இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடுவதற்குத் தேவையான எண்ணிக்கையில் அரைவாசி ஆசிரியர்கள் கூட விண்ணப்பிக்காத காரணத்தினால், பரீட்சை திணைக்களம் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக தெரியவருகிறது.
விடைத்தாள் திருத்தும் பணிகளுக்காக விண்ணப்பிப்பதற்கான இறுதித் திகதி கடந்து விட்ட போதிலும் தற்போதைய சூழ்நிலை காரணமாக விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதியை காலவரையின்றி நீட்டிக்க திணைக்களம் தீர்மானித்துள்ளது.
கடந்த உயர தரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீட்டுக் கொடுப்பனவாக நூறு கோடி ரூபாய் செலுத்த வேண்டியிருந்தது, அதில் நாற்பது கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. மீதம் உள்ள அறுபது கோடியை செலுத்தாவிட்டால் விடைத்தாள் மதிப்பீட்டை புறக்கணிக்கப் போவதாக கல்வித்துறையின் தொழிற்சங்கங்கள் எழுத்து மூலம் பரீட்சைகள் ஆணையாளருக்கு தெரிவித்திருந்தன. இதன் காரணமாக மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்கு ஆசிரியர்கள் விண்ணப்பிக்கவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பதிலளித்த பரீட்சைகள் திணைக்கள அதிகாரி ஒருவர், திறைசேரி ஒதுக்கீட்டின்படி நிலுவைத் தொகை வழங்கப்பட்டு வருவதாகவும், மேலும் முப்பது கோடியும் திணைக்களத்திற்கு கிடைத்துள்ளதாக தெரிவித்தார். மதிப்பீட்டு பணிக்கு ஆசிரியர்கள் விண்ணப்பிக்காதது கடும் பிரச்னையாக உள்ளதாகவும், பணத்தை செலுத்த முடியாமல் திணைக்களத்தால் ஒன்றும் செய்ய முடியாது என்றும் அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.