விடுதியிலிருந்து வெளியேறுமாறு மாணவர்களுக்கு உத்தரவு!

கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கை நிறுவகத்தின் மாணவர் ஒன்றிய தலைவர் உள்ளிட்ட அனைத்து மாணவர்களையும் விடுதியில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த பல்கலைகழக மாணவர்களுக்கு நேற்று முதல் எதிர்வரும் 29ஆம் திகதிவரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விடுதியில் உள்ள மாணவர்களை வெளியேறுமாறு பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்திருந்த போதிலும், மாணவர்கள் அதனை பொருட்படுத்தாமல் செயற்பட்டதுடன், ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.

இறுதியாண்டு மாணவர் ஒருவர் நீக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களுக்கும் பல்கலைகழக நிர்வாகத்திற்கும் இடையே அண்மையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து விரிவுரையாளர்கள் சிலர் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைநெறி நிறுவகத்தின் கட்டடம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டு மாணவர்களால் கடந்த வாரம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

அத்துடன் விரிவுரையாளர் ஒருவரால் மாணவர்கள் இருவர் தாக்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தனர்.

பின்னர் குறித்த பிரச்சினைக்கு ஒரு வாரத்திற்குள் தீர்வு வழங்கப்படும் என நிர்வாகம் அறிவித்தமையை அடுத்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டிருந்தனர்.

இந்நிலையில் மாணவர்களை விடுதியிலிருந்து செல்லுமாறும் மறுஅறிவித்தல் வரை விடுமுறை வழங்கப்படுவதாகவும் நிர்வாகத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் இன்று காலை முதல் விடுதியின் நுழைவாயில் மூடப்பட்டு பிரச்சினைக்கு தீர்வு வழங்காமல் நிர்வாகம் செயற்படுவதாகவும் குற்றஞ்சாட்டிய மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வெளியில் சென்ற மாணவர்கள் மீண்டும் விடுதிக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருந்தாகவும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் எமது செய்தி சேவை கிழக்கு பல்கலைகழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் உதவி பணிப்பாளர் புளோறன்ஸ் பாரதி கெனடியை தொடர்பு கொண்டு வினவியது.

இதற்கு பதிலளித்த அவர், அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை குறித்து சுயாதீன விசாரணைகளை நடத்துவதற்கு முகாமைத்துவ சபையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

அதுவரையில் மாணவர்களுக்கு இடையிலான அமைதியின்மையை கட்டுப்படுத்துவதற்காக அவர்களுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் விடுதிகளில் உள்ள மாணவர்கள் வெளியேறுவதற்கு இன்று காலை வரை அவகாசம் வழங்கப்பட்டதாகவும் நிறுவகத்தின் பணிப்பாளர் தெரிவித்தார்.

எனினும் விடுதியில் உள்ள மாணவர்கள் வெளியில் உள்ள மாணவர்களையும் விடுதிக்கு அழைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும் அது தொடர்பில் காவல்துறைக்கு முறைப்பாடளிக்கப்பட்டிருந்தது.

ஏதேனும் குற்றச்செயல்கள் இடம்பெற வாய்ப்பிருப்பதாக கருதி மாணவர்களை பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றுவதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு காத்தான்குடி காவல்துறையினர் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் கோரியிருந்தனர்.

இதனை ஆராய்ந்த நீதிவான், 1979ஆம் ஆண்டின் 15 இலக்க குற்றவியல் நடைமுறைச் சட்டகோவையின் பிரிவு 106(1) கீழ், நீதிவான் மாணவர்களை வெளியேறுவதற்கான உத்தரவினை பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!