தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பாலின சமத்துவம் கருத்தாடல் அரங்கம்
பாலின சமத்துவம் பற்றிய எண்ணக் கருக்களை அறிந்து கொள்வதனூடாகவே அது தொடர்பான விடயதானங்களை ஒழுங்குபடுத்துவதற்கும் நெறிப்படுத்துவதற்குமான இயலுமைகளை நோக்கிய நகர்வுகளை எட்ட முடியும். அம்பாறை மாவட்டத்திலுள்ள துறைசார் பயனாளிகளை அடைவுமட்டமாகக் கொண்டு இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பால்நிலை சமத்துவத்திற்கும் ஒப்புரவுக்குமான நிலையம் அண்மையில் ஏற்பாடு செய்த பால்நிலை சமத்துவம் தொடர்பான செயலமர்வு மிக முக்கியத்துவம் வாய்ந்த எண்ணக் கருக்களோடு நடந்தேறியுள்ளது.
தென்கிழக்குப் பல்கலைக்கழக பால்நிலை சமத்துவத்திற்கும் ஒப்புரவுக்குமான நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி மஸ்றூபா மஜீத் தலைமையில் கலை, கலாசார பீட கேட்போர் கூடத்தில் நிகழ்வு நடைபெற்றது.
இரு அமர்வுகளாக இடம்பெற்ற நிகழ்வில் உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன், முதன்மைப் பேச்சாளராக பெண்கள் கல்வி மற்றும் ஆய்வுக்கான நிலையத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி செல்வி திருச்சந்திரன் சூம் (zoom) தொழில்நுட்பத்தினூடாக கருத்துரை வழங்கினார்.
தென்கிழக்கு பல்கலைக்கழக தரநிர்ணய மைய பணிப்பாளர் பேராசிரியர் எம்.ஐ.எஸ்.சபீனா, வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எஸ்.சபீனா ஹசன், தொழில்நுட்பவியல் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி யூ.எல்.அப்துல் மஜீத் மற்றும் துறைத்தலைவர்கள், விரிவுரையாளர்கள், பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகள், மகளிர் சங்கங்களினது உறுப்பினர்கள் உட்பட பல்கலைக்கழக சமூகத்தினர் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
கற்றல், கற்பித்தல் மற்றும் ஆய்வு நடவடிக்கைகளுக்கும் மேலதிகமாக சமுதாய மேம்பாட்டுக்கும், அதன் வளர்ச்சிக்கும் உழைக்க வேண்டும் என்பதே இப்பல்கலைக்கழகத்தின் ஸ்தாபகர் மர்ஹும் கலாநிதி எம். எச்.எம்.அஷ்ரப்பின் கனவாகும். அதனை நனவாக்குவதற்காக தற்போதைய உபவேந்தர் அதிகமான சமூக விரிவாக்கல் சேவைகளை திட்டமிட்டங்களை செயற்படுத்தி வருகின்றார்.
அதன் ஓர் அங்கமாக பல்கலைக்கழகத்தினுள்ளும் அதனை அண்மித்த பிரதேசங்களிலும் அங்கம் வகிக்கின்ற மகளிர் அமைப்புக்களை வலுவூட்ட வேண்டியதன் தேவை உணரப்பட்டதன் விளைவாகவே துறைசார்ந்த பலரும் அழைக்கப்பட்டு இவ்வாறான முன்னெடுப்பக்கள் இடம்பெற்று வருகின்றன.
ஐக்கிய நாடுகள் தாபனத்தின் மகளிர் அமைப்பினால் 2022ஆம் ஆண்டிற்கான கருப்பொருள் ‘நிலைபேறான நாளைக்கான இன்றைய பாலின சமத்துவம்’ என்பதாகும். பால்நிலை சமத்துவம் இன்று மிகவும் முக்கியமான ஆய்வுப் பொருளாகவும், பேசுபொருளாகவும் மாறியுள்ளது. இதற்குக் காரணம் பால்நிலை சமத்துவமும், பெண்கள், மற்றும் சிறுமிகளின் மேம்பாடும் எனும் விடயமானது ஐக்கிய நாடுகள் சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள பதினேழு நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளில் ஐந்தாவது இலக்காக உள்ளமையே.
எனவே 2030 இல் பூகோளம் நிலைபேற்றை அடைய வேண்டுமாயின் பால்நிலை சமத்துவம் எய்தப்பட வேண்டும் என நிகழ்வில் தலைமையுரையாற்றியதென்கிழக்குப் பல்கலைக்கழக பால்நிலை சமத்துவத்திற்கும் ஒப்புரவுக்குமான நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி மஸ்றூபா மஜீத் தெரிவித்தார்.
பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த உப வேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், சமூக வளர்ச்சியில் பெண்களின் வகிபாகம் பற்றி சிறப்புரையாற்றினார். பெண்களை பலப்படுத்துவதன் மூலம் பௌதிக மற்றும் மானிட அபிவிருத்தியின் இலக்குகளை அடைந்து கொள்வதற்கான அர்ப்பணிப்புகளை சகல தரப்பினரும் மேற்கொள்ள வேண்டும். எமது சமூகத்தில் பெரும்பான்மையானவர்கள் பெண்களாக இருந்தாலும், பொருளாதார மற்றும் அரசியல் துறைகளில் முழுமையான பங்கேற்பு ஒப்பீட்டளவில் குறைவாகவே காணப்படுகிறது. அனைத்துத் துறைகளிலும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை கருத்திற் கொண்டு நமது நாட்டில் பாலின அடிப்படையிலான பாகுபாடு மற்றும் பெண்களின் உரிமை மீறல்கள் தொடர்பில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். அதற்கான ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட வேண்டிய தேவையுமுள்ளது என்றார் அவர்.
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 70 வீதமான மாணவர்கள் பெண்களாகவும், 28 வீதத்திற்கு மேற்பட்டவர்கள் பெண் ஊழியராகவும் கடைமையாற்றுகின்றனர். முதலாவது பெண் பிரதமர், மற்றும் பெண் ஜனாதிபதியை உருவாக்கிய பெருமை இலங்கை நாட்டுப் பெண்களுக்கு உரித்தாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
மகளிர் கல்வியும் ஆய்வுக்குமான நிலையத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கலாநிதி செல்வி திருச்சந்திரன் முதன்மை உரையாற்றினார்.
அதில் ஒவ்வொருவருடைய மனப்பாங்குகளில் மாற்றம் தேவைப்படுகின்ற அதேவேளை, பணிபுரியும் இடங்களிலும், வீட்டிலும் உள்ள ஆண்கள் முதலில் மாற வேண்டும்.பெண்களுடைய பணிகளை, வேலைகளை மதிக்க வேண்டும். குழந்தைப் பருவத்திலிருந்தே ஒவ்வொரு பிள்ளைகளையும் சகபாலின சகோதரியை அல்லது நண்பியை மதித்து நடக்கப் பழக்க வேண்டும் என அவர் கோடிட்டுக் காட்டினார்.
தென்கிழக்குப் பல்கலைக்கழக தர நிர்ணய மையப் பணிப்பாளர் பேராசிரியர் எம்.ஐ.எஸ். சபீனா, வர்த்த முகாமைத்துவ பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எஸ்.சபீனா ஹஸ்ஸன் ஆகியோரின் விசேட உரைகளும் இடம்பெற்றன.
நிகழ்வின் இரண்டாவது அமர்வாக குழு நிலை விவாதம் இடம்பெற்றது. இதில் பல்கலைக்கழகத்தின் ஆறு பீடங்களையும் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர்களான கலாநிதி எஸ்.எம் ஐயூப், கலாநிதி எம்.ஏ.சி. சல்பியா உம்மா, பொறியியலாளர் ஏ.எல்.எம். றிசாத், எம்.வை.மின்னதுல் சுஹீரா, ஏ.எப். சர்பானா, ஏ.எல்.றியாஸ் அகமட் ஆகியோர் பங்கேற்று பால்நிலை சமத்துவம் ஒரு பொதுவான நோக்கு, பால்நிலை சமத்துவமும் காலநிலை மாற்றமும், பெண்களின் புரியப்படாத பக்கங்கள், பால்நிலை சமத்துவம் ஒரு சமூகவியல் நோக்கு, பால்நிலை சமத்துவமும் நிலையான நுகர்வும், பால்நிலை சமத்துவமும் மகளிர் முயற்சியாண்மையும், தொழிநுட்பக் கல்வியும் நிலைபேறான அபிவிருத்தியும் ஆகிய தலைப்புக்களை விவாதங்களை முன்வைத்தனர்.
பல்நிலை சமத்துவத்தின் முக்கியத்துவத்தை சமூகமட்டங்களில் கொண்டு செல்வதற்கான உபாயங்களைப் பற்றியதான கருத்துப் பரிமாறல்களுடன் கருத்தரங்கம் நிறைவுற்றது.
ஜெஸ்மி எம்.மூஸா – தினகரன்