கல்வியியல் கல்லூரிகளில் ‘கற்பித்தலில் தேசிய டிப்ளோமா பாடநெறியை’ நிறைவு வெளியாகிய ஆசிரியர்களுக்கா நியமனங்கள் கடந்த 20 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கரமசிங்க தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வழங்கப்பட்டது.
எனினும் இந்நியமனங்கள் பல்வேறு சிக்கல் நிலைகளைத் தோற்றுவித்துள்ளதாக பல்வேறு தரப்புக்களிலிருந்து குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
குறித்த மாகாணத்தில் வெற்றிடம் இருக்கும் போது வேறு மாகாணங்களில் பல ஆசிரியர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
கிழக்கு மாகாண ஆசிரியர்கள் மத்திய மாகாணத்திற்கும் தென் மாகாணத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை மேல் மாகாண ஆசிரியர்கள் சிலர் மிகத் தூர மாகாணங்களுக்கும் நியமனிக்கப்பட்டுள்ளனர்.
அவ்வாறே தமக்கு அண்மைய பிரசேதப் பாடசாலையில் குறித்த பாடங்களுக்கு வெற்றிடம் காணப்பட்டும் கூட அதனைக் கருத்தில் கொள்ளாது தூரப் பிரதேச பாடசாலைகளுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. தெளிவான அணுகுமுறை ஒன்றைக் கடைப்பிடிக்காது நியமனம் பெறும் ஆசிரியர்கள் சிரமங்களை எதிர் கொள்ளவேண்டும் எனும் நோக்கில் பாடசாலை நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதோ என சந்தேகிக்கும் அளவிற்கு நிலமை மோசமடைந்துள்ளது.
நியமனம் கிடைக்கப் பெற்றதிலிருந்து புதிய ஆசிரியர்களும் அவர்களது பெற்றோரும் தமது நியமனப் பாடசாலையை மாற்றிக் கொள்வதற்காக இரவு பகலாக அலைந்து திரிகின்றனர்.
இவ்வாறான ஒழுங்கீனமான நியமனங்கள் தொடர்பாக ஆசிரியர்களுக்கான தொழிற்சங்கங்களும் அரசியல்வாதிகளும் தமது கண்டனங்களைத்தெரிவித்துள்ளன
தமிழர் ஆசிரியர் சங்கம் கிழக்கு மாகாண ஆசிரியர்கள் கிழக்கு மாகாணத்தில்வெற்றிடம் இருக்கும் போது ஏன்வேறு மாகாணங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர் எனக் கேள்வி எழுப்பியுள்ளது. கடந்த வருடமும் இவ்வாறான நிலைமை ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் கல்வி அமைச்சிற்குச் சென்று அங்கு சத்தியாக்கிரகம் இருந்து நியமனங்களை மாற்றியமைத்துக் கொண்டமையை தமிழர் ஆசிரியர் சங்கம் நினைவூட்டியுள்ளது.
தமிழர் ஆசிரியர் சங்கம் கிழக்கு மாகாண ஆசிரியர்கள் கிழக்கு மாகாணத்தில்வெற்றிடம் இருக்கும் போது ஏன்வேறு மாகாணங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர் எனக் கேள்வி எழுப்பியுள்ளது. கடந்த வருடமும் இவ்வாறான நிலைமை ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் கல்வி அமைச்சிற்குச் சென்று அங்கு சத்தியாக்கிரகம் இருந்து நியமனங்களை மாற்றியமைத்துக் கொண்டமையை தமிழர் ஆசிரியர் சங்கம் நினைவூட்டியுள்ளது.
இம்முறையற்ற நியமனங்கள் காரணமாக ஆசிரியர்களும் பெற்றோரும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றர் என சுட்டிக் காட்டியுள்ள தமிழர் ஆசிரியர் சங்கம் இந்நியமனங்களின் மூலம் ஏற்பட்டுள்ள சிக்கலைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சரையும் அதன் செயலாளரையும் கவனம் செலுத்துமாறு கோரியுள்ளது.
இதேநேரம் இந்நியமனங்கள் தொடர்பாக அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் கல்வி அமைச்சிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். ஆசிரியர்களை அவர்களுக்கு உரிய மாகாணங்களில் நியமிக்காது வேறு மாகாணங்கில் நியமித்துள்ளமை பல்வேறு அசௌகரியங்களைத்தோற்றுவித்துள்ளதாக சுட்டிக் காட்டியுள்ள அமைச்சர் இது குறித்து கல்வி அமைச்சர் உடனடிக் கவனம் செலுத்துமாறும் கோரியுள்ளார்.
இலங்கை ஆசிரியர் சங்கம் இந்நிலைமையை எந்தவித முறையான ஒழுங்குகளும் இன்றிய நியமனம் என குற்றம் சாட்டியுள்ளது. அதன் செயலாளர் ஜோஸப் ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் மிகத் தீவிரமான ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் பிரதேசங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் இது கல்வி அமைச்சு பொருத்தமான ஒழுங்குகளைப் பேணாது நியமனங்களை வழங்கியுள்ளதைக் காட்டுகிறது எனத் தெரிவித்துள்ளார்.
எனவே இந்நியமனங்கள் தொடர்பாக கவனம் செலுத்துமாறு ஜோஸப் ஸ்டாலின் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இம்மாதம் 23 ஆம் திகதி முதல் ஆசிரியர்கள் தமது கடமைகளைப் பெறுப்பேற்கவேண்டும் என நியமனக் கடிதம் தெரிவிக்கின்றது. எனினும் மிகத் தூரப் பிரதேசப் பாடசாலைகளுக்கு நியமனம் பெற்ற ஆசிரியர்கள் என்ன செய்வது எனத் தெரியாது குழம்பிப் போயுள்ளனர். கடமையைப் பொறுப்பேற்பதனை பிற்படுத்துவது ஆசிரியர்களுக்கு ஏதோ ஒருவகையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியாதாக அமைய முடியும்.
புதிய நியமனங்கள் மூலம் மிக திருப்தியான மற்றும் மகிழ்ச்சியான கற்பித்தலில் ஈடுபட தயாராக இருந்த ஆசிரியர்களின் எண்ணங்கள் மீது இந்நியமனங்கள் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்த வல்லன.
தமக்கு ஓரளவேனும் சௌகரியமான பயண ஒழுங்குகளை இலகுவாக மேற்கொள்ள முடியுமான பாடசாலைகள் கிடைக்க வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்ப்பதனை நிறைவேற்றுவது முடியாத காரிமல்ல.
கல்வி அமைச்சு மிக விரையாக இந்நியமனங்களின் ஒழுங்கீனங்களை நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் சார்பாக வேண்டிக்கொள்கிறோம்.