மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட சாதாரண தரப் பரீட்சார்த்திகளுக்கு சலுகை வழங்குங்கள்
இன்று (மே 31) உட்பட நாடளாவிய ரீதியில் நிலவும் கடும் மழை, வெள்ளம் மற்றும் போக்குவரத்து சிரமம் காரணமாக க.பொ.த. O/L பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் தொடர்பாகவும் அவர்களுக்கு சலுகை வழங்குமாறும் இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம் பரீட்சை ஆணையாளருக்கு கோரிக்கை முன்வைத்துள்ளது.
குறித்த சங்கம் பரீட்சைகள் ஆணையாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் தமிழாக்கம் வருமாறு
இன்று மே 31 ஆம் திகதி உட்பட நாடளாவிய ரீதியில் நிலவும் கடும் மழை, வெள்ளம் மற்றும் போக்குவரத்து பிரச்சினை காரணமாக க.பொ.த. O/L பரீட்சைக்குத் தோற்றும் கணிசமான எண்ணிக்கையிலான மாணவர்கள் உரிய பரீட்சை நிலையங்களுக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் சில நிலையங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமை தொடர்பில் உங்களின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றோம்.
02.இந்நிலையில் பரீட்சைகளை குறித்த நேரத்தில் ஆரம்பிக்க முடியாமை மற்றும் குறிப்பிட்ட நிலையங்களில் பரீட்சையை நடாத்த இயலாமையினால் பரீட்சை கடமைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பல பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர். மேலும், இன்று மழைக்காலம் என்பதால் அழகியல் பாட சித்திரப் பாடத்திற்கு நீர் வர்ணம் ஊடகம் பயன்படுத்தப்படுவதால், மாணவர்களின் ஓவியங்கள் காய்ந்து போகாததால் அவை அடுக்கப்பட்டதும் பார்சல்களினுள் சிதைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இவ்விடயம் தொடர்பில் சங்கம் உன்னிப்பாக கவனம் செலுத்தி முறையான வேலைத்திட்டத்தை வகுக்க வேண்டுமென பொறுப்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
மேலும், கடந்த இரண்டு வருடங்களாக நாட்டில் நிலவும் தொற்றுநோய் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார, அரசியல் காரணங்களால் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்காமல் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இவ்வருடம் பரீட்சைக்குத் தோற்றும் இம்மாணவர்களுக்கு மேலும் நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.
எனவே மாணவர்களுக்கு விசேட நியாயமான சந்தர்ப்பமும் அதற்கான நிவாரணமும் வழங்கப்பட வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்துகின்றது.