கிழக்கு, வடமேல் மாகாணப் பாடசாலைகள் யாவும் நடைபெறும்

நாளை (20) திங்கட்கிழமை முதல் கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல பாடசாலைகளும் வழமைபோல நடைபெறும் என்று கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் நகுலேஸ்வரி புள்ளநாயகம் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சு, நகர்ப்புறப் பாடசாலைகளுக்கும் கிராமப்புற பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கும் அதிகாரத்தை மாகாணக் கல்வி அதிகாரிகளுக்கு வழங்கிய நிலையில், கிழக்கு மாகாண கல்வி அதிகாரிகள் இத்தீர்மானத்தை எடுத்துள்ளனர்

இன்று (19) மாலை கிழக்கு மாகாண கல்விச் செயலாளர் திசாநாயக்க மற்றும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் புள்ள நாயகம் ஆகியோர் கிழக்கிலுள்ள 17 வலயக்கல்விப் பணிப்பாளர்களோடும் “சூம்” செயலியூடாக இந்த கூட்டத்தை நடாத்தி மேற்படி தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூர பிரதேச பாடசாலைகளுக்கு செல்ல முடியாத ஆசிரியர்கள் வீட்டிலிருந்து ஒன்லைன் முறைமூலம் மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் எனவும் அதனை அதிபர்கள் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தூரப் பிரதேச பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்கள் எரிபொருள் பிரச்சினை காரணமாக செல்ல முடியாவிட்டால் அவர்கள் அருகில் இருக்கக்கூடிய பொருத்தமான பாடசாலைக்கு சென்று கல்வியை கற்கலாம் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வடமேல் மாகாணப் பாடசாலைகள் அனைத்தும் வழமை போல் நடைபெறும் என்று வடமேல் மாகாண கல்விப் பணப்பாளர் அறிவித்துள்ளார்.

பாடசாலைகளுக்கு செல்ல முடியாதவர்களுக்கு விசேட விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சன் செயலாளர் உறுதியளித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.