பரீட்சைக் கடமைக் கொடுப்பனவு அதிகரிக்கப்படாவிட்டால் ஆசிரியர்கள், அதிபர்கள் கடமைக்கு வரமாட்டார்கள்

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு உரிய கொடுப்பனவுகள் வழங்கப்படாதிருப்பின், எதிர்வரும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக் கடமைகளுக்கு போதிய எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சமூகமளிக்க மாட்டார்கள் என இலங்கை ஆசிரியர் சங்கம் (CTU) எச்சரித்துள்ளது.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கத் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ, “சா/த பரீட்சையை மே மாதம் நடத்த வேண்டும் என்று நாங்களும் கருதுகிறோம், ஆனால் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு பரீட்சை கடமைகளுக்காக வழங்கப்படும் கொடுப்பனவு அதிகரிக்கப்பட வேண்டும். ஒரு ஆசிரியருக்கான சராசரி ஊதியம் ரூ. 1,200 ரூபாவும் ஒரு அதிபருக்கு 2,800 ரூபாவுமே வழங்கப்படுகிறது. இது போதாது. கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படாவிட்டால், பரீட்சை கடமைகளுக்கு வருகை தரும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் எண்ணிக்கை நிச்சயம் குறையும்

பரீட்சை கடமைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தமது தனிப்பட்ட வாகனங்களையே இதற்காக பயன்படுத்துவதாகக் குறிப்பிட்ட அவர், வேகமாக அதிகரித்து வரும் எரிபொருள் விலைக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது. இவர்களது கொடுப்பனவு எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்குக் கூட போதுமானதாக இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

“வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. இவ்வாறான சிரமங்களுக்கு மத்தியில் ஆசிரியர்களும் அதிபர்களும் பரீட்சை கடமைகளில் ஈடுபட விரும்பவில்லை. மேலும், நாங்கள் பரீட்சை கடமைகளுக்குச் செல்ல வேண்டியதில்லை. இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படாவிட்டால், பரீட்சையின் போதும் ஆசிரியர்களும் அதிபர்களும் இந்தப் பணிகளில் இருந்து விலகிக் கொள்வார்கள்” என பெர்னாண்டோ தெரிவித்தார்.

அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன பரீட்சை மே 23 முதல் ஜூன் 1 வரை நடைபெறும் எனத் தெரிவித்தார். மே 21ஆம் தேதிக்குள் அனைத்து மாகாண கல்வி ஒருங்கிணைப்பு மற்றும் பிராந்திய இணைப்பு மையங்களுக்கும் பரீட்சை வினாத்தாள்கள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!