ச. அனுஷாதேவி
கல்வி பிள்ளைநலத்துறை,
கிழக்குப் பல்கலைக்கழகம்
குழந்தைகளின் உடல், உள எழுச்சி மற்றும் சமூக வளர்ச்சியில் விளையாட்டுகள் சிறப்பான இடத்தைப் பெறுகின்றன. ‘வாழும் பிள்ளையை மண் விளையாட்டில் தெரியும்’என்பது முதுமொழியாகும்.இன்றைய உளவியலாளர்கள் குழந்தைகளுக்கான விளையாட்டுகள் குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குழந்தைகளின் விளையாட்டுக்களைப் பின்வருமாறு வகைப்படுத்த முடியும்.
1. இயல்பான உடல், மனவெழுச்சி இயக்கங்களோடு இணைந்த விளையாட்டுக்கள். -அதாவது தாமாகவே ஆடுதல்,துள்ளுதல்,சிரித்தல்,கற்பனை செய்தல் முதலியவற்றோடு இணைந்த விளையாட்டுக்கள்.
2. பாவனை விளையாட்டுக்கள். -அதாவது பிறரின் செயல்கள், நடவடிக்கைகள் போன்றவற்றை தாமே செய்து விளையாடி மகிழ்ச்சியடைதலும் இசைவாக்கம் செய்தலும்.
3. நாடகப் பாங்கான விளையாட்டுக்கள். தமக்குப் பிடித்தவற்றை மீள நடித்தல், பாத்திரங்களை ஏற்று நடித்தல், விளையாடுதல் முதலியவை இப்பிரிவில் அடங்கும்.
4. நட்பை உண்டாக்குவதற்கான விளையாட்டுகள். – இவை தொடர்பாடல் விளையாட்டுக்கள் என்றும் விளக்கப்படும். அதாவது பிறருடன் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கும் புரிந்துணர்வை வளர்ப்பதற்கும் குழந்தைகள் மேற்கொள்ளும் விளையாட்டுகள்.
5. தனிமை நாட்ட விளையாட்டுகள்.குழந்தைகள் ஏனைய குழந்தைகளைக் கருத்திற் கொள்ளாது தாமாகத் தனித்து விளையாடுதல்.
6. பங்குபற்றா விளையாட்டுகள்.ஏனைய குழந்தைகள் விளையாடும் பொழுது அவற்றிலே பங்குபற்றாது, பார்வையாளராக இருந்து அனுபவிக்கும் விளையாட்டுகள்.
7. இடைவினை பெறாத விளையாட்டுகள். அதாவது, இயங்காத பொம்மைகளுடன் விளையாடும் விளையாட்டுகள்.
8. கூட்டுறவுப் பாங்கான விளையாட்டுகள். – பிறருடன் சேர்ந்தும் விட்டுக் கொடுத்தும்,உதவி செய்தும்,தனது சந்தர்ப்பத்திற்காகப் பொறுத்திருந்தும் மேற்கொள்ளும் விளையாட்டுகள்.
9. நடிபங்கு ஏற்கும் நாடகப் பாங்கான விளையாட்டுகள். தாமே தனித்து நடித்து,பிறருடன் இணைந்து நடித்தல் முதலான விளையாட்டுகள் இதிலடங்கும்.
விளையாட்டுகளின் வாயிலாகக் குழந்தைகள் பல விடயங்களைக் கற்றுக் கொள்கின்றன. அறிவொழுக்கங்கள், கட்டுப்பாடுகள், ஆண், பெண் வேறுபாடுகள், உணர்ச்சி வெளிப்பாட்டுக்குரிய சொற்கள் முதலானவற்றைக் கற்றுக் கொள்வதற்கு விளையாட்டுகள் துணை நிற்கின்றன. தம்மைப் பற்றிய தற்காட்சியை வளர்த்துக் கொள்வதற்கும் விளையாட்டுகள் துணை செய்கின்றன.
விளையாட்டுகளில் சரியான நடத்தை மீளவலியுறுத்தப்படுகின்றது. பிழையானவற்றுக்குத் தண்டனை வழங்கப்படுகின்றது. இவற்றின் காரணமாக நடத்தை உருவாக்கத்திற்கு விளையாட்டுக்கள் பெரிதும் துணைநிற்பதைக் காணலாம்.குழந்தைகளின் ஆக்கத்திறன் வளர்ச்சிக்கும் விளையாட்டுக்கள் தூண்டுதலளிக்கின்றன.
முன்பள்ளிக் குழந்தைகளின் விளையாட்டுகளில் ‘நடுநாயகப்படுத்துதல்’ என்ற பண்பும் மிகுதியாகக் காணப்படும். அதாவது விளையாடும் பொழுது பொருளில் மாத்திரம் அவர்களது கவனம் மிகையாக இருத்தலும் ஏனைய பண்புகளைக் கைவிடுதலுமாகிய இயல்பு காணப்படும்.
குழந்தைகளின் விளையாட்டுக்களில் தன்முனையப் பண்புகளும் அதீதமாகக் காணப்படும். தமக்கே பரிசுக் கிடைக்க வேண்டுதலும்,கிடைக்காதவிடத்து அழுதலும் தன்முனையப் பண்புகளுக்கு உதாரணங்களாகும். பொருட்களுக்கு உயிர்ப்பு ஊட்டுதலும் அவர்களது விளையாட்டில் இடம்பெறும். உதாரணமாக கதிரை ஒன்று குழந்தையை மோதிவிட்டால் அந்தக் கதிரைக்கு அடித்துக் கோபத்தைத் தணித்துக் கொள்ளும் பண்பும் காணப்படும். விளையாட்டுக் குழுக்களின் பண்புகள் குழந்தைகளின் இயல்புகள் மீது செல்வாக்குச் செலுத்தலும் கண்டறியப்பட்டுள்ளன.
முன்பள்ளிக் குழந்தைகளது விளையாட்டுக்களினூடாக உடலியக்கத் திறன்களை வளப்படுத்துவதற்கு ஆசிரியர்கள் வகைவகையான விளையாட்டுப் பொருட்களை பயன்படுத்துதல் சிறந்தது.
குழந்தைகள் தாம் விளையாடுகின்ற பல்வேறு வகையான விளையாட்டுகளினூடாக இலகுவாகக் கற்றல் செயற்பாடுகளை உள்வாங்கிக் கொள்கின்றார்கள்.குழந்தை விளையாட்டோடு இணைந்த கல்வியானது ஆரம்பத்தில் குடும்பச் சூழலில் ஆரம்பித்து முன்பள்ளிக் கல்வி மற்றும் பாடசாலைக் கல்வியோடு தொடர்ந்து செல்வதை கண்கூடாகக் காண முடியும். குழந்தை விளையாட்டுகளை பல்வேறு வகையான நுட்பமுறைகளை குடும்ப உறுப்பினர்கள் மற்றும் முன்பள்ளிக்கல்வி ஆசிரியர்கள், பாட சாலை ஆசிரியர்கள் கையாள்வதனூடாக சிறப்பான கற்றல் செயற்பாடுகளை மேம்படுத்திக்கொள்ள முடியும். எதிர்காலத்தில் சிறந்ததொரு மாணவ சமுதாயத்தினரை உருவாக்கிக் கொள்ளவும் குழந்தை விளையாட்டுகள் ஊன்றுகோலாக அமையும்.
-thinakaran-