பாடசாலையில் உள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர் தொடர்பான குழப்பங்களை தெளிவுபடுத்துதல்
Dineah Padmakaran | பாடசாலையில் உள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர் தொடர்பான குழப்பங்களை தெளிவுபடுத்தும் வகையில்…..
தற்போது பாடசாலைகளில் சேவையில் இணைக்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்(Development Officers) 14/02/2012ஆம் திகதிய 1745/11ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியின் பிரகாரம் நிகழ்ச்சித்திட்ட அலுவலராக சேவையில் உள்வாங்கப்பட்டு 07/09/2012ஆம் திகதிய 1774/31ஆம் இலக்க அதிவிசேஷட வர்த்தமானியின் படி அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக(D.O) சேவையில் அங்கம் வகிக்கின்றனர். அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை பிரமான குறிப்பின்(1745/11) பிரிவு 4:3 இன்படி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பணியாக அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் மூலம் எதிர்பார்க்கப்படும் குறிக்கோள்களை அடைவதில் நிறைவேற்றுத்தரங்களின் பணிகளுக்கு உதவியாக அமையும் புலன்விசாரணை, தகவல் மற்றும் தரவு சேகரிப்பு, பகுப்பாய்வு, அறிக்கை தயாரித்தல், கணக்கெடுப்புகள் போன்ற செயற்பாடுகளை கொண்ட பணி இப்பதவியை வகிப்பவர்களிடம் ஒப்படைக்கப்படும்.
குறித்த பணிகளை திறம்பட ஆற்றக்கூடிய வகையில் அவர்கள் பல்துதுறைப் பட்டதாரிகளாக உள்ளபோதிலும் அவர்களின் மூன்று வருட சேவைக்கால நிறைவில் முதலாவது வினைத்திறன் தடைதாண்டல் பரிட்சையில் அலுவலக முறைமைகள், கணக்கீட்டு முறைமைகள், கணினி பயன்பாடு என்பவற்றில் சித்தி அடைதல் அவசியம்.
இங்கே அலுவலக முறைமைகள் பற்றிய அடிப்படை அறிவு நிதி நிர்வாக அறிவு, கணனித் தொழில்நுட்பத்தில் அடிப்படையான கணினி பயன்பாடு, கோவை முகாமை, தரவு உள்ளீடு, விரிதாள், தரவுத்தளம் இணையம், மின்னஞ்சல் நிகழ்த்துகை போன்ற விடயங்களில் சித்தியடைவது கட்டாயமாக எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்போது பாடசாலைகளில் இணைக்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான உரிய கடமை வழிகாட்டல்கள் வழங்கப்படாது உள்ளதோடு இது பற்றிய தெளிவின்மையள பெரும்பாலான பாடசாலைகளில் நிலவுகின்றது.
மேலும் இவர்கள் MN (Management) சம்பள குறியீட்டு வகுதிக்குள் உள்ளடங்குபவர்களாக இருந்தபோதிலும் ஆசிரியர் வள பற்றாக்குறை காரணமாக கற்பித்தல் கடமைகளிலும் ஈடுபட வேண்டிய தேவை உள்ளது.
எது எவ்வாறாயினும் அவர்களது சேவைக்குரிய பணியான புலன்விசாரணை, தகவல் தரவு சேகரிப்பு, பகுப்பாய்வு, அறிக்கை தயாரிப்பு, பாடசாலை முகாமைத்துவ செயற்பாடுகளில் அவசியமான கடமைகளில் ஈடுபடுத்தப்பட செய்யப்படின் மனித வள வீண்விரயம் தடுக்கப்படுவதுடன் பாடசாலை செயற்பாடுகள் முன்னேற்றமடையும் என்பது திண்ணம்.

