பாடசாலைகளில் உடல் ரீதியான தண்டனைகள் தடை செய்யப்படும் என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.
நாம் மனிதர்களாக முன்னேறிச் செல்வது அவசியம் அந்த வகையில் எமது பிள்ளைகள் மிலேச்சத்தனமானவர்களாக வளர்ந்து விடக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
‘அண்மைய பாடசாலை சிறந்த பாடசாலை’ என்ற கருத்திட்டத்தின் கீழ் 500 பாடசாலைகளை ஆரம்பித்து வைக்கும் செயற்றிட்டத்தில் இரத்தினபுரி கஹவத்தை ஆரம்ப பாடசாலையில் இரண்டு மாடிக்கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
சட்டக் கல்வியை பாடசாலைக் கல்வியில் உட்படுத்துவது தொடர்பில் அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.
அது தொடர்பான நடவடிக்கைகளை நாம்மேற்கொண்டு வருகின்றோம். ஆறு மற்றும் ஒன்பதாம் வகுப்புகளில் ஆரம்பித்து க. பொ. த. உயர் தரத்தில் இதனை ஒரு பகுதியாக நாம் உட்படுத்தவுள்ளோம்.
மக்கள் நாட்டிலுள்ள சட்டங்களை அறியாமல் உள்ளனர். அதனால்தான் தவறிழைக்கின்றனர். அதனால் சிறைச்சாலைகளே நிரம்புகின்றன.
கடந்த காலங்களில் நாட்டில் சட்டத்தை சிதைத்துள்ளனர். சட்டம் அரசியல்வாதிகளின் தேவைக்காகவே உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. கல்வியின் பெறுமதியை உணர்ந்ததால் தான்அரசாங்கம் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது.
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் இடமாற்றங்கள் கூட அரசியல் ரீதியாகவே கடந்த காலங்களில் வழங்கப்பட்டுள்ளன. அந்நிலை இன்று மாற்றப்பட்டுள்ளது. ஒரு போதும் தன்னிச்சையாக இடமாற்றம் இடம்பெறுவதில்லை.
தகுதியானவர்களுக்கே அது வழங்கப்படுகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
(Thinakaran)