பட்டதாரிப் பயிலுனர்களுக்கு தரம்-3 நிரந்தர நியமனம்

 கிழக்கு மாகாணத்தில் பட்டதாரிப் பயிலுனர்களாக நியமனம் பெற்று, அரச அலுவலகங்களில் பயிற்சிக்காக இணைப்புச் செய்யப்பட்டிருந்த பட்டதாரிப் பயிலுனர்கள் தற்போது அரச அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை தரம் 3க்கு நிரந்தர நியமனம் பெற்றுள்ளனர்.

கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்) எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ.திசாநாயக்க இவர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கியுள்ளார். 2021.01.01ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் இவர்களது நியமனம் செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பட்டதாரி பயிலுனர் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தில் பயிற்சிக்காக இணைப்புச் செய்யப்பட்டிருந்த பட்டதாரிகள் எட்டுப் பேர், கிழக்கு மாகாண அரச அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை தரம் 3க்கு நியமனம் பெற்றுள்ளனர்.

நிரந்தர நியமனம் பெற்ற பட்டதாரிகளின் பணியைப் பாராட்டி, நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு வலயக் கல்வி அலுவலக கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்றது. பிரதிக் கல்விப் பணிப்பாளர் (நிர்வாகம்) ஏ.ஜி.பஸ்மில் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.றஹ்மத்துல்லாஹ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

இதன் போது, நிரந்தர நியமனம்பெற்ற பட்டதாரிகள் எம்.ஐ.எம்.சிறாஜ், ஜே.ஜெனிற்றா, எம்.துர்சாந்தினி, எஸ்.சுஜா, கே.தயாளினி, வி.நிஜா, ரி.ருக்ஷி, எஸ்.விஜிதினி ஆகியோர் பாராட்டுப் பெற்றனர். நிகழ்வில், பட்டதாரிகளின் கடந்த காலப் பணிகளை சிலாகித்து அதிதிகள் உரையாற்றினர்.

தற்போதைய கொவிட் 19அசாதாரண சூழ் நிலையை கருத்திற் கொண்டு அரச பணிப்புரை, சுகாதார வழிகாட்டுதல்களுக்கமைவாக மட்டுப்படுத்தப்பட்ட பங்குபற்றுனர்களுடன் இந்நிகழ்வு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் உரையாற்றிய வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.றஹ்மத்துல்லாஹ் “நாட்டை வளப்படுத்தும் நல்ல பணியில் பட்டதாரிகள் நிரந்தர நியமனத்தின் மூலம் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது. தாங்கள் வினைத்திறன், விளைதிறனுடன் பணியாற்றும் அதேவேளை, தொடர்ந்தும் கல்வி பெற்று, வாழ்வில் உயர்நிலையை அடைய வேண்டும். சிறிய அலுவலகப் பணிகளையேனும் செய்து கொள்வதற்கு சிரமப்படும் அல்லது வகுப்பறையில் மாணவர்களுக்கு கற்பித்தல் வழங்காது வெறுமனே காலங்கடத்தும் குறித்த சில பட்டதாரிகள் வாழும் தற்காலத்தில், இவ்வலுவலகத்தில் பயிற்சிக்காக இணைப்புச் செய்யப்பட்டிருந்த பட்டதாரிப் பயிலுனர்கள் இருவருட பயிற்சியின் போது, அலுவலகப் பணிகளை அல்லது விடயப் பொறுப்புக்களை, தாங்களாகவே கேட்டுப் பெற்றுக் கொண்டவர்கள் என்பது வரலாற்றுப் பதிவாகும்.

சமூகத்தில் பல பட்டதாரிகளைப் பார்த்திருக்கின்றோம். அவர்கள் பட்டம் பெற்றுள்ளனர். ஆனால், பொறுப்புதாரிகளாக இல்லை. இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். தானுண்டு தன்பாடுண்டு என்றிராமல், தங்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு, சந்தர்ப்பத்தை மிகச் சரியான முறையில் சிறப்பாகப் பயன்படுத்தி பணியில் வெற்றி கொள்ள வேண்டும்.

அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தில் பயிற்சிக்காக இணைப்புச் செய்யப்பட்டிருந்த பட்டதாரிகள் தங்களுக்குக் கிடைத்திருந்த வாய்ப்பினை மிகத் திறமையாகப் பயன்படுத்தி, தங்களது ஆற்றல், திறமையை வளர்த்துக் கொண்டவர்கள் என்றால் அதனை எவரும் மறுக்காது ஏற்றுக் கொள்வர். ஆகையால், புதிய அலுவலகப் பணிகளில் ஒருபோதும் சிரமமிருக்காது என்பது உறுதியாகும். பணியில் ஒருபோதும் சோரம் போகக்

கூடாது. சதாகாலமும் திறமையை வெளிப்படுத்தி, பணியில் மிளிர வேண்டும். நேர்சிந்தனையுடன், பொதுமக்களுக்கு நிறைவான சேவை வழங்கி வாழ்வில் உயர்வு பெற வேண்டும்” என்றார்.

பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள்(திட்டமிடல்) ஏ.எம்.ஹஸீன், (முகாமைத்துவம்) பீ.எம்.வை.அறபாத், கணக்காளர் கே.லிங்கேஸ்வரன், உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.அம்ஜத்கான், நிர்வாக உத்தியோகத்தர்  ஏ.எம்.றிம்ஸான், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள், அலுவலகப் பணியாளர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

SHARE the Knowledge

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!