முன்வைப்புத் திறனை மேம்படுத்தல்
Enhancing Presentation Skills
S.Logarajah SLTES, Lecturer,
Batticaloa National College of Education
அறிமுகம்
பேசுவது என்பது இறைவன் கொடுத்த வரம். விலங்குள், பறவைகள் பேசுவதில்லை. மனிதனுக்கு மட்டும்தான் பேசும் சக்தி உண்டு. தனது மனக்கிடக்கைகளை ஒலிவடிவில் சக மனிதர்களுக்கு பரிமாறக் கூடிய இந்த வல்லமையை சரியாக பயன்படுத்துகின்றோமா? அல்லது எப்படிப் பயன்படுத்துகின்றோம்?
வாய்க்குள் போகும் உணவுகளில் அறுசுவையை எதிர்பார்க்கும் எம் நாக்கு அதே வாய்வழியே வெளிவரும் வார்த்தைகளையும் சுவையாகப் பேசினால் தேவையில்லாத பல சங்கடங்கள் தவிர்க்கப்படும் என்பதனை நாம் சிந்திக்க வேண்டும்.
“வாக்கினில் இனிமை வேண்டும்” என்றார் மகாகவி பாரதியார். சொல்லாத வார்த்தை நாவுக்கு அடிமை சொல்கின்ற வார்த்தைக்கு நாம் அடிமை.
மனிதன் சில நேரங்களில் கோபத்துடன் பேசுகின்றான், சில நேரங்களில் சிரித்துப் பேசுகின்றான், சில நேரங்களில் சிந்தித்துப் பேசுகின்றான். நினைத்து நினைத்துப் பேசுகின்றான், நினைத்ததையே பேசுகின்றான். எனவே எந்த பேச்சையும் சூழ்நிலைக்கேற்ப அறிந்து பேசுவதுதானே சிறப்பு.
முன்வைப்பு (Presentation) என்றால் என்ன?
Presentation என்றாலே நாம் பொதுவாக Power Point Presentation மட்டுமே என நினைக்கின்றோம். ஆனால் அது மட்டுமே Presentation ஆகிவிடாது. சபையொன்றில் பேசுவது, மேடையொன்றில் உரை நிகழ்த்துவது, நீங்கள் வகுப்பறையின் முன்னால் நின்று கற்பிப்பது, எல்லாமே வெவ்வேறு வகையான முன்வைப்புக்களே ஆகும்.
Power Point என்பது முன்வைப்புக்கான ஒரு துணைச் சாதனம் மட்டுமே. எல்லாச் சந்தர்ப்பங்களிலும் Power Point ஐப் பயன்படுத்தித்தான் முன்வைப்பைச் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை.
எதற்காக முன்வைப்புச் செய்கின்றோம்?
- எண்ணம் / யோசனை / கருத்து / திட்டம் ஒன்றைப் பகிர்ந்து கொள்வதற்காக (Presenting an Idea)
இது உங்கள் தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம் அல்லது ஒரு நிறுவனத்தின் கருத்தாக இருக்கலாம். நீங்கள் மாணவர்களுக்கு வழங்கும் யோசனைகளாக இருக்கலாம்.
- ஒரு விடயம் குறித்து விளக்கம் அளிப்பதற்கு (To Explain)
பாடசாலைகளில் கல்லூரிகளில், பல்கலைக் கழகங்களில் ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள் பாடப்பொருள் ஒன்றை மாணவர்களுக்கு விளக்குவது. வேலை ஒன்றுக்குச் சேர்ந்த பின் அந்நிறுவனத்தின் பிரதான இலக்கு, அவர்கள் செய்து கொண்டிருக்கும் வேலை, நிறுவன சட்டதிட்டங்கள், அந் நிறுவனத்தில் உங்களுக்குரிய வேலை என்ன? என்பது தொடர்பாக விளக்கமளித்தல்.
3.ஒரு குறிப்பிட்ட அணுகுமுறை அல்லது ஒரு விடயத்தை கருத்திற்கொள்ளும் வழி முறைகளை அழுத்துவதற்கு (Point of view).
அரசியல் தலைவர்கள் நாடு இவ்வாறுதான் ஆட்சி செய்யப்பட வேண்டும். அதற்கான காரணங்கள் இவைதான் என தமது பார்வையை மக்கள் மத்தியில் முன்வைக்கின்றனர்.
முன்வைப்புத் திறனை மேம்படுத்த தேவையானவை?
- உள்ளடக்க அறிவு (Content knowledge)
எதைப் பற்றி பேசவிருக்கின்றீர்களோ அதை பற்றிய முழுமையான விடய அறிவு, அது தொடர்பான பூரணமான தகவல், அது குறித்த நிறைவான புரிதல், அவ்விடயம் குறித்து பேசுவதற்கான ஆளுமை உங்களிடம் இருக்க வேண்டும்.
- நான் யாருக்கு பேசவிருக்கின்றேன்.
- என்ன பேசவிருக்கின்றேன்.
- அதை எப்படி பேசவிருக்கின்றேன்.
- மாணவர்களை நான் எப்படி புரிந்து கொள்ளலாம்.
- தொடர்பாடல் (Communication)
குறித்த விடயத்தை எவ்வாறு கொண்டு செல்லப் போகின்றோம், எப்படியான தொடர்பாடலை மேற்கொண்டால் மற்றவர்களுக்குப் புரியும். மற்றவர்களுக்கு புரியும் வகையில் எவ்வாறு பேசுவது, ஒரு சபையில் எப்படிப் பேசுவது என்பன எல்லாம் இதனுள் அடங்கும்.
- மொழி (language)
மொழியை பயன்படுத்தும் போது அனைவருக்கும் விளங்கக் கூடிய மொழியை தெரிவு செய்து பயன்படுத்த வேண்டும். பிரதேச பேச்சு வழக்கு மொழி நடைகளைத் தவிர்த்து தூய்மையான தழிழை பயன்படுத்துவது நல்லது.
எந்த மொழியில் முன்வைப்பைச் செய்யப் போகின்றோம் அம்மொழியில் எமக்குள்ள ஆளுமை என்பன இதில் அடங்கும்.
- கருவிகள் (Tools)
நாம் முன்வைப்பின் போது துணைச்சாதனமாக பயன்படுத்தவிருக்கும் கருவிகள் அது power point ஆக Notepad ஆக இருக்கலாம் அல்லது மேன் தலை எறியி (OHP) ஆக இருக்கலாம். இன்று வீடியோ மற்றும் அனிமேசன் போன்றவற்றைப் பயன்படுத்தியும் முன்வைப்புக்கள் செய்யப் படுகின்றன.
- சீர்படுத்துதல் (grooming)
முன்வைப்பவர் பார்ப்பதற்கு தகுதியான கண்ணியமான தோற்றத்தில் இருத்தல் வேண்டும். அதாவது தலையை வாரி,பொருத்தமான ஆடை உடுத்தி பார்வையாளர்களை ஈர்க்கக் கூடியதாக இருத்தல் வேண்டும். ஏனெனில் மக்கள் உங்களைக் கணிப்பதை நீங்கள் தவிர்க்க முடியாது.
- சுய மேலாண்மை (Self Management)
மேடையில் இருக்கும் போது நீங்கள் எப்படி நடந்து கொள்கின்றீர்கள்?; மக்கள் எப்படி பார்க்கின்றார்கள்? மக்களுக்கு பிடிக்கும் வகையில் எப்படி முன்வைப்பைச் செய்ய வேண்டும்? என்பது போன்ற விடயங்கள்.
முன்வைப்புத் திறனை மேம்படுத்தும் படிமுறைகள்
வினைத்திறனான முன்வைப்பொன்றைத் தயார் செய்வதற்கு பின்வரும் படிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
திட்டமிடல்
தயார்படுத்துதல்
பயிற்சி செய்தல்
முன்வைப்புச் செய்தல்
திட்டமிடல்
திட்டமிடல் பொதுவாக பின்வரும் கேள்விகளை உள்ளடக்கியிருக்க வேண்டும்.
- உங்கள் பார்வையாளர்கள் யார்?
- அவர்கள் ஏன் அங்கே இருக்கிறார்கள்?
- உங்கள் இலக்கு என்ன?
- முன்வைப்புக்கான காலம் எவ்வளவு?
- அது எங்கே நடக்கும்?
முன்வைப்புக்குத் தயார்படுத்துதல்
- பார்வையாளர்களைப் புரிந்து கொள்ளுங்கள் :
யார் முன்னிலையில் முன்வைப்பைச் செய்யப் போகின்றீர்கள், குறித்த விடயத்தை யாரிடம் எடுத்துச் செல்லப் போகின்றீர்கள் என்பதை தீர்மானித்தல் வேண்டும். ஏனெனில் அதுவே நீங்கள் எந்த மாதிரியான முன்வைப்பைச் செய்ய வேண்டும் என்பதை தீர்மானிப்பதாய் அமையும். அதாவது பார்வையாளர்களின் விடய அறிவு என்ன? அவர்களுக்கு புரியும் விதத்தில் உள்ளடக்கத்தை எவ்வாறு வடிவமைக்க வேண்டும். அவர்களுக்கு புரியும் விதத்தில் தொடர்பாடலை எவ்வாறு நடாத்த வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும். உதாரணமாக
வகுப்பறையில் மாணவர்களுக்கான முன்வைப்பு எனில் மாணவர்களுக்கு எந்தளவுக்கு புரிதல் இருக்கும். மாணவர்களின் வயது என்ன? அவர்களது வயதுக்கு ஏற்றால் போல் இருக்கும் எடுத்துக்காட்டுகள் எவை? அவர்களுக்கு எந்தெந்த விடயங்களில் ஆர்வம் உண்டு? என்பதைப் பொறுத்து உங்கள் உள்ளடக்கத்தை நீங்கள் வடிவமைக்க வேண்டும். உங்கள் மேலாளருக்கான முன்வைப்பு எனில் அவருக்கு குறித்த விடயம் பற்றிய விடயத் தெளிவு ஓரளவுக்கேனும் முன்கூட்டியே தெரிந்திருக்கலாம். எனவே உங்களது புது ideas வெளிப்படும் வண்ணம் முன்வைப்பை வடிவமைக்க வேண்டும்.
- உங்களுடைய தலைப்பை நீங்கள் முழுமையாகப் புரிந்து கொள்ளுங்கள்.
அனேகர் Presentation பண்ணும் போது விடும் தவறு என்னவென்றால், அல்லது அனேகரால் தமது Presentation திறம்படச் செய்ய முடியாமைக்குரிய காரணம் என்னவென்றால் அவர்கள் Presentation ஐ படித்துவிட்டு எடுத்துச் சென்று ஒப்புவிக்கும் ஒரு செயற்பாடாகவே கருதுகின்றனர்.
இதனாலேயே அவர்களது Presentation தோல்வியில் முடிகின்றது. அதன் விளைவு பாரதூரமானதாகும். அடுத்த முறை மேடையில் ஏறலாமா? என்ற அச்சத்தை அது உண்டு பண்ணுகிறது. தலைப்பை நாம் புரிந்து கொண்டுள்ளோம் என்பதை தெரிந்து கொள்வது எவ்வாறு? குறித்த விடயம் நிஜ உலகத்தில் எப்படி பிரயோகிக்கப்படுகின்றது. என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். எவ்வளவு நேரம் ஆனாலும் Subject ஐ நன்றாக புரிந்து கொள்ளுங்கள். எதைச் சொல்ல வேண்டும் எதைச் சொல்லக் கூடாது என்பதை புரிந்து கொள்ளுதல் வேண்டும்.
- தலைப்பின் எல்லையைப் புரிந்து கொள்ளுங்கள்
உங்கள் தலைப்பில் என்னென்ன விடயங்கள் உண்டு? என்னென்ன விடயங்கள் இல்லை? என்பதைப் புரிந்து கொள்ளுதல் வேண்டும். எல்லா தலைப்புக்களுக்கும் எல்லா விடயங்களையும் பேச வேண்டும் போல் எமக்குத் தோன்றினாலும் அனேகமான சந்தர்ப்பங்களில் அது அவசியப் படுவதில்லை என்பதை நாம் புரிந்து கொள்ளுதல் வேண்டும். ஓவ்வொரு தலைப்பிற்கும் இவ்வளவு இருந்தால் போதும் அல்லது இந்த பார்வையாளர்களுக்கு இவ்வளவு போதும் எவையெல்லாம் தலைப்பினுள் அடங்குகிறன? எவையெல்லாம் தலைப்பினுள் அடங்கவில்லை என்பதையும் புரிந்து கொள்ளுதல் வேண்டும்.
- நேரத்தைக் கவனியுங்கள்
எவ்வளவு நேரம் முன்வைப்பை செய்யப் போகின்றீர்கள் என்பது முக்கியமானதாகும். 15 நிமிடம் அல்லது 1 மணித்தியாலம் அல்லது ஒரு நாள் என நேரத்திற்கு ஏற்ப முன்வைப்பை தயார்படுத்துதல் வேண்டும். 15 நிமிட முன்வைப்பு எனில் பிரதான உள்ளடக்கங்களை மாத்திரம் முன்னிலைப் படுத்தலாம். 1 மணித்தியால முன்வைப்பு எனில் பிரதான தலைப்புகள் மட்டுமன்றி உப தலைப்புக்களிலும் கவனம் செலுத்தலாம். ஒரு நாளைக்குரிய முன்வைப்பு எனில் உப தலைப்புகளின் கீழுள்ள விடயங்களை விளக்குவதுடன் எடுத்துக் காட்டுக்களையும் முன்வைக்கலாம். ஆகவே நேரம் உங்களது உள்ளடக்கத்தை எவ்வளவு ஆழமாக முன்வைக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க உதவும்.
- மேடை/அரங்கு
மேடையில் ஏறிப் பேச போகின்றீர்களா? அல்லது வகுப்பறையின் முன்னால் நின்று கொண்டு பேசப்போகின்றீர்களா? அல்லது வகுப்பறையிலேயே ஒரு மேடை இருக்கின்றதா? உங்களைச் சுற்றி எத்தனை பேர் இருக்கப் போகின்றார்கள்? நீங்கள் ஒரு மாநாட்டு மண்டபத்தில் உரையாற்றப் போகின்றீர்களா? இவை எல்லாவற்றையுமே கருத்திலெடுத்துக் கொள்ளல் வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு இடத்திற்கும் போகும் போதும் அந்தந்த இடத்திற்குத் தகுந்தாற் போல் நீங்கள் உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுதல் வேண்டும்.
அந்த இடத்தில் எப்படி நிற்கப் போகின்றீர்கள்? எப்படி பேசப் போகின்றீர்கள் என்பதை கண்ணாடி முன் நின்று பயிற்சி எடுத்துக் கொள்ளுதல் வேண்டும். இந்த கண்ணாடி விதி என்பது மிகவும் முக்கியமானது. நீங்கள் பெரிய முன்வைப்பாளராய் வரும் வரைக்கும், உங்களுக்கு முழு நம்பிக்கை வரும் வரைக்கும் ஓவ்வொரு முன்வைப்புக்கு முன்னரும், கண்ணாடி முன்னால் நின்று பேசிப் பழகி பயிற்சி எடுத்துக் கொள்வது மிக மிக முக்கியமானதாகும். அதே நேரம் ஒரு நிறுத்தற் கடிகாரத்தை வைத்து எவ்வளவு நேரம் Present பண்ணுகின்றீர்கள் என்பதையும் கணித்துக் கொள்ளுதல் வேண்டும். அப்போதுதான் உங்களுக்குத் தெரியும் எவ்வளவு நேரத்தினுள் எவ்வளவு விடயத்தை Present பண்ண முடியும் என்று.
- மேனி மொழி
Compatible with your own skin என்பார்கள். அதாவது உங்களுடைய ஆளுமைக்கும், உங்களுடைய முகபாவத்திற்கும் நீங்கள் இணக்கமானவராதல் வேண்டும். அது குறித்து தாழ்வாக உணரக் கூடாது. ஏன் இப்படி இருக்கின்றோம்? தலைமுடி கோணலாய் இருக்குதே, நாம் இன்னும் கொஞ்சம் வெள்ளையாய் இருந்திருக்கலாமே, தாடி வைத்திருக்கின்றோமே சவரம் செய்திருந்தால் நன்றாய் இருக்குமா? நமக்கு தாடி வளரவில்லையே, இதைப்பார்த்தால் மக்கள் கிண்டலடிப்பார்களோ இது போன்ற எண்ணங்கள் வரலாம். முதலில் இவற்றை விட்டு விட வேண்டும்.
இந்த உடல் கடவுளால் கொடுக்கப்பட்ட அது எப்படி இருந்தாலும் அழகானது என்பதே உண்மை. தவிரவும் அழகு என்பது பார்பவர் கண்களிலேயே உள்ளது என்பது மேலும் உண்மையானது.
எனவே நாம் ஏன் இப்படி இருக்கின்றோம் என்ற எண்ணங்களை விட்டு விட்டு நாம் இப்படி இருப்பதே அழகானது என்ற பக்குவத்திற்கு வர வேண்டும். மேடையில் கண்டபடி அங்குமிங்கும் குறுக்கு நெடுக்காக ஓடுதல், திடீரென முன்னும் பின்னும் திரும்புதல் மற்றும் ஆணி அடித்தாற் போல் ஒரே இடத்தில் நின்று பேசுதல் இறுக்கமாக உடலை வைத்திருத்தல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
கை, கால்களை இலகுவாக வைத்திருக்க வேண்டும். பேசும் போது கை, கால்கள் நடுங்குவது இயல்பு அவ்வாறான நிலையில் மேடையில் பேசுவதற்கென வைத்திருக்கும் போடியத்தைப் (Podium) பயன்படுத்தலாம். காலப்போக்கில் நடுக்கம் தானாகவே நின்றிடும்.
பேசுவதற்கு முன்னர் உங்கள் முழுக்கவனமும் பேசவிருக்கும் விடயத்திலேயே குவிந்திருக்க வேண்டும். அதுவும் முதலில் எப்படி ஆரம்பிப்பது என்பதில் கவனம் செலுத்துதல் வேண்டும்.
கண்களை மூடி Visualizing செய்து பார்க்கலாம். அதாவது இருக்கையை விட்டு எழுந்து நீங்கள் மேடைக்குச் செல்வதைப் போலவும், அப்போது நீங்கள் எப்படி நடந்து செல்ல வேண்டும். பார்வையாளர்கள் உங்களை எப்படி பார்கின்றார்கள் எனவும் பேச்சை எப்படித் தொடங்குகிறீர்கள் எனவும் Visualizing செய்து பார்க்கலாம்.
முடிவுரை
சிந்தித்து பேசப்படும் பேச்சு சிக்கல்களைக் களைகிறது சீரழிவைத் தடுக்கின்றது. சிறப்பான பலன்களையும் தருகின்றது. எனவே மேற்சொன்ன முறைகளினூடாகப் பயிற்சி எடுத்து சிறந்த முன்வைப்பாளராக வர வாழ்த்துகிறேன்!
“நன்றே பேசுவோம் அதை இன்றே பேசுவோம்”
சி.லோகராஜா, விரிவுரையாளர்
தேசிய கல்வியியல் கல்லூரி, மட்டக்களப்பு.
®®®®®®®®®®®®®®