பாடசாலை ஒன்றில் ஆசிரியர்களுடன் தொடர்பான நிதி சார்ந்த ஆவணங்கள்!
-சந்திரகுமார் SLPS
அரச பாடசாலைகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மக்களின் வரிப் பணத்தில் இருந்து சம்பளம் வழங்கப்படுகிறது. அரச சம்பளத்தை பெறும் ஆசிரியர்கள் அனைவரும் பின்வரும் நிதி சார்ந்த ஆவணங்களை சரியாக பேண வேண்டும்.ஏனெனில் ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளை சரியாக பேணாத போது, தேசிய கணக்காய்வு அதிகாரிகள்/மாகாண கணக்காய்வு அதிகாரிகள் பாடசாலையில் தணிக்கை/கணக்காய்வு செய்யும் போது இதனை கண்டு பிடித்தால், சம்பளத்தை மீளச் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.அத்தோடு நிரல்/மாகாண கல்வி அமைச்சினால் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு முகம் கொடுக்க நேரிடலாம்.
1) வருடாந்த வேலைத்திட்டம் தயாரித்து, அதிபரிடம் முன் அனுமதி பெற வேண்டும்.
2) வருடாந்த வேலைத்திட்டத்திற்கு அமைய ஒவ்வொரு வாரமும் செயற்பாட்டு பாடத்திட்டத்தை (Active Lesson Plan) தயாரித்து அதிபரிடம் முன் அனுமதி பெற வேண்டும்.
3). திட்டமிட்ட வருடாந்த வேலைத்திட்டத்தை குறித்த காலப் பகுதியில் பூர்த்தி செய்ய வேண்டும்.
4)செயற்பாட்டு பாடத்திட்டத்திற்கு அமைய, வகுப்பறை கற்பித்தலை பூர்த்தி செய்தவுடன் பாடப் பதிவேட்டில் சுருக்கமாக பதிவு செய்ய வேண்டும்.
5). கற்றல் கற்பித்தலில் இறுதியில் கணிப்பீட்டை மேற்கொண்டு, மாணவர்களின் பயிற்சிக் கொப்பியை மதிப்பீடு செய்ய வேண்டும்.
6) ஒவ்வொரு தவணையிலும் தவணைக்கான கணிப்பீடுகளை மதிப்பீடு செய்து புள்ளிப் பதிவேட்டில் புள்ளிகளை பதிவு செய்ய வேண்டும்.
7) ஆசிரியர் வரவுப் பதிவேட்டில் கையொப்பம் இட்டு கடமையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
8) லீவு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து முறையாக முன் அனுமதி பெற வேண்டும்.
9) குறுகிய கால லீவு சம்பவத் திரட்டுப் பதிவேட்டில் பதிவு செய்வதை உறுதிப் படுத்தல் வேண்டும்.
10) இலவச புகையிரத ஆணைச் சீட்டு தொடர்பான தகவல்களை சரியாக வழங்கி, புகையிரத ஆணைச் சீட்டைப் பெற வேண்டும்.
#சம்பவக்கற்கை.
பிரபல பாடசாலை ஒன்றில் உள்ளக கணக்காய்வு அதிகாரிகள் கணக்காய்வு செய்த போது, பின்வரும் நிதி சார்ந்த குறைபாடுகளை இனங் கண்டு, குறித்த ஆசிரியர்களுக்கு சம்பளம் மீள் அறவிடப்பட்டதோடு, அதிபருக்கு எதிராக கணக்காய்வு விசாரணை நடைபெற்று வருகிறது.
1.பாடப்பதிவுகள் உரியவாறு பூர்த்தி செய்யாமை.(மாணவர்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் கற்பித்த பாட உள்ளடக்கம்)
2.அதிபர் பாடப் பதிவேட்டை ஆய்வு செய்து கையொப்பம் இடாமை.
3.வருடாந்த வேலைத்திட்டம், வாராந்திர பாடக்குறிப்பு, பாடப் பதிவேட்டின் பதிவு மூன்றுக்கும் இடையே தொடர்பு இல்லாமை.
4.மாணவரின் பயிற்சிக் கொப்பி திருத்தாமை/மதிப்பீடு செய்யாமை.
5.விரல் அடையாள இயந்திரம் பதிவு நேரத்திற்கும்,வரவுப் பதிவேட்டில் கையொப்பம் இட்ட நேரத்திற்கும் இடையே பாரிய வித்தியாசம்.
6.லீவு விண்ணப்பம் இன்றி லீவு பெற்றுள்ளமை.
7.தவறான தகவல்களை வழங்கி புகையிரத ஆணைச் சீட்டு பெற்றமை.