கட்டிளமைப்பருவம்-புரிதல்கள் தேவைப்படும் பருவம்.
க.சுவர்ணராஜா
(முன்னாள் பீடாதிபதி, வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரி
கட்டிளமைப்பருவம் என்பது மனித வாழ்க்கையில் மிகவும் சுவாரஸ்யமான பருவமாகும். பல்வேறு தேவைகள், பல்வேறு எதிர்பார்ப்புக்கள், பல்வேறு சந்தர்ப்பங்கள் என்றவாறு பரிணமிக்கும் இப்பருவம் மனித வாழ்க்கையின் அர்த்தத்தை அடைவதற்காக உயரிய இலட்சியங்களை நிறைவேற்றுவதற்காக சாதனைகளின் சிகரங்களைத் தொடுவதற்காக தன்னை முழுமையாக வெளிப்படுத்தி அழுத்தமான அடையாளங்களைப் பதிப்பதற்காக தன்னை சமூகத்துடன் பிணைத்துக் கொள்வதற்காக ஆரம்பிக்கும் பயணத்தின் அத்திவாரமே இப்பருவமாகும்.
மனித வாழ்க்கையானது பருவங்கள் ரீதியாக மாற்றமடைகிறது. கருவறையிலிருந்து கல்லறை வரையான பயணத்தில் பல பருவங்களை மனிதர் சந்திக்கின்றனர். இந்தப் பருவ மாற்றங்கள் அவர்களுக்கு உடல் ரீதியான உள ரீதியான மனவெழுச்சி ரீதியான சமூக இடைத்தொடர்பு ரீதியான, ஆன்மீக ரீதியான பல மாற்றங்களை அவர்களுக்குள்ளே ஏற்படுத்தி விடுகின்றது. மாற்றங்கள் சரியாக உணரப்படும் நிலையில் புரிந்துக் கொள்ளப்படும் நிலையில் இப்பருவ மாற்றங்கள் மனிதருள் சரியான விருத்திக் கோலங்களை ஏற்படுத்துகின்றன.
பருவ மாற்றங்கள் தொடர்பாக பொருத்தமான புரிதல்கள், உணர்தல்கள் இல்லாத நிலையில் மனித வாழ்க்கையில் பல்வேறு சிக்கல் தோன்றுகின்றன. இதில் கட்டிளமைப்பருவம் என்பது பதின்மூன்று வயது தொடக்கம் பத்தொன்பது வயது வரையிலாகும். இந்த பருவ மாற்றம் மிக அதிகமான புரிதல்களுக்கும் உணர்தல்களுக்கும் உள்ளாக்கப்படல் வேண்டும் என்பது உளவியல் அறிஞர்களின் கருத்தாகும்.
மானிடவியல் ஆய்வுகளின் படி மனித வாழ்க்கையானது குழந்தைப் பருவத்திலிருந்து வலிந்தோர் நிலைக்கு மாறுவதில் இரண்டு வகைகளை உள்ளடக்கியுள்ளது. அதில் முதலாவதாக அமைவது தொடர்ச்சியான மாற்றமாகும். எவ்விதமான தடைகள் முட்டுகட்டுகள் இன்றி ஏற்படும் மாற்றங்கள் இதில் உள்ளடக்கப்படுகின்றன. அடுத்த வகையான மாற்றம் குழந்தை பருவத்தில் கற்பனவற்றிற்கும் அவர்கள் வளர்ந்தோர் ஆவதற்கும் தேவையான நடத்தைமுறைகள் மற்றும் கருத்தமைப்புகளுக்கும் இடையில் ஒரு இடைவெளி உருவாதல் ஆகும்.
தொடர்ச்சியான மாற்றம் நிகழ்தல் என்பது குழந்தைகளுக்கும், வளர்ந்தோருக்கும் இடையில் உள்ள வரையளவுகள், கோரிக்கைகள், எதிர்பார்ப்புக்கள் என்பவற்றில் ஒற்றுமை நிலவும் சூழலில் நடைபெறுவதாகும். இங்கு மனித விருத்தியானது தடையின்றி நடைபெறுகின்றது. வளர்ந்தோரின் பெரியோர்களின் நடத்தைகளை அவர்களது வாழ்க்கை முறைகளை குழந்தைகள் படிப்படியாக கற்றுக் கொள்கின்றனர். வளர்ந்தோரின் எதிர்பார்ப்புக்கள், கோரிக்கைகள் யாவும் நிறைவேற்ற தயாரானவராகின்றனர்.
மேலே குறிப்பிடப்பட்ட இரண்டாவது வகையான மாற்றமானது உள்ளக வெளியக மோதல்களுடன் நடைபெறுகின்றது. குழந்தைகளுக்கும் வளர்ந்தோருக்கும் உள்ள முக்கிய வரையறைகள் கோரிக்கைகள் எதிர்பார்ப்புகளில் வேறுபாடு நிகழும் சூழ்நிலையில் இவ்வகையான மாறுதல்கள் தோற்றம் பெறுகின்றன.
எமது குழந்தைகள், பிள்ளைகள் முறைப்படி வயது வந்தவர்களாகவும், அதாவது பௌதீக ரீதியாக பருவமடைந்தவர்களாகவும் உடலியல் ரீதியாக வயது வந்தவர்களுக்கான தோற்றத்தை கொண்டிருந்தாலும் வளர்ந்தோரின் மற்றும் பெரியோர்களின் எதிர்பார்ப்புக்களை கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு தயார்படுத்தப்படாத நிலை காணப்படுகின்றது.
சமூக உளவியல் ஆய்வானர் ரூத்பெனடிக் அவர்களின் கூற்றுப்படி, குழந்தை வளர்ந்து வளர்ந்தோராக மாறுவது வெவ்வேறு சமுதாயங்களில் வெவ்வேறு வழிகளில் நடைபெறுகின்றது. அவற்றில் எதையும் முதிர்ச்சியை நோக்கிய இயற்கையான பாதையாக கருத முடியாது என்பதாகும்.
கட்டிளமைப் பருவத்தினரை நாம் எடுத்துக் கொண்டால் அவர்களின் பருவம் மாறும் பருவம் (Period of Transition) என அழைக்கப்படுகின்றது. தேடலில் ஈடுபடுவதற்கு, நன்கு வளர்வதற்கு, சந்தர்ப்பங்களை எதிர்நோக்கியிருக்கும் பருவமே கட்டிளமைப் பருவமாகும். உடலியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் முதிர்ச்சி பெற்று தனது சொந்த அடையாளத்தை வெளிக்காட்ட முனையும் பருவம் இதுவாகும். கட்டிளமை பருவத்தினர் வாழும் சூழல் அவர்களின் தனித்துவ விருத்திக்கும், வெளிப்படுத்தல்களுக்கும் அடிப்படையாக அமைகின்றது. பொதுவாக, சமூகம், பாடசாலை, குடும்பம், சகபாடி, என்ற சூழல் காரணிகள் இப்பருவத்தினர் வாழ்க்கையில் நல்விளைவுகளும், எதிர்விளைவுகளும் ஏற்படக் காரணமாக அமைந்தாலும் குடும்பம் என்ற காரணிகள் அதனுள் அடங்கும் பெற்றோர்களுக்கும் அதிக சக்தி வாய்ந்த தூண்டுதல் காரணிகளாக இங்கு அமைகின்றன.
கட்டிளமைப்பருவத்தில் ஏற்படும் நெருக்கடிகள் மோதல்கள் என்பவை தவிர்க்க முடியாதவை. ஆனால் இந்த நெருக்கடிகள் மோதல்கள் என்பன உயிரியல் காரணிகளால் ஏற்படுத்தப்படுபவை மிகவும் குறைவானவையாகும். சமூகக் காரணிகளால் ஏற்படுத்தப்படும் நெருக்கடிகள், மோதல்களே அதிகமானவையாகும்.
கட்டிளமைப் பருவத்தினர், பொறுப்புக்களை ஏற்க முன்வருவதில்லை. இவர்களுக்கு பொறுப்புணர்ச்சி குறைவு, குடும்பத்தின் உற்பத்தி முயற்சியில் அக்கறை குறைவு, நீ;ண்ட நேரத்தினை வீட்டில் செலவழிக்க விரும்புவதில்லை, தனது உடலை நன்றாக பராமரிப்பதில் அக்கறை குறைவு போன்ற பண்புடையவர்களாக உள்ளனர் என்ற குற்றச்சாட்டுக்கள் பெற்றோர்களால் தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகின்றன. ஆனால் கட்டிளமைப் பருவத்தினர் வெளிக்காட்டும் மேற்கண்ட பண்புகளை மாற்றியமைக்க பெற்றோர் வழங்கிய பயிற்சிகள், நடத்தை முன்மாதிரிகள் எத்தகையன என்ற வினா மறுபுறத்தில் இங்கே எழுகின்றது.
கட்டிளமைப் பருவத்தினர் மீதான கலாசார செல்வாக்கு தொடர்பாக “விங்கேஸ்ட்” என்ற உளவியலாளர் பின்வரும் விடயங்களைப் பட்டியல்படுத்தியுள்ளார். அவையாவன:
1. தனது உடலை ஏற்றுப் பயனுள்ள முறையில் உபயோகித்தல்.
2. சமூகத்தில் ஆண், பெண் வகிக்கும் பாத்திரங்களை ஏற்றல்.
3. ஒத்த வகையான இருபாலருடன் ஓர் புதிய முதிர்ச்சி உறவு முறையினை அடைதல்.
4. பெற்றோரிடமிருந்தும், பிற அயலவரிடமிருந்தும் மனவெழுச்சிச் சுதந்திரத்தை அடைதல்.
5. பொருளாதார வாழ்க்கை நெறிக்கு ஆயத்தமாதல்.
6. சமுதாய பொறுப்புள்ள நடத்தைகளை விரும்பி அடைந்து கொள்ளல்.
7. விவாகத்திற்கும் குடும்ப வாழ்க்கைக்கும் ஆயத்தமாதல்.
8. நடத்தைக்கு வழிகாட்டியாக உள்விழுமியங்களையும் அறநெறி அமைப்பு முறையினையும் பெறல்.
9. ஓர் இலட்சியத்தை விருத்தி செய்தல்.
மேற்கண்ட கலாசார காரணிகளின் செல்வாக்கு, பொருத்தப்பாடு, கட்டிளமைப்பருவத்தின் பிற்பகுதி வாழ்க்கைக்கும், அதனைத் தொடர்ந்து வரும் வாழ்க்கைக்கும் முக்கியமானதாகும்.
கட்டிளமைப் பருவத்தினரின் கழுத்தை நெறிக்கும் பெற்றோரின் கட்டுப்பாடுகள், அவர்களது மனவெழுச்சி நிலைகளைப் பாதித்து அவர்களது எதிர்கால சுதந்திர வாழ்வு பற்றிய அடித்தளம் தகர்த்தப்படுவதுடன், தாம் எதற்கும் பயனற்றவர்கள் என்ற உணர்வுடன் வாழ்க்கையை தொடரும் அபாயம் ஏற்படுகின்றது.
மறுபுறத்தில் கண்டிப்பினை உதறித்தள்ளிய பெற்றோர்களுக்கும் கட்டிளமைப்பருவத்தினரின் எதிர்கால வாழ்க்கையை நெறிப்படுத்த தவறி விடுபவர்களாகவே உள்ளனர். பெற்றோர்கள் தமது பொறுப்பை உதறித்தள்ளுபவர்களாக வாழும்போது இப் பருவத்தினர் வாழ்க்கை நியமங்களும், வழிகாட்டுதல்களும் இல்லாது தமது விருப்பம் போல் வளர்ந்து விடுகின்றனர். சில பெற்றோர்கள், தமது கட்டிளமைப்பருவத்து அனுபவங்கள், தமது பெற்றோர்களிடம் கிடைத்த அனுபவங்களை மனதிற் கொண்டு தமது பிள்ளைகளை அதிகமாகக் கண்டிக்க, அல்லது கவனிக்காமல் விட முடிவெடுக்கின்றார்கள். இதுவும் பொருத்தமற்ற போக்காகும். ஏனெனில் ஒவ்வொருவரும் வாழும் சூழல் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே வருகின்றது என்பது கவனிக்க வேண்டிய விடயமாகும்.
சில கட்டிளமைப் பருவத்தினர் தாம் தவறியமைக்கு, பெற்றோர்களை குற்றஞ் சுமத்த தொடங்கியுள்ளனர். “நான் எனது தந்தையிடமிருந்து மதுபானம் அருந்தக் கற்றுக் கொண்டேன்”.
“நான் என் தாயிடமிருந்து தினமும் கடைகளில் வாங்கி உணவருந்தக் கற்றுக் கொண்டேன்” என்றவாறு அவர்களின் விமர்சனங்கள் தொடங்குகின்றன. இங்கு பெற்றோர் கட்டிளமைப் பருவத்தினருக்கு வழங்கும் முன்மாதிரிகள் தொடர்பான பிரச்சினைகள் எழுகின்றன.
கட்டிளமைப் பருவத்தினர் தொடர்பாக சில பெற்றோர்களின் கூற்றுகளும் இங்கு கவனிக்கத்தக்கது.
பெற்றோர் — 01
“எனது மகனுக்கு வயது 17. அவன் படிப்பை தவிர வேறு விடயங்களில் கவனஞ் செலுத்துவதில்லை. பாடசாலைக்குச் செல்வான். பின்னர் ரியூசன் வகுப்பிற்குச் செல்வான். இதைத் தவிர அவனது பொழுதுபோக்கு, கம்பியூட்டரில் விளையாட்டுக்களை விளையாடுவது மட்டுமே. எனக்கு அவனால் எவ்வித பிரச்சினையும் இல்லை. அவன் நன்றாக படித்தால் மட்டும் எனக்கு போதுமானது.”
மேற்கண்ட கூற்றினை நாம் சற்று உற்றுநோக்கினால், படிப்புத் தவிர வேறு நிரந்தர கடமைகள் மகனுக்கு இங்கே வழங்கப்படவில்லை என்பது தெளிவாகின்றது.
இந்நிலையிலேயே பல பெற்றோர்கள் பொதுவாகக் காணப்படுகின்றனர். தமது பிள்ளைகளுக்கு வீட்டு வேலைகளில் மற்றும் வீட்டுக்கு வருமானம் பெறும் வழிகளில், குடும்பத்தின் விசேட நிகழ்வுகளில் எவ்வித பொறுப்பையும் வழங்காது சகல விதமான வாழ்க்கை பொறுப்புகளிலிருந்தும் கவலைகளிலிருந்தும் இவர்கள் பிள்ளைகளை மூடிப் பாதுகாக்கின்றனர்.
இவ்வாறு வளர்க்கப்படும் பிள்ளைகள் எதிர்கால வாழ்க்கைக்காக ஆயத்தமாகும் அனுபவங்களைப் பெறுவதில் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர்.
சில பெற்றோர்கள் தமது பிள்ளைகள் படிப்புடன் மட்டும் வீட்டோடு முடங்கிக் கிடப்பது நல்லது என நினைக்கின்றனர். இவர்கள் சமூகத்துடன் இணைந்து தமது அடையாளத்தை வெளிப்படுத்துவதில் எதிர்காலத்தில் சவால்களை எதிர்நோக்குவதில் ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றியெல்லாம் சிந்திப்பவர்களாக இல்லை. ஒருவர் தமது சமூகத்தினருடன் நன்கு பொருந்திச் செல்ல வேண்டுமானால் அவர்கள் மற்றவர்களின் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் நடத்தைகளையும் புரிந்து கொண்டு அவற்றை முன்னறிந்து நடந்துகொள்ளும் திறமையினைப் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பங்களை பெற்றோர் அமைத்துக் கொடுத்தல் வேண்டும்.
மறுபுறத்தில் இன்னுமொரு பெற்றோரின் கூற்றையும் பரீசீலிப்போம்.
பெற்றோர் -02
“எனக்கு வீட்டுப் பொறுப்புகள் பற்றிய சுமை மிகக் குறைவு. க.பொ.த உயர் தரத்தில் கற்கும் எனது மகன் சகல வீட்டு வேலைகளையும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளான். பாடசாலை, ரியூசன் சென்று வருவதற்கும் வீட்டு வேலைகளில ஈடுபடல், கடைக்குச் சென்று வரல் என்பவற்றிலும் அவன் அதிக நேரத்தை செலவிடுகின்றான்.” என பெருமிதமாக கூறினார்.
மேற்கண்ட கூற்றினை நுணுகி ஆராயும் போது பின்வரும் வினாக்கள் எழுகின்றன.
•இப்பிள்ளைக்கு நண்பர்களுடன் செலவழிப்பதற்கு உரிய நேரம் போதுமானதா?
•உடல் வளர்ச்சி, உள வளர்ச்சி தொடர்பாக நாளாந்தம் வந்து கொண்டிருக்கும் ஏராளமான தகவல்களை பெற்றுக் கொள்வதற்கு இப்பிள்ளைக்குரிய வாய்ப்பு போதுமானதா?
•சில கட்டிளமைப் பருவ பிள்ளைகள் தமது பாடசாலைப் பாடங்களை சுயமாகப் படித்தல், சக மாணவர்களுடன் இணைந்து கற்றல் என்பவற்றை தவிர்த்து உல்லாசமாக பொழுது போக்குதல், வீதியில் நின்று குழப்பம் விளைவித்தல், குழு மோதல்களில் ஈடுபடுதல் என்றவாறு எதிர்காலம் பற்றிய எவ்வித திட்டமும் இல்லாத நிலையிலும் செயற்படுகின்றனர். இவற்றுக்கெல்லாம் அடிப்படையாக இருப்பது பெற்றோரின் இப்பருவ பிள்ளைகள் தொடர்பான அக்கறை அமையுமா?
என்பதும் இங்கு சிந்திக்கப்பட வேண்டும்.
கட்டிளமைப் பருவத்தினர் சிலர் அறிவு சார்ந்த நூல்களில் மட்டும் முடங்கி விடுகின்றனர். வேறு சிலர் இலத்திரனியல் சாதனங்களுடன் ஒன்றிணைந்து விடுகின்றனர். இன்னும் சிலர் விளையாட்டுக்களில் மட்டும் மூழ்கி விடுகின்றனர். மற்றும் சிலரோ வீதிகளில் நின்று பெண்களுடன் சேட்டை செய்வதில் மட்டும் தமது ஆண்மையை வெளிப்படுத்த முயலுகின்றனர்.
கட்டிளமைப் பருவ பெண்களை பொறுத்தவரையில் படிப்பில் கவனஞ் வெலுத்துதல், பகட்டான ஆடை அணிகலன்களுடன் தம்மை அலங்கரிக்கத்துக் கொள்ளுதல், சதா கையடக்கத் தொலைபேசியுடன் காலத்தை கழித்தல் அல்லது கதை புத்தகங்களில் தம்மை ஆழ்த்திக் கொள்ளல் என்றவாறு தம் தனித்துவத்தை வெளிப்படுத்த முயலுகின்றனர். இத்தகைய நடத்தைப் பண்பு பங்கினை வகிக்கப் போகின்றன என்பது மற்றுமொரு வினாவாகும்.
நாம் வகுப்பறைகளிலும், வீடுகளிலும், மற்றும் பொது இடங்களிலும் மேற்கொண்ட கலந்துரையாடல்களில் வெளிப்பட்ட சந்தித்த கட்டிளமைப் பருவத்தினரின் பின்வரும் பண்புகள் சிலவற்றைப் பின்வருமாறு தொகுக்கலாம்.
•வாழ்க்கையில் அறிவு மிக அவசியமானது அதற்காக நிறைய வாசிக்க வேண்டும் என்ற நோக்கில் நூல்களுடனும், சஞ்சிகைகளுடனும், பாடக் குறிப்புகளுடனும் தம்மை மட்டுப்படுத்திக் கொண்டனர் இவர்கள் சமூக வாழ்க்கையிலிருந்து ஒதுங்கியிருந்தனர். இவர்களுக்கு அதிக நண்பர்கள் இருப்பதாக புலப்படவில்லை. அதிகளவிற்கு தம்மை தனிமைப்படுத்திக் கொண்ட போக்கே இவர்களிடம் காணப்பட்டது.
•மற்றுமொரு தொகுதியினர் எப்போதும் நண்பர்களுடன் இருப்பதையே அதிகம் விரும்பினர். குழுவாக, கூட்டமாக எல்லாச் செயற்பாடுகளிலும் பங்கேற்க விரும்பினர். சமூக நிகழ்ச்சிகளில் அதிகம் பங்குக்கொண்டனர். விசேடமாக இறப்பு வீடுகளில் இவர்களை அதிகம் காண முடிந்தது. அங்கு மிக பொறுப்புணர்ச்சியுடன் கடமைகளில் ஈடுபட்டிருந்தனர். சோகத்துடன் இருக்கும் இறப்பு வீட்டாருக்கு சுயமாக முன்வந்து உதவிக் கொண்டிருந்தனர். இவர்களிடத்து காணப்பட்ட நட்பு இறுக்கமானதாகவும், கொஞ்சம் இரசிக்கத்தக்கதாகவும் இருந்தது.
•எப்போதும் கையடக்கத் தொலைபேசிகளுடன் காலத்தைக் கழிக்கும் சில கட்டிளமைப் பருவத்தினரையும் நாம் சந்திக்க நேர்கின்றது. எப்போதும் கையடக்கத் தொலைபேசிகள் மூலம் உரையாடிக் கொண்டிருத்தல், பாட்டுக்களைக் கேட்டல், சில விடயங்களைப் பதிவு செய்து அவற்றை மீள மீள பார்த்தல், அடிக்கடி SMS அனுப்புதல் என்றவாறு இவர்களது பெரும்பாலான பொழுதுகள் கழிகின்றன. இங்கு புதிய ரக கையடக்க தொலைபேசிகள் தொடர்பாகவே இவர்களது நாட்டம் காணப்பட்டது. இவர்கள் ஓரிரண்டு நண்பர்களுடன் மட்டுமே இணைந்திருப்பதையும் அவதானிக்க முடிந்தது. அவர்களில் அதிகளவு கட்டிளமைப் பருவப் பெண்களும் அடங்குவர். இவர்களது ஆய்வும் ஆக்கத்திறனும் கையடக்கத் தொலைபேசிகளுடன் மட்டும் மட்டுப்பட்டது கவலைக்குரியதாகும்.
• கோவில் வீதிகளில், பாதையோரங்களில் அமர்ந்திருந்து வீதியில் வருவோர் போவோரை விமர்சித்தல், அவர்களை ஏளனஞ் செய்தல், திடீரென சத்தமாக சிரித்தல், கத்துதல், சினிமா பாணியில் “ஓ” போடுதல் என தமது நடத்தைகளை, பெரும்பாலும் தம்மைவிட வயதில் மூத்தவர்களுடன் சேர்ந்து ஈடுபடுவதை அவதானிக்க முடியும். இத்தகைய நடத்தைப் பண்புகளை உடைய கட்டிளமைப் பருவத்தினருடன் இருக்கும் வயதிற்கு மூத்தவர்கள், சற்று மௌனமாக அமர்ந்திருப்பர். ஆனால் அவர்களின் குரலாக அல்லது பேச்சாளர்களாக கட்டிளமைப் பருவத்தினர் இருக்கின்றனர். இவர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு கால அட்டவணை தவறாமல் உரிய இடத்தில் கூடிவிடுவர். இத்தகைய கட்டிளமைப் பருவத்தினருக்கு தேவையான சிற்றுண்டிகள் குளிர்பானம் என்பன அவர்களுடன் இருக்கும் வயதிற்கு மூத்தவர்களால் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும். அதிகமாக புகைத்தல், மதுபானம் அருந்துதல் போன்ற செயற்பாடுகளிலும் மூத்தவர்கள் வழிகாட்டிகளாக இங்கு இருப்பதும் அவதானிக்கத்தக்கது. இத்தகைய உறவுகள் தொடர்புகள் பற்றிய பெற்றோரின் தேடல் முக்கியமாகும். வீடுகளில் ஏற்படும் கசப்புணர்வான அனுபவங்களே கட்டிளமைப் பருவத்தினர் இவ்வாறு மற்றவர்களின் கைப் பொம்மைகளாக இருப்பதற்குரிய காரணங்களாகின்றன.
கட்டிளமைப் பருவத்தில் நிகழும் சமூகமயமாக்கல் தொடர்பாக பெற்றோர் தமது பிள்ளைகளின் விருத்தியில் பின்வருமாறு கவனஞ் செலுத்துதல் அவர்களின் எதிர்கால வாழ்க்கை விருத்திக்கு உதவியாக அமையும்.
1. கட்டிளமைப் பருவத்தினர் சமூகமயமாவதற்கு பெற்றோர்கள் நல்வழிகாட்டிகளாக அமைதல் வேண்டும். இப்பருவத்தினர் சமூகமயமாவதற்கு வீடே மிகச் சிறந்த அமைப்பாகும். இந்நிலை மெய்படுவதற்கு பெற்றோர், பிள்ளைகள் தமக்கு அடங்கி நடப்பவர்களாகவும் தமது வேலைப் பளுவை பகிர்ந்துக் கொள்பவர்களாகவும் எதிர்பார்ப்பதில் மட்டும் திருப்தியடையாமல் இருக்க வேண்டும். மேலும், அவர்களது நண்பர்கள் தொடக்கம் அவர்களது விருப்பு வெறுப்புகள் வரை புறக்கணிப்பதற்கு கவனம் அவசியமாகின்றது. அனுபவமிக்க பெற்றோர்களுக்கும் அனுபவம் குறைந்த கட்டிளமைப் பருவத்தினருக்கும் இடையில் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் இப் பருவத்தினரிடையே உளப் போராட்டங்களை தோற்றுவிக்கும் என்பதையும் பெற்றோர்கள் உணர்தல் வேண்டும்.
2. தமது கட்டிளமைப் பருவ அனுபவங்களோடு தமது பிள்ளைகளை அணுகும் பெற்றோர் சிலர் பிள்ளைகளின் தனித்தன்மையினையிட்டு எதிர்வாதம் கொள்கின்றனர். பிள்ளகைளின் சுய ஆர்வங்கள், கல்வி சார்ந்த ஆர்வங்கள், பொழுதுபோக்கு ஆர்வங்கள் மீது தமது வெறுப்பினை அல்லது அலட்சியப் போக்கினை காட்டும் பெற்றோர்களினால் பிள்ளைகள் தொடர்ந்து பிடிவாதப் போக்கினை வெளிக் காட்டுபவர்களாக மாறிவிடுகின்றனர்.
பொதுவாக தமது சிந்தனைகளிலும் உணர்ச்சிகளிலும் கட்டுமீறி நடந்து கொள்கின்றனர். கட்டிளமைப் பருவத்தினரின் ஆர்வங்கள் அடிக்கடி மாறக் கூடிய தன்மை உடையன. ஆகவே இது தொடர்பாக பெற்றோர்கள் தேவையற்ற பயம் கொள்வதை விட அவர்களின் ஆர்வங்களை ஆக்கப்பூர்வமாக நெறிப்படுத்த முயற்சித்தல் வேண்டும். கட்டிளமைப்பருவத்தினரின் சிகையலங்கார ஆசைகள், நவீன உடைகள் மீதான கவர்ச்சிகள் என்பன தொடர்பாக பெற்றோர்கள் காட்டும் எதிர்ப்புணர்வு அவர்களின் தம்மை அழகுப்படுத்துதல் என்னும் ஆக்கத்திறனையே பாதிப்பதாக அமையலாம்.
3. ஆக்கத்திறனுள்ள பிள்ளைகளின் பெற்றோரகள் ஒழுக்க நெறிகள் மற்றும் விழுமியங்கள் தொடர்பாக பொதுவான கருத்துக்களிலிருந்து மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆக்கத்திறன் கொண்ட கட்டடிடக்கலை வல்லுனர்களின் பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் அறிவு விடயத்தில் தலையிடாதவர்களாகவும் புகழ்பெற்ற மருத்துவ ஆய்வாளர்களின் பெற்றோர்கள் பிள்ளைகளின் சிந்தனைச் சுதந்திரத்தில் கூடிய அக்கறை காட்டியதாகவும் ஸ்டீன் என்பாரின் ஆய்வு தெரிவிக்கின்றது. பெற்றோர் கட்டிளமைப் பருவத்தினருக்கு வழங்கும் சிந்தனைச் சுதந்திரம் மற்றும்; உதவி தேவைப்படும் போது மட்டும் உதவுதல் போன்றவை திணிப்பாக கொள்ளதா நிலை கட்டிளமைப் பருவத்தினரின் விருத்திக்கு பெரிதும் உதவும்.
4. பெற்றோர்கள் கட்டிளமைப் பருவத்தினருடன் நெருங்கிய உறவினைப் பேண வேண்டிய அவசியத்தை இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பின்வரும் ஆய்வின் முடிவுகள் வெளிப்படுத்தப்படுகின்றன.
2004 ஆம் ஆண்டில் UNICEF நிறுவனத்தினால் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட கட்டிளமைப் பருவத்தினர் தொடர்பான ஆய்வொன்றின் கண்டுபிடிப்புக்கள் பின்வருமாறு அமைந்தது.
· குடும்பத்தில் சார்ந்துள்ளேன் 73.3வீதம்
· நான் என் குடும்பத்தாருடன் அதிக நேரத்தை செலவழிக்க விரும்புகின்றேன் 72 வீதம்
· என் குடும்ப அங்கத்;தவர்கள் சிலர் என்னை சினக்க வைக்கின்றனர் 32.5 வீதம்
· எனது தந்தை என் மீது அதிக கட்டுப்பாடுகளை விதிக்கின்றார் 31.9 வீதம்
· என் தாய் என் மீது அதிக கட்டுப்பாடுகளை விதிக்கின்றார் 29.3 வீதம்
· நான் என் குடும்பத்தை விட்டு விலக நினைக்கின்றேன் 28.7 வீதம்
· என் குடும்பத்தார் உடனான உறவு பற்றி கவலைப்படுகின்றேன்; 25. 6 வீதம்
( ஆதாரம்: National Suruey on Emerging issues Amons Adolescents in Sri Lanka)
மேற்கண்ட ஆய்வின் முடிவில் காட்டப்பட்டுள்ள கட்டிளமைப்பருவத்தினரின் ஏக்கங்களும், கவலைகளும் பெற்றோரின் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை ஆகும். கட்டிளமைப் பருவத்தினருக்கு அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு கிடைப்பதற்கு அவர்களைக் பற்றிய புரிதல்கள் பெற்றோர்கள் மத்தியில் இன்னும் அதிகரிக்கப்பட வேண்டும்