அரச ஊழியர்கள் வெளிநாடு செல்லல் – புதிய சுற்றுநிருபம் இன்று அமைச்சரவைக்கு

அரச ஊழியர்கள் சேவை மூப்பு மற்றும் ஓய்வூதியம் என்பவற்றுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சம்பளமற்ற விடுமுறையில் வெளிநாடு செல்வதற்கான ஏற்பாடுகள் அடங்கிய சுற்றறிக்கையை வெளியிடுவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள்  மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் இன்று (13) அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படுகிறது.

இதன்படி, அரச உத்தியோகத்தர்கள் தமது பதவிக்காலத்தில் அதிகபட்சமாக ஐந்து வருடங்கள் வெளிநாடுகளுக்குச் சென்று வெளிநாட்டு நிறுவனமொன்றில் பணிபுரியும் சந்தர்ப்பம் வழங்கப்படும் .

இதனால் அதிகாரியின் சேவை மூப்பு மற்றும் ஓய்வூதியம் பாதிக்கப்படாது என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ஊதியத்துடன் அல்லது ஊதியம் இல்லாமல் வெளிநாடு சென்றுள்ள ஒருவர் ஊதியம் இல்லாத விடுமுறையை பெற விரும்பினால் நாடு திரும்பாமல் தேவையான அனுமதியைப் பெற முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் கீழ் விடுமுறை வழங்குவதற்கான அதிகாரம் அமைச்சின் செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அரச சேவைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த நடைமுறையை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் இந்த திட்டத்தின் வாயிலாக மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு அதிகளவு பங்களிப்பை வழங்க முடியும் என அரசாங்கம் நம்புவதாகவும் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடி நிலையில் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அதனை குறைக்கவும் அந்நியச் செலாவணியை அதிகரிக்கவும் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. (தினகரன்)

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!