ஒரே பாடசாலையில் எட்டு வருடங்களுக்கு அதிக காலம் சேவையாற்றிவரும் அதிபர்களின் இடமாற்றம் மற்றும் பல வருடங்களாக தேசிய பாடசாலைகள் பலவற்றில் காணப்படும் தரம் பெற்ற அதிபர்களை நியமிப்பதில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பாக நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி வினவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் போது கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், பல ஆண்டுகளான உரிய முறைகளைப் பின்னபற்றாது ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளமையினால் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன என்று விளக்கமளித்துள்ளார்.
தாம் புதிதாக தகுதி பெற்ற அதிபர்களை இணைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும், அதற்கான வர்த்தமானி வௌியிடப்பட்டு பதவி உயர்வு முறையாக வழங்கப்பட்டு, அதிபர் வெற்றிடம் காணப்படும் தேசிய பாடசாலைகளுக்கான நேர்முகப் பரீட்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
அதனோடு இணைந்ததாக எட்டு வருடங்களுக்கு மேற் ஒரு பாடசாலையில் கடமையாற்றும் அதிபர்களை இடமாற்றுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனினும் கடந்த 50 நாட்களில் நேர்முகத் தேர்வு மற்றும் அதனுடன் தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளும் தடைப்பட்டிருந்தன. பல அதிபர்கள் தமது இடமாற்றத்தை எதிர்த்து கல்வி அமைச்சுக்க பல்வேறு வழிவகைகளில் அழுத்தங்களைப் பிரயோகித்து வருவதாகவும் கல்வி அமைச்சர் விளக்கியுள்ளார்.
எவ்வாறேனும், கல்வி அமைச்சு எடுத்துள்ள தீர்மானத்தை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை உடன்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கை யொன்றில் குறிப்பிட்டுள்ளது.
எந்த அழுத்தங்களுககும் அடிபணியாது கொள்கை ரீதியான தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதன் முக்கியத்துவத்தை கல்வி அமைச்சர் விளக்கிய போது ஜனாதிபதி அது தொடர்பாக பாராட்டுக்களைத் தெரிவித்ததாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.