எம்.ரிஸான் ஸெய்ன்.
மாணவர்களை அதிக மன அழுத்தத்துக்குள் வாழவைக்கும் கல்வி முறை, அவர்களை இயல்பாக வாழவிடவில்லை. பாடசாலையின் உள்ளகக் கல்வி முறை சம்பிரதாயங்கள்,வித்தியாசமான பாடச் சுமைகள், “படி படி “என்று வீட்டுக்குள் எதிரொலிக்கும் வன்முறைகள், டியூசன் கலாசார ஆதிக்கங்கள், பரீட்சைகள் என்ற பலி பீடங்கள் போன்றன பிள்ளைகளை அவர்களது இயல்பு நிலையில் வைக்க இடமளிக்கவில்லை.அவர்களது சந்தோஷத்தை அவை பறித்ததாகவே அவர்கள் கருதுகின்றனர்.
இவை இல்லாது ஏது கல்வி என்பது பற்றியும் கல்விக் கொள்கை நியாய தர்மங்கள் பற்றியும் இங்கு அலசி ஆராய முடியாது. சமகால கல்வி நிலையையும் அதனால் ஏற்படும் உளரீதியான மாற்றங்களின் எதிர்வினையையும் மையப்படுத்தி மட்டுமே இங்கு சிலவற்றை எழுதுகின்றேன்.
இவ்வாறான கல்வி முறை பொறிக்குள் அகப்பட்டுத் தவிக்கும் குழந்தைகள் தங்களது மனக் கிடக்கைகளை பெற்றோரிடமோ ஆசிரியர்களிடமோ வெளியிட முடியாமல் அவஸ்தைப்படுகின்றனர். மனம் விட்டுப் பேசும் ஒரு தளம் அவர்களுக்கில்லை. அடக்குமுறைகளுக்குப் பயந்து,வாய் மூடி மெளனிகளாக அவர்கள் உள்ளனர். அவற்றின் தாக்கங்களை அவர்களது முரட்டுத்தனங்களிலும் வெறுப்பிலும் ஒழுங்கீனங்களிலும் நிறையவே எமக்கு காணலாம்.
இவ்வகையில் கல்வி முறை சார் அடக்கு முறையினால் ஏற்பட்ட மன அழுத்தங்களின் தாக்கத்தால் கல்விப் பொதுத்தர சாதரண தரப் பரீட்சை எட்மிஷனில் கையொப்பமிட்டதற்குப் பிறகு, பல மாணவர்கள் பாடசாலை சொத்துக்கும் தளபாடங்களுக்கும் சேதம் விளைவிக்கும் அநாகரிக சூழ்நிலைகளை பல பாடசாலைகளில் காணலாம். இதில் குறிப்பிட்ட தொகை மாணவர்கள் ஈடுபட்டாலும் ஏனைய மாணவர்கள் அதற்கு ஆதரவாக நடக்கிறார்கள். சென்ற வருடமும் பதுளை கல்வி வலய அரச பாடசாலைகளிலும் அந்நிலை ஏற்பட்டதை நான் அறிவேன்.
சாதாரண தரப் பரீட்சைக்கான அனுமதி விண்ணப்பத்தில் கையொப்பமிட்டதன் பின்பு பாடசாலைகளிலிருந்து மாணாக்கரை விலக்க முடியாது. இந் நிலையில் எவ்வித ஒழுக்காற்று நடவடிக்கையையும் எடுக்க முடியாமல் பாடசாலை நிருவாகம் கைகட்டி நிற்க வேண்டியுள்ளது.
பரீட்சை முடிந்த பின்பும் சில மாணவர்கள் ஒழுங்கீனமாக நடப்பது பல இடங்களில் தொடர்ந்த வண்ணமே உள்ளன. அண்மையில் கூட சாதாரண தர பரீட்சை நடந்து முடிந்தததோடு தங்களது பாடசாலையின் CCTV கெமராவை சேதப்படுத்தி விட்டு அப் பாடசாலையின் மாணவர்கள் சென்றுள்ளார்கள்.
பாடாசாலையில் பல ஆசிரியர்களின் மாற்றாந்தாய் மனப் போக்குகளாலும் மாணவர் நலன் அக்கறையில் மாணவர்களை அணுகாததாலும் கற்பித்தலில் கவராததாலும் பல ஆசிரியர்கள் முன்மாதிரியாகச் செயற்படாததாலும் தங்களது தனிப்பட்ட சவால்களுக்கு முகம் கொடுக்க அவர்கள் உறுதுணையாக நிற்காததாலும் எதிர்பார்க்கும் அன்பும் ஆதரவும் பல ஆசிரியர்களிடமிருந்து கிடைக்காததாலும் மாணவர்கள் ஏற்கனவே மனப் பாதிப்புகளுக்கு உட்பட்டிருப்பர்.
பெற்றோர்கள் டியூசன்களுக்கு வற்புறுத்தி அனுப்புவதும் படிக்கச் சொல்லி நச்சரிப்பதும் அவர்களை நான்கு சுவருக்குள் பதுக்கல் சரக்காய் வைக்கப் பார்ப்பதும் மாணவர்களை கூடுதலாகவே மன அழுத்தங்களுக்கு உட்படுத்தி விட்டுள்ளது.
மாணாவர்களைப் புரிந்து, அவர்களை பல்வகையிலும் உற்சாகப்படுத்துகின்ற மேம்பாட்டு திட்டங்களையோ அவர்களது எழுச்சிக்கான சமூகவியல் தளங்களையோ சமூக நிறுவனங்களும் அமைத்துக் கொடுக்கவுமில்லை.
எனவே, இவ்வாறு குடும்பத்தில்,பாடசாலையில், சமூகத்தில் ஏற்படும் விரக்தி நிலை, அவர்களுக்கு மன அழுத்தத்தை தந்தனால்,அவ்வாறான சமூக நிறுவன கட்டமைப்பின் மீது வெறுப்பை ,ஆத்திரத்தை, கோபத்தை செயல்களால் அவர்கள் உமிழ்கின்றனர். அது அவர்களில் ஒழுங்கீனத்தை,நெறிபிறழ்வை ஏற்படுவதோடு, சமூக களங்கத்தையும் தோற்றுவித்து விடுகிறது.
மாணவர்கள் விரும்பி, ஆசையோடு கற்கும் கல்விக் கொள்கை, மனம் கவர் கற்பித்தல் முறை, உளவியல் ரீதியான வழிகாட்டல்கள் போன்றன அமையும் போது இயல்பாகவே அவர்கள் கற்றலில் ஈடுபட முனைவார்கள். அவர்களது இயல்பு நிலைக்கு முரணாக அல்லது சந்தோஷத்தைத் தராத முறைமைகளால் அவர்களை உள்வாங்க நினைப்பதாலேயே பல ஆரோக்கியமற்ற விடயங்கள் நிகழுகின்றன.
மாணவர்களில் ஒழுங்கீனங்கள் ஏற்பட்டவுடன் பதறுவதை விட வழிகாட்டல்கள், நெறிப்படுத்தல்கள் முறையாக,உள்ளத்தை கவரும் விதத்தில், ஆரம்பம் தொட்டே மேற்கொள்ளப்படல் வேண்டும். அவர்களது மனம் கோணும் இயந்திர முறையை ஏற்படுத்திவிட்டு, அவ்வாறு அவர்கள் நடக்கக் கூடாது என்றும் அது எம்மை கவலை கொள்ளச் செய்துவிடும் என்றும் புலம்புவது முறையல்ல.
“பாடசாலைப் பிள்ளைகள் அப்படித்தான்.. அவர்களை தடுக்கக் கூடாது… பெரிதானால் கதைக்க, அது பல ஞாபகங்களை கொண்டு வந்து தரும்” என்றால், அனைத்து வாசல்களையும் அவர்களுக்கு திறந்துவிட வேண்டி வரும். ஆசிரியர்களுக்கு அடித்தல், முறைகேடான பாலியல் நடத்தைகள், மதுபானம்,போதைவஸ்துப் பாவனை என்று நீளும் பட்டியலுக்கு அனுமதி சான்றிதழை அவர்களுக்கு வழங்க வேண்டி வரும். இவ்வாறான பல சுதந்திரங்களை அனுமதித்த காரணத்தினாலேயே மேற்கத்திய கலாசாரம் ஆணுறைகளை வழங்கும் இழி நிலைக்கு வந்துவிட்டது.
கல்வி என்பது தொழில்துறை இயந்திரங்களை உருவாக்கும் தொழிற்சாலையல்ல. ஆன்மிக, பண்பாட்டு, ஒழுக்க நெறிகளில் மற்றும் பொருளாதார, கலாசார ,சமூக, அரசியல் துறைகளில் மேம்பாட்டை ஏற்படுத்துவது கல்வியின் முக்கிய பயன்களாகக் கொள்ளப்படுவதையும் நாம் புரிந்து கொள்ளுதல் வேண்டும்.