Green Teacher ஜனாதிபதி வெளியிட்டு வைத்தார்
அகில இலங்கை டியுசன் விரிவுரையாளர்கள் சங்கத்தின் (All-Island Professional Lecturers’ Association) 9வது தேசிய மாநாடு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு நெலும் பொகுண மஹிந்த ராஜபக்ஷ திரையரங்கில் புதன்கிழமை (16) நடைபெற்றது.
அகில இலங்கை வாண்மைத்துவ விரிவுரையாளர்கள் சங்கம் (APLA) என்பது 2004 ஆம் ஆண்டு இலங்கை முழுவதிலும் உள்ள டியுசன் ஆசிரியர்கள் குழுவால் நிறுவப்பட்ட ஒரு அமைப்பாகும்.
இது பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் பாடசாலைகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் உட்பட பலதரப்பட்ட துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 3,500க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
APLA இன் 9வது தேசிய மாநாடு மற்றும் அதன் வருடாந்த பதவியேற்பாளர்கள் தெரிவு புதன்கிழமை (16) நடைபெற்றது.
இதன்போது ‘கிரீன் டீச்சர்’ Green Teacher இணையத்தளத்தை ஜனாதிபதி ராஜபக்ஷ ஆரம்பித்து வைத்ததுடன், நான்கு முன்னாள் தலைவர்கள் மற்றும் சங்கத்தின் உறுப்பினர் ஒருவருக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினார்.
சங்கத்தின் தலைவர் கலாநிதி அமித் புஸ்ஸல்ல மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னமொன்றை வழங்கி வைத்தனர். அமைச்சர் தினேஸ் குணவர்தன, இராஜாங்க அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர, சிசிர ஜயக்கொடி, சீத்தா அறம்பேபொல, பாராளுமன்ற உறுப்பினர்களான குணபால ரத்னசேகர, வசந்த யாப்பா பண்டார மற்றும் பலர் கலந்துகொண்டனர்.