இருபதாம் நூற்றாண்டில் முதலிருபது வருடப் பகுதியில் கல்வி முறைமையை சீர்திருத்த எடுத்துக்கொண்ட முயற்சிகளானது ஆட்சியாளர்களின் நிருவாக சேவைக்கான தேவைகளை பூர்த்தி செய்வதையே பிரதானமான நோக்கமாகக் கொண்டிருந்தது.
இருபதாம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுக் காலம் வரை சட்டம், மருத்துவம் தவிர்ந்த ஏனைய உயர்கல்வியை போதிப்பதற்கு ஏற்ற வாய்ப்புக்கள் வழங்கப்படவில்லை. பாடசாலை அதிகாரிகளினால் தெரிவு செய்யப்பட்ட சில மாணவர்களை வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களினால் நடாத்தப்படும் பரீட்சைகளுக்கு தயார்செய்வதும், பெரிய பிரித்தானியாவிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு சென்று கற்க புலமைப்பரிசில் வழங்குவதுமே கல்வித்துறையில் வழங்கப்பட்ட வாய்ப்புக்களாகும்.
இவ்வாய்ப்புக்களை பெறத் தகுதி வாய்ந்த மாணவர்களை பாடசாலை அதிகாரிகளே தேர்ந்தெடுத்தனர். கல்வியை விரிவுபடுத்தவும், பல்துறைப்படுத்தவும் இக்காலப்பகுதியில் எடுக்கப்பட்ட முயற்சிகள் யாவும் நாட்டின் கலாசார தேவைகள், நிலைமைகள் ஆகியவற்றையும், குழந்தைகளின் தனியாள் வேறுபாடுகளையும், ஆற்றல்களையும் கருத்திற்கொள்ளப்படாது திட்டமிடப்பட்டவையாக இருந்தன.
இக்காலப்பகுதில் எம்நாட்டை ஆண்டு வந்த பிரித்தானியர்கள் இந்நாட்டின் கல்வி முறையில் பாடசாலைகளின் எண்ணிக்கையை அதிகரித்து பாடசாலைத்திட்டத்தை விரிவாக்கி இந்நாட்டில் கல்வி முறையை அவர்கள் விசாலப்படுத்தியபோதும் பிரித்தானியரால் நியாத்துவம் என்னும் கல்வியின் மூலத்தத்துவத்தை எய்த முடியவில்லை.
பிரித்தானியர் காலத்தில் கல்வியில் இரட்டைத் தன்மை காணப்பட்டடது. உயர்ந்தோர் குழாமுக்கு உரிய வசதிகள் நிறைந்த ஆங்கிலக்கல்வி முறையும், பெரும்பாலான பிள்ளைகளுக்கு தேசிய மொழிகள் மூலமான வசதிகள் குறைந்த கல்வியும் அருகருகே இயங்கின. அத்துடன் நாட்டின் தென்மேல் பகுதியும், வடபகுதியும் கூடிய கல்வி வசதிகளைக் கொண்டிருந்தன. 1930 களில் அத்தகைய முரண்பட்ட கூறுகளைக்கொண்ட தேசியக் கல்வி மரபுரிமையே காணப்பட்டது.
1931 ஆம் ஆண்டு முதல் 1948 வரையுள்ள காலம் கல்வித்துறையில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்ட காலம் எனலாம். புத்துணர்ச்சி பெற்ற தேசிய உணர்ச்சியானது அக்காலத்தில் நிலவிய நாட்டின் அரசியல், சமூக பொருளாதார நிலையை மாற்றியமைக்க முற்பட்டது எனலாம். அத்துடன் இவ்வேகமானது நாட்டின் சமயம் சம்மந்தமாகவும், சமூகத்துறை சம்மந்தமாகவும் மாற்றம்செய்ய முற்பட்டது. அவ்வேளையில் மிக பரந்துபட்டதும் முற்றாக திருத்தியமைக்கப்பட்டதுமான நிலை கல்வித்துறையில் ஏற்பட்டது.
1931 ஆம் ஆண்டின் டொனமூர் யாப்பின்படி இலங்கைக்கு ஓரளவு பொறுப்புணர்ச்சி வழங்கப்பட்டது. புதிய யாப்பின் கீழ் நிறுவப்பட்ட அரசாங்க சபையிலே சர்வஜன வாக்களித்தலின் அடிப்படையில் பிரதேசவாரியாக தேர்தல் தொகுதிகளிலிருந்து பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டார்கள். அரசாங்க சபையில் அமைக்கப்பட்ட ஏழு நிருவாக சபையின் தலைவர்களாக நாட்டின் அமைச்சர்கள் இருந்தனர். அரசாங்கத்தின் ஒரு சில திணைக்களங்கள் தவிர ஏனைய திணைக்களங்கள் இவ் அமைச்சர்களின் பொறுப்பில் விடப்பட்டன. அவ்வாறு பொறுப்பில் விடப்பட்டுள்ளவற்றில் கல்வித்துறையும் ஒன்றாக இருந்தது. கல்வித்துறைக்குப் பொறுப்பான கல்வி நிருவாகத் தலைவராக கல்வியமைச்சர் செயற்பட்டார். இதன்படி கல்வியமைச்சருக்கு கல்வியின் பொருட்டு கொள்கைகள், விதிமுறைகள் உருவாக்கவும், கட்டுப்படுத்தவும், வழிகாட்டவும் அதிகாரமளிக்கப்பட்டிருந்தது.
இவ்வதிகாரக் கையளிப்பின் பின்னர் நாட்டின் தேசிய நலன்களைக் கருத்திற்கொண்டு கல்வி முறையை வலுப்படுத்துவதற்காக பல்வேறு ஆக்கபூர்வமான சட்டங்கள் உருவாக்கப்பட்டன.
பாடசாலை மாணவர்களுக்கு உடல் ரீதியான தண்டனைகள் வழங்குவது தொடர்பாக இல 1961/26 மற்றம் 1961.07.21 ஆம் திகதி கொண்ட சுற்றறிக்கை மற்றும் பாடசாலையின் ஒழுக்கத்தைப் பாதுகாப்பது தொடர்பாக வெளியிடப்பட்ட இல 2001/1 மற்றும் 2002.03.30 திகதி சுற்றறிக்கைகள் இரத்துச் செய்யப்பட்டு கல்வியமைச்சின் 2005/17 ஆம் இலக்க சுற்றறிக்கை அமுலில் உள்ளது.
அச்சுற்றறிக்கையில் உள்ள விடயங்கள் வருமாறு,
மனிதாபிமானமற்ற முறையில் தண்டனைகளை வழங்காது பாடசாலைகளில் ஒழுக்க விழுமியங்களை பேணிவருவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதுடன் பாடசாலைகளில் சிறுவர் துஷ்பிரயோகச் செயற்பாடுகள் இடம்பெறாத சூழலை ஏற்படுத்தவும் பொறுப்பாக இருக்கவேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நோக்கத்தை அடைந்து கொள்வதற்காக அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் அர்பணிப்பு செய்ய வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
சகல சந்தர்ப்பங்களிலும் மாணவர்களுக்கு உடல் ரீதியான தட்டணைகள் வழங்குவதில் இருந்து தவிர்த்துக் கொள்ளவேண்டும். அதிபர் ஆசிரியர்களினால் மாணவர்களுக்கிடையே ஒழுக்கமாற்றங்களை ஏற்படுத்தும் சிந்தனையுடனும் நோக்குடனும் செயற்பட்டு உடல் ரீதியான தண்டனைகள் வழங்கக்கூடாது. இங்கு தண்டனை வழங்குவதன்றி விடயத்தை விளக்குதல், முன்மாதிரி மற்றும் சிறந்த அமைப்புக்கள் மூலம் உள்ளக ரீதியாக சுயஒழுக்கத்தை ஏற்படுத்துவதற்காக பயிற்சியளிப்பதன் மூலம் நபர் ஒருவர் வாழ்வு பூராகவும் ஒழுக்க விழுமியங்கள் கொண்ட நபராக வாழ தேவைப்படும் பயிற்சிகளை பெறுவதென்பதனை மறந்துவிடக்கூடாது.
இலங்கையினால் கையொப்பமிடப்பட்டு முன்மொழியப்பட்ட (1989) ஐக்கிய நாடுகள் சிறுவர் உரிமைகள் தொடர்பான உடன்படிக்கை 28(2) வாசகத்தின் மூலம் பாடசாலைகளில் ஒழுக்க நிருவாகம் மாணவர்களின் மானிடக் கௌரவத்திற்கு அமைவான முறையில் மேற்கொள்வதை பொறுப்புடன் செயற்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
உடல் ரீதியான தண்டனை வழங்கப்படுவது சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மூலம் தெரியவந்திருப்பது பிள்ளைகளிடயே ஒழுக்கத்தை புகட்டும்போது வழங்கப்படும் தண்டனைகள் மூலம் எதிர்பார்த்த விளைவுகள் கிடைக்கவில்லை என்றும் இதற்கு மாறாக பின்வரும் பாதக விளைவுகள் ஏற்படலாம்.
1. உடல் ரீதியான தண்டனைகள் வழங்குவன் மூலம் திருட்டு, தாக்குதல்கள் போன்ற சமூகத்திற்கெதிரான பழக்கங்கள் மாணவர்களுக்கிடையே ஏற்படும்.
2.சிறுவர் துஷ்பிரயோகத்திற்கான சந்தர்ப்பம் அதிகரிக்கின்றமை.
3.மாணவர்களுக்கிடையே ஆத்திரமடையும் பழக்கங்கள் அதிகரிக்கும்.
4. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லது அதிபர்களுக்கிடையே தொடர்பு துண்டிக்கப்படல்.
5. திருப்தியற்ற மானிட உணர்வுகள் பிள்ளைகளிடம் ஏற்படல்.
6.பிள்ளைகளினால் சிறந்த சிந்தனைகளைக் கட்டியெழுப்பும் போது பாதகமான முறையில் வற்புறுத்தல்கள் ஏற்படல். மேலும் உடல் ரீதியான தண்டனைகளை வழங்காது ஒழுக்கத்தை பாதுகாக்க முடியாத பட்சத்தில் அதன்மூலம் சித்தரித்துக் காட்டப்படுவது ஆசிரியரின் திறமையற்ற தன்மையே ஆகும்.
உடல்ரீதியான தண்டனைகளுக்கு பதிலாக கீழ்க் குறிப்பிடப்படும் மாற்று நடவடிக்கைகளை பின்பற்ற முடியும்.
1. பாடசாலையிலுள்ள மாணவர்கள் ஒழுக்க விழுமியத்திற்கெதிரான நடவடிக்கைகளில் ஈடுபடவிருக்கும் சந்தர்ப்பங்களை குறைப்பதற்காக பாடசாலை செயற்பாடு மற்றும் இணைப்பாடவிதான நடவடிக்கைகளினை சிறந்த முறையில் ஒழுங்கு செய்தல்.
2.பாடசாலைகளின் ஒழுக்க விழுமியங்கள் தொடர்பாக சகலருக்கும் விளக்கமூட்டல் மற்றும் சிறந்த செயற்பாடுகளை மேற்கொள்வதுடன் தவறான செயற்பாடுகளுக்கு உதவாதிருத்தல் அல்லது அதனை அங்கிகரிக்காதிருத்தல்.
3. சிறந்த பழக்கங்களை ஏற்படுத்துவதற்கும் பாடசாலைகளில் ஒழுக்கத்தை பேணுவதற்கும் ஒழுக்கவிழுமிய செயற்பாடுகளின் முக்கியத்துவத்தை விளக்கமூட்டல், முன்மாதிரியாக மேற்கொள்ளல் மற்றும் மாணவர்களுக்கு சரியான வழிமுறைகளை காண்பித்தல்.
4. மாணவர்கள் தவயிழைக்கும் வேளையில் அவரால் இழைக்கப்பட்ட தவறை விளக்கமூட்டல்.
5.மோசமான முறையில் ஒழுக்கத்திற்கெதிரான செயற்பாடுகளை மேற்கொண்ட வேளையிலும் உடல் மற்றும் உளரீதியான தண்டனைகளை வழங்குவதற்கு பதிலாக எச்சரிக்கை செய்தல் மற்றும் பெற்றோர் மற்றும் பாதுகாவலருக்கு அறிவித்தல்.
6. தவறிழைத்த மாணவன் அனுபவிக்கும் வரப்பிரசாதங்களை வரையறுத்தல் அல்லது இடைநிறுத்தல்.
உ-ம் : வகுப்புத் தலைவர், மாணவர்த் தலைவர் போன்ற பதவிகளை இல்லாமற் செய்தல்.
7. பாரிய ஒழுக்கத்திற்கெதிரான செயற்பாடுகளை மேற்கொண்ட வேளையில் பெற்றோருக்கு அறிவித்து இரண்டு வாரத்திற்கு அதிகரிக்காத வகுப்புத் தடை விதித்தல்.
மேற்கூறப்பட்ட 6 மற்றும் 7 கீழ் செயற்படும் போது அதிபரினால் பாடசாலை ஒழுக்க சபையை அழைத்து அதன் மூலம் மேற்கொள்ளப்படும் விசாரணைக்கு பின்னர் எடுக்கப்படும் தீர்மானத்தின் கீழ் மாத்திரம் அவ்வாறு செயற்பட வேண்டும்.
8. பாடசாலை ஒழுக்க சபையினால் மிக மோசமான ஒழுக்கத்திற்கெதிரான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தீர்மானித்த வேளையில் அச்செயற்பாட்டின் தன்மை மற்றும் தீவிரத்தன்மைக்கமையை வலயக்கல்வி பணிப்பாளர் அல்லது மாகாணக்கல்விப் பணிப்பாளரின் முன் அங்கிகாரத்துடன் இரண்டு வாரத்திற்கு மேற்படாத காலத்திற்குள் வகுப்புத்தடை அல்லது பிள்ளை வேறொரு பாடசாலைக்கு கல்வி கற்ற ஆண்டிற்கே மாற்றம் செய்தல்.
மாணவர்கள் தொடர்பில் நடவடிக்கைகளை எடுக்கும் போது அது தொடர்பாக ஆவண ரீதியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டியதுடன் அவற்றைக் கவனமாக கல்லூரியில் வைத்திருக்கவும் வேண்டும்.
மேலும் 7 மற்றும் 8 இன் செயற்பாடுகளின் போது அதிபரினால் இது தொடர்பாக சம்பவத்திரட்டில் குறிப்பொன்றும் பேண வேண்டும். மேற்கூறப்பட்டவாறு மாணவர்களது சிறந்த செயற்பாடுகளை ஏற்படுத்தும் நோக்கில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் கல்லூரியில் பிரதான கூட்டம் அல்லது அறிவித்தல் பலகையில் பாடசாலையினுள் பகிரங்கப்படுத்தப் பொறுப்பாக இருக்க வேண்டும்.
பாடசாலையில் ஒழுக்கத்தைப் பேணும் நோக்கிலாக இருந்தாலும் மாணவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டால் கீழ்க் குறிப்பிடப்பட்டவாறு சட்ட நடவடிக்கைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்படும்.
1. இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் III அத்தியாயம் II ஆவது வாசகம் மற்றும் XVI வது அத்தியாயம் 126 வது பிரிவிற்கமைய அடிப்படை உரிமை மீறும் வழக்குத்தாக்கல் செய்யமுடியும்.
2. 1995 இல் 22 கொண்ட குற்றவியல் சட்டத்தின் மூலம் (மறுசீரமைக்கப்பட்ட) சட்டத்தின் 3 வது வாசகம் மற்றும் பிரதான சாசனத்தின் 308 (அ) பிரிவின் கீழ் பிள்ளைகள் மோசமான முறையில் தண்டனைகளுக்கு உட்படுத்திய தவறின் கீழ் வழக்குத்தாக்கல் செய்ய முடியும்.
3. கல்வியமைச்சின் பொறுப்பாளரினால் நடாத்தப்படும் ஒழுக்காற்று விசாரணைகளில் உடல்ரீதியான தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டால் தாபன விதிக் கோவையின் II ஆவது பிரிவின் கீழ் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்க முடியும்.
சிறுவர் துஷ்பிரயோகம்
சிறுபராயத்திற்கு பொருந்தாத பல்வேறுதரப்பட்ட முறையற்ற நடவடிக்கைகளுக்காக பிள்ளைகளை ஈடுபடுத்துவது சிறுவர் துஷ்பிரயோகமாக கருதமுடியும். இலங்கையில் பல ஆண்டு காலம் முதல் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்ததுள்ளதுடன் தற்போது பல்வேறுபட்ட முறையில் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் நாளுக்கு நாள் இடம்பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.
பாடசாலைக்குள் சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் இடம்பெறுவது கவலைக்குரிய விடயமாகும். பாடசாலையில் பிள்ளையின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டிய அதிபர், ஆசிரியர்கள் மற்றும் ஏனையோர் மூலம் பிள்ளைகள் முறையற்ற ரீதியில் நடாத்தப்படுவது கவலைக்குரிய விடயமாகும்.
சிறுவர் துஷ்பிரயோகத்தில் பாலியல் வற்புறுத்தலுக்கு மாணவன் அல்லது மாணவி உட்படுத்தப்படுவது பாரிய குற்றமாகும்.
இலங்கையின் 80 களின் நடுப்பகுதில் சிறுவர் மற்றும் உடல் ரீதியான துஷ்பிரயோகம் குற்றமென்றும் 90 ஆம் தசாப்த ஆரம்பப் பகுதியில் சிறுவர் பாலியல் உறவு பாரிய தண்டனைக்குரிய குற்றமென்றும் இனங்காணப்பட்டது.
இதனால் பாடசாலைகளில் மாணவன் அல்லது மாணவிகள் ஏதாவதொரு முறையில் துஷ்பிரயோகத்திற்கு இலக்காவதை தடுப்பது அதிபரினதும் ஆசிரியரினதும் பொறுப்பாகும்.
பாடசாலையில் மாணவன் அல்லது மாணவி பாலியல் அல்லது வேறு முறையிலான துஷ்பிரயோகத்திற்கு உட்பட்டால் அது உண்மையானது என ஊர்ஜிதப்படுத்தப்படும் பட்சத்தில் பாரிய தண்டனைகளுக்கு இலக்காக வேண்டியேற்படும்.
பாடசாலைகளில் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் உட்பட பாடசாலைக்குள் மேற்கொள்ளப்படும் சகல நடவடிக்கைகளுக்கும் தடை ஏற்படக்கூடியவாறு கல்லூரியில் கல்வி மற்றும் கல்வி சாரா பணியாளர் சபை அங்கத்தவர்களினால் ஒழுக்கத்திற்கெதிரான செயற்பாடுகளுக்கு மாணவர்களை தூண்ட ஒருபோதும் நடவடிக்கை எடுக்கக் கூடாது. மாணவர்கள் ஒழுக்கத்திற்கெதிரான செயற்பாடுகளுக்கு தூண்டுவது அவ்வாறவர்களினால் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் சமர்பிக்கப்படும் வேளையில் அக்குற்றம் ஊர்ஜிதப்படுத்தப்பட்டால் மாணவரை தூண்டப்பட்டது தொடர்பாக உரிய குழு அல்லது நபருக்கு தீவிர தண்டனை வழங்க முடியும்.
சிறுவர் இன்னல்கள் தொடர்பிலான சகல புலனாய்வு மற்றும் குற்றவியல் வழக்கு நடவடிக்கைகளின் மேற்பார்வை செய்தல் உட்பட விசேட அதிகாரங்கள் 1998 இல் 50 கொண்ட பாராளுமன்ற சட்டத்தின் மூலம் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை நிறுவப்பட்டுள்ளது. அவ்வதிகார சபையினால் தமது அதிகாரங்கள் அமுல்படுத்தும் போது மாகாணக் கல்விப் பணிப்பாளர் அல்லது வலயக்கல்விப் பணிப்பாளர் அல்லது பாடசாலை பொறுப்பாளரிடம் ஏதாவதொரு உதவி கேட்கப்படும் போது அதற்காகத் தேவைப்படும் உதவியை அவ்வதிகார சபைக்கு வழங்குதல் வேண்டும்.
(ஆயதனம்)