HOW TO IMPROVE STUDENTS’ CREATIVE THINKING SKILLS.?
மாணவர்களின் ஆக்கச் சிந்தனைத் திறனை எவ்வாறு மேம்படுத்துவது.?
S.Logarajah
Lecturer, Batticaloa National College of Education
ஆக்கச் சிந்தனை (CREATIVE THINKING) என்றால் என்ன?
நாம் ஆக்கப்பூர்வமாக சிந்திக்கும்போது, அசல் யோசனைகள் மற்றும் அசாதாரண தீர்வுகளைக் கொண்டு வர நாம் கற்பனையைப் பயன்படுத்துகிறோம். கிரியேட்டிவ் சிந்தனையில் பகுப்பாய்வுத் திறன், சிக்கல் தீர்க்கும் திறன், நிறுவன மற்றும் தகவல் தொடர்பு திறன் ஆகியவை அடங்கும். இந்த குணங்கள் ஒன்றிணைந்துதான், சிக்கலான பிரச்சினைகளை வரையறுக்கவும் தீர்க்கவும் உதவுகின்றன அத்தோடு வேலை மற்றும் வெளியில் அன்றாட சூழ்நிலைகளை சமாளிக்க உதவுகின்றன.
ஆக்கச் சிந்தனை என்பது புத்தாக்கம் படைப்பதற்குத் தேவையான ஓர் அடிப்படை சிந்தனையாகும். ஒருவரின் கற்பனை வளம் அவரின் ஆக்கச்சிந்தனையைக் வெளிப்படுத்திக் காட்டுகிறது என்பார்கள். ஆனாலும் ஆக்கச் சிந்தனை நல்ல விளைபயனை தரவேண்டும். இல்லையெனில் அந்த ஆக்கத்தால் பயனேதுமில்லை. பொதுவாக எழுத்தாளர்கள், படைப்பாளர்கள், கவிஞர்கள் எல்லாம் கற்பனை மிகுந்தவர்கள். அதனால்தான் அவர்களால் சுவைமிகுந்த படைப்புக்களைத் தரமுடிகிறது.
சிலர் இயற்கையாகவே யதார்த்தத்தை ஆக்கப்பூர்வமாக உணரும் திறனுடன் பிறந்திருந்தாலும், படைப்பாற்றல் சிந்தனை என்பது ஏனைய பல திறன்களைப் போலவே காலப்போக்கில் உருவாக்கக்கூடியதாகும். அதை உருவாக்க நேரம் ஒதுக்குவது உங்கள் வேலையின் தரத்தை மேம்படுத்துவதோடு, சிக்கலான பணிகளை நீங்கள் அணுகும் விதத்தையும் பெருமளவு பாதிக்கும். இந்தத் திறன்கள் உங்களைத் தனித்துவமாக வெளிப்படுத்தவும், மற்றவர்களால் கவனிக்கப்படவும் உதவும்.
படைப்பாற்றலை எவ்வாறு மேம்படுத்துவது
உங்கள் ஆக்கப்பூர்வமான சிந்தனை திறன்களை மேம்படுத்த அல்லது வளர்க்க விரும்பினால், இந்த வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.
- விடயங்களை ஆர்வத்துடன் அணுகுங்கள்
முதலில் சிக்கலானதாகத் தோன்றும் விடயங்கள் மற்றும் யோசனைகளைப் பற்றி ஆர்வமாக இருக்க முடிவு செய்வது, உங்கள் படைப்பாற்றலை வளர்ப்பதற்கான உங்கள் பயணத்தைத் தொடங்குவதற்கான சிறந்த வழியாகும். நீங்கள் சரியான முறையில் அணுகினால் மிகவும் சிக்கலான வேலைகள் கூட சுவாரஸ்யமாகத் தோன்றும்.
- திறந்த மனம் வேண்டும்
புதிய யோசனைகளைத் தேடுவதற்கும் புரிந்துகொள்வதற்கும் விருப்பம் உங்கள் ஆக்கப்பூர்வமான சிந்தனைத் திறனைப் பெரிதும் பாதிக்கும். திறந்த மனப்பான்மையைக் கடைப்பிடிக்க, மிகவும் பழக்கமான சூழ்நிலைகளை அணுகும்போது, மற்றவர் அதை எவ்வாறு சமாளிக்கலாம் என்பதை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். இது மற்றவர்களின் அனுபவங்களையும் அறிவையும் தொடர்புபடுத்தவும், விஷயங்களை வேறு கண்ணோட்டத்தில் பார்க்கவும் உதவும்.
- நீங்கள் வழக்கமாக தேர்வு செய்யாத உள்ளடக்கத்தை உட்கொள்ளுங்கள்
திரைப்படங்களைப் பார்ப்பது அல்லது வாசிப்பது உங்கள் ஓய்வு நேரத்தில் செய்ய விரும்புவதாக இருந்தால், உங்கள் ஆறுதல் மண்டலத்திலிருந்து வெளியேறி புதிய வகையைத் தேர்வுசெய்யவும். எடுத்துக்காட்டாக, அதிரடித் திரைப்பட ஆர்வலர்கள் ஒரு ஆவணப்படத்திற்குச் செல்வதைக் கருத்தில் கொள்ளலாம் மற்றும் பொதுவாக வரலாற்று நாவல்களைப் படிக்கும் ஒருவர் ஒரு புனைகதை புத்தகத்தைத் தேர்வுசெய்ய முடிவெடுக்கலாம். நீங்கள் தினசரி தொடர்பு கொள்ளும் விஷயங்களில் பல்வேறு வகைகளை அறிமுகப்படுத்துவது புதிய ஆர்வங்களையும் எண்ணங்களையும் வளர்ப்பதற்கான நிரூபிக்கப்பட்ட நுட்பமாகும்.
- விடயங்களை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதைப் பற்றி சிந்தியுங்கள்
உங்கள் ஆக்கப்பூர்வமான சிந்தனைத் திறன்கள் வளர்க்கப்படுவதை உறுதிசெய்ய, உங்கள் தினசரி அட்டவணையில் சில சிந்தனையைத் தூண்டும் பழக்கங்களை நீங்கள் அறிமுகப்படுத்த விரும்பலாம். நீங்கள் சந்திக்கும் விஷயங்களை எவ்வாறு மேம்படுத்தலாம், அந்த மேம்பாடுகளின் விளைவு என்ன, அது உங்களையும் மற்றவர்களையும் எவ்வாறு பாதிக்கும் என்பதை எப்போதும் நீங்களே கேட்டுக்கொள்வதே தொடங்குவதற்கான ஒரு நல்ல இடம்.
- உங்கள் மூளையைத் தூண்டுங்கள்
படைப்பாற்றலை அதிகரிப்பது சிந்தனை மற்றும் பழக்கத்தை உருவாக்கும் பயிற்சிகளுக்கு மட்டுப்படுத்தப்பட வேண்டியதில்லை. மனித மூளை உணர்ச்சி தூண்டுதல் உட்பட பிற வகையான செயல்பாடுகளுக்கு சாதகமாக செயல்படுகிறது.
உங்கள் சுற்றுப்புறங்கள் மற்றும் அலமாரிகளில் அதிக வண்ணங்களைச் சேர்ப்பது, நீங்கள் வேலை செய்யும் போது புதிய இசையைக் கேட்பது அல்லது மட்பாண்டங்கள் அல்லது ஓவியம் வரைவதற்குப் பதிவு செய்வது போன்றவற்றைக் கவனியுங்கள். ஒலி, மணம் மற்றும் வித்தியாசமாக உணரும் புதிய விஷயங்களை வெளிப்படுத்துவது வேலையில் உங்கள் படைப்பு சிந்தனையின் தரத்தை மேம்படுத்தும்.
மாணவர்களின் படைப்பாற்றல் சிந்தனை திறன்களை வளர்ப்போம்.
பாடசாலை மாணவர்கள், உலகமே வியக்கும் புதுமை அல்லது புத்தாக்கத்தை உருவாக்க முடியா விட்டாலும் அதாவது Big- Creativity (Big- C) ஆக இல்லா விட்டாலும் சிறிய வகை புத்தாக்கம் செய்யவாவது பழக்கலாம். நோபல் பரிசுக்கு தகுதி பெறுகிற அறிவியல் கண்டுபிடிப்புகள் எல்லாம் Big- C தான் உண்மையில் மாணவர்களும் அந்தளவுக்கு ஆற்றல் உள்ளவர்கள்தான். ஒரு கட்டத்தில் அந்தத் திறமை வெடித்துக் கிளம்ப, பாடசாலைப் பருவத்திலே அவர்களை சிறிய புத்தாக்கங்களைச் Mini- Creativity, Little- Creativity, செய்யப் பழக்க வேண்டும். சிறிய புத்தாக்கங்களைச் செய்யப் பழக்க வேண்டும். அவர்கள் நூல் ஏட்டில் உள்ளதை உள்வாங்கி மனப்பாடம் பண்ணி அப்படியே பரீட்சையில் ஒப்புவித்து புள்ளிகளைப் பெறுவது மட்டும் போதாது. புதுமை, புத்தாக்கம் படைக்கும் ஆர்வத்தையும் ஊக்குவிக்க வேண்டும்.
21 ஆம் நூற்றாண்டின் மனித வளம், தொழிற்துறைகள் எல்லாம் ஆக்கச் சிந்தனை மிகுந்தவர்களைச் சார்ந்து இருக்கிறது. இனி புத்தாக்கம் நிறைந்த கண்டுபிடிப்புகளைத் தருவோர் 21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய ஆளுமைகளாகக் கொண்டாடப்படுவர். புதிய கண்டுபிடிப்புகள் பிரச்சினைகளுக்கு புதுத்தீர்வுகளைக் கொடுக்க வேண்டும்.
ஆக்கச் சிந்தனையும் புத்தாக்கமும்
- மற்றவர்களின் வேலையை எளிதாக்கவும் துரிதப்படுத்தவும் வேண்டும்.
- அதிக வேலையைச் செய்ய உதவ வேண்டும்.
- சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்க வேண்டும்.
- பாதுகாப்பைத் தர வேண்டும்.
- இரசனையை அதிகரிக்க வேண்டும்.
மாணவர்களிடையே எப்படி ஆக்கச் சிந்தனையை ஊக்குவிப்பது?
தற்போது பாடசாலைகளில் விஞ்ஞான, தொழிநுட்ப புத்தாக்கக் கண்டுபிடிப்பில் ஈடுபடும் ஆசிரியர்கள், மாணவர்கள் குறித்துச் செய்தி ஊடகங்களில் வெளிவருவதைப் பார்க்கின்றோம். இது கல்வியுலகில் வரவேற்கத்தக்க ஒரு புரட்சி எனலாம். ஆனால் விஞ்ஞான, கண்டுபிடிப்பு மட்டும் வாழ்க்கைக்குப் போதுமானவை அல்ல. மற்ற துறைகளிலும் புத்தாக்கம் தேவை. புதியவையும் புதுமையும் தேவை. கவிதை, சமையற்கலை, பயிர் வளர்த்தல், விலங்குகள் வளர்த்தல், தோட்டக்கலை…..இப்படியே இன்னும் ஆயிரக்கணக்கானன துறைகள். புத்தாக்கம் படைக்க காத்துக் கிடக்கின்றன
இலியனர்டோ டா வின்சி குறிப்பு
இலியனர்டோ டா வின்சி (Leonardo Da Vinci) மறுமலர்ச்சிக்காலத்தில் புகழ்ப்பெற்ற இத்தாலிய ஓவியர் உலக புகழ்பெற்ற மோனாலிசா பெண்ணோயத்தை வரைந்தவர், கண்டுபிடிப்பாளர், பொறியிலாளர், விஞ்ஞானி, சிற்பக் கலைஞர், வரைபடக் கலைஞர் எனப் பன்முகத் திறமை கொண்டவர். இவருக்குத் தாய்மொழியான இத்தாலி மொழி மட்டுமே தெரியுமாம். அதுவும் முறைசாரா கல்வி மூலம் பெற்ற அறிவு.ஒவ்வொரு நாளும் அவர் செய்ய வேண்டியப் பணிகளைக் குறிப்பில் எழுதி வைப்பாராம் டா வின்சி.
அவரது குறிப்பில் ‘பிணத்தின் படத்தை வரைவது’, ‘இயந்திரங்களை வடிவமைப்பது’, ‘உடைதைப்பது’ என எழுதியிருப்பதோடு மரங்கொத்தியின் நாக்கைப் பற்றி விவரிக்க வேண்டும்’ எனவும் எழுதப்பட்டிருக்குமாம். மரங்கொத்தியின் நாக்கு பற்றியெல்லாம் யோசிப்பது அதீதமான ஆக்கச் சிந்தனை. புதிய கண்டுபிடிப்புக்கான விஞ்ஞான ஆர்வத்தால் பறக்கும் இயந்திரத்தின் வடிமைப்பை வரைந்தவர் டா வின்சி.
7000 பக்கங்கள் கொண்ட அவரது குறிப்பு புத்தகத்தில் பல்வேறு கேள்விகள், ஐயங்கள், அவரது உற்றுநோக்கல் குறிப்புகள், கிறுக்கிய வரைவுகள், கணித சூத்திரங்கள் பற்றியெல்லாம் எழுதி வைத்திருந்தாராம். ஆக்கம், புத்தாக்கம் இரண்டையும் ஒரு பழக்கமாகத், திறனாகக் கடைபிடித்தவர் டா வின்சி. பல்துறை அறிஞராகவும் அவர் திகழ்ந்தார்.
ஒரு பாடசாலை, 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ‘டா வின்சி’ குறிப்பு புத்தகம் எழுதும் வழக்கத்தை அறிமுகம் செய்தது. டா வின்சி போல் சிந்திக்கும் பழக்கத்தை மாணவரிடம் ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட ஓர் உத்தியாகவே அந்த பாடசாலை குறிப்பு எழுதும் பழக்கத்தை அறிமுகம் செய்தது. மாணவர்களைப் பாடசாலைப் பாடம் தாண்டி, தாங்கள் செய்ய விரும்பும் செயல்கள், அறிந்து கொள்ள விரும்பும் விடயங்கள், ஏற்பட்டுள்ள ஐயங்கள் பற்றி குறிப்பு எழுத எழுதவும் அந்த பாடசாலை மாணவர்களைப் பயிற்றுவித்தது. ஒரே கிழமைக்குள் பல்வேறு வினாக்களை குறிப்பு புத்தகத்தில் மாணவர்கள் எழுதியிருந்தனர்.
மாணவர்களது குறிப்பில் எழுதப்பட்டிருந்த சில வினாக்கள் வருமாறு,
- நான் ஏன் புலி மாதிரி இல்லை?
- ஏன் இறக்க வேண்டும்?
- திறப்புகள் எப்படி பூட்டை திறக்கின்றன?
- மூளை எப்படி இயங்குகிறது?
- ஏன் எல்லா கார்களும் மின்சாரத்தில் இயங்கக்கூடாது?
ஒரு இரண்டாம் வகுப்பு மாணவர் புது வகை கார் ஒன்றை வடிவமைத்திருந்தாராம், இன்னொருவர் கவிதையாக எழுதித் தள்ளினாராம்.
அதன்பின் ஆசிரியர்களும் டா வின்சி குறிப்பு எழுதத் தொடங்கினராம். விளைவு, அவர்களும் மெல்ல கிரியேட்டிவாக மாறி புதியதைக் கற்கத் தொடங்கினராம். கற்பனைகள் புதிய கண்டுபிடிப்பின் அடித்தளம்.
மாணவர்களின் ஆக்கச் சிந்தனையை மேம்படுத்த சில உத்திகள்
- மாணவர்களுக்கு பிடித்த துறைகள் (passion) என்ன என்பதைக் கேட்டறிந்து அவற்றை பாடத்தில் இணைக்கலாம்.
- பாடத்தில் தவறுகள் செய்வதால் ஒருவர் கெட்டிக்காரர் அல்ல’ எனும் உளவியல் நோயைப் போக்க மாணவர்கள் தவறு செய்து கண்டுபிடிக்கும் இயல்புவழியைக் காட்ட வேண்டும். புதியது படைக்க ஊக்குவிக்க வேண்டும். அவை பாடம் தொடர்பாக இருக்க வேண்டும் என்பதில்லை.
- மாணவர் புதிய ஏடல்களை (கருத்துக்களை) வெளிப்படுத்த வாய்ப்பு வழங்க வேண்டும்.
- ஒவ்வொரு இடுபணியிலும் (tasks) ” உருவாக்கு” “வடிவமை” “கற்பனை செய்”, “கண்டுபிடி”, “ஒன்றுக்கு மேற்பட்ட தீர்வுகளோடு வாருங்கள்” எனும் வார்த்தைகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.
- மாணவர்கள் படைக்கும் ஒவ்வொன்றையும் மதிக்க வேண்டும். மாணவரைப் படைக்கும் ஆற்றல் உள்ளவராக உருவகிக்க அவர் உள்ளத்தில் தான் ஒரு படைப்பாளி எனும் எண்ணத்தைப் பதிக்க வேண்டும்.
- பரீட்சைகள் பற்றியக் கவலைகள் இல்லாது மாணவர்கள் படைப்பாற்றலை வளர்க்கும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.
மாணவர்களின் படைக்கும் ஆற்றல் பல் துறைகளிலும் பெருக வேண்டும். அது பெரிய ஆக்கமாக (Big Creativity) ஒரு காலத்தில் உருவெடுக்கும்.
ஒவ்வொருநாளும் ” உருவாக்கு”, “வடிமைக்குக”, ” கற்பனை செய்”, “புதிதாக்கு”, “மாற்றங்கள் செய்” இப்படி சொற்களைப் பாடத்தில் இணையுங்கள். சிறு வகை படைக்கும் ஆற்றல் மாணவர்களிடம் வெளிப்படுவதைக் காண்பீர்கள்.