ஆசிரியர் உதவியாளர் நியமனத்தில் மாற்றான் தாய் மனப்பாங்குடன் அரசு செயல்படுகின்றது!
மலையக பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய 2015 ஆண்டு ஆசிரியர் உதவியாளர் நியமனம் வழங்கப்பட்டு எட்டு வருடங்கள் கடந்தும் ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கப்படாமை தொடர்பாக கல்வி அமைச்சர் சுசில் பிரம்ம ஜயந்த மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் அவர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்
கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்ட விடயங்களாக 2015 ஆம் ஆண்டு ஆசிரியர் உதவியாளராக நியமனம் வழங்கிய போது மாதாந்த கொடுப்பனவாக 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு பின் பல போராட்டங்களுக்கு மத்தியில் கொடுப்பனவானது 10000 ரூபாய்வாக உயர்த்தப்பட்டது. ஆசிரியர் பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கு கட்டம் கட்டமாக ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கும் வகையில் நியமனம் வழங்கப்பட்டது. 2015 ம் ஆண்டு ஆசிரியர் உதவியாளர்களாக நியமனம் பெற்ற அனேகமானோர் ஆசிரியர் சேவைக்கு உள்வாங்கப்பட்டாலும் சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் பயிற்சியை நிறைவு செய்து இறுதி ஆண்டு பரீட்சை பெறுபேறுகள் 2022/10/20 திகதி வெளியாகியும் கூட இதுவரை நியமனத்தினை வழங்காமல் கல்வி அமைச்சும் மற்றும் மாகாண கல்வி அமைச்சும் இழுத்தடிப்பு செய்து வருகின்றது.
இவ்விடயம் தொடர்பாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் பல கடிதங்களும் அனுப்பியும், போராட்டங்களை நடத்தியும் இவர்களுக்கான நியாயமான தீர்வு இதுவரை வழங்கப்படவில்லை. நாட்டின் பொருளாதார நெருக்கடியில் பாரிய பிரச்சினைகளுக்கு இவ் ஆசிரியர் உதவியாளர்கள் முகம் கொடுத்து வருகின்றார்கள். மலையக மக்களின் வாக்கை பெற்று தற்போது கல்வி இராஜாங்க அமைச்சராக இருக்கும் அரவிந்தகுமார் அவர்கள் இவ்விடயத்தில் தலையீடு செய்து மிக விரைவில் ஆசிரியர் நியமனத்தை பெற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்வதோடு மிக விரைவில் இதற்கான தீர்வு கிடைக்காவிட்டால் போராட்டங்களை முன்னெடுக்க நேரிடும் எனவும் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.