அடுத்த வருடம் ஜனவரி மாதமாகும் போது வட மத்திய மாகாணத்தில் 2,500க்கும் மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடம் ஏற்படும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பிரனாந்து தெரிவித்தார்.
இதுவரை மாகாணத்தில் 1500ஆசிரியர் வெற்றிடம் நிலவுகின்றது. எதிர்வரும் ஜனவரி மாதம் ஓய்வுபெற்றுச் செல்லும் ஆசிரியர் தொகையுடன் ஒப்பிடும்போது அது 2,500க்கும் அதிகமானதாகவே காணப்படும் என சங்கத்தின் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
980பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்குவதற்காக திறைசேரியினால் நிதி ஒதுக்கப்பட்டுள்ள போதிலும் 600க்கும் அதிகமானவர்களுக்கே ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வட மத்திய மாகாண கல்வி அமைச்சினதும் மாகாண கல்வித்திணைக்கள அதிகாரிகளது அசமந்தப்போக்கினாலேயே இந் நிலமை ஏற்பட்டுள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.
வட மத்திய மாகாணத்தின் அநுராதபுரம் கெப்பித்திகொள்ளாவ கல்வி வலயத்திலும் பொலன்னறுவ, திம்புலாகல கல்வி வலயத்திலும் அதிகளவிலான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது.
ஆனால் அதற்கான தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்கு கல்வித் திணைக்கள அதிகாரிகளினால் முடியாமல் போயுள்ளது.
இரு கல்வி வலயத்திலும் தற்சமயம் 20%வீதமாக காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறை எதிர்வரும் ஜனவரி மாதமாகும் போது 40%மாக அதிகரிக்கும். இதற்கு தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கு எந்த திட்டமும் இல்லை.
கல்வியியல் கல்லூரி ஆசிரியர் நியமனத்திற்காக வடமத்திய மாகாணத்தில் 86பேரே தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதை விடவும் கூடுதலான தொகை வழங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்த போதிலும் 86பேருக்கு மாத்திரமே கல்வியியல் கல்லூரி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இது வட மத்திய மாகாண ஆசிரியர் தட்டுப்பாட்டை மேலும் அதிகரிக்கும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பிரணாந்து மேலும் தெரிவித்தார். (Thinakaran)