மாணவர்களின் பய உணர்வும் ஆசிரியர்களின் முகாமைத்துவ வகிபாகமும்
இன்றைய சிக்கல்மிகு சமுதாயத்தில் மனிதன் முகங்கொடுக்கும் சவால்கள் ஏராளம் அவற்றைச் சமாளிப்பதற்கு அல்லது அவற்றை வெற்றிகொள்வதற்கு எம்மால் முடியாத சந்தர்ப்பங்களில் பயம் எம்மைத் தொற்றிக்கொள்கின்றது. சுனாமி, சூறாவளி, வெள்ளம், மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும்போதும் அல்லது யுத்தம், ஆயுத மோதல்கள், பாலியல் வன்புணர்வுகள் என்பன போன்ற மனிதனால் ஏற்படுத்தப்படும் விபத்துக்களின்போதும் மன வியாகூலத்துக்குட்படும் ஒருவருக்கு முதலில் தோன்றும் மனவெழுச்சி பயமாகும்.
இச் சந்தர்ப்பத்தில் ஒருவர் அப் பயத்தினை அல்லது பயத்தால் ஏற்படும் பாதுகாப்பற்ற தன்மையினைச் சமாளிப்பதற்காக ஒன்றில் அதற்கெதிராகப் போராடுவார் அல்லது அதைக் கடந்து செல்வார். இவ்வாறான சம்பவங்கள் நனவிலியில் ஒடுக்கப்பட்டுத் திரிபு அடைந்து அடிக்கடி காலத்துக்குக் காலம் வெளிப்படும். இவ்வாறான சம்பவங்கள் நேர்ந்து பல மாதங்களுக்கு அல்லது வருடங்களுக்குப் பின்புங்கூட பயம் தோன்றலாம்.
மனவெழுச்சிகள் அதிகளவு தொழிற்படும்போது தேவையற்றதும் பொருத்தமற்றதுமான விநோத உடலியக்கங்கள் தோற்றம் பெறும் வாய்ப்புக்கள் அதிகரிக்கும் மனவெழுச்சிகள் கிளர்ந்தெழும்போது இதற்கேற்ப உடல் நெகிழ்ச்சி கொள்ளாது இறுகிய நிலையில் இருக்கும்போது பிறழ்வு நடத்தைகள் மேலும் சிக்கலான கட்டத்தை நோக்கி நகரும் வகுப்பறையில் பயத்தினைக் கட்டுப்படுத்துவதினூடாக மாணவர்களின் சமநிலை ஆளுமையை விருத்தி செய்தல் வேண்டும்.
பிளட்சிற் (Plutchiet,1980). என்பவர் மனவெழுச்சியை ஆரம்ப மனவெழுச்சி இரண்டாம் நிலை மனவெழுச்சி என இரண்டாக வகுத்துள்ளார். அதிலும் ஆரம்ப மனவெழுச்சியை 8 வகைகளுக்குட்படுத்தியுள்ளார். .
ஆரம்ப மனவெழுச்சி தனியாள் விருத்தியில் முதல் கட்டத்திலேயே அனுபவிக்கப்படும் ஒன்றாகும் உதாரணமாக மகிழ்ச்சி என்னும் மனவெழுச்சி எம்முள் ஏற்படும்போது எமது நடத்தையில் மாற்றம் ஏற்படும். அதனை நாம் பல்வேறு வழிகளில் வெளிப்படுத்துவோம் சிலர் பிறரது முதுகில் ஓங்கி அடித்து மிகுந்த ஆரவாரத்துடன் அதனை வெளிப்படுத்துவர். இது எந்த விதத்திலும் பிறருக்குப் பிரச்சினையாகவோ சிரமமாகவோ அமையாது ஆனால் பயம் என்னும் மனவெழுச்சி ஏற்படும்போது சிலர் அடித் தொண்டையால் சத்தமிடுவர், சில வேளை வியர்த்து உரோமங்கள் சிலிர்த்து உடலில் பல மாற்றங்கள் ஏற்படும். சுவாசத் துடிப்பு அதிகரிக்கும், பதற்ற நிலையில் காணப்படுவர், வயிற்றுக்கோளாறு, வலிப்பு, தலைச்சுற்றல், சிறுநீர் வெளியேற்றம், மயக்கம் முதலிய குணப்பண்புகள் வெளிப்படும் பயம், மகிழ்ச்சியைப் போல் அல்லாமல் சமூகத்தில் கூட பாதிப்பை ஏற்படுத்தும்.
அதிக பயம் ஏற்படும்போது மாணவர்கள் கற்றல் செயற்பாடுகளிலும் பின்நிற்பர். அத்துடன் அதிக பயம் கொண்ட பிள்ளைக்கு ஞாபக மறதி ஏற்படுவதற்குரிய சந்தர்ப்பங்களும் அதிகம் காணப்படும். நினைவகத்தில் சேமித்து வைத்த தகவல்களும் அழிந்துவிடும். பயம் காரணமாக தகவல்களைச் சேகரிக்கும் போதும் சேமிக்கும்போதும் அவற்றை வெளியிடும்போதும் பல்வேறு குழப்பமான சூழ்நிலையே தோற்றம் பெறும்.
வகுப்பறையில் உள்ள மாணவர்கள் பல்திறத்தவர்களாகக் காணப்படுவார்கள் அவர்களின் ஆற்றல்கள், இயல்பூக்கங்கள், விருப்பு வெறுப்புக்கள் வெவ்வேறுபட்டவையாக இருக்கும் இதனால் ஆசிரியர் கற்பிப்பதை விட தனியாள் வேற்பாடுகளை இனங்காண்பதிலும் ஒவ்வொரு மாணவனையும் நன்கு விளங்கிக்கொள்வதிலும் தனது கவனத்தை அதிகம் செலுத்துதல் வேண்டும். பயம் காரணமாகச் சில மாணவர்கள் பொருத்தப்பாடற்ற நடத்தைகளில் ஈடுபடலாம் அச் சந்தர்ப்பங்களில் ஆசிரியர் அம்மாணவர்களுக்குத் தண்டனை வழங்க முற்படும்போது அம் மாணவர்களிடம் பயம், வெட்கம் போன்ற மனவெழுச்சிகள் மேலும் அதிகரிக்க இடமுண்டு. இதனை விளங்கிக் கொண்டு ஒரு ஆசிரியர் இத்தகைய மாணவர்களிடம் அதிகளவு அன்பு, கருணை காட்ட முற்படுதல் வேண்டும். போதுமானளவு பாதுகாப்பினையும் வழங்குதல் வேண்டும்.
அதிகளவு பயத்தைக் கொண்ட ஒரு பிள்ளை பரீட்சைக்கு மிகவும் சிரமப்பட்டுக் கற்றபோதும் பரீட்சை எழுதும் சந்தர்ப்பத்தில் அனைத்தையும் மறந்துவிடும் நிலை ஏற்படலாம். 1982ம் ஆண்டு போவர் மற்றும் ஹோஹன் ஆகியோர் மேற்கொண்ட ஆய்வில் மகிழ்ச்சிக்கும் துக்கத்துக்கும் உட்பட்ட இரு குழுக்களை ஆய்வுக்குட்படுத்தினர் அவர்கள், இரு குழுக்களுக்கும் மகிழ்ச்சி, துக்கம் ஆகிய அனுபவங்களைப் பெற்ற இருவரின் கதைகளை வாசிப்பதற்குக் கொடுத்தனர். மறுநாள் இரு கதைகளையும் கூறுமாறு கேட்டபோது முதலில் மகிழ்ச்சிக்குட்பட்டிருந்த குழு மகிழ்ச்சியான அனுபவத்தைப் பெற்றவரின் கதையையும், துக்கத்துக்குட்பட்டிருந்த குழு துக்ககரமான அனுபவத்தைப் பெற்றவரின் கதையையும், மிகவும் இலகுவாக நினைவுபடுத்திக் கூறினர்.
ஜோன் வாட்சன் (J.B. Watson, 1878-1958) தனது மாணவனாகிய ஆர் ரேணர் (Rosalie Rayner) என்பவருடன் இணைந்து லிட்டில் அல்பிரட் (Little Albert) என்னும் 11 மாதக் குழந்தையில் ஒரு ஆய்வினை மேற்கொண்டனர். அதில் லிட்டில் அல்பிரட் முன்னிலையில் ஒரு வெள்ளை எலியை விட்டபோது அவன் எவ்வித பயம் சார்ந்த துலங்கல்களையும் வெளிப்படுத்தவில்லை அவன் அதனைத் தொட்டுத் தனது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினான். ஆனால் மீண்டும் அந்த வெள்ளை எலியைத் தொட்டபோது பலமான சத்தம் எழுப்பப்பட்டது இவ்வாறு அவனது ஒவ்வொரு முயற்சியின்போதும் பலமான சத்தம் எழுபப்பட்டது இதனால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவன் பய உணர்வை வெளிப்படுத்தினான். அதன்பின் வெள்ளை எலிக்கு மாத்திரமல்லாமல் வெள்ளை நாய்கள், வெள்ளைப் பறவைகள், வெள்ளைப் பஞ்சு, வெள்ளைக் காலுறை, வெள்ளை நிறத் தொப்பி போன்றவற்றுக்கும் பய உணர்வை வெளிப்படுத்தினான். பின்னர் குழந்தையின் பய உணர்வு படிப்படியாக நீக்கப்பட்டு அவனது முன்னைய நிலைக்குக் கொண்டுவரப்பட்டான்.
டங்கர் (1945) என்பவர் மேற்கொண்ட ஆய்வில் இரு குழுக்களுக்கு மெழுகுதிரி, படங்களைப் பொருத்தும் ஊசிப் பெட்டி ஒன்று மற்றும் தீப்பெட்டி ஆகியவை வழங்கப்பட்டது. மெழுகு நிலத்தில் விழாதவாறு மெழுகுதிரியைச் சுவரில் பொருத்துமாறு கூறப்பட்டது இச் செயற்பாடு ஆரம்பிக்க முன்னர் பரிசோதனைக் குழுவுக்குப் பொழுதுபோக்கான திரைப்படம் காட்டப்பட்டது. இந்தப் பரிசோதனையில் கட்டுப்படுத்தப்பட்ட குழுவை விட பரிசோதனைக்குழு முன்வைக்கப்பட்ட பிரச்சினைக்கு இலகுவாகத் தீர்வுகண்டது.
மனவெழுச்சியைக் கட்டுப்படுத்தக்கூடிய ஆசிரிய வகிபாகம்
01. மாணவர்களின் பய உணர்வினைப் போக்குவதற்கு ஒரு ஆசிரியர் பல்வேறு
வழிமுறைகளைப் பின்பற்ற முடியும். குறிப்பாக ஒருவருக்குப் பயத்தினை ஏற்படுத்தக்கூடிய கீழ்நிலைப் பிரச்சினை நிலமையிலிருந்து எதிர்பார்த்த இலக்கை அடையும் வரை பொருத்தமான மட்டங்களை ஒழுங்குபடுத்துதல் வேண்டும் வெற்றியடையும் ஒவ்வொரு மட்டத்திற்கும் புள்ளிகளை அல்லது மீளவலியுறுத்தல்களை வழங்க முடியும். உதாரணமாக கரப்பொத்தானுக்குப் பயத்தினை வெளிப்படுத்தும் மாணவனை எடுத்துக்கொண்டால்
02. ஆசிரியர் தனது வகுப்பறையிலுள்ள மாணவர்களின் தனிப்பட்ட விபரங்களைத் திரட்டிக்கொள்ளுதல் வேண்டும் குறிப்பாக அவர்களது ஊக்கல்கள், தேவைகள், பலங்கள், பலவீனங்கள், பிரச்சினையான நிலமைகள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்துதல் வேண்டும். மேலும் அவர்களது தனியாள் வேறுபாடுகளுக்கேற்ப பாடநெறிகளைத் தெரிவு செய்ய உதவுதல், பாடங்களைத் தெரிவு செய்ய உதவுதல், பல்வேறு ஒப்படைகளை வழங்குதல், மீளவலியுறுத்தல்களை வழங்குதல் போன்றவை ஒரு ஆசிரியரின் முக்கிய வகிபாகமாகும். வகுப்பறைகளில் மாணவர்களின் ஆற்றல்கள் இனங்காணப்படாததால் அவை முளையிலேயே கருகிவிடுகின்றன.
03. மாணவர்கள் தமது மனவெழுச்சிகளை வெளிப்படுத்தும்போது ஆசிரியர்கள் அவற்றை உடன்பாடாக எடுத்துக்கொண்டு அதனைப் பொருத்தமான வகையில் திசைமுகப்படுத்துதல் வேண்டும். பேச்சுப்போட்டிகள், பொருட்காட்சிகள், சுவர்ப்பலகைப்பயன்பாடு. கவிதை கட்டுரை போன்ற செயற்பாடுகளில் பயத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களைப் ஈடுபடுத்துதல் வேண்டும் இதன் மூலம் படிப்படியாக அவர்களின் பயத்தைப் போக்க முடியும்.
04. வீடுகளின் தற்கால சூழ்நிலைகள் பிள்ளைகளின் பய உணர்வை அதிகரிப்பதாகவே அமைந்துள்ளன. குறிப்பாகப் பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்லுதல், தாய், அல்லது தந்தை அல்லது இருவரும் வெளிநாடு செல்லுதல், விவாகரத்துப், போன்ற காரணங்களால் பிள்ளை தனித்துவிடப்படும் சூழ்நிலை அதிகரித்துள்ளது இதனால் சிறுவர் துஷ்பிரயோகமும் தற்கொலை செய்யும் வீதமும் அதிகரித்துச் செல்கின்றன. ஆசிரியர் இவற்றைக் கவனத்தில் கொண்டு இத்தகைய பிள்ளைகளை இனங்கண்டு அவர்களுக்குக் குழுத் தலைவர், வகுப்புத் தலைவர், மாணவர் தலைவர் போன்ற பதவிகளை வழங்கி அவர்களது ஆளுமைத் திறன்களை விருத்தி செய்தல் வேண்டும், இதன் மூலம் அவர்களது சுய நம்பிக்கையும் வெற்றி உணர்வும், சுதந்திரத்தன்மையும் விருத்தி பெறும்.
05. பரீட்சைகளின்போது பயத்தினை அல்லது பீதியினை வெளிப்படுத்தும் மாணவர்களுக்கு
வகுப்பறை மட்டத்திலேயே பல்வேறு போட்டி நிகழ்வுகளையும் சிறு, சிறு பரீட்சைகளையும் நடாத்தி அவர்களது சிறு, சிறு துலங்கல்களையும் மீளவலியுறுத்துவதன் உடாக அவர்களது பயத்தினைப் படிப்படியாக அகற்ற முடியும் இதற்காக ஸ்கின்னரின் நிரலித்த கற்பித்தல் முறை போன்ற முறைகளைப் பயன்படுத்த முடியும்.
06. பய உணர்வு காரணமாகப் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்குத் தியானம், உளப் பயிற்சி
போன்ற முறையியல்களைப் பயன்படுத்தி அவர்களது மனோநிலையைச் சுயமாகக் கட்டுப்படுத்தி மனவலிமையை அவர்களுக்கு ஏற்படுத்த முடியும். மாணவர்களை வரவேற்றல், அவர்களது செயல்களைப் பாராட்டுதல், அவர்களது சுயவாழ்க்கையின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுதல், அவர்களில் கண்தொடர்பு வைத்தல். போன்ற செயன்முறைகளில் ஆசிரியர் ஈடுபட்டு விருத்திப் போக்கினைத் தொடர்ச்சியாக அவதானித்தல் வேண்டும்.
07. பய உணர்வு கொண்ட மாணவர்களைப் பெயரிட்டு அழைத்தல், அவர்களைத் தனித்தனியே பாராட்டுதல், தமது பயஉணர்வுகளை வெளிப்படுத்தச் சந்தர்ப்பம் வழங்குதல், பொருத்தமான சகபாடிகளின் இணைப்புக்கு வழிசமைத்தல் குழு ஒத்துழைப்பைத் தூண்டுதல் போன்ற செயற்பாடுகளில் ஒரு ஆசிரியர் ஈடுபட முடியும்.
08. கூட்டுறவுக் கற்றல் முறைகளைப் பிரயோகித்தல், ஆக்கத்திறனை வளர்ப்பதினூடாகப் பய உணர்விலிருந்து அவர்களை வெளிக்கொணர்தல், அவர்களது கருத்துக்களைச் சிரத்தையுடன் செவிமடுப்பதுடன் தொடர்சியான மீளவலியுறுத்தல்களை வழங்குதல் போன்ற செயற்பாடுகளிலும் ஒரு ஆசிரியர் ஈடுபட முடியும்.
09. கருத்து முரண்பாடுகளை ஏற்றுக்கொள்ளப் பழக்குதுல், வெற்றி, தோல்விகளைச் சமமாக ஏற்றுக்கொள்ளப் பழக்குதல், குற்ற உணர்வைப் போக்க உதவுதல், தாழ்வுச்சிக்கலிலிருந்து விடுபட உதவுதல், தமது மனவெழுச்சிகளை இனங்காணும் திறனை வளர்த்தல், தமது மனவெழுச்சிகள் உருவாக்கும் சாதக, பாதக விளைவுகளை மதிப்பீடு செய்யும் திறன்களை வளர்த்தல் போன்ற செயற்பாடுகளில் ஒரு ஆசிரியர் ஈடுபட முடியும்.
தற்காலப் பாடசாலைகளில் அதிபர் ஆசிரியர்களே தமது மனவெழுச்சிகளை முகாமை செய்யத் தெரியாதவர்களாக உள்ளனர் மாணவர்களின் முன்னிலையிலேயே சண்டையிடும் ஆசிரியர்களை அவதானிக்கக்கூடியதாக உள்ளது இந்நிலையில் மாணவர்களின் மனவெழுச்சிகளை முகாமை செய்வது எந்தவகையில் சாத்தியமாக இருக்கலாம். எனவே ஆசிரியர்கள் தமது மனவெழுச்சிகளை முகாமை செய்வதுடன் மாணவர்கள் தமது மனவெழுச்சிகளை முகாமை செய்யவும் துணை புரிதல் வேண்டும். குறிப்பாக இன்றைய சூழ்நிலையில் மாணவர்களின் மத்தியில் பய உணர்வும் அது சார்ந்த மனவெழுச்சிகளும் அதிகளவு வெளிப்படுவதால் ஆசிரியர்கள் கூடுதலாக மாணவர்களின் பய உணர்வை முகாமை செய்வதில் கூடுதல் கவனம் செலுத்துதல் வேண்டும்.
உசாத்துணை நூல்கள்
1. Abeypala, R,(2011).Education Guidance &Counselling, Sara Publication, Kottawa.SriLanka
2. ஜெயராசா, சபா. (2008). உளவியல் முகங்கள், சேமமடு பதிப்பகம் கொழும்பு.
3. ஜெயராசா, சபா. (2008). சீர்மிய உளவியல், சேமமடு பதிப்பகம் கொழும்பு.
4. பெரேரா, சரத் (2011). மாணவர்களின் சிறந்த சுகாதார நிலமை தொடர்பாக வகுப்பறையில்
பயத்தை நிர்வகித்தல் ”அட்யாபனய”, கல்விப் பீடம் கொழும்புப் பல்கலைக்கழகம்.
5. ஜெயராசா, சபா. (2012). கற்றல் இடர்பாடுகளும் தீர்வுகளும், சேமமடு பதிப்பகம் கொழும்பு.
நன்றி: காண்பியம்