நாளை (6) முதல் தனியார் பஸ் சேவைகள் 50% ஆக குறைக்கப்படும் என பஸ் சங்கங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது நிலவும் டீசல் தட்டுப்பாட்டைக் கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுமென இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நீண்ட தூர பஸ்களின் சேவையில் இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும், சில நேரங்களில் பஸ்கள் பல நாட்கள் வரிசையில் நின்று எரிபொருளை பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளதாகவும் மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பஸ் சங்கத்தின் தலைவர் சரத் விஜித குமார தெரிவித்துள்ளார்.
மேலும், பயணிகள் பேருந்துகள் உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைகளுக்கு எரிபொருளை வழங்கும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சருடன் கலந்துரையாடியதன் பின்னர் வேலைத்திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் ஆர்.டபிள்யூ.ஆர். பிரேமசிறி தெரிவித்தார்.