பாடத்தை திட்டமிடல் மற்றும் தயார்படுத்தலுடன் தொடர்புடைய கற்பித்தல் திறன்கள்.
Teaching skills related to lesson planning and preparation.
S.Logarajah SLTES
Lecturer,
Batticaloa National College of Education
திட்டமிடல் மற்றும் தயார்படுத்துதல்
(Planning and preparation)
ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் முக்கியமான பணிகளில் ஒன்று கற்றல் செயற்பாட்டைத் திட்டமிடுவதும் ஒழுங்கமைப்பதாகும். இது ஒவ்வொரு மாணவனுக்கும் நோக்கம் கொண்ட கற்றல் பேறுகளைத் திறம்பட அடைய உதவுகிறது.
ஒரு பாடத்தின் தொடக்கத்தில் எல்லா ஆசிரியருக்கும் சில யோசனைகள் இருக்க வேண்டும்.
- மாணவர்கள் கற்க விரும்புவது யாது?
- இந்தப் பாடம் அந்தக் கற்றலை எவ்வாறு எளிதாக்கும்.
மாணவ ஆசிரியர்கள் பொதுவாக கற்பித்தல் பயிற்சிக்காக தெளிவான, வெளிப்படையான பாடத்திட்டங்களை உருவாக்க வேண்டும்.
அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் பெரும்பாலும் தாம் பாடத்தை எவ்வாறு தொடர வேண்டும் என்பதற்கான மனக் கட்டமைப்பை உருவாக்க தங்களின் விரிவான அனுபவத்தை நம்பியிருக்கின்றார்கள். அதற்காக அனுபவம் மிக்க ஆசிரியர்களின் பாடத்திட்டங்கள் தொடக்க ஆசிரியர்களின் பாடத்திட்டங்களை விட குறைவாக விபரிக்கப்பட்டுள்ளன என்று பொருள் கொள்ளத் தேவையில்லை. அவை மீண்டும் மீண்டும் செய்வதன் மூலம் உள்மயமாக்கப்பட்டுள்ளன.
திட்டமிடல் மற்றும் தயார்படுத்தலின் அடிப்படைகள் பற்றியும் பாடங்களைத் திட்டமிடுதல் மற்றும் தயார்படுத்தல் பற்றியும் பல ஆண்டுகளாக எழுதப்பட்டுள்ளது. (பட் 2006 (Butt), ஸ்கொரோன் (2006) Skowron, டைல்ஸ்டன் Tileston, 2004).
இவை ஒரு பாடத்தை திட்டமிடுவதில்; கவனிக்க வேண்டிய நான்கு முக்கிய அடிப்படைக் கூறுகளை அடையாளம் கண்டுள்ளன.
- பாடத்தை வளர்ப்பதற்காக திட்டமிடப்பட்ட கல்வி நோக்கங்களை தீர்மானித்தல்.
- ஒரு பாடத்தின் தெரிவு மற்றும் Scripting> பயன்படுத்த வேண்டி செயற்பாடுகளின் வகை மற்றும் தன்மையினைத் தீர்மானிப்பது என்பன அடங்கும்.
உதாரணம் : விளக்குதல், குழு வேலை, வாசிப்பு, இந்த செயற்பாடுகள் ஒவ்வொன்றின் வரிசை, நேரம் மற்றும் பயன்படுத்த வேண்டிய வளங்கள்
- கற்பித்தல் சாதனங்கள் உட்பட பயன்படுத்த வேண்டிய அனைத்து வளங்களையும் தயாரித்தல்.
- பொருட்கள், மாதிரிகள் உபகரணங்கள், கட்டளை மற்றும் விநியோகம் மற்றும் வேலை ஒழுங்கு, வகுப்பறையின் தள அமைப்பு, சில சமயங்களில் ஒரு ஒத்திகை கூட
மாணவர்களின் முன்னேற்றத்தையும் சாதனைகளையும் எவ்வாறு கண்காணிப்பது, மதிப்பிடுவது, பாடத்திற்கு பின்னர் கற்றல் நிகழ்ந்துள்ளதா? என்பதை மதிப்பிடுவது, பாடங்களை மதிப்பீடு செய்யும் போது திட்டமிடல் மற்றும் தயார்படுத்துதல் தொடர்பான இரண்டு முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
- பாடத்தின் நோக்கம் என்ன என்பது தெளிவாக இருக்கின்றதா?
- பாடம் கற்பவர்களின் தேவைகளுக்கு போதுமானதாக உள்ளதா?
முதல் வினா பாடத்தின் கல்வி நோக்கங்கள் எவ்வளவு தெளிவாக இருந்தன என்பதைக் குறிக்கின்றது. இரண்டாவது வினா அவர்களின் முந்தைய கற்றல் மற்றும் எதிர்கால கற்றல் அடைவுகளின் முன்னேற்றம் ஆகியவற்றின் வரம்பு மற்றும் வகைகளை எவ்வாறு கருத்தில் கொள்கிறது என்பதைக் குறிக்கின்றது.
பயனுள்ள கற்பித்தல் திறன்கள் அனைத்திலும் மிக முக்கியமானது மாணவர்களின் தேவைகளுக்கு ஆசிரியரின் உணர்திறன் ஆகும். இது பாடங்களைத் திட்டமிடவும், வெவ்வேறு மாணவர்களால் பாடம் எவ்வாறு அனுபவிக்கப்படும் என்பதையும், அவர்களின் கற்றலை வளர்ப்பதையும் கருத்திற் கொள்ளுவதன் மூலம் பாடங்களைத் திட்டமிடுவதற்கும், விநியோகத்தை மாற்றியமைப்பதற்குமான ஆசிரியரின் திறனைக் குறிக்கின்றது. கற்பித்தல் நிகழும் சூழலில் மாணவர்களின் தேவைகளை அது எவ்வாறு பூர்த்தி செய்கின்றது என்பதைக் கருத்திற் கொள்ளாமல் ஒரு பாடத்திட்டத்தின் தரத்தை மதிப்பீடு செய்ய முயற்சிப்பது சாத்தியமற்றதும் அர்த்தமற்றதுமாகும்.
திட்டமிடல் திறன்கள்
(Skill in Planning)
ஆரம்ப கற்பித்தல் பயிற்சியின் போது உருவாக்கப்பட வேண்டிய திறன்களின் பட்டியலை ஆராய்வதன் மூலம் அத்தியாவசிய கற்பித்தல் திறன்கள் குறித்த மேலதிக ஆதாரங்களைப் பெற்றுக் கொள்ளலாம். உதாரணமாக பிரித்தானியாவின் பயிற்சி மற்றும் அபிவிருத்தி முகவர் நிலையம் (TDA) 2007 இல் வெளியிட்ட தரமான ஆசிரியர் தரநிலை (QTS) திட்டமிடலில் பல கூறுகளை உள்ளடக்கியது. இவை பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்துகின்றது.
- வயது மற்றும் திறன் அடிப்படையில் முன்னேற்றத்திற்கான திட்டமிடல்.
- பாடங்களின் வரிசை மற்றும் தொடர் பாடங்கள் மூலம் பயனுள்ள கற்றலுக்கான திட்டமிடல்.
- மாணவர்களுக்கு எழுத்தறிவு, எண்ணறிவு, ICT திறன்களை வளர்ப்பதற்கான வாய்ப்புக்களை திட்டமிடல்.
- மாணவர்களின் முன்னேற்றத்தைத் தக்கவைக்க வீட்டுப்பாடம் மற்றும் வகுப்பிற்கு வெளியேயான வேலைகளைத் திட்டமிடல்.
- மின்–கற்றல் உள்ளிட்ட கற்பித்தல் உத்திகள் மற்றும் வளங்ளை ஒரு வீச்சில் இணைத்தல்
- பன்முகத் தன்மையின் நடைமுறையை கருத்திற் கொள்ளுவதுடன் சமத்துவம் மற்றும் உட்படுத்தலை ஊக்குவித்தல்.
- மாணவர்களின் முன்னறிவை கட்டியெழுப்புதல்.
கல்வி நோக்கங்கள்
(Educational objectives)
ஒரு பாடத்திற்கான கல்வி நோக்கங்களைத் தெரிந்தெடுப்பது சாதாரண பணி அல்ல. (Gronlund and Nivaldo, 2004). குறைந்த பட்சம் கல்வி ரீதியாக பயனுள்ள நோக்கங்களுக்கு அவர்கள் பங்களிப்பச் செய்ய வேண்டும். இருப்பினும் பெஷன்கள் மாறுகின்றன. ஒரு காலத்தில் பயனுள்ளதாகக் கருதப்படுவது இப்போது பொருத்தமற்றதாகக் கருதப்படலாம்.
உதாரணமாக: இலங்கையைச் சுற்றியிருந்த பண்டைய துறைமுகங்களின் பெயர்களை மனப்பாடம் செய்தல்.
பல பாடசாலைகள் தங்கள் அபிலாஷைகளில் பல கல்வி நோக்கங்களைப் பட்டியலிடுகின்றன. மாணவர்கள் தங்கள் பாடசாலை வாழ்க்கையில் கவனம் செலுத்த வேண்டிய குறிப்பிட்ட குறிக்கோள்களுடன் பாடசாலையும் சமூகமும் மாணவர்களின் ஆன்மீக, தார்மீக, கலாசார, மன மற்றும் உடல் வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும். மாணவர்களை வளர்பருவ வாழ்க்கைளின் வாய்ப்புக்கள், பொறுப்புக்கள், அனுபவங்களுக்கேற்ப தயார்படுத்த வேண்டும்.
எமது நாட்டில் தேசிய கலைத்திட்டம் நடைமுறைப் படுத்தப்படுகின்றது. பாடசாலைக் கலைத்திட்டத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய பாடங்கள் காலத்துக்குக் காலம் கல்விச் சீர்திருத்தங்கனிள் ஊடாக மறுசீரமைக்கப்பட்டும் வருகின்றது.
தேசிய கலைத்திட்டத்தில் குறிப்பிடத்தக்க பரந்த தகவல்கள் உள்ள போதிலும் இது ஆசிரியர்களுக்கு பாடத்தை திட்டமிடுவதற்காக ஒரு பரந்த கட்டமைப்பை மட்டுமே வழங்குகின்றது. ஆசிரியர்கள் தனிப்பட்ட பாடங்களைத் திட்டமிட இன்னும் விடயங்கள் தேவையாக உள்ளன.
கல்வி நோக்கங்களைத் தேர்ந்தெடுப்பதில் மாணவர்களின் அறிவு, புரிதல், திறன்கள் மற்றும் மனப்பாங்கு வளர்ச்சியின் அடிப்படையில் திறம்பட பகுப்பாய்வு செய்யக்கூடிய கற்றல் விளைவுகளை பரிந்துரைக்க ஆசிரியர் கடமைப்பட்டிருக்கின்றார்.
இந்த திட்டமிடல் மிகவும் சிக்கலானது. ஏனென்றால் ஒரு ஆசிரியர் தவிர்க்க முடியாமல் ஒரு குறிப்பிட்ட பாடத்திற்கான பலவிதமான விளைவுகளைக் மனதில் கொண்டுள்ளார்.
உண்மையில் நோக்கம் கொண்ட கற்றல் விளைவுகள் வகுப்பிலுள்ள மாணவர்களிடையே குறிப்பிடத்தத்த அளவில் மாறுபடலாம். மேலும் அனைத்துப் பாடங்களும் அறிவார்ந்த வளர்ச்சிக்கும் சமூக வளர்ச்சிக்கும் இடையிலான ஒரு தொடர்பை உள்ளடக்கியது.
(முதன்மையாக மாணவர்கள் கற்றவர்களாக சுயமரியாதையையும், தன்னம்பிக்கையையும் வளர்த்துக் கொள்வதால் இவ் விடயத்தில் அதிக நேர்மறை மனப்பாங்கு, அவர்களின் நடத்தை மற்றும் வகுப்பில் மற்றவர்களுடனான தொடர்புகளில் அதிக முதிர்ச்சி என்பவற்றின் அடிப்படையில்)
கல்வி இலக்குகளை நிர்ணயிப்பதற்கான யோசனை, திட்டமிடலின் ஒரு முக்கிய பகுதியாக பரவலாக ஒப்புக் கொள்ளப்பட்டாலும் ஆசிரியர்களின் திட்டமிடல் குறித்த சில ஆய்வுகளிலிருந்து ஆசிரியர்களுக்கு கல்வி இலக்குகளை அடையாளம் கண்டு அதற்கேற்ப பாடங்களைத் திட்டமிட்டு வழங்கத் தெரியவில்லை எனத் தெரிகின்றது.
மாறாக அவர்கள் திட்டமிடல் பணியை பிரச்சினை தீர்க்கும் பாணியில் அணுகுகிறார்கள். பாடத்தின் போது மாணவர்களின் நேரத்தையும் அனுபவத்தையும் எவ்வாறு சிறப்பாக அமைப்பது என்ற பிரச்சினையைத் தீர்ப்பதன் மூலம் பெரும்பாலான ஆசிரியர்கள் கற்றல் விளைவுகளின்றி பாடத்தை திட்டமிடுகிறார்கள். இது ஒரு தவறான அணுகுமுறை என நான் நினைக்கிறேன். ஒரு ஆசிரியரிடம் பாடத் திட்டமிடல் பற்றிக் கேட்டால் அவர்கள் கூறும் கல்வி நோக்கங்கள் தெளிவற்றவை. மற்றும் தற்காலிகமானவையாக இருக்கும். மேலும் அவர்களது விளக்கத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டிருக்கும். இருப்பினும் இதுவும் ஒரு தவறான விளக்கம் என்றே எண்ணத் தோன்றுகிறது. எனினும் ஆசிரியர்கள் தங்கள் பாடங்களைத் திட்டமிடும் போது கல்வி நோக்கங்களைப் பற்றி சிந்திக்கின்றார்கள் என்பதற்கு தெளிவான ஆராய்ச்சிச் சான்றுகள் உள்ளன. பாடத்தின் போதும் மற்றும் அதற்குப் பின்னர் எற்படும் சிந்தனை பற்றி பேசும் போது ஆசிரியர்களால் பெரும்பாலும் இது விளக்கப்படுகின்றது.
ஒட்டுமொத்தமாக ஆசிரியர்கள் ஒரு பாடத்திற்கான கல்வி நோக்கங்களை எவ்வாறு எப்போது அமைக்கிறார்கள் என்பதை அடையாளம் காண்பதிலுள்ள பிரச்சினையின் ஒரு பகுதி என்னவென்றால் அவர்கள் தங்கள் எண்ணங்களை மற்றவர்களுக்கு எவ்வாறு வெளிப்படுத்துகிறார்கள் என்பதைப் பற்றியதாகும்.
கல்விக் குறிக்கோள்களைத் தீர்மானித்தல்
Deciding on educational objectives
திட்டமிடலில் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்களில் ஒன்று கல்விக் குறிக்கோளைத் தீர்மானிப்பதாகும். கல்வி நோக்கத்தின் முக்கியமான அம்சம் என்னவென்றால் அது மாணவரது கற்றலை விளக்குவதாக இருப்பதாகும்.
பிரதானமாக எண்களைப் பற்றிய அறிவைப் பெறுவது, வரலாறு பாடத்தில் காரணத்தின் தன்மையைப் புரிந்து கொள்வது, ஒரு நதியின் பாதையை கோடுகள் வழியாக கடலுக்குள் வரையும் திறனைப் பெறுதல் ஆகியவை அனைத்தும் மாணவர்களின் அறிவுசார் வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்யும் கல்வி நோக்கங்களுக்கு நல்ல எடுத்துக்காட்டுகளாகும்.
மற்ற மாணவர்களுடன் ஒத்துழைப்புடன் ஈடுபடும் திறனை வளர்த்துக் கொள்வது, வகுப்புக் கலந்தரையாடலின் போது மற்ற மாணவர்களின் கருத்துக்களை அதிக கவனத்துடன் கேட்டும் திறனைப் பெறுதல், தனது சொந்த திறன்களை பற்றி மேலும் உணர்ந்து கொள்ளல் என்பன மாணவர்களின் சமூக வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்யும் கல்வி நோக்கங்களுக்கு நல்ல எடுத்துக்காட்டுகளாகும்.
மாணவர்கள் என்ன செய்வார்கள் என்பதன் அடிப்படையில் கல்வி நோக்கங்களை கூற முடியாது உதாரணமாக, ஒரு பயிற்சியின் மூலம் பணியாற்றுதல், வரைபடம் வரைதல், அல்லது சிறிய குழு விவாதம் போன்றவற்றின் அடிப்படையில் கல்வி குறிக்கோள்களை வெளிப்படுத்த முடியாது.
இவை கற்றலை மேம்படுத்தப் பயன்படும் நடவடிக்கைகள், கல்வி நோக்கங்கள் கற்றல் என்றால் என்ன என்பதை தெளிவாக விபரிக்க வேண்டும். கல்வி நோக்கங்களைப் பற்றிய சரியான சிந்தனையைப் புறக்கணிப்பதும், திட்டமிடலை வெறுமனே நிறுவன நடவடிக்கைகளாகக் கருதுவதும், கற்பித்தலில் இருக்கும் மிகப் பெரிய ஆபத்து ஆகும்.
மாணவர்கள் உண்மையில் என்ன கற்றுக் கொண்டார்கள் என்று நீங்கள் கேட்டுக் கொள்ளும் வரை திட்டமிடப்பட்ட ஒரு பாடம் பயனுள்ளதாக இருக்கும் எனக் கருதுவது எளிதானது. அதாவது மாணவர்கள் நீங்கள் நினைத்ததைச் செய்தார்கள் எனக் கருதுவது எளிதானது.
நாம் கல்வி நோக்கங்களை தேந்தெடுக்கும் போது இந்த நோக்கங்கள் மாணவர்கள் ஈடுபடும் முந்தைய மற்றும் எதிர்கால செயற்பாடுகளுடன் எவ்வாறு தொடர்புபடுகின்றன என்பதையும், அவர்களின் தற்போதைய திறன்கள், அணுகுமுறைகள், நலன்கள் தேவைகளை விரிவாக்குவது எவ்வளவு பொருத்தமானது என்பதையும் பற்றி அதிகம் சிந்திக்க வேண்டும்.
எடுத்துக்காட்டாக முதன்மை எண்களை அறிமுகப்படுத்துவதாக இருந்தால் எண்களுக்கு காரணிகள் இருப்பதன் அர்த்தம் குறித்து எற்கனவே மாணவர்களுக்கு புரிதல் இருக்கின்றதா? என்பதைக் கவனிக்க வேண்டும்.
உண்மையில் புதிய கற்றலை முந்தைய கற்றலுடன் இணைப்பது முக்கியமானதாகும். குறிப்பாக புதிய கற்றல் முந்தைய கற்றலில் இருந்து வளரக்கூடியதாக இருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
எனவே முதன்மை எண்கள் பற்றிய பாடத்தில் மாணவர்கள் தங்கள் முன்னறிவை மீட்கவும், காரணிகள் பற்றிய புரிதலை ஏற்படுத்தவும் பொருத்தமான ஒரு செயற்பாட்டை பயன்படுத்தலாம்.
இது அந்த முன்னணியில் எல்லாம் நன்றாக இருக்கின்றதா என்பதை சோதிக்கும். பின்னர் அவர்கள் வகுக்கக் கூடிய எண்களை தனித்தனியாக அடையாளம் கண்டு அவற்றிற்கு முதன்மை எண்கள் என ஒரு சிறப்புப் பெயரை கொடுக்கலாம். இது முந்தைய கற்றலை கண்டுபிடிப்பு மற்றும் வளர்ச்சியின் உணர்வோடு இணைப்பதோடு முந்தைய கற்றலையும் விரிவாக்குகின்றது.
திட்டமிடலின் முக்கிய நோக்கங்களும் செயற்பாடுகளும்
பாடத்தை திட்டமிடுவதனூடாக, முக்கியமான நோக்கங்கள் மற்றும்; செயற்பாடுகள் நிறைவேற்றப்படுகின்றன. முதன்மையானதும் முக்கியமானதுமான விடயம் என்னவென்றால்
குறிப்பிட்ட பாடத்தில் நீங்கள் விரும்பும் கற்றல் வகையைப் பற்றி தெளிவாக சிந்தித்துப் பார்க்க உதவுவதாகும். மேலும் கல்வி நோக்கங்களை மாணவர்கள் குறித்தும் மற்றும் வகுப்பறைச் சுழல் குறித்தும் உங்களுக்குத் தெரிந்தவற்றுடன் தொடர்புபடுத்த உதவியாய் அமையும்.
இரண்டாவதாக பாடத்தின் அமைப்பு மற்றும் உள்ளடக்கத்தைப் பற்றிய சிந்தனைக்கு உதவியாய் அமையும். மிக முக்கியமாக ஒவ்வொரு செயலுக்கும் எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும் என்பதில் கூடிய கவனம் செலுத்த உதவும்.
உண்மையில் கற்பிப்பதில் மிக முக்கியமான திறமை என்னவென்றால், ஒரு பாடத்தில் ஒவ்வொரு செயற்பாட்டிற்கும் எவ்வளவு நேரம் செலவிட வேண்டும் என்பதும், செயல்பாட்டின் மூலம் முன்னேற்றத்தின் அசைவை தீர்பானிப்பதுமாகும்.
மூன்றாவதாக திட்டமிடல் பாடத்தின் போது நாம் செய்யவேண்டிய சிந்தனையின் அளவைக் கணிசமாகக் குறைக்கின்றது. பாடத்தின் போது நீங்கள் எவ்வளவு சிந்திக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க உதவுகிறது. பாடம் செயற்படுத்தப்பட்டதும் அதன் செயல்திறனைப் பராமரிக்க செயலற்ற தன்மையைப் பற்றி அதிகம் சிந்திக்க வேண்டியிருக்கும்.
ஒட்டுமொத்தமாக பாடம் நன்கு திட்டமிடப்பட்டுள்ளது என்பது சாதாரணமாக நம்பிக்கையில் முடிவுகளை எடுக்க முயற்சிப்பதை விட பாடத்தை திருத்துவதில், நன்றாக மெருகூட்டுவதில் கூடிய கவனம் செலுத்தலாகும். உண்மையில் ஒரு பாடத்தைப் பற்றிய பெரும்பாலான முடிவுகளை முன்கூட்டி மட்டுமே எடுக்க முடியும்.
எடுத்துக்காட்டாக ஒரு பாடத்தில் ஒரு வரைபடம் தேவை என்பது தெளிவாகத் தெரிந்திருந்தும் திட்டமிடலின் போது நீங்கள் அதை கவனிக்கவில்லை எனில் வரைபடம் கிடைக்கப் பெற்று அதனை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டாலும் நீங்கள் பெரிதாக ஒன்றும் செய்ய இயலாது.
இங்கு வலியறுத்தப்படும் விடயம் என்னவெனில் கற்பித்தல் பற்றி விவேகமான முடிவுகள் எடுக்க முயற்சிக்கும் போது அழுத்தத்தில் இருப்பது நல்லதல்ல என்பதாகும். கற்பிக்கும் போது மிக எளிதாக பாடத்தின் போக்கை அதன் இயக்கத்தை மாற்ற முயற்றி செய்வது வெவ்வேறு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். நீங்கள் அனுபவத்துடன் வளரும் போது என்ன செய்கிறீர்கள்?, நீங்கள் எதிர் கொள்ளும் சூழ்நிலைகள் குறித்து நன்கு புரிந்து கொள்வீர்கள்.
நான்காவதாக, திட்டமிடல் பொதுவாக தேவையான அனைத்துப் பொருட்களையும், வளங்களையும் தயாரிப்பதற்கு வழிவகுக்கிறது. எடுத்துக்காட்டாக பெரும்பான்மையான மாணவர்களுக்கு முன்னர் எதிர்பார்க்கப்படும் பணியை முடிக்கக்கூடிய எந்தவொரு மாணவனுக்காகவும் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட எந்தவொரு வேலையும் இருப்பது, அல்லது இரண்டு செயற்பாடுகளுக்கிடையில் நீங்கள் மதிப்பிட விரும்பும் முக்கிய குறிப்புக்களின் சுருக்கம் தயாரிக்கப்பட்டிருப்பது சீராகவும், பயனுள்ளதாகவும் முன்னேற்ற உதவுகின்றன.
ஐந்தாவதாக குறிப்புக்களை வைத்திருப்பது திட்டமிடலின் ஒரு முக்கிய பகுதியாகும், மேலும் இது உங்கள் எதிர்காலத் திட்டங்களுக்கு பயனுள்ள பதிவை வழங்கும். குறிப்பாக இதே போன்றதொரு பாடத்தை மற்றொரு மாணவக் குழுவினருக்கு வழங்குவது போதும், எதிர்கால வேலைகளை மாணவர்களுடன் திட்டமிடும் போதும் அவர்கள் அக் குறிப்பிட்ட பாடத்தில் செய்ததை விரிவாக்குவார்கள்.
திட்டமிட செலவிட்ட நேரம்
திட்டமிடலில் செலவழித்த நேரம் ஆசிரியர்களுக்கிடையிலும் அதே ஆசிரியருக்கு பாடங்களுக்கிடையிலும் பெரிதும் மாறுபடும். புதிய ஆசிரியர்களுக்கு நிச்சயமாக திட்டமிட அதிக நேரம் தேவைப்படுகிறது. சம அளவிலான அனுபவமுள்ள ஆசிரியர்களிடையே சில வேறுபாடுகள் அவற்றின் பொது நடை அல்லது திட்டமிடல் அணுகுமுறையுடன் தொடர்புடையதாகத் தெரிகின்றது.
சுருங்கக் கூறின் ஒரு பாடம் நன்கு திட்டமிடப்பட்டிருந்தால் சில ஆசிரியர்கள் கற்பித்தல் பணிகளைப் பற்றி பாதுகாப்பாகவும், நிதானமாகவும் உணர்கிறார்கள். மற்றவர்கள் பாடத்தை தொடங்குவதில் சிறு மன அழுத்தத்தை எதிர்கொள்கிறார்கள் என்றே கூறலாம்.
சந்தேகத்திற்கு இடமின்றி ஒவ்வொரு பாடத்தையும் திட்டமிடுவதற்கு முன்கூட்டியே சிறிது நேரம் ஒதுக்க ஆசிரியரை அனுமதிப்பதே சிறந்த அணுகுமுறையாகும். இருப்பினும் ஒரு ஆசிரியராக வாழ்க்கையின் யதார்த்தம் என்னவென்றால் உங்கள் நேரத்தை பல்வேறு போட்டிகளுக்கும், வேறு பாடசாலைத் தேவைகளுக்கும் செலவிட வேண்டி இருப்பதாகும். இதனால் திட்டமிடலுக்கு எடுக்கும் நேரம் ஓரளவு கட்டுப்படுத்தப்படுகிறது. இதன் விளைவாக புதிய அல்லது அதிக தேவையுள்ள பாடங்களில் பரந்த முறையான திட்டமிடல் குறித்து கவனம் செலுத்த வேண்டி உள்ளது.
நெகிழ்வுத் தன்மை
Flexibility
திட்டமிடலில் மற்றுமொரு முக்கியமான அம்சம் உங்கள் திட்டங்களைச் செயல்படுத்துவதில் நெகிழ்வுத் தன்மையோடு இருப்பதாகும். பயனுள்ள கற்பித்தல் என்பது பாடத்தின் போது மாணவர்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதைக் கண்காணித்தல், மாற்றியமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றைப் பொறுத்தது.
எவ்வளவு கவனமாக நன்கு சிந்தித்து பாடத்தை திட்டமிட்டாலும், அது தொடங்கியதும் விடயங்கள் எவ்வாறு நடந்து கொண்டிருக்கின்றன என்பதற்கான உடனடிக் கோரிக்கைகளிலேயே அது முழுமையாக முன்னுரிமை பெறுகின்றது.
நீங்கள் அறிமுகப்படுத்த அல்லது விவாதிக்க விரும்பிய சில யோசனைகள் ஏற்கனவே மாணவர்களால் நன்கு புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது. அல்லது அவ்விடயத்தைப் புரிந்து கொள்ள நீங்கள் நினைத்ததை விட வேறுபட்ட வழிமுறைகள் உள்ளன. அல்லது நீங்கள் நிர்ணயித்த பணியைச் செய்வதில் ஏராளமான மாணவர்கள் சிரமப்படுவதை நீங்கள் கவனிக்கலாம். மேலும் பெரும்பாலான பாடங்களுக்கு இடையூறு இல்லாமல் வேலை செய்ய மாணவர்களை அனுமதிக்க நீங்கள் திட்டமிட்டிருக்கலாம். இவ்வாறான சந்தர்ப்பங்களில் மாணவர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்ய உங்கள் அசல் திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவது பொருத்தமானது.
துரதிர்ஷ்டவசமாக புதிய ஆசிரியர்கள் மோசமான வெகுமதிகளை அறுவடை செய்கிறார்கள் ஒரு பாடத்துக்கான தங்கள் திட்டத்தை தயாரிப்பதில் அதிக நேரத்தையும், சக்தியையும் செலவிடுகிறார்கள் அதேநேரத்தில் அதிக தேவையுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். அதாவது நடைமுறையில் இருக்க வேண்டிய, தொடர்ச்சியாக தேவைப்படும் கருத்துக்களைக் கவனித்து தங்கள் திட்டங்களை மாற்றியமைக்க வேண்டும்.
ஒரு செயற்பாட்டு கவனமாக தயாரிக்கப்பட்டிருந்தாலும் ஒழுங்கமைக்கப்பட்ட பணிகள் மிகவும் வேறுபட்டதாக இருந்தால் முழு வகுப்பிற்கும் கற்பிப்பதற்கு விரைவான மாற்றம் தேவைப்படலாம். அவ்வாறு செய்தால் ஒரு செயற்பாட்டிலிருந்து மற்றொரு செயற்பாட்டிற்கு மாற்றுவதில் சிக்கல்கள் ஏற்படும்.
அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களுக்கு இது போன்ற நிலைமைகள் ஏற்படுவது குறைவு. தொடக்க ஆசிரியர்கள் இவ்வாறான நிலைமையை சந்திக்கும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. இதன் காரணமாக எழும் சிக்கல்கள் மிகவும் கடுமையானதாக இல்லாவிட்டால் ஆசிரிய மாணவர்கள் தொடர்ந்து தங்கள் அசல் திட்டத்துடன் இணைந்திருக்க வாய்ப்பு இருக்கும். ஆயினும் அவர்கள் அனுபவத்தை உருவாக்கும் வரை அவ்வாறு செய்வது விவேகமற்றது. அனுபவமுள்ள ஆசிரியர்கள் தமது தொழில் முறை அறிவையும், அனுபவத்தையும் கொண்டு, ஒரு செயற்பாட்டிலிருந்து மற்றொரு செயற்பாட்டிற்கு இலகுவாகச் செல்வதற்கான திறனைப் பெற்றிருப்பர்.
பாடத்தை திட்டமிடும் திறன்களை மேம்படுத்துதல்
Enhancing lesson planning skills
தொடக்க ஆசிரியர்களுக்கும், அனுபவமிக்க ஆசிரியர்களுக்கு இடையிலான மிக முக்கிய வேறுபாடு என்னவென்றால் பாடங்களின் முழு வரிசையும் ஒன்றாக இருக்காது என்பதைப் பற்றி நீண்ட பார்வைக்கு உட்படும் திறன் ஆகும்.
நிச்சயமாக அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் பல வாரங்களுக்கு மேலாக ஒரு தலைப்பைக் கையாண்ட பின்னர் மாணவர்கள் சென்றடைய வேண்டும் என அவர்கள் விரும்பும் கற்றலின் இறுதிப் புள்ளியைப் பற்றி அதிகம் அறிந்திருக்கிறார்கள்.
அதே வேளை தொடக்க ஆசிரியர்கள் ஒரு குறிப்பிட்ட பாடத்துக்கான குறுகிய கால கற்றல் விளைவுகளில் அதிக கவனம் செலுத்த முயல்கிறார்கள். மெக்குட்சியோன் மற்றும் மில்லர் McCutcheon and Milner (2002) ஆகியோர் இடைநிலைப் பாடசாலை ஆங்கில ஆசிரியர் பற்றிய விடய ஆய்வில் இவ் விடயம் நன்கு விளக்கப்பட்டுள்ளது.
பாடங்களை திட்டமிடுவதில் ஆசிரியருக்குள்ள செழிப்பான உள்ளடக்க அறிவை பெற முடிந்த விதத்தையும் தனிப்பட்ட பாடங்களைத் திட்டமிடுவதையும், ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட கருப்பொருட்கள் பற்றிய அவரது சிந்தனை, எந்த கலைத்திட்டப் பொருட்கள், செயற்பாடுகளைப் பயன்படுத்த வேண்டும் என்பதை அவர் நோக்கிய விதம், திட்டமிடல் குறித்த நீண்டகால முன்னோக்கு ஆகியவற்றை மேற்படி ஆய்வானது தெளிவாகக் காட்டுகிறது.
பாடங்களை திட்டமிடும் போது அனுபவமிக்க ஆசிரியர்களுக்கும், தொடக்க ஆசிரியர்களுக்குமிடையிலான மற்றுமொரு வேறுபாடு கல்வியியல் உள்ளடக்கம் பற்றிய அறிவாகும். அதாவது குறிப்பிட்ட தலைப்புக்களை எவ்வாறு கற்பிப்பது என்பது பற்றிய அறிவுமாகும்.
ஒரு குறிப்பிட்ட தலைப்பினை பல முறை கற்பித்த பின்னர் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் அந்த தலைப்பை கற்பிப்பதிலுள்ள இடர்பாடுகளையும், மாணவர்களின் புரிதலை வளர்த்து வலுப்படுத்த வேண்டிய பகுதிகளையும், நன்கு அறிவார்கள். தலைப்பின் எந்த அம்சங்கள் நன்கு புரிந்து கொள்ளப்பட வேண்டிய முக்கிய கூறுகள் என்பதையும், அதைச் செய்வதற்கு எவ்வளவு நேரம் ஒதுக்கப்பட வேண்டும் என்பதையும் அவர்கள் அதிகம் அறிந்திருக்கிறார்கள். ஒரு அனுபவம் வாய்ந்த ஆசிரியர் தனது பாடப்பகுதியின் ஏற்றுக்கொள்ளப்பட்ட எந்தவொரு தலைப்பையும் கற்பிக்க எந்த நேரத்திலும் தயாராகவே இருப்பர்.
அவர்கள் முதலில் மாணவர்களது வயது, பொதுத்திறன், உந்துதல் பற்றி ஏதாவது தெரிந்து கொள்ள விரும்புவார்கள், கற்பிக்கும் தலைப்பைப் பற்றி மாணவர்களின் முன்னறிவை தெரிந்து கொள்ள விரும்புவார்கள். இது கேள்வி பதில் அமர்வாக பாடத்தின் தொடக்கத்தில் சரிபார்க்கப்படும்.
முன்னதாக வெவ்வேறு மாணவ குழுக்களுடன் இத்தலைப்பை கற்பித்த ஆசிரியரின் அனுபவம் எவ்வாறு பாடம் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது என்பது குறித்த தெளிவான யோசனையை அளிக்க போதுமானது. இந்த அறிவுச் செல்வம் தொடக்க ஆசிரியர்களுக்கு இருக்காது.
வான்டெர் வல்க் மற்றும் ப்றொக்மேன் (Van Der Valk and Broekman-1999) மேற்கொண்ட ஆய்வானது ஆசிரிய மாணவர்களின் கல்வி சார் உள்ளடக்க அறிவை ஆராய்வதாக அமைந்திருந்தது. ஆசிரிய மாணவர்கள் ஒரு தலைப்பைப் பற்றி பாடத்திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். பின்னர் அதனை எவ்வாறு கற்பிப்பது என அவர்களை பேட்டி கண்டனர். இந்த நேர்காணல்கள் அவர்களின் கல்வி உள்ளடக்க அறிவை ஆராய மிகவும் பயனுள்ள வழியை வழங்கின.
உண்மையில் திட்டமிடல் குறித்து ஆசிரியர்கள் பயிற்றுனர்களின் கருத்துக்கள் பின்னூட்டல்கள் ஆசிரியர்களின் பாடத் திட்டமிடல் திறன்களை வளர்க்கத் தொடங்குவதற்கு மிக முக்கியமான கற்றல் அனுபவத்தை வழங்குகிறது.
உசாத்துணை :
Kyriacou CHRIS 2007), Essential Teaching Skills, Nelson Thornes Ltd, Delta Place United Kingdom.
சி.லோகராஜா , விரிவுரையாளர்
தேசிய கல்வியியல் கல்லூரி
மட்டக்களப்பு.