பொதுவாக எல்லோரிடமும் ஒரு நல்ல தொழிலை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் பலரும் அவ்வாறானதொரு தொழிலை பெற்றுக்கொள்ளும் போது அதனை எவ்வாறு வெற்றிகரமாக மாற்றிக் கொள்வது என்பதில் தவறு விட்டுவிடுகிறார்கள். விளைவாக செய்யும் தொழிலில் விருப்பமின்றி சலிப்போடு அந்த வேலையை தொடர்கிறார்கள். இதனால் குறிப்பிட்ட வேலை செய்பவர் மாத்திரமன்றி மொத்த நிறுவனத்தின் வினைத்திறனும் பாதிக்கப்படுகிறது.
தொழிலை வெற்றிகரமாக செய்வதற்கான எட்டு முக்கிய வழிகாட்டல்களை கீழே குறிப்பிடுகிறேன்.
1. தொழிலை மிகக்கவனமாக தெரிவு செய்யுங்கள்.
அடுத்தவர்கள் போற்றுவார்கள் என்பதற்கான அன்றி உங்களுடைய விருப்பத்திற்கேற்ப தொழிலை தெரிவு செய்யுங்கள்.
2. நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் நீங்களே பொறுப்புதாரியாக இருங்கள்.
வெற்றிகளுக்கான வாழ்த்துக்கள் எதிர்பார்ப்பது போலவே உங்கள் புறமிருந்து தவறுகள் நிகழும்போது அவற்றுக்கு நீங்கள் பொறுப்புக் கூறத் தயாராக இருங்கள்.
3. தொழில் வாழ்வில் ஏற்படும் சவால்களை உறுதியோடு தைரியமாக எதிர்கொள்ளுங்கள்.
நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் சவால்களும் எவ்வளவு கடுமையாக இருக்கிறதோ அந்த அளவுக்கு வெற்றிகரமான மனிதராக நீங்கள் உருவாகுவீர்கள்.
4. நேர்முக சிந்தனையோடும் மனநிலையோடும் எப்போதும் இருங்கள்.
நேர்முக மனதோடு விடயங்களை அணுகும்போது வெற்றிகரமான விளைவுகளை பெற்றுக்கொள்ள முடியும்.
5. உங்களுக்கான இலக்குகளை நீங்களே வரையறை செய்து கொள்ளுங்கள்.
இலக்குகளே உங்களை வெற்றியை நோக்கி எப்பொழுதும் தள்ளிக் கொண்டிருக்கும். உங்களுக்கான இலக்குகளை நீங்களே வரையறுத்துக் கொள்ளாவிட்டால் அடுத்தவர்களுடைய இலக்குகளுக்காக நீங்கள் இயங்கி கொண்டிருப்பீர்கள்.
6. நீங்கள் செய்யும் தொழில் சார்ந்து உங்களுடைய அறிவை மென்மேலும் வளர்த்துக் கொள்ளுங்கள்.
உங்கள் தொழில் துறை சார்ந்து உங்களை நீங்கள் அறிவு ரீதியாக வளர்த்துக் கொள்ளும் போதுதான் புதிய உலகின் வேலை மாற்றங்களுக்கு ஏற்ப உங்களுடைய தொழில் ஆற்றலை உங்களால் வளர்த்துக் கொள்ள முடியும்.
7. திறந்த மனதுடன் உங்களை நோக்கி கூறப்படும் பின்னூட்டங்களில் இருந்து கற்றுக் கொள்ளுங்கள்.
உங்களோடு வேலை செய்பவர்கள் உங்களை நோக்கி கூறும் பின்னூட்டங்களை கவனமாக செவிமடுங்கள். அவை சரியாக இருப்பின் அவற்றை மதிப்பீடு செய்து உங்களுடைய தொழில் வாழ்வில் நடைமுறைப் படுத்துங்கள். தொழில் வாழ்வின் வெற்றியில் பின்னூட்டங்களுக்கு ஒரு பெரும் பங்கு இருக்கிறது.
8. உங்கள் அனுபவங்களை அடுத்தவர்களோடு பகிர்ந்துகொள்வதன் மூலம் அடுத்தவர்களின் வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்யுங்கள்.
நீங்கள் எந்தத் துறையில் ஆழமான அறிவைப் பெற்றிருக்கிறீர்களா, உங்களுக்கு எந்தத் துறையில் ஆழ்ந்த அனுபவம் இருக்கிறதோ அந்த துறையின் அறிவையும் அனுபவத்தையும் உங்களுக்கு கீழே உள்ளவரகளோடும் உங்களோடு உள்ளவர்களோடும் பகிர்ந்து கொள்ளுங்கள். அடுத்த தலைமுறைக்கு உங்களுடைய அறிவையும் அனுபவத்தையும் கடத்துங்கள். இந்த பங்களிப்புதான் நாங்கள் எங்களுடைய சமூகத்துக்கும் நாட்டுக்கும் செய்கிற மிகப் பெரும் பங்களிப்பாக அமைந்திருக்கும்.