அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் 2019 ஜனவரி முதல் ரூபா 2500 முதல் 10000 வரை அதிகரிக்க உள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
அரச ஊழியர்களின் ஆகக் குறைந்த சம்பளம் பெறுபவரின் அடிப்படைச் சம்பளம் 2500 ரூபாஅதிகரிக்கும் அதேவேளை உயர்ந்த சம்பளம் பெறுபவரின் அடிப்படைச் சம்பளம் ரூபா 10000 அதிகரிக்கப்படவுள்ளது.
2015 ஆம் ஆண்டு அரச ஊழியர்களின் சம்பளம் 10000 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டதோடு அக்கொடுப்பனவு 2016 ஆம் ஆண்டு முதல் 2020 வரை 5 கட்டங்களாக அடிப்படைச் சம்பளத்துடன் சேர்ப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதற்கேற்ப நான்காவது கட்டமாக 2019 ஆம் ஆண்டில் அடிப்படைச் சம்பள அதிகரிப்பு நிகழ வேண்டும். அவ்வதிகரிப்பே இவ்வருடம் முதல் 2500 முதல் 10000 வரை அடிப்படைச் சம்பளத்துடன் சேர்க்கப்படவுள்ளது.
அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பள அதிகரிப்பின் இறுதி கட்டம் 2020 ஆம் ஆண்டு ரூபா 2500 முதல் 10000 வரை அதிகரிக்கப்படவுள்ளது.
இதற்கேற்ப 2020 ஆம் ஆண்டு அரச ஊழியர்களில் ஆகக் குறைந்த சம்பளம் பெறுபரின் அடிப்படைச் சம்பளம் 35000 ரூபாவாக அமைந்திருக்கும் என நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
ஓய்வூதியக் கொடுப்பனவு மற்றும் அரச ஊழியர்களுக்கான கடன் வழங்கல் முதலானவற்றின் போதும் வேறு சில கொடுப்பனவுகளின் போதும் அடிப்படைச் சம்பளம் கருத்தில் கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.