விசேட தேவையுடைய மாணவருக்கான கற்பித்தல்
சி. அருள்நேசன்
உடல், உள ரீதியில் பாதிப்புக்குள்ளான மாணவர்கள் சாதாரண மாணவர்களை விட பல சிக்கலான நடத்தைகளைக் காட்டுகின்றார்கள். அத்துடன் கல்வியில் தேர்ச்சி மட்டத்தை அடைய முடியாது தத்தளிக்கின்றார்கள். அவ்வாறான மாணவர்களுக்கு அளிக்கப்படும் கல்வியை விசேடதேவைசார் கல்வி என்கின்றனர்.
மனத்தடங்கல்,கற்றல் குறைபாடுகள், உறுப்புகள் ஊனமுற்ற மற்றும் உணர்வு குழம்புகின்ற மாணவர்களைக் கையாள்வதற்கான கல்வியையே விசேட தேவைசார் கல்வி எனலாம். சாதாரண பிள்ளைகளை விட வேறுபட்ட தன்மைகளையுடைய பிள்ளைகளால் வகுப்பறைக் கற்பித்தல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு துலங்கலை ஏற்படுத்த முடியாது.
இவ்வாறான மாணவர்களிடம் சாதாரண மாணவர்களை விட ஏதோ ஒரு திறன் சிறப்பாக விருத்தி அடைந்து இருக்கின்றது என்பதைக் கருத்தில் கொண்டு உடல், உளம் பாதிக்கப்பட்ட அல்லது ஊனமுற்ற பிள்ளைகளை விசேட தேவையுடையோர், மாற்றுத்திறனுடையோர், மாற்றுவலுவுள்ளோர் என்ற மாற்றுச் சிறப்புப் பெயர் கொண்டு அழைக்கின்றனர். அந்த வகையில் விசேட கல்வித்தேவைகள் கொண்ட பிள்ளைகளை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
புலன்சார் குறைபாடுகள், உடல் மற்றும் ஆரோக்கிய குறைபாடுகள், அறிவுசார் குறைபாடு,ஓட்டிச திருசிய ஒழுங்கீனங்கள், நடத்தைசார் ஒழுங்கீனங்கள்,பேச்சு மற்றும் மொழிசார் ஒழுங்கீனங்கள்,
மீத்திறன் மற்றும் திறமை கொண்ட மாணவர்கள், கற்றல் இயலாமைகள் மாணவர்கள் என பல்வேறு பிரிவினர்களை இவ்வகைக்குள் உள்ளடக்குவர்.
அனைவருக்கும் தரமான கல்வி என்ற சிந்தனை தற்காலத்தில் அதிகம் பேசப்படுகின்றது. இதனடிப்படையில் கல்வியானது சமத்துவ முறையில் அனைவருக்கும் கிடைக்க வேண்டியது அவசியமாகும். இதனைக் கருத்தில் கொண்டே வகுப்பறையில் சாதாரண மாணவர்களுடன் விசேட தேவையுடைய மாணவர்களையும் இணைத்துக் கற்றல், கற்பித்தல் இடம்பெறுகின்றது. ஆனால் இவ்வாறு கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபடும் போது ஆசிரியர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகின்றது.
ஆசிரியர்கள் விசேட தேவையுடைய மாணவர்களை இனங்காண வேண்டியது அவசியமாகும். ஆனால் ஆசிரியர்கள் விசேட தேவையுடைய மாணவர்களை முழுமையாக இனங்காண முடியாத நிலை காணப்படுகின்றது. ஏனெனில் அவர்கள் விசேட தேவையுடைய மாணவர்களை இனங்காண்பது தொடர்பான பயிற்சி, அனுபவமின்றிக் காணப்படுகின்றமை வகுப்பறை சார்ந்த முக்கியமான சவாலாகும்.
பாடசாலைகள் பல்வேறு தரங்கள், வளர்ச்சி அடிப்படையில் பாகுபடுத்தப்பட்டு வருகின்றன. எனினும் சகல பாடசாலைகளிலும் எல்லா வசதிகளும் இல்லை. ஆகவே விசேட தேவையுடைய மாணவர்கள் குறித்த பாடசாலை சமூகத்தில் இருப்பார்களாயின் அவர்களுக்கான கற்றல் சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது பாடசாலையின் கடமையாகும். அவ்வாறான நிலையில், ஆசிரியர்களால் முறையாக கற்பிக்க வாய்ப்பு ஏற்படுகின்றது.இதனை முறையாக இனங்காண்பது அவசியமாகும்.
பாடசாலையில் குறித்த வகுப்பில் விசேட தேவையுடைய மாணவர்கள் இருப்பார்களாயின் ஆசிரியர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கும் சவால்களுக்கும் பொறுப்புக்கூறும் நிலைக்கும் தள்ளப்படுகின்றார்கள்.வகுப்பறையில் இவ்வாறான மாணவர்களை இனங்காண்பது முக்கிய பிரச்சினையாக ஆசிரியர்களுக்கு உள்ளது. இனங்காணப்பட்ட மாணவர்களுக்கு ஏற்ற வகையில் கற்பித்தலை மேற்கொள்வதற்கு ஆசிரியர்களுக்கு அனுபவமோ, பயிற்சியோ இல்லாமை மற்றுமொரு சவாலாகும். அதற்கேற்ற ஆயத்தங்களை பாடசாலை நிர்வாகம், கல்வி நிர்வாகிகள் மேற்கொள்ளாமையும் பிரச்சினைகள் ஏற்பட காரணமாகின்றது.
நாற்பது நிமிட பாட வேளையில் சாதாரண மாணவர்களுடன் வைத்து விசேட தேவையுடைய மாணவர்களை கற்பிப்பதன் காரணமாக உரிய நேரத்திற்கு பாடத்தினைப் பூர்த்தி செய்ய முடியாத நிலை உருவாகின்றது. இவ்வாறான மாணவர்களுக்கு தனியான வகுப்பறை முறையை ஏற்படுத்துவதால் சமூகத்தில் அவர்கள் தனியான சூழலுக்கு தள்ளப்படுவார்கள் என்பது மற்றொரு பிரச்சினை.
விசேட தேவையுடையோர் எனும் போது ஒவ்வொருவரும் வித்தியாசமான தேவையையும், குறைபாடுகளைக் கொண்டிருப்பர். அதனை ஆசிரியர்கள் ஒரு வகுப்பில் இனங்கண்டு சகலருக்கும் ஒரே விதமான கல்வியை வழங்குவதில் சிக்கல் தன்மை ஏற்படுகின்றது. மாணவர்கள் மத்தியில் தாழ்வுச் சிக்கல் ஏற்படவும் வாய்ப்பு உண்டாகின்ற அதேவேளை தனிமைப்படுத்தப்பட்ட நிலையும் உண்டாகிறது. விசேடதேவையுடைய மாணவர்கள் மற்றவர்களில் தங்கியிருக்கும் நிலை காணப்படுவதால் வகுப்பறையில் ஆசிரியர்களின் முழுக் கண்காணிப்பில் இருப்பது அவசியமாகும்.
இவர்களுக்கான கற்பித்தலை மேற்கொள்ளக் கூடிய வகையில் கற்பித்தல் உபகரணங்கள், வளங்கள் போதுமானதாக இல்லாமல் இருக்கும்போது ஆசிரியர்கள் முறையாக வகுப்பறைக் கற்பித்தலை மேற்கொள்ள முடியாது. கட்புலன் சார்ந்த குறைபாடுடைய மாணவர்களுக்கு கற்றல் துணைச் சாதனங்களை தொட்டுணரச் செய்வதன் மூலம் கற்பித்தலை மேற்கொள்வதற்கு வசதியாக இருக்கும். ஆனால் இவ்வாறான வசதிகள் பாடசாலையில் ஏற்படுத்தாமல் இருக்கும் போது நேர்த்தியாக கற்பித்தலை ஆசிரியர்களால் மேற்கொள்ள முடியமால் போய் விடுகிறது.
ஒரு வகுப்பில் சாதாரண நிலையிலுள்ள மாணவர்களுக்கும் விசேட தேவையுடைய மாணவர்களுக்குமிடையே ஒற்றுமையின்மை, கருத்து முரண்பாடுகள் என்பன ஒரளவு ஏற்படுவதற்கு வாய்ப்புக் காணப்படுகின்றது. உதாரணமாக- சாதாரண மாணவர்கள் அனைவரும் அசாதாரண மாணவர்களை ஏற்றுக் கொள்ளும் நிலை ஏற்படாமை, குழு செயற்பாடுகளில் ஈடுபடாமை ஆகியனவாகும். குறிப்பாக ஆசிரியரைப் பொறுத்தவரை சகல மாணவர்களையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டிய நிலை காணப்பட்டாலும் இவ்வாறான பிரச்சினை வகுப்பறையில் ஏற்படும் போது சவால் நிறைந்ததாகவே அமைகின்றது.
விசேட தேவையுடைய மாணவர்களின் குறைபாடுகள் சாதாரண மாணவர்களின் கற்றலில் தாக்கத்தினை ஏற்படுத்துவதானது ஆசிரியருக்கு முக்கியமான பிரச்சினையாகும். விசேட தேவையுடையவர்கள் எனும் போது ஒரு பாடத்தை, ஒரே வகுப்பறை மட்டத்தில் மேற்கொள்ளும் போது விசேட தேவையுடைய மாணவர்களை மேலதிகமாக கவனிக்க முற்படும் போது சாதாரண மாணவர்களின் கற்றல் தாமதமாக்கப்படுகின்றது.
சாதாரண நிலையிலுள்ள மாணவர்களுக்கும் விசேட தேவையுடைய மாணவர்களுக்குமிடையில் அடைவு மட்டங்களில் வேறுபாடு காணப்படுகின்றது. இவற்றை சமப்படுத்துவதில் பிரச்சினை காணப்படுகின்றது. அதாவது விசேட தேவையுடையவர்கள் மெல்லக் கற்பவர்களாக இருப்பதோடு உடல், உள ரீதியான குறைபாடுகளைக் கொண்டவர்களாகவும் கற்பிப்பதை உடனே விளங்கிக் கொள்ள முடியாமலும் காணப்படுகின்றனர். உதாரணமாக குழுச் செயற்பாடுகள் மற்றும் கற்பித்தல் முறைகள், கற்பித்தல் சாதனங்களில் இருந்து பயன் பெற முடியாமை. ஆகவே பரீட்சை மற்றும் மதிப்பீடுகளை மேற்கொள்ளும் போது சாதாரண மாணவர்களைப் போல அவர்களுக்கு பிரகாசிக்க முடியாமல் போக வாய்ப்புண்டு. இதனால் ஒரு ஆசிரியர் இதனை முறையான விதத்தில் மேற்கொள்வதில் சவால் நிலைக்கு உட்படுகின்றார்.
வகுப்பறையில் விசேட தேவையுடைய மாணவர்களை முறையாக நெறிபடுத்துவதற்கு பயிற்சி இல்லாமை ஒரு முக்கிய பிரச்சினை. இவர்களை வழிநடத்துபவர்கள் இன்னொரு பெற்றோராக இருக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும். ஆகவே ஆசிரியர்கள் அனைவரும் இதற்கு பயிற்சி பெறுவார்களா என்பது நடக்காத விடயமாகும். ஆகவே சாதாரண மாணவர்களுக்கு கல்வியைப் போதிக்கும் ஆசிரியர்கள் விசேட தேவையுடைய மாணவர்களுக்கு கற்பிப்பதில் சிரமங்களை எதிர்கொள்வது மற்றுமொரு பிரச்சினையாகும்.
வகுப்பறையில் விசேட தேவையுடைய மாணவர்கள் ஒவ்வொரு வகையான குறைபாடுடையவர்களாகவே இருக்கின்றனர். அதனை முறையாக இனங்கண்டு தொடர்ச்சியான அவதானிப்பில் சரியான கல்வி வழிகாட்டலை மேற்கொள்வதற்கு வழி செய்யப்பட வேண்டும். (நன்றி தினகரன்)