• Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact US
  • Advertise with Us
TeachMore
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB
No Result
View All Result
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB
No Result
View All Result
TeachMore.lk
Home கட்டுரைகள்

பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம் ஆகியவற்றுடன் தொடர்பான சமகாலப் பிரச்சினைகள்

April 11, 2023
in கட்டுரைகள், CIRCULARS, சுற்றுநிருபம்
Reading Time: 2 mins read
பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம்
Share on FacebookShare on WhatsAppShare on Telegram

பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம் ஆகியவற்றுடன் தொடர்பான சமகாலப் பிரச்சினைகள்

Current Issues relating to Society / Committees in Schools

A.M.Mahir (LLB , MDE , SLAuS)

பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பாடசாலை பழைய மாணவர் சங்கம் என்பன பாடசாலையின் நடவடிக்கைகளில் தாக்கம் செலுத்தும் பிரதான சங்கங்கள் ஆகும். அவை தொடர்பாக இந்த ஆக்கம் ஆராய முயல்கிறது.

பாடசாலை அபிவிருத்திச் சங்கம் (School Development Society)

• பாடசாலையின் அதிபர் உள்ளிட்ட ஆசிரியர்கள் (அதிபர் பதவி வழித் தலைவர் ஆவார்) மாணவர் தினவரவு இடப்புகளில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள மாணவர்களின் பெற்றோர் மற்றும் சட்டரீதியான பாதுகாவலர், பாடசாலையின் பழைய மாணவர்கள். (மாணவர் எண்ணிக்கைக்கேற்ப தீர்மானிக்கப்படும்), வலய/கோட்டக் கல்வி அலுவலகத்தின் பதவிநிலை உத்தியோகத்தர் ஒருவர் ஆகியோரை பாடசாலை அபிவிருத்திச் சங்கம் உள்ளடக்கியிருக்கும்.

• தீர்மானிக்கப்பட்ட தொகையினை (ரூபா 50 தொடக்கம் ரூபா 600 வரை) செலுத்துவதன் மூலம் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தில் அங்கத்தவர்களாக முடியும்.

• வருடாந்தம் மார்ச் 31 இற்கு முதல் பாடசாலை அபிவிருத்திச் சங்கக் கூட்டம் நடாத்தப்படல் வேண்டும். இக்கூட்டங்களில் அனாவசியமான வாக்குவாதங்கள் ஏற்பட்டு வருவதாக அறியக் கிடைக்கின்றது. இதற்கான முழுப்பொறுப்பும் அதிபரையே சாரும். இக்கூட்டம் நடாத்தப்படுவதன் நோக்கத்தை புறக்கணித்து அவற்றிற்கு அப்பாற்பட்ட விடயங்கள் பற்றி கலந்துரையாடப்படுவதனாலேயே இவ்வாறான வாக்குவாதங்கள் உண்டாகின்றன.

• இக்கூட்டத்தின் பிரதான நோக்கங்களாக, பாடசாலையின் வருடாந்த முன்னேற்ற செயலாற்றுகை பற்றிய அறிக்கை, கணக்கறிக்கை சமர்ப்பித்தல், அடுத்த வருடத்திற்கான இனம்காணப்பட்ட தேவைகளை உள்ளடக்கி பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவினருடன் இணைந்து தயாரிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம், வருடாந்த அமுலாக்கல் திட்டம் தொடர்பாக விளக்கமளித்தலும், அங்கீகாரம் பெறலும், இரு வருடங்களுக்கொருமுறை பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு தெரிவு செய்தலுமாக அமைய வேண்டும்.

• இதற்கு மேலதிகமான விளக்கங்கள், கலந்துரையாடல்கள் அனாவசியப் பிரச்சினைகளை தோற்றுவிக்கும்.
• பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவானது தெரிவு செய்யப்பட்டவுடன், அவர்களுக்காக இயலளவு விருத்தி நிகழ்ச்சித்திட்டம் (Capacity Building Programme) ஒன்று நடாத்தப்படல் வேண்டும்.

• பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களில் பெற்றோர் / பாதுகாவலர் சார்பான அங்கத்தவர்களில் அநேகமானோர் கல்வித்துறைசாரா வெவ்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும். அவர்களுக்கு பாடசாலையுடன் தொடர்பான கலாசாரங்கள், சட்டதிட்டங்கள், சுற்றுநிருபங்கள் தொடர்பாக போதிய அறிவினை பெற்றுக்கொடுப்பதே இந்த இயலளவு விருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் பிரதான நோக்கமாக அமைய வேண்டும்.

• பிரதானமாக, பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட பண்புரீதியான, அளவுரீதியான, கட்டமைப்பு ரீதியிலான அபிவிருத்திக்கான திட்டமிடல்கள் மற்றும் பெறுகைச் செயற்பாடுகள் தொடர்பான சுற்றுநிருபம் மற்றும் கைநூல் (சுற்றறிக்கை இலக்கம் 26/2018 மற்றும் 19/2019) மற்றும் ஏனைய சுற்றுநிருபங்கள் (விடுதி முகாமைத்துவம், வசதிகள் சேவைகள் கட்டணம், பாடசாலை உணவகம் நடாத்துதல், சத்துணவுத் திட்டம், பழைய மாணவர் சங்கம், பாடசாலைக்கு அன்பளிப்பு பெறல், தர உள்ளீட்டு நிகழ்ச்சித் திட்டம், பாடசாலைச் சுற்றுலாக்கள், பாடசாலை திட்டமிடல், பாடசாலை பணிக்குழுவினரை தீர்மானித்தல், பாடசாலையில் வைபவங்களை நடாத்துதல், புதிய மாணவர் அனுமதி போன்றவை…) தொடர்பான போதிய விளக்கங்கள் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவினருக்கு வழங்கப்படல் வேண்டும்.

• இதனால் பாடசாலை ஆளணியினர், அவர்களின் நடவடிக்கைகள் தொடர்பான சரியான விளக்கமொன்று பாடசாலை சமூகத்தைச் சென்றடையும். இதன் காரணமாக பிழையான கருத்துக்களுக்கும், வாதங்களுக்கும், விமர்சனங்களுக்கும் பாடசாலை உள்ளாவதை தடுக்க முடிவதோடு, அதிபருக்கும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு அங்கத்தவர்களுக்குமிடையிலான முரண்பாட்டினை தவிர்க்கவும் முடியும்.

பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு (SDEC)
• சமகாலத்தில் பல பாடசாலைகளில் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு என்பது வெறுமனே கையொப்பம் இடுவதற்கும், பாடசாலை நிகழ்வுகளில் வீற்றிருப்பதற்குமாக அமைக்கப்பட்ட குழுவாக உருமாறியுள்ளது. மேலும் பல பாடசாலைகளில் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவின் அதீத தலையீட்டினால் அதிபரானவர் ஒரு கைதியைப்போன்று நடாத்தப்பட்டும் வருகின்றார்.

• மேற்படி இரு நிலைமைகளும் மோசமான விளைவுகளை பாடசாலையில் ஏற்படுத்தும். பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவினது பதவிவழித்தலைவர் அதிபரேயாவார். பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவால் யாதாயினும் அலுவலக கடிதத்தொடர்புகள் மேற்கொள்ளப்பட வேண்டுமாயின் அதில் கையோப்பமிடுவதற்கான அதிகாரம் அதிபருக்கே வழங்கப்பட்டுள்ளது. இதனை அறியாத சில பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு செயலாளர்கள், தாங்களே இதற்கு அதிகாரம் பெற்றவர்கள் என வாதிட்டு முரண்பட்டு வருகின்றனர்.

  • பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவினது முரண்பாடான பின்வரும் சில நடவடிக்கைகளை உதாரணமாகக் கொள்ளலாம்.
  • அடிக்கடி பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு கூட்டத்தை நடாத்துமாறு செயலாளர்இ அதிபரை தனிப்பட்ட ரீதியில் வற்புறுத்துதல்.
  • பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு கூட்டறிக்கையை தனது வீட்டிற்கு செயலாளர் எடுத்துச்செல்லுதல். அதனை அதிபரிடம் ஒப்படைக்க மறுத்தல்.
  • பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு கூட்டறிக்கையை முறையாக எழுதத் தவறுதல்.
    எடுக்கப்பட்ட தீர்மானங்களை அடிக்கடி மாற்றுதல்.
  • தாங்கள்தான் பாடசாலையை முற்றுமுழுதாக இயக்குவதாக எண்ணி செயற்படல்.
  • பாடசாலை தொடர்பான பிரச்சனைகனை உரிய மட்டங்களில் சுமூகமான முறையில் தீர்க்காது சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருதல்.
  • பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு அங்கத்தவர்களுடன் தனிப்பட்ட பிரச்சினைகளுடன் தொடர்புடைய பாடசாலை மாணவர், ஆசிரியர், ஏனைய ஆளணியினரை பழிவாங்கும் நோக்கில் செயற்படுதல்.
  • தங்களது தனிப்பட்ட கருத்துக்களை திணிக்க முயலுதல், அக்கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்படாத போது பாடசாலைக்கு எதிராக செயற்படல்.
  • பாடசாலையில் செயற்படுத்தப்படும் சகல செயற்திட்டங்கள்; வைபவங்கள் அனைத்திற்கும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களை அழைத்து உபசரித்து மரியாதை வழங்கப்பட வேண்டும் என வற்புறுத்துதல்.
  • அனாவசியமான செலவுகளை மேற்கொள்ள தீர்மானித்தல்.
  • நிதிப்பிரமாணங்கள், சுற்றுநிருபங்களை மீறிய செயற்பாடுகளை திட்டமிட்டு செயற்படுத்துதல், அதற்காக நிதி சேகரித்தல்.
  • சுயலாபங்களை நோக்காகக்கொண்டு கருத்துக்களை வெளியிடலும், எதிர்மறை எண்ணங்கனை தோற்றுவித்தலும்.
  • வலயக் கல்வி அலுவலக பிரநிநிதியானவர், தான் ஒரு அதிகாரம் படைத்தவர் என்ற தொனியில் அதிபரையும், அங்கத்தவர்களையும் தனது அடிமைகளைப் போன்று நடாத்துதல்.
  • கூட்டங்களின் போதும், தனியான கலந்துரையாடல்களின் போதும் அவதூறானா மற்றும் மோசமான வார்த்தைகளைப் பிரயோகித்தல்.
  • பாடசாலை அபிவிருத்தியினை நோக்காகக் கொண்டல்லாது, தங்களின் சுய தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முற்படுதல். (உதாரணமாக, புதிய மாணவர் அனுமதியின் போது எந்தவொரு வகுதிக்குள்ளும் அடங்காத தனது உறவினரின் பிள்ளைகளை அனுமதிக்கும்படி வற்புறுத்துதல். இல்லாவிடில் அச்சுறுத்தல் விடுத்தல்)
  • பாடசாலையின் கலாசாரத்திற்கு மாற்றமாக தீர்மானங்களை மேற்கொள்ளல்.

பாடசாலை நடவடிக்கைகள் தொடர்பான சரியான, போதிய, தெளிவான விளக்கங்கள் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமையினாலேயே மேற்படி முரண்பாடுகள் ஏற்படுகின்றன.

பாடசாலை அபிவிருத்திச் சங்கக் கணக்கு தொடர்பாகவும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. உதாரணமாக,

  • போதியளவு நிதி வைப்பில் காணப்படாமை.
  • உரிய செலவுத் தலைப்புகளின் கீழ் உரிய நிதி பயன்படுத்தப்படாமை.
  • வருடாந்த அமுலாக்கல் திட்டத்திற்கேற்ப அல்லது அதற்கு மேலதிகமாக பாடசாலையில் நாடாத்தப்படும் செயற்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி வேறு தேவைகளுக்கு பயன்படுத்தப்படல். (உதாரணமாக தர உள்ளீட்டு (Quality Inputs) செலவுகளுக்காக வைப்பிலிடப்பட்ட நிதி மூலம் பாடசாலை மின்சாரக் கட்டணம் செலுத்தப்படல்)
  • பாடசாலை வங்கிக்கணக்கில் வருட இறுதியில் வங்கிமீதியாக / காசேட்டுமீதியாக ரூபா 15000 க்கு கீழ்ப்பட்ட தொகை காணப்படவேண்டுமெனவும், ஏனைய சகல நிதிகளும் செலவு செய்யப்பட்டு முடிவடைந்திருக்க வேண்டுமெனவும் பிழையான வழிகாட்டல் வழங்கப்படல். அவ்வாறாக எந்தவொரு நிபந்தனைகளும் சுற்றறிக்கையில் இல்லை. ஆனால் குறிப்பிட்ட சில செயற்திட்டங்களுக்காக உரிய சுற்றுநிருபங்களினூடாக வழங்கப்பட்ட நிதியானது, அச்சுற்றுநிருபங்களில் குறிப்பிடப்பட்டுள்ள திகதிக்கு முன்னர் செலவழிக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். (உதாரணம்: பாடசாலை நூலக நூல் கொள்வனவிற்கான நிதிக்கொடை)
  • செயற்திட்டம் தொடர்பாக கடிதங்கள் கிடைக்கப்பெற்ற போதும் நிதி உரிய காலத்தில் அமைச்சினால்/ மாகாண சபையினால்/ மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் வைப்புச்செய்யப்படாத சந்தர்ப்பம், நாட்டின் அசாதாரண சூழ்நிலைகளால் பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் சந்தர்ப்பங்கள், பொருட்கள், சேவைகள் தட்டுப்பாடு, பொருளாதார நெருக்கடிகள், விலையேற்றம், எரிபொருள் நெருக்கடி போன்ற காரணங்களால் உரிய திகதியினுன் செயற்திட்டங்களை பூர்த்திசெய்ய முடியாத நிலைமை கடந்த நான்கு வருட காலமாக கணக்காய்வுகளில் அவதானிக்கப்பட்டு வருகின்றது. அத்துடன் கொரோனா தொற்று, பொருளாதார நெருக்கடிகளுக்கு நம் நாடு முகம் கொடுத்ததன் காரணமாக நீண்ட நாட்கள் பாடசாலை மூடப்பட்டு பாடத்திட்டங்கள் பூர்த்திசெய்யப்படாத நிலைமை தோன்றியது. கல்வி ஆண்டு ஆரம்பமாகும் திகதிகள், க.பொ.த.(சா/ த), க.பொ.த (உ/ த) பரீட்சைகள் நடாத்தப்படும் திகதிகள் என்பனவும் மாற்றமடைந்து இயல்பான நிலைமைகள் பாதிக்கப்பட்டும் உள்ளது. இந்நிலைமைகனை கருத்தில்கொண்டு பாடசாலை வங்கிக்கணக்கில் வருட இறுதியில் வங்கி மீதியாக / காசேட்டுமதியாக ரூபா 15000 க்கு கீழ்ப்பட்ட தொகை காணப்படவேண்டுமெனவும், ஏனைய சகல நிதிகளும் செலவு செய்யப்பட்டு முடிவடைந்திருக்க வேண்டுமெனவும் வற்புறுத்துவது பொருத்தமான வழிகாட்டல் அல்ல.

 

  • வங்கிக்கணக்கு வருட ஆரம்பத்தில் மிகக் குறைவாக காணப்படும் பட்சத்தில், அவசர நிலைமைகளில் செலவுசெய்ய வருமானங்களை பெற்றுக்கொள்ள முடியாத போது பாடசாலையானது நிதிநெருக்கடியினை எதிர்கொள்ளவேண்டிவரும். (உதாரணமாக மின்சாரக் கட்டணம், தொலைபேசிக் கட்டணம் செலுத்துதல், காகிதாதிகள் கொள்வனவு என்பன தடைப்படும்)
  • வருடாந்த அமுலாக்கல் திட்டத்தில் அனுமதிக்கப்பட்ட செயற்பாடு ஒன்றை பூர்த்தி செய்ய உரிய செலவுத்தலைப்பில் போதிய அளவு நிதி இல்லாமல் போகும் சந்தர்ப்பங்களில் இலக்கு பூர்த்தி செய்யப்பட்ட செலவுத் தலைப்புக்களிலிருந்து மாத்திரம் நிதி மீதமிருந்தால் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவின் அனுமதியுடன் கீழ் குறிப்பிடப்பட்டவாறு வகைமாற்றம் செய்து செலவினங்களை மேற்கொள்ள முடியும்.
    • மீண்டெழும் செலவு விடயமொன்றின் மிகுதியொன்றை மீண்டெழும் செலவு விடயத்திற்காக மாற்றிக்கொள்ள முடியும்.
    • மீண்டெழும் செலவு விடயமொன்றின் மிகுதியொன்றை மூலதன செலவு விடயத்திற்காக மாற்றிக்கொள்ள முடியும்.
    • மூலதன செலவு விடயமொன்றின் மிகுதியொன்றை மூலதன செலவு விடயத்திற்காக மாற்றிக்கொள்ள முடியும்.
      குறிப்பு – மூலதன செலவு விடயமொன்றின் மிகுதியொன்றை மீண்டெழும் செலவு விடயத்திற்காக மாற்றிக்கொள்ள முடியாது.
      எனவே அதற்கேற்ற வகையில் வங்கி மீதிகள் பேணப்படல் வேண்டும்.

பாடசாலை அபிவிருத்திச் சங்கக் கணக்கிலுள்ள நிதிகள் பயனுறுதிமிக்க வகையிலும், மாணவர்களின் நலனை மற்றும் கற்றல் கற்பித்தலுக்கு அவசியமான விடயங்களை இலக்காகக் கொண்டும் முன்னுரிமை அடிப்படையில் செலவு செய்யப்படல் வேண்டும். ஆனால் சமகாலத்தில் பின்வரும் பிழையான நடைமுறைகள் பாடசாலை அதிபர்களால் பின்பற்றப்பட்டு வருகின்றது.

  • அலுவலக நிர்வாக செலவினங்களுக்காக அதிக தொகை ஒதுக்கப்படல். (உதாரணம் : அனாவசிய, அலுவலக அலங்காரப் பொருட்கள், திரைச்சீலைகள், தளபாடங்கள் கொள்வனவு, ஊழியர் கொடுப்பனவு)
  • தரமற்ற பொருட்கள் அதிக விலையுடன் கொள்வனவு செய்யப்படல்,
  • விலைமனுக்கள் இன்றியும், பாடசாலை பெறுகைக்குழு, தொழிநுட்ப மதிப்பீட்டுக் குழுவின் சிபாரிசு மற்றும் அங்கீகாரம் இன்றியும் பொருட் கொள்வனவு இடம்பெறல்.
  • பாடசாலையின் பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்வதில் நிதிகளை வீண்விரயம் செய்தல்.
  • மாணவர்களின் அடைவுமட்ட அபிவிருத்திக்காக எனும் பெயரில் அச்சடிக்கப்படும்/ பிரதிசெய்யப்படும் செயலட்டைகள், மாதிரி வினாத்தாள்கள், குறிப்புக்கள் மாணவர்களை சென்றடையாமல் ஒரு இடத்தில் குவித்து வைக்கப்பட்டிருத்தல். அல்லது அவை மாணவருக்கு வழங்கப்பட்ட போதிலும் அவை தொடர்பான கருத்தரங்குகள், பகுப்பாய்வுகள், தொடர்விருத்தி நடவடிக்கைகள் செய்யப்படாதிருத்தல்.
  • நிதி மோசடிகளில் ஈடுபடல். (போலியான கொள்வனவுகள், சோடிக்கப்பட்ட சிட்டைகளின் மேல் கொடுப்பனவு செய்தல், விநியோகஸ்தர்களிடம் தரகுப்பணம் பெறல்)
  • வருடாந்த அமுலாக்கல் திட்டம், வரவு செலவுத்திட்டத்திற்கு மேலதிகமான செலவுகளை பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவின் தீர்மானமின்றி தன்னிச்சையாக செய்தல்.
  • சிறுசெலவு நிதி வசக்கட்டுக்கு (Petty Cash Imprest) மேலதிகமாக, உரிய பற்றுசீட்டுகளை வழங்காமலும், வங்கியில் வைப்பிலிடாமலும் பணமாக தனது கையிருப்பில் வைத்து செலவினங்களை மேற்கொள்ளல்.
  • பாடசாலை வரவு செலவு தொடர்பாக கட்டுப்பாட்டுக் கணக்கொன்றை பேணாதிருத்தலும், உரிய முறையில் நிதி ஆவணங்கள் பேணப்படாதிருத்தலும்.
  • அனுமதிக்கப்படாத கட்டணங்களை அறவிடுதல்.
  • வளங்களை வீண்விரயம் செய்தலும், கட்டுப்பாடின்றிய பாவனையும், இவ்வாறான நடவடிக்கைகளை தவிர்ப்பதற்கான திட்டங்களை மேற்கொள்ளாதிருத்தல்.
  • தனக்கு தனிப்பட்ட ரீதியில் அறிமுகமானவர்கள், பாடசாலைக்கு சமூகமளிக்கும் போது பாடசாலை நிதியில் விருந்துபசாரம் செய்தல்.
  • வரவு – செலவுகளில் வெளிப்படைத்தன்மை பேணாதிருத்தல்.
  • மாணவர் நலன்புரி விடயங்களுக்கான (பண்புசார் துறை -05) செலவினங்களை மேற்கொள்ளாதிருத்தல்.
  • பொய்யான சோடிக்கப்பட்ட கணக்கறிக்கைகளை கணக்காய்வு குழுவினருக்கு சமர்ப்பித்தல்.

 

 

பழைய மாணவர் சங்கம் (Past Pupils’ Association)

  • 1964/27 மற்றும் 2008/41 ஆகிய இலக்கங்களை கொண்ட சுற்றுநிருபங்கள் பழைய மாணவர் சங்கம் பற்றிய விடயங்கனை குறிப்பிடுகின்றன.
  • ஒரு பாடசாலையில் கல்விகற்ற அனைவரும் அப்பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தில் அங்கம் வகிக்க முடியும்.
  • வருடத்திற்கொரு முறை இச்சங்கத்திற்கான பொதுக்கூட்டம் நடைபெற வேண்டும்.
  • சுற்றுநிருபத்தின்படி அதிபர் இதன் பதவி வழித் தலைவர் ஆவார். ஆனால் அவ்வதிபர் அதே பாடசாலையின் பழைய மாணவராக இருக்க வேண்டிய எந்த அவசியமுமில்லை. அவ்வாறான நிபந்தனை இருப்பின் மகளிர் பாடசாலை ஒன்றில் எந்த ஒரு ஆண் அதிபரும் கடமையாற்ற முடியாத நிலை ஏற்படும். அவ்வாறே ஆண்கள் பாடசாலையில் எந்தவொரு பெண் அதிபரும் கடமையாற்ற முடியாது என்ற நிலை ஏற்படும்.
  • பழைய மாணவர் சங்கத்தின் சபையில் காப்பாளர், தலைவர், உபதலைவர், செயலாளர், உதவி அல்லது இணைச்செயலாளர், பொருளாளர், உதவி அல்லது இணைப்பொருளாளர் தெரிவு செய்யப்பட வேண்டியதுடன், பழைய மாணவர் சங்க அங்கத்தவர்களின் எண்ணிக்கைக்கேற்ப உத்தியோகத்தர்கள் ஐந்திற்கு குறையாமலும் பன்னிரெண்டிற்கு அதிகமாகாத எண்ணிக்கையிலும் தெரிவுசெய்யப்பட வேண்டும்.

 

பழைய மாணவர் சங்கம் தொடர்பான சமகாலப் பிரச்சினைகள்

  • வருடாந்தம் பொதுச்சங்க கூட்டங்கள் நடைபெறாதிருத்தல்.
  • அதிபரானவர் பதவிவழித் தலைவர் என்பதை மறுக்கும் விதமாக சங்க அங்கத்தவர்கள் செயற்படல்.
  • அதிபரானவர் அதே பாடசாலையின் பழைய மாணவராக இருந்தால் மாத்திரமே தலைவராக செயற்படமுடியும் என விவாதித்தல்.
  • தங்களது அதிகார எல்லையினை மீறி செயற்படுதல்.
  • 1964/27 சுற்று நிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சங்கங்களின் நோக்கங்கள். செயற்பாடுகளுக்கு அப்பால் பாடசாலை நிர்வாக நடவடிக்கைகளில் தலையிட்டு குழப்பம் ஏற்படுத்தல். (உதாரணமாக பாடசாலை அபிவிருத்திச்சங்க நிதி நடவடிக்கைகளில் ஈடுபட முனைதல்)
  • பெற்றோர் மற்றும் மாணவர்களிடம் நிதி அறவிடுதல்.
  • சமூகவலைத்தளங்களில் பல்வேறு பழைய மாணவர் சங்கங்கள் என பெயர் குறிப்பிட்டு முறையற்ற/உத்தியோகபூர்வமற்ற சங்கங்கள் அமைக்கப்பட்டு வருதல். அதனூடாக பல்வேறு நிதி அறவீடுகளும், மோசடிகளும் இடம்பெறுதல்.
    (ஒரு உண்மைச்சம்பவம் : முகநூலில் இனம்தெரியாத ஒருவரால் அமைக்கப்பட்ட ஒரு பழைய மாணவர் சங்க அமைப்பினூடாக போலியாக ஆரம்பிக்கப்பட்ட வங்கிக்கணக்கொன்றில், குறிப்பிட்ட பாடசாலைக்கு உபகரணங்கள் பெற்றுக்கொடுப்பதற்காக என்று கூறி பல இலட்ச ரூபாய்களை வைப்பிலிடச்செய்து அதனை அந்த நபர் கையாடியதுமல்லாமல் குறிப்பிட்ட முகநூல், வங்கிக்கணக்குகளையும் மூடிச் சென்றுவிட்டார்.)
  • பழைய மாணவர் சங்க வங்கிக் கணக்குகள் முறையாக பேணப்படாதிருத்தல்.
  • அதிபர் கோரும்போது உதவிகள் செய்ய மறுத்தல்.
  • உரிய நேரத்தில் சங்க உறுப்பினர்களை தொடர்புகொள்ள முடியாதிருத்தல்.
  • பாடசாலையின் நலனை விடுத்து, சுயலாபங்களை கருத்தில் கொண்டு செயற்படல்.
  • (உதாரணம்: ஒரு பிரபல பாடசாலையின் பழைய மாணவர் சங்க செயலாளராக பொறுப்பேற்ற ஒருவர், அதனை அரசியல் மேடை ஒன்றில் பெருமிதமாகக் கூறி, அதனை முன்னிறுத்தி தனக்காக வாக்களிக்குமாறு மக்களை வேண்டிக்கொண்டார். ஆனால், இவர் பாடசாலைக்கு ஒரு செயலாளராக எந்த ஒரு சேவையையோ, கடமையையோ செய்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாறாக தன்னை செயலாளராக நியமிக்கும்படி அதிபருக்கும், ஏனைய அங்கத்தவர்களுக்கும் நெருக்கடிகளை கொடுத்திருந்தார்.)

(இவ்வாக்கத்தை எழுத்தாளரின் அனுமதியின்றி எழுத்துக்களாகவோ வேறு முறையிலோ பிரதி பண்ணல் மற்றும் பிரசுரித்தல் காப்புரிமை மீறலாகும்.)

Previous Post

School Calendar 2023 and Holyday to be Amended

Next Post

Selected List and Registration for BA (External) Degree – University of Jaffna

Related Posts

பிள்ளைகளிடத்தில் கல்விச் சமூகமயமாக்கலை ஏற்படுத்துவதில் நவீன ஊடகங்களின் பங்களிப்பு

பிள்ளைகளிடத்தில் கல்விச் சமூகமயமாக்கலை ஏற்படுத்துவதில் நவீன ஊடகங்களின் பங்களிப்பு

September 23, 2023
ஒப்பீட்டுக் கல்வி: வரையறை, வியாபகம், நோக்கம், முக்கியத்துவம் மற்றும் பயன்கள்

ஒப்பீட்டுக் கல்வி: வரையறை, வியாபகம், நோக்கம், முக்கியத்துவம் மற்றும் பயன்கள்

September 23, 2023
School Health Promotion Month – “Suwa Diviyayi – Sathutu Sithayi” Program

School Health Promotion Month – “Suwa Diviyayi – Sathutu Sithayi” Program

September 22, 2023
Sri Lanka Teachers Educators Service Annual Transfer-2024

Sri Lanka Teachers Educators Service Annual Transfer-2024

September 18, 2023
Next Post
BA (External) Degree - University of Jaffna

Selected List and Registration for BA (External) Degree - University of Jaffna

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Page

WhatsApp Group

Telegram Group

Recent Posts

புதிய கல்விக்கொள்கையின் நிலைமை; அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவுக்கு மே மாதம் அறிவிக்க பணிப்புரை

March 27, 2021

வணிகக் கல்வி (Business Studies) வினாப்பத்திரங்களின் தொகுப்பு (56 பக்கங்கள்)

May 9, 2020
rf 1

Examination Postponed – BA 300 Level Examination

April 4, 2022
TeachMore.lk

Help Menu

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact US
  • Advertise with Us

Main Menu

  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB

Recent Posts

  • Seminar Series for 200 Level Examination in Bachelor of Arts – 2023
  • ADMISSION OF STUDENTS WITH FOREIGN QUALIFICATIONS ACADEMIC YEAR 2022/2023
  • Degree Programs Year 2023/2024 – Ocean University of Sri Lanka (OCUSL)

© 2022 Teachmore.lk

No Result
View All Result
  • Home
  • News
  • CIRCULARS
  • COURSES
  • Applications
  • EXAMS & RESULTS
  • கட்டுரைகள்
    • TEACHINGS
    • Modules for EB

© 2022 Teachmore.lk

error: Content is protected !!