வெளி மாவட்ட ஆசிரியர்கள்: பயணத்திற்காக அதிகம் செலவிடுகின்றனர். விரல் பதிவு காரணமாக அதிக விடுமுறை பதிவாகிறது.

தற்போதைய நெருக்கடியில் வெளிமாவட்ட ஆசிரியர்கள் போக்குவரத்து மற்றும் உணவிற்காக தமது சம்பளத்தில் மூன்றில் இரண்டு பகுதியை செலவிட நேர்ந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் விசனம் தெரிவித்துள்ளது.

நேற்று திங்கட்கிழமை யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தன் உப தலைவர் தீபன்திலீசன்,

எரிபொருட்களை வரிசைகளில் நின்று பெறவேண்டிய நிலை காணப்படுகிறது. வரிசைகளில் நின்றாலும் எரிபொருள் கிடைக்குமா என்பது சந்தேகமே. வெளி மாவட்டங்களில் வேலை செய்யும் ஆசிரியர்கள் மூன்றில் இரண்டு பங்கை எரிபொருளுக்கும் உணவுத்தேவைக்கும் செலவிடுகின்றனர்.

தற்போதைய நெருக்கடியிலும் பாடசாலைக்கு விரல் அடையாள நடைமுறையை பின்பற்றிவருகின்றனர். இதனால் ஆசிரியர்களின் விடுமுறைகள் இழக்கப்படுகிறது. அரசாங்கம் விடுகின்ற தவறுகளுக்கு ஆசிரியர்களும் அதிபர்களும் பலிக்கடாவாக்கப்படுகின்றனர்.

அரசாங்கம் எரிபொருள் விடயத்துக்கு சரியான தீர்வை வழங்காமல் சமையல் எரிவாயு சிலிண்டர் விடயத்துக்கு சரியான தீரவை வழங்காமல் ஆசிரியர்கள் நேரத்துக்கு வரவேண்டும் எனக்கோருவதை ஏற்கமுடியாது என்றார்.

அத்தோடு, மதிய நேர உணவிற்காக ஒதுக்கப்பட்ட நிதியை கடந்த ஐந்து மாதங்களாக வழங்கப்படாத நிலையில் உணவிற்காக நிதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் அதிபர்கள் கடைகளில் கடன்களைப் பெற்றிருந்தபோதும் இதுவரை அந்த நிதி வழங்கப்படவில்லை என அவர் குற்றஞ்சாட்டினார்.

கல்வி அமைச்சு உத்தியோகபூர்வமாக மதிய நேர உணவை நிறுத்துமாறு அறிவிக்காத நிலையில் நிதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஐந்து ஆறு மாதங்களுக்கு மேலாக கடைகளிலே கடன்களைப் பெற்று உணவுகளை மாணவர்களுக்கு வழங்கியுள்ளார்கள். இதனால் அதிபர்கள் பல லட்சங்களை கடனாக பெற்று தற்போது நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். பாடசாலையில் வழங்குகின்ற சாப்பாட்டை நம்பி வருகின்ற மாணவர்கள் ஏராளமாக உள்ளனர். கிராமப்புறங்களில் இந்த நிலைமை அதிகமாக காணப்படுகின்றது.

பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கின்ற சூழலில் உணவைப் பெறக்கூட வழியில்லாத நிலையில் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்ற வறிய மாணவர்கள் துரதிர்ஷ்டவசமாக தங்கள் குடும்பத்தை பாதுகாப்பதற்காக உழைக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். என்றார்.

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!