தான் எதிர்பார்ப்பதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவு கல்வி நடவடிக்கைகள் கடந்த மாதம் 21 ஆம் திகதி ஆரம்பமாகின.

இரண்டாவது கட்டமாக பாடசாலைகள் நேற்று ஆரம்பிக்கப்படுபோது, நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவுகளே ஆரம்பிக்கப்பட்டன. இதில் 9,155 பாடசாலைகள் உள்ளடங்குகின்றன.

மாணவர்களின் உடல் உஷ்ணத்தை அளவிடல், கை கழுவுதல் உள்ளிட்ட சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல்களுக்குட்பட்டு அனைத்து பாடசாலைகளும் ஆரம்பமாகின. பாடசாலை சீருடை கட்டாயமல்ல என கல்வி அமைச்சு அறிவித்திருந்தமைக்கமைவாக சில மாணவர்கள் சீருடையின்றி வர்ண உடையில் வந்திருந்தமையையும் காணக்கூடியதாக இருந்தது.

இதற்கிடையில், அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கக் கூட்டணி பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகளில் நேற்று முதல் கடமையாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அவர்கள் அது தவிர வேறு எந்தக் கடமைகளையும் செய்ய மாட்டார்கள் என்றும் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கூறினார். அத்துடன் நேற்று பாடசாலைக்கு சமுகமளித்த அதிபர், ஆசிரியர்கள் பகல் பாடசாலைகளுக்கருகில் போராட்டமொன்றையும் நடத்தினர்.

தினகரன்

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!